கஞ்சன்ஜங்காவின் காலடியில்…2
கஞ்சன்ஜங்காவைப் பார்த்தபடியே மலையிறங்கினோம். கீழே தீஸ்தா வெறிகொண்டு செம்பிழம்பாக ஓடிக்கொண்டிருந்தது. (தீஸ்தா நதிக்கரையில் என்னும் நாவல் தமிழில் வெளிவந்துள்ளது. குறிப்பிடத்தக்க படைப்பு) மேலே மலைகளில் இடைவிடாத மழை. நாங்கள் செல்வதற்குச் சிலநாட்களுக்கு முன்புதான் பெருவெள்ளமும் அழிவும் நிகழ்ந்திருந்தது. சாலைகள் இடிந்து சரிந்திருந்தன.நீண்ட வாகனவரிசைகள். எண்ணைநாற்றம். நின்று, தேங்கி, முன்னகர்ந்து மாலையில் சிக்கிம் தலைநகர் காங்டாக் சென்று சேர்ந்தோம்.
சிக்கிம் செல்லும் பாதை முழுக்க பணிகள் நிகழ்கின்றன. ரயில்பாதைக்காக மலைகளை துளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாலைகள் அமைப்பது கடினம், மண் மிக மென்மையானது ஒவ்வொரு மழைக்கும் இடிந்து சரிவது. இந்த ஆண்டு சிக்கிம் இந்தியாவுடன் இணைந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. இதுவரை அணுகமுடியாத மலைப்பகுதியாகவே இருந்தது இது. இன்று பயணவசதிகள் மேம்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தொழில் அதற்கேற்ப விரிவடைகிறது.
சிக்கிம் திபெத்தின் நீட்சியாக, திபெத் இந்தியப்பெருநிலத்துடன் தொடர்புகொள்ளும் வழிகளில் ஒன்றாக மட்டுமே இருந்துள்ளது. திபெத் வரைச் செல்பவர்கள் சிலநாட்கள் தங்கி பொருட்களை வாங்கிக்கொள்ளும் ஒரு சிறிய சந்தை, அதையொட்டிய பழங்குடிவீடுகள்- அவ்வளவுதான். வேளாண்மை அனேகமாக இல்லை. அங்கே திபெத்திய பௌத்த மடாலயங்கள் சிறிய அளவில் காலப்போக்கில் உருவாயின.
அம்மக்களின் குடித்தலைவர் திபெத்திய பௌத்த மதஅரசின் ஆதரவுடன் அரசர் ஆனார். நம்க்யால் அரசகுடி என அது அழைக்கப்பட்டது. அறத்தின் தலைவர் சோக்யால் என அவர் அழைக்கப்பட்டார். 1716ல் என்சே மடாலயம் கட்டப்பட்டபோது காங்டாக் ஒரு முக்கியமான மையமாக ஆகியது. 1894ல் அரசர் தும்லாங்கில் இருந்து தலைநகரை காங்டாக்குக்கு மாற்றினார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது இந்திய ராணுவப்பாதுகாப்பில் தனி அரசாட்சியாக சிக்கிம் நீடித்தது. 1975ல் அரசருக்கு எதிரான கலவரங்கள் உருவாயின. மக்களின் வாக்கெடுப்பை ஒட்டி இந்தியாவுடன் சிக்கிம் இணைந்தது.
கேங்டாக்கில் ரும்டெக் மடாலயத்திற்குச் சென்றோம். ஏற்கனவே வந்த இடம்தான். மிகப்பெரிய மதக் கல்விநிலையம் மற்றும் வழிபாட்டிடம் இது. (விகாரம், சைத்யம் என அமைவதே பௌத்த மத அமைப்புகளின் வழக்கம்) திபெத்தின் மதகுரு மரபில் 12 ஆவது கர்மபா ஆகிய சாங்சப் டோர்ஜே 18 ஆம் நூற்றாண்டில் நிறுவிய மடாலயம் இது.சிக்கிமின் மிகப்பெரிய மடாலயமாக கருதப்படுகிறது. திபெத் சீனாவால் கைப்பற்றப்பட்ட பின் இந்த மடாலயம் கர்மபாவின் தலைமையிடமாக உள்ளது.
