வேதாசலத்துக்கு விருது- கடிதம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
இவ்வருடம் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் தொல்லியல் ஆய்வாளர் வெ. வேதாசலம் அய்யாவுக்கு என் வாழ்த்துக்கள். போன வருட தூரன் விருது நிகழ்விலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தவிர் என்ற முறையில் நம் நண்பர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தவர்தான், ஆனாலும் இவ்வருட விருது அவரை மையத்தில் நிறுத்தி கவனம் குவிய வழி வகுத்துள்ளது.
தமிழ் விக்கி தூரன் விருது அறிவிப்பு தளத்தில் வெளியானதும் வேதாசலத்தை பற்றி தமிழ் விக்கியில் பார்த்தேன். தமிழ் நாட்டில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான கீழடி ஆய்வில் முதல் கட்டங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார் என்று தெரிந்தது. மதுரையை சுற்றியுள்ள சமணர் படுக்கைகள் பற்றி முதன் முதலில் ஆய்வு செய்து வெளிப்படுத்தியவர் என்றும் தெரிந்து கொண்டேன்.
என் கல்லூரி காலத்தில் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் நடத்திய ‘பசுமை நடை‘ யில் பங்குபெற்று மாதம் ஒரு மலை என்று சென்று மதுரையை சுற்றி இருக்கும் மலைகளில் இருக்க கூடிய சமணர் படுக்கைகள்,தொல்லியல் குகை ஓவியங்கள் என்று பார்த்து வந்திருக்கிறேன். தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கமும் எங்களுடன் வந்து ஒவ்வொன்றையும் விளக்கி கூறுவார். வேதாசலம் அய்யாவின் ஜூனியர் தான் சாந்தலிங்கம் என்று போனில் வாழ்த்துக்கூறும்போது வேதாசலம் ஐயா சொன்னார்.
தமிழ் விக்கியில் அவரை பற்றி படிக்கும் பொது என் பொட்டில் அறைந்த விஷயம், அவர் மதுரையில் என் வீட்டுக்கு அருகில் குடி இருப்பவர் என்பது தான் ( அவர் மதிச்சயம் , நான் கரும்பாலை). வீட்டுக்கு அருகிலேயே என் காலகட்டத்தின் முக்கியமான ஒரு ஆய்வாளர் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார், வழக்கம்போல உங்கள் மூலமே தெரிய வருகிறது. போன் பண்ணி வாழ்த்து கூறினேன், என்னையும் குடும்பத்தையும் பற்றி அன்புடன் விசாரித்தார். ஊருக்கு வரும்போது பார்த்து பேசி வணங்கி வரவேண்டும். அதற்க்கு முன் அவர் புத்தகங்களை வாங்கி வாசித்துவிடவேண்டும்.
இலக்கியத்தில் தோய்ந்திருக்க கற்றுத்தந்த ஆசானின் பாதம் வணங்கி
சதீஷ்குமார்
தென்கொரியா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
