காவியம் – 69
கானபூதி சொன்னது. குணாட்யரின் அருகே காட்டுசேப்புச் செடிகள் யானைக்காதுகள் போல இலைவிரித்து நின்றிருந்தன. அவர் அதில் ஓர் இலையைப் பறித்து தரையைத் துழாவி எடுத்த சிறிய முள்ளைக்கொண்டு நுணுக்கமாக எழுதத் தொடங்கினார். அவர் எழுதியவற்றை அவரால் படிக்கவோ திருத்தவோ முடியாது. அவர் விரல்கள் இலைமேல் அசைந்தபடியே இருந்தன. எழுதிய இலைகளை தன்னருகே அடுக்கி வைத்தபடி அவர் காட்டு சேப்பு இலைவிரித்து அடர்ந்திருந்த அரைச்சதுப்பில் முன்னகர்ந்து சென்றுகொண்டிருந்தார்.
என் நிழல்கள் பிரதிஷ்டானபுரிக்குச் சென்றன. அங்கே கோதாவரிக்கரையில் குடில் கட்டி வாழ்ந்து கொண்டிருந்த குணாட்யரின் மாணவர்களான குணதேவனையும் நந்திதேவனையும் அணுகி, அவர்களின் செவிகளில் அவர் காவியம் எழுதும் செய்தியைக் கூறின. தங்கள் உள்ளத்தில் தோன்றிக்கொண்டே இருந்த அந்த எண்ணத்தைக் கண்டு வியந்த அவர்கள் இருவரும் காட்டுக்குள் குணாட்யரைத் தேடிவந்து கண்டடைந்தனர். அவர் எழுதிய காவியத்தை அவர்கள் வாசித்தறிந்தார்கள். அவற்றை ஓலைகளில் உடனே எழுதிக்கொண்டனர். காட்டிலேயே அவருக்கு ஒரு குடிசை கட்டி அவருடன் தாங்களும் தங்கினார்கள்.
ஏழு ஆண்டுகள் இரவும் பகலும் குணாட்யர் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய மாணவர்கள் அவருக்கு தேனும் கனிகளும் கிழங்குகளும் கொண்டு வந்து அளித்தார்கள். அவர் எழுதுபவற்றை உடனுக்குடன் பிரதி எடுத்துக்கொண்டார்கள். நிறைவடைந்தபோது அந்த பெருங்காவியம் ஏழு காண்டங்களில், ஏழாயிரம் உபாக்யானங்களில், எழுபதாயிரம் சர்க்கங்களில், ஏழு லட்சம் பாடல்களில் அமைந்திருந்தது. ஐம்பத்தாறு லட்சம் வரிகள், இரண்டரைக்கோடி சொற்கள் கொண்டிருந்தது. பாரதத்தில் எழுதப்பட்ட அத்தனை காவியங்களையும் அது தன்னுள் அடக்கியிருந்தது. எழுதப்படவிருக்கும் காவியங்கள் அனைத்துக்குமான கதைகளை மேலும் கொண்டிருந்தது.
”மறு எல்லை காண முடியாத பெருங்கடல். அதன் ஒரு துளியே ஒரு கடலென்னும் ஆழம் கொண்டது” என்று அதை முழுக்க ஓலையில் எழுதிக்கொண்ட குணதேவன் சொன்னார்.
“இனி இங்கே சொல்வதற்கேதும் இல்லை. கேட்பதற்கு ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் பிறந்து வந்தாக வேண்டும்” என்று நந்திதேவன் சொன்னார்.