மிகப்பெரிய புத்த மைத்ரேய சிலை தியானத்தில் அமர்ந்த சைத்யகூடம். திபெத்திய பௌத்தத்திற்கே உரிய செக்கச்சிவந்த வண்ணம் பொன்னிறத்துடன் இணைந்த அலங்காரங்கள். ஆழ்ந்த அமைதி, குளிர். சுவர்களில் பழைய கர்மபாக்களின் ஓவியங்கள்.(அவர்களில் ஒருவர் விஷ்ணுபுரத்திற்கு வந்து திரும்பியதை அந்நாவலை வாசித்தவர்கள் நினைவுகூரலாம்)
சுற்றிலும் செங்குத்தான மலைச்சரிவுகள் பச்சைசெறிந்த காடுகளுடன் எழுந்து நின்றன. காங்டாக் நகரமே மலைச்சரிவில்தான் உள்ளது. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் கீழே மிக ஆழத்தில் அடுத்த கட்டிடம் அமைந்திருந்தது. நாங்கள் தங்கிய விடுதி வசதியானது. நட்சத்திரவிடுதி என்றே சொல்லலாம். எங்களை சிக்கிம் மரபுப்படி பச்சை நிறமான சால்வைநாடா அணிவித்து வரவேற்றார்கள்.
முந்தைய பயணத்தில் சிக்கிம்- சீனா எல்லையான சீரோ பாயிண்ட் என்னுமிடத்திற்குச் சென்றோம். கோடையிலும் உறைபனி பரவியிருக்கும் நிலம் அது. இம்முறை அப்பகுதிகள் மூடப்பட்டிருந்தன. ஆகவே நாது லா என்னும் மலைமுடிக்குச் செல்ல முடிவுசெய்திருந்தோம். ஜூன் 29 அன்று காலை ஏழு மணிக்கு கிளம்பி மேலே சென்றோம்.
கடல் மட்டத்தில் இருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் இருக்கும் நார்து லா (லா என்றாலே கணவாய் என்றுதான் பொருள்) நெடுங்காலமாகவே சீனாவுடனும், திபெத்துடனும் சிக்கிமை இணைக்கும் கழுதைப்பாதையாக இருந்துள்ளது. வெள்ளையர் இதை சீரமைத்து வண்டிப்பாதையாக ஆக்கினர். இந்திய- சீன போருக்குப்பின் இந்த மலைப்பாதை மூடப்பட்டது. இப்போது இருபக்கமும் ராணுவக்காவல் கொண்ட ஒரு சந்திப்புப் புள்ளி. ஆனால் மானசரோவர், கைலாசம் மலைப்பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.
மேலே ஆக்ஸிஜன் குறைவு. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். மேலே செல்லும் வழி முழுக்க மழைபெய்து ஒரு பக்கமிருந்து ஓடைகள் கிளம்பி கீழே சென்றுகொண்டிருந்தன. டார்ஜிலிங் – மேற்கு வங்கத்துக்கு கேங்டாக் – சிக்கிம் நேர்த்தலைகீழ். சுத்தம், ஒழுங்கு, அழகு ஆகியவை ஒரு மேலைநாட்டில் இருப்பதான உணர்வை அளிப்பவை. பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதைக்கூட முழுமையாக தடைசெய்துள்ளனர். குப்பைகள் போடப்பட்டால், சிசிடிவியில் சிக்கினால் தண்டனை உண்டு.
மேலே பெரிதாக ஒன்றுமில்லை. செல்லும் வழியில் யாக் (இமையக்காளை)களை நிறுத்தி வைத்திருந்தனர். ஏறி ஒரு சுற்று சுற்றலாம். நான் விலங்குகள் மேல் ஏறுவதில்லை. அரங்கசாமியும், ஆனந்தகுமாரும் ஏறி ஒரு சுற்று சுற்றிவந்தனர். அந்த விலங்குகள் பல டன் எடைகொண்டவை. இவர்கள் மேலே இருப்பதை அவை உணர்ந்தததாகவே தெரியவில்லை.
மேலே சீனாவின் எல்லைவரைச் செல்லலாம். ஒரு கம்பிவேலிக்கு அப்பால் சீனாவின் நிலம். சீனாவின் காவல்மாடங்கள். இப்பால் நம்மூர் ஜவான்கள். பார்த்தாலே தெரியும் தென்னிந்தியா என்று. நாங்கள் அங்கே இருக்கும்போது ஏராளமான வண்டிகள் சென்றன. அன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உட்பட ஒரு பாராளுமன்ற குழு அப்பகுதியை பார்வையிட்டுச் சென்றனர் என்பதை அறிந்து கொண்டோம்.