“இதைக் கொண்டுசெல்லுங்கள். பிரதிஷ்டானபுரியின் காவியசபையில் இதை நிறுவுங்கள். இனி இதுவே இங்கு காவியம் என்னும் சொல்லின் பொருள் என நிலைகொள்ளவேண்டும்” என்று குணாட்யர் சொன்னார். “முதல் ஞானி அதர்வனும், ஆதிகவி வால்மீகியும், முதல்வியாசனும், மகாசூதர் உக்ரசிரவஸும் சொன்னவை அனைத்தும் இதிலுள்ளன. அச்சொற்கள் முளைத்துப் பெருகிய கதைகள் ஒவ்வொன்றும் இதில் விரிந்துள்ளன. இங்கே வாழ்ந்தவர்கள் இனி வாழ்பவர்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இதிலுள்ளது”
அந்தக் காவியத்தை எழுபது பெரிய நார்ப்பெட்டிகளில் அடுக்கி அவற்றை ஊரில் இருந்து அழைத்துவந்த சுமைதூக்கிகளின் தலையில் ஏற்றிக்கொண்டு குணதேவனும் நந்திதேவனும் பிரதிஷ்டானபுரியின் காவியசபையைச் சென்றடைந்தார்கள். அவர்கள் வரும் செய்தி அதற்குள் நகருக்குள் பரவியிருந்தது. நகரின் கோட்டை முகப்பு முதல் அவர்களுக்குப் பின்னால் கூட்டம் சேர்ந்துகொண்டே இருந்தது. அவர்கள் வாக்பிரதிஷ்டான் என்னும் அந்த சபையைச் சென்றடைந்தபோது நகரின் அத்தனை புலவர்களும், கவிஞர்களும், பாடகர்களும், மாணவர்களும் அங்கே திரண்டிருந்தார்கள்.
சபைக்கூடத்தில் வாக்பிரதிஷ்டானத்தின் சதுர்வித்வத்கோசத்தின் நவரத்னாவளியின் ஒன்பது பெரும்புலவர்களான சர்வவர்மனும், ரத்னாகரரும், திரிவிக்ரமரும், குணபூஷணரும், சுபாஷிதரும், பிரபாகரரும், அஸ்வதரரும், சுபகரும் அவைக்கு வந்து அமர்ந்திருந்தனர். கனகமாலாவின் பதினெட்டு புலவர்களும், ரஜதமாலாவின் வட்டத்தின் நூற்றியெட்டு புலவர்களும் இருந்தனர். அக்ஷமாலாவின் அத்தனை புலவர்களும் வந்திருந்தனர். அவர்களின் மாணவர்களும் இணைந்துகொண்டபோது சபை தலைகள் நிறைந்து தென்பட்டது.
வாக்பிரதிஷ்டான சபையின் வாசலில் சென்று நின்று கணதேவன் சொன்னான். “இந்த பாரதவர்ஷம் கண்ட முதற்பெரும் கவிஞர் குணாட்யரின் மாணவனாகிய கணதேவன் நான். இந்த மண் கண்ட மிகப்பெரிய காவியத்தை இந்தச் சபையில் அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறேன்”
நந்திதேவன் சொன்னான், “இதுவரை இங்கே இயற்றப்பட்டவையும் பயிலப்பட்டவையுமான எல்லா காவியங்களுக்கும் இதுவே அன்னை. இதுவரை இங்கே தோன்றிய நூல்களெல்லாம் மரங்களும் செடிகளும் என்றால் இதுவே தாய்மண். இனி பிரதிஷ்டானபுரியின் இந்தச் சபை இக்காவியத்தாலேயே அறியப்படுவதாகுக!”
அச்செய்தி அரசர் அக்னிபுத்ர சதகர்ணியைச் சென்றடைந்திருந்தது. அவர் தன் பட்டத்து யானையை அலங்கரித்து அனுப்பி அந்நூலை எதிர்கொண்டு வரவேற்கச் செய்து வாக்பிரதிஷ்டானச் சபைக்குக் கொண்டு சென்றார்.
சபைக்குள் அக்காவியம் அடங்கிய பெட்டிகள் சென்று அமைந்தபோது ஆழ்ந்த அமைதி நிலவியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள்மேல் பெரும் எடை ஒன்றை உணர்பவர்கள் போலிருந்தார்கள். சிறிய ஒலிகள்கூட அவர்களில் அதிர்வை உருவாக்கின.
வழக்கம்போல அத்தனை சபை நிகழ்வுகளும் நடைபெற்றன. ஆனால் எப்போதும் எழும் உரத்த வாழ்த்தொலிகளும், ஏற்பொலிகளும் எழவில்லை. அனைவரும் பிரமை பிடித்து அமர்ந்திருப்பவர்கள் போலிருந்தார்கள்.
முறைப்படி சபை தொடங்கியதும் கோல்காரன் எழுந்து அங்கே அரங்கேற்றத்திற்கு குணாட்யரின் மாபெரும் காவியம் கொண்டு வரப்பட்டுள்ள செய்தியை அறிவித்தான். ஆனால் சபையில் இருந்து ஒரு வாழ்த்தொலியோ வரவேற்புக்குரலோ எழவில்லை.
சபைத்தலைவரான சர்வவர்மன் கைகாட்டியதும் குணதேவன் எழுந்து வணங்கி அந்தக் காவியத்தைப் பற்றிச் சொன்னான். “இந்த வாக்பிரதிஷ்டான சபை பாரதவர்ஷத்தில் முதன்மையானது. இதன் தலைமைக் கவிஞராக இருந்த எங்கள் ஆசிரியர் குணாட்யர் பாரதவர்ஷத்தின் முதன்மைக்கவிஞர் என ஏற்கப்பட்டவர்”
“ஆனால் தோற்கடிக்கப்பட்டு அகற்றப்பட்டவரும்கூட” என்று சர்வவர்மனின் மாணவனாகிய அஸ்வபாலன் சொன்னான். சபையில் ஒரு முழக்கம் ஏற்பட்டது.
குணதேவன் அவனை கவனிக்காதவனாக சொன்னான். “என் ஆசிரியர் நகர்துறந்து காட்டுக்குச் சென்றார். அங்கே அவர் தன் ஏழாண்டுக்காலத் தவத்தால் இந்தப் பெரும் காவியத்தை இயற்றியிருக்கிறார். இதை இந்த சபையில் அரங்கேற்றவேண்டும் என எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார். இதுவரை இந்த பாரதநிலத்தில் சொல்லப்பட்டவையும் கேட்கப்பட்டவையுமான எல்லா கதைகளும் இந்தக் காவியத்தில் உள்ளன. இனி இங்கே சொல்லப்படும் எந்த கதையும் இந்நூலில் இருந்தே தொடங்கும். இக்காவியத்தை அரங்கேற்றும் பேறு இச்சபைக்கு அமைந்துள்ளது என்றே சொல்வேன்”
சர்வவர்மன் “சில ஐயங்களை முதலில் களையவேண்டும் குணதேவரே” என்றார். “மகாகவிஞரான குணாட்யர் இங்கே இருக்கும்போது வேதம் முதலான அனைத்து நூல்களையும் கற்றறிந்தவர். அவற்றை இங்கே கற்பித்தவர். அவர் கற்று கற்பித்த கதைகளும் ஞானமும்தன் இந்நூலிலும் உள்ளனவா?”
“இல்லை, இதிலுள்ளவை அவர் தன் காட்டுவாழ்க்கையில் பெற்றவை”
“அங்கே அவர் எப்படி கற்றார்? கண்களும் செவிகளும் நாவும் இல்லாதவருக்கு எவர் கற்பிக்கமுடிந்தது?”
“சபையினரே, விந்தியமலைக் காட்டில் , கோதாவரிக் கரையில் பாரதநிலம் அறிந்த அத்தனை கதைகளையும் அறிந்த கானபூதி என்னும் பைசாசம் வாழ்கிறது. அதைப் பற்றி முன்னரே நம் நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. குபேரனின் சபையில் இருந்து சாபத்தால் மண்ணுக்கு வந்த சுப்ரதீகன் என்னும் யக்ஷனே கானபூதியாகியது. நம் நூல்களில் அகோரபைரவன் என்றும் உக்ரவீரபத்ரன் என்றும் வழிபடப்படும் தெய்வமும் அதுவே. சூலசிரஸ் என்னும் அரக்கனிடமிருந்து சுப்ரதீகன் கேட்டறிந்த கதைகளையும் பின்னர் இங்கு வாழ்ந்து அறிந்தவற்றையும் அந்தக் கதைசொல்லும் பிசாசு என் ஆசிரியருக்குச் சொன்னது. அவற்றையே என் ஆசிரியர் இக்காவியமாக எழுதியுள்ளார்”
“நல்லது, பிசாசின் கதை” என்று புன்னகையுடன் சர்வவர்மன் சொன்னார். “அந்தப் பிசாசின் கதைகள் இந்நகருக்குள் வர முடியும் என்றால் ஏன் அது மட்டும் காட்டில் இருக்கிறது?”