திரும்பி வரும்வழியில் பாபா ஹர்பஜன்சிங் கோயிலுக்குச் சென்றோம்.இந்த சிறிய ஆலயம் 1968ல் தன் 22 ஆவது வயதில் மறைந்த சீக்கிய ராணுவவீரருக்கு அமைக்கப்பட்டது. அவர் மறைந்தபின்னரும் கனவில் வந்து ராணுவ வீரர்களைக் காத்ததாகவும், ராணுவவீரராகவே வாழ்வதாகவும் கருதப்படுகிறது. அவருக்கான நினைவிடம் பின்னர் ஆலயமாகியது.
பாபா ஹர்பஜன் சிங் இப்போதும் ராணுவத்தில் தொடர்வதாக உருவகிக்கப்பட்டு அவருக்கு மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது.(அது அந்த நினைவிடத்துக்குச் செலவிடப்படுகிறது. ) அவருக்கு ஆண்டு விடுமுறை உண்டு. அவரது சீருடை சீக்கிய வீரர்களால் அவருடைய ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு விடுமுறை முடிந்தபின் திரும்பக் கொண்டுவரப்படுகிறது.
மழைபெய்துகொண்டிருந்தது. கோயிலில் நல்ல கூட்டம். உள்ளே ஹர்பஜன் சிங்கின் முகம் தெய்வமாக நிறுவப்பட்டு அவருடைய சீருடை, அவருடைய அலுவலகம் எல்லாமே பேணப்பட்டிருந்தது. கேஸரி பிரசாதம் வழங்கப்பட்டது. அங்குள்ள ஊற்றில் நீர் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். சீக்கிய ராணுவ வீரர்கள் அங்கே சல்யூட் அடித்தபோது இருந்த உண்மையான தீவிரம் வியப்பூட்டியது.
அங்கே பத்து டிகிரி குளிர் இருந்தது. பால் இல்லாத சூடான டீ அந்த குளிருக்கு ஓர் அற்புதமான பானம் என்றால் பால்விட்ட டீ நேர் எதிர். வங்காளத்தில் இருந்து வந்த பால். யாக் பால் கறக்கும், ஆனால் அதை வெண்ணை எடுக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். லடாக் முழுக்க குளிர்காலத்தில் யாக் எண்ணையை முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொள்வது வழக்கம்.
நார்துலா கணவாயில் பேசிக்கொண்டிருந்த விஷயம் இந்தியாவும் சீனாவும் எல்லைப்புறப் பூசல்களை முழுமையாக நிறுத்தி அமெரிக்கா- கனடா போல, ஐரோப்பா போல தெளிவான சமாதானத்திற்கு வந்துவிட்டன என்றால் இமையமலை என்னும் வெள்ளையானையை கட்டிமேய்க்கும் பெரும் சுமையில் இருந்து இருநாடுகளுமே விடுதலை அடையமுடியும். இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே இந்தக் கணவாய்கள் வழியாக பெரும் பொருளியல் பரிமாற்றம் நிகழமுடியும். வடகிழக்கு மாநிலங்கள் பொருளியல் பாய்ச்சலை அடையமுடியும். ஆனால் சீனா அபத்தமான ஒரு விரிவாக்கக் கொள்கையை கடைப்பிடித்து அண்டைநாடுகள் முழுக்க பதற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தன் பொருளியல் வளர்ச்சியையும் அதன் வழியாக இப்போது பெரும் தேக்கநிலைக்குக் கொண்டுசென்றுவிட்டிருக்கிறது.
அதைப்பற்றிப் பேசியபோது சீனா அருணாசலப்பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிமைகொண்டாடுவதற்கான காரணம் இமையமலை முழுக்க நிறைந்திருக்கும் குவார்ட்ஸ் போன்ற அரிய கனிமங்கள்தான் என்ற நினைவும் எழுந்தது. உலகின் பெரும்பாலான போர்கள் கனிமங்களுக்காகத்தான்.