“காடு தெய்வங்கள் உறையும் இடம்” என்று நந்திதேவன் சொன்னான்.
“நகரிலும் தெய்வங்கள் வாழ்கின்றன. அவை மங்கலத்தெய்வங்கள்” என்று சர்வ வர்மன் சொன்னார். “எட்டு திருமகள்கள் இங்கே வாழ்கிறார்கள். அழகுவடிவமான திருமாலும், வெள்ளை எருதில் ஊர்பவனாகிய சிவனும், படைப்பவனாகிய பிரம்மனும் இங்கே திகழ்கிறார்கள். மூன்று தேவியரும் கோயில்கொண்டிருக்கிறார்கள்”
“எந்நகரில் வாழ்ந்தாலும் மனிதர்கள் இறுதியில் காட்டுக்குத்தான் சென்றாகவேண்டும்” என்று குணதேவன் சொன்னான். “அங்கே மெய்யுணர்த்தி நின்றிருக்கின்றன தெய்வங்கள்”
“அவை உணர்த்துவது மெய்தான் என்பதில் எனக்கு மறுப்பில்லை” என்று சர்வ வர்மன் சொன்னார். “ஆனால் மெய்யே இரண்டுவகை. வாழச்செய்யும் மெய் உண்டு. வாழ்வை துறக்கச்சொல்லும் மெய்யும் உண்டு. குலம்வாழச்செய்யும் மெய் உண்டு, எரித்து விபூதியாகச்செய்யும் மெய்யும் உண்டு. இது வாழும் நகர், அமைதியும் வளமும் கல்வியும் நிலைபெற்ற நகரம்”
“இந்நகரம் இதுவரைப் பேசிய அனைத்தும் முழுவடிவில் இந்நூலில் உள்ளன” என்று குணதேவன் சொன்னான். “இங்கு இதுவரை முன்வைக்கப்பட்ட அத்தனை நூல்களும் பிழையானவை என்று இந்நூல் காட்டும். பிழையான நூல்களின்மேல் கட்டப்பட்டவை எல்லாம் சரிந்துவிழும்… நமக்கு அடித்தளமாக அமையும் அழியாத உண்மையை இந்நூல் உரைக்கும்”
“இந்நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது? குணாட்யர் தானறிந்த தேசமொழிகள் அனைத்தையும் உதறுவதாக அறிவித்தார் என்பதனால் கேட்கிறேன்” என்றார் ரத்னாகரர்.
“இது பைசாசிக மொழியில் அமைந்துள்ளது” என்று குணதேவன் சொன்னான். “ஆனால் அதை நான் சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் இன்னும் தேசபாஷைகளிலும் பொருள்சொல்லமுடியும்”
சுபாஷிதர் “அரசே, எனக்கு இந்நூல் இங்கே ஒலிப்பது சரியல்ல என்று படுகிறது. இது நாமறியாத மொழி. நாமறியாத ஏதோ தெய்வத்தின் சொல். அது நமக்கு ஒரு சாபத்தை இந்நூல் வழியாக இங்கே அனுப்பியிருக்கலாம். இந்நகர்மேல் அந்த சாபம் இந்நூல் வழியாகப் பரவலாம்” என்றார்.
சட்டென்று சபையில் இருந்து ஓங்காரமாக ஆமோதிப்பு எழுந்தது. பலர் தங்கள் கோல்களைத் தூக்கியபடி எழுந்து “ஆம்! மெய்!” என்று கூவினார்கள். “உண்மை அது” “நாம் யோசித்துச் செய்யவேண்டும்” என்று கூச்சல்கள் எழுந்தன.