மாலை நடந்து காங்டாக் நகருக்குள் சென்று ஒரு ‘சரியான சிக்கீமிய’ கடையில் மாலையுணவை உண்டோம். காங்டாக்கின் மாலைப்பொழுது மிதமான குளிருடன் ஏதோ ஐரோப்பிய நகரில் இருப்பதாக எண்ண செய்தது. நகர் நடுவே மகாத்மாகாந்தி மார்க் என்னும் கடைவீதியில் வண்டிகள் செல்லமுடியாது. நடப்பதற்கானது. இருபுறமும் கடைகள். அழகான சீரான கடைகள். ஒண்டுக்கடைகளும் கூச்சல்களும் இல்லை.
இதைப்போன்ற மிகத்தூய்மையான பொதுவெளி என்பதை இந்தியாவில் எங்குமே பார்க்கமுடியாது. அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓரளவு பொருளியல் வசதியானவர்கள். ஆகவே இயல்பான உற்சாகத்துடனிருந்தனர். சிக்கிமின் பொருளியல்நிலையின் சான்று அந்தச் சாலை.
மிக முக்கியமானது, வட இந்தியாவில் ஒரு நோய் போல பரவியிருக்கும் பான்பீடா பழக்கம் இல்லை. இந்தியாவே ஒரு மாபெரும் எச்சில்தட்டு என தோன்றுவதுண்டு. வடஇந்தியா அளவுக்கு இல்லை என்றாலும் தென்னாட்டிலும் நமக்கு பொதுவெளியை முழுக்க துப்பி சீரழிக்கும் பழக்கம் உண்டு. ரயிலுக்குள்ளேயே நம்மவர் துப்பிக்கொண்டே இருப்பார்கள். பழைய வெற்றிலைபாக்கு பழக்கத்தில் இருந்து வந்த வழக்கம் இது. வடகிழக்கு மாநிலத்து மக்கள் பொதுவாக நம்மை விட உடற்தூய்மை கொண்டவர்கள். துப்புவதுபோன்ற வழக்கம் இல்லை. எளியவர்கள்கூட மிகச்சிறப்பாக உடையணிபவர்கள்.
காங்க்டாக் மையத்தில் சிறுவியாபாரிகள், பிச்சைக்காரர்கள் இல்லை. ஆகவே அங்கே தூய்மை இருந்தது. எவருடைய தொந்தரவும் இல்லை. நடைபாதை வியாபாரமும் சிறுவியாபாரமும் பலருக்கு தொழில்வாய்ப்பளிப்பது என்பது வங்காளத்தை பிச்சைக்கார நிலமாக ஆக்கிய இடதுசாரிகள் உருவாக்கும் பொய். அது உண்மையில் ஒரு நிழல் உலகம்.
சிறுவணிகர்களுக்கு அவர்களுக்கான இடங்களை உருவாக்கி அங்கே கௌரவமாகத் தொழில்செய்ய வாய்ப்பளிக்கலாம். அவர்கள் பொதுவெளிகளை ஆக்ரமித்து, மலினமாக்க அனுமதிக்கக்கூடாது. அதுவே உலகமெங்கும் நாடுகள் செய்வது. அது அந்த கடைகள் மீது அரசுக்கான கட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும். முதன்மையாக உணவின் தரம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்தியாவெங்குமுள்ள இந்த சிறுவணிக- தெருவணிக உலகம் பெரும்பாலும் குற்றச்செயல்களுக்கான ஒரு மாபெரும் வலைப்பின்னல், அதை இயக்குபவர்கள் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள நிழல் உலக தலைவர்கள். குழந்தைக் கடத்தல், ஜேப்படி முதல் போதைவணிகம் வரையில் அதன் வழியாகவே நகர்முழுக்க பரவியிருக்கிறது. (அதை ஆறு மெழுகுவத்திகள் படத்துக்கு ஆய்வு செய்யும்போது அப்படத்துடன் தொடர்பிருந்த காவல் அதிகாரிகளிடமிருந்தே அறிந்துகொண்டேன்)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பொருளியல் தேக்கநிலையில் இருக்க இரண்டு காரணங்கள். ஒன்று தீவிரவாதம். தீவிரவாதம் முழுக்கமுழுக்க முன்பு அமெரிக்கா, இப்போது சீனா நம் மீது உருவாக்கும் மறைமுகப்போர்தான். அவர்கள் இங்குள்ள இனக்குழுப் பூசல்களை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சீனாவுடன் ‘நல்லுறவுடன்’ இருக்கும் நம்மூர் இடதுசாரிகள் அங்குள்ள தீவிரவாதத்தை ஆதரித்து இங்கே எழுதிக்குவித்தவை எல்லாமே கீழ்த்தரமான பிரச்சாரங்கள் அன்றி வேறல்ல. (நாமும் இதை திரும்ப மற்ற நாடுகளுக்குச் செய்கிறோம். அதையும் நான் ஏற்கவில்லை) இனக்குழுப் பூசல்களையே அவர்கள் ‘சுதந்திரப்போராக’ சித்தரித்துள்ளனர்.