குணதேவன் “நீங்கள் எதற்கு அஞ்சுகிறீர்கள் புலவர்களே? உங்கள் நூல்களெல்லாம் அழிந்துவிடும் என்றா?” என்றான். “அஞ்சவேண்டாம். இந்த முழுமுதல் உண்மை இங்கே நிலைகொள்ளும்போது உங்கள் நூல்கள் பொய்யாக ஆவதில்லை. அழகுள்ள பொய்களெல்லாம் உண்மைக்கு அணிகலன்களே ஆகும்”.
“இந்நூலை இங்கே அரங்கேற்றுவதற்கான காரணம் என்ன?” என்று சுபகர் கேட்டார். “இந்த சபையில் வேதாதிகாரம் கொண்ட அந்தணர்களின் ஞானநூல்களும், காவியங்களும், நெறிநூல்களும் அரங்கேறியுள்ளன. சதகர்ணிகள் நிஷாதர்களின் ரத்தம் கொண்டவர்கள் என்னும் பழிப்பேச்சு பிறநாடுகளில் உண்டு. அவற்றுக்கு நாம் அளிக்கும் பதில் அந்த நூல்கள்தான்… இந்த நிஷாதநூலை நாம் இங்கு அரங்கேற்றி ஒருவேளை அது பிற நூல்கள் அனைத்தையும் பொருளற்றதாக ஆக்கிவிடும் என்றால் அதன் விளைவு என்ன? சதகர்ணிகள் நிஷாதர்கள் என்று நிறுவப்படுவதா?”
“இந்நூல் நிஷாதர்களின் புகழ்பாடுவது என்பதில் சந்தேகமே தேவையில்லை” என்று அஸ்வதரர் சொன்னார். “சூலசிரஸ் சொன்ன அரக்கர்களின் கதைகளில் இருந்துதான் கானபூதி தன் கதைகளைத் தொடங்குகிறது. இதில் அரக்கர், அசுரர், நிஷாதர், பைசாசிகர்களின் கதைகள்தான் இருக்கும். சந்தேகமே வேண்டாம், இந்நூல் க்ஷத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிரானது. அவர்களின் அதிகாரத்தை நிறுவும் வேதங்களுக்கு எதிரானது. அவ்வேதங்களை ஒட்டி எழுந்த ஆதிகவியின் ராமாயணத்திற்கும் மகாவியாசனின் பாரதகாவியத்திற்கும் எதிரானது. இது நாம் எவற்றையெல்லாம் நம்பி இங்கே நிலைகொள்கிறோமோ அனைத்துக்கும் எதிரானது. இது நாம் நம் கூரைமேல் வைத்துக்கொள்ளும் கொள்ளி”
குணதேவன் அரசரை நோக்கி “அரசே, இந்த நூல் இங்கே அரங்கில் முன்வைக்கப்பட்ட பிறகு எழவேண்டிய விவாதங்கள் இவை. முதலில் இந்தச் சபை நூலை கேட்கட்டும். அவர்கள் சொல்லட்டும் இந்நூல் ஏற்கத்தக்கதா இல்லையா என்று” என்றான்.
“இந்நூல் அவையில் வைக்கப்படவே தகுதியற்றது…” என்று திரிவிக்ரமர் சொல்ல ஆரம்பித்தார்.
அரசர் கையமர்த்தி “நூல் சபைக்கு வந்துவிட்டது. அது இங்கே படிக்கப்படட்டும். அதன்பிறகு உங்கள் மறுப்புகளைச் சொல்லலாம். அம்மறுப்புகளைச் சபை ஏற்குமென்றால் இந்நூலை நாம் நிராகரிக்கலாம்… அதுவே இந்த சபையின் முறைமையாக இருந்து வருகிறது” என்றான்.
அதன் பின் ஒன்றும் சொல்வதற்கில்லாமல் வாக்பிரதிஷ்டான சபையின் முதல் வரிசைகள் அடங்கின. ஏற்கனவே வெளிவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்நூலைக் கேட்கும் ஆர்வத்துடன் அமைதி அடைந்திருந்தனர்.
நந்திதேவர் காவியத்தின் செய்யுட்களை வாசிக்க குணதேவர் சம்ஸ்கிருதத்தில் அச்செய்யுளின் பொருளைச் சொல்லவேண்டும் என அவர்கள் வகுத்துக் கொண்டிருந்தனர். அதன்படி நந்திதேவர் தன் உரத்த மணிக்குரலில் காவியத்தின் முதற்செய்யுளை வாசித்தார்.