இரண்டு, அங்கே செல்வதற்கான பயணச்சிக்கல்கள். அந்த தட்பவெப்பம் அங்கே விமானப்பயணத்தை கடினமானதாக ஆக்குகிறது. இமையமலையின் தட்பவெப்பம் பனிப்புயல், கடும் மழை என மாறிக்கொண்டே இருப்பது. இரண்டு, சாலை அமைப்பது மிகக்கடினம். மண் மிகமிக மென்மையானது, சாலை சரிந்துகொண்டே இருக்கும். ரயில் அமைப்பது மிகமிகக் கடினம், ஏராளமான மலைகளைக் குடையவேண்டியிருக்கும்.
இந்தக் காரணத்தால் வடகிழக்கு நிலம் நம் தொடர்பெல்லைக்கு அப்பால் இருந்தது. வணிகமும் தொழிலும் தேக்கமடைந்தன. ஆனால் இன்று மணிப்பூரில் உள்ள இனக்கலவரம் அன்றி எந்த தீவிரவாதமும் இல்லை. சாலை மிகப்பெரிய செலவில் போடப்பட்டுள்ளது. அருணாச்சலப்பிரதேசம் வரை ரயில் சென்றுவிட்டது. சிக்கிமில் ரயில் அடுத்த ஆண்டு செல்லும்.
இந்த வசதிகளால் வடகிழக்கு பொருளியலில் நம்மைவிட வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. சிக்கிம், அருணாச்சலபிரதேசம் ஆகியவை முன்னணியில் உள்ளன. மேகாலயா அடுத்த நிலையில் உள்ளது. எஞ்சிய பகுதிகளும் அவ்வாறாக ஆகலாம். அந்த மக்கள் வெளித்தூண்டுதலுக்குச் செவி சாய்க்காமல் இருந்தால், பொருளியல் வளர்ச்சியே எல்லா விடுதலைக்கும் அடித்தளம் என உணர்ந்தால், இனவாத அரசியலை விலக்கிக்கொண்டால் அது நிகழலாம்.
வடகிழக்கு மக்கள் சென்ற இருபதாண்டுகளில் இந்தியாவெங்கும் சுற்றுலா முதலிய தொழில்களுக்காக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படையான நேர்மை, தூய்மையுணர்வு, சேவைமனநிலை அத்துறைகளில் பெரிதும் விரும்பப்படுகிறது. அதனூடாக அந்த மாநிலங்கள் பொருளியல் மாற்றம் அடைந்தன. அந்த மாற்றம் தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. இன்னும் இருபதாண்டுகளில் இப்பகுதி இந்தியாவின் ஐரோப்பா என்று சொல்லும் நிலையில் இருக்கும். இருக்கவேண்டும்.
ஜூன் 30 அன்று அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். ஆறரை மணிநேரம் காரிலேயே அமர்ந்து பாக்டோத்ரா வந்தோம். வழியெங்கும் போக்குவரத்து நெரிசல். பலமணிநேரம் சாலையிலேயே அமர்ந்திருந்தோம். மழைபெய்து சாலை பல இடங்களில் இடிந்து சரிந்திருந்தது. தீஸ்தா கொந்தளித்துப் பெருகிச்செல்ல, மறுபக்கம் மலைச்சரிவில் குருதிப்பெருக்கு போல மழைநீர் அருவிகள் கொட்டின.
விடுதியில் இருந்து கிளம்பும்போது எங்கள் விடுதியின் சன்னலுக்கு வெளியே கஞ்சன்ஜங்கா தெரிவதை கிருஷ்ணன் வந்து சுட்டிக்காட்டினார். வெண்மேகம் திரவிலகி சிகரம் ஒளிவிட்டுக்கொண்டே இருந்தது. அசையாத வெண்ணிறமான சுடர். விமானம் ஏறும்போது கடைசியாக கஞ்சன்ஜங்காவை எண்ணிக்கொண்டேன்.
(நிறைவு)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