பைசாசிகமொழியின் விந்தையான ஒலி அந்தச் சபையை திகைக்கவைத்தது. ஓர் மெல்லிய முழக்கம் உருவானது. அதுவே தருணம் என்று சர்வவர்மன் புரிந்துகொண்டார். கையை ஓங்கித்தட்டியபடி உரத்தகுரலில் வெடித்துச் சிரித்தார். அதை புரிந்துகொண்டு பிற புலவர்களும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினார்கள்.
சிரிப்பு மிகவேகமாக அனைவரிலும் பரவியது. ஒருவர் சிரிப்பதைப் பார்த்து இன்னொருவர் சிரித்தார்கள். ஏன் என்றே தெரியாமல் சிரித்தார்கள். பின்னர் சிரிப்பு அவர்களை ஆட்கொண்டது.
நந்திதேவர் கைகாட்டி சபையினரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர் செய்யுளின் அடுத்த வரியை படித்ததும் சற்றே தணிந்த சிரிப்போசை மீண்டும் வெடித்தெழுந்தது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீடங்களில் சரிந்து அமர்ந்தும் குனிந்து விழுந்தும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் சிரித்தார்கள்.
அஸ்வதரர் தலையில் அடித்துக்கொண்டு “காதல்கொண்ட நாய்களின் ஒலி” என்றார். அந்தச் செய்யுளின் ஒலியை ஏளனமாக மிகைப்படுத்தி ஊளைபோல ஆக்கினார். “ஊ ஊ…. மகரமாதத்து நாய்கள்…. ஊ ஊ”
அத்தனைபேரும் எழுந்து நின்றுவிட்டார்கள். அனைவரையும் விந்தையான பேய்க்கூட்டம் ஒன்று ஆட்கொண்டதுபோலிருந்தது. கைநீட்டி கூச்சலிட்டுச் சிரித்தனர். வாயில் கைவைத்து ஊளையிட்டார்கள். எக்களிப்புடன் துள்ளித் துள்ளிக் குதித்தனர்.
தன்னைச் சுற்றியிருந்த முகங்களை குணதேவன் பார்த்தான். அவற்றில் வெறும் பித்துதான் நிறைந்திருந்தது. அக்கண்கள் அனைத்தும் ஒன்றுபோலவே வெறித்து இளித்துக்கொண்டிருந்தன.
சிரிப்பு சற்று தழைந்தபோது அஸ்வதரர் “இதோ இறைச்சிக்குச் சண்டைபோடும் நாய்” என்று சொல்லி வவ் வவ் வவ் என்று ஓசையிட்டார். புஷ்பதரர் என்னும் கவிஞர் “இதோ தண்ணீர் குடிக்கும் நாய்” என்று சொல்லி “ளக் ளக் ளக்” என்று ஓசையிட்டார். ஒவ்வொன்றுக்கும் அவர்கள் வெறிகொண்டு சிரித்துக்கூத்தாட்டமிட்டனர்.
அர்த்தமற்ற ஒன்று மட்டுமே அத்தனை தீவிரமாக வெளிப்படும் என்று குணதேவன் எண்ணினான். அதற்கு மட்டுமே மறுபக்கமே இருக்காது. அவன் என்ன செய்வதென்று அறியாமல் அரசனைப் பார்த்தான். அரசனும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.
சர்வவர்மன் “பைசாசத்தின் மாணவர்களே உங்கள் நாய்க்குரல் காவியத்துடன் கிளம்புங்கள். வாக்பிரதிஷ்டானம் இதற்குமேல் தெளிவாக தன் தீர்ப்பைச் சொல்லவேண்டியதில்லை” என்றார்.
திரிவிக்ரமர் “சபை உங்கள் காவியத்தை எள்ளிநகையாடியிருக்கிறது….” என்றார். “கிளம்புங்கள்…கிளம்புங்கள்… காவியம் புளித்துவிடப்போகிறது!”
“போகும்போது வாக்பிரதிஷ்டானத்தின்மேல் ஒற்றைக்கால் தூக்கி சிறுநீர் துளி விட்டுக்கொண்டு போங்கள்” என்றார் ஒருவர்.
மீண்டும் சிரிப்பொலிகள் பொங்கி எழுந்தன. குணதேவர் அரசனைப் பார்க்க அவர் வெளியேறும்படி கைகாட்டினார். நந்திதேவர் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதபடி அப்படியே கால்மடித்து அமர்ந்தார். அவரை குனிந்து தோள்தொட்டு ஆறுதல் சொல்ல குணதேவர் முயன்றபோது சர்வவர்மன் கண்களைக் காட்ட அவருடைய மாணவர்கள் கூச்சலிட்டபடி ஓடிவந்து காவியம் வைக்கப்பட்ட பெட்டிகளை தூக்கி அப்பால் வீசினர்.
சதகர்ணி அரசர் சீற்றத்துடன் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அதைத் தடுக்க முயல்வதற்குள் சபையில் இருந்தவர்கள் பெருந்திரளாக எழுந்து வந்து அந்தப் பெட்டிகளை தூக்கி வீசினார்கள்.
அரசர் “அவர்களை தடுங்கள்…படைவீரர்களிடம் ஆணையிடுங்கள்” என்று கூவினார்.
“அது நிகழட்டும் அரசே” என்றார் தலைமை அமைச்சர் மாதவர். “அவர்களை தடுக்க முயன்றால் காவியசபையில் ரத்தம் சிந்த நேரிடும்…அது நமக்கு பெருமை அல்ல. அத்துடன் பைசாசிக மொழியில் அமைந்த ஒரு நூலை நம் சபை எள்ளிநகையாடி நிராகரித்தது என்ற பெயர் உங்கள் குலப்பெருமைக்கும் சான்றாக அமையும்…”
கூட்டத்தினர் காவியம் அடங்கிய பெட்டிகளை கொண்டுசென்று தெருவில் வீசினார்கள். குணதேவனையும் நந்திதேவனையும் பிடித்து இழுத்து அவர்களின் ஆடைகளை களைந்து கோவணத்துடன் புழுதியில் போட்டு புரட்டினர். புலவர் சபைக்கு வெளியே இருந்த இளைஞர்களும் பிறரும் நாய்கள் போல கேலியாக ஊளையிட்டபடி அவர்களை காலைப்பிடித்து புழுதியில் இழுத்துச் சென்றார்கள். பெட்டிகளைச் சுமந்துவந்தவர்கள் ஓடி தப்பினார்கள். பெட்டிகள் உடைக்கப்பட்டு சுவடிகள் கிழித்து தெருவெங்கும் வீசப்பட்டன. ஆங்காங்கே போட்டு கொளுத்தப்பட்டன.
அந்த நாள் முழுக்க நகரில் நாய்போல நடிப்பதும் கூச்சலிடுவதும் ஒரு கூட்டுமனநோய் போலப் பரவியது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஏதோ ஒன்று வெளிவந்தது. வயது முதிர்ந்தவர்கள், கல்வி கற்றவர்கள், பல்லக்கில் செல்லும் செல்வம்கொண்டவர்கள் கூட வாயில் கைவைத்து நாய்போல ஊளையிட்டனர். கையை பின்பக்கம் வால்போல வைத்து ஆட்டி உரக்கச் சிரித்து கூச்சலிட்டனர். தெருக்களில் ஒருவர் மேல் ஒருவர் கால்தூக்கி சிறுநீர் கழிப்பதுபோல நடித்து துரத்தினர். குலப்பெண்கள்கூட திண்ணைகளிலும் உப்பரிகைகளிலும் நின்று அந்த கண்மண் தெரியாத கூத்தை ரசித்துக் கூச்சலிட்டனர். மலர்களையும் பொரியையும் தெருக்களில் நெரிசலிட்ட கூட்டத்தினர் மேல் வீசி சிரித்தார்கள்.
நள்ளிரவில் சட்டென்று எல்லாம் அடங்கியது. களைப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளிலும் சத்திரங்களிலும் அமர்ந்தனர். பலர் களைத்து தூங்கினார்கள். மதுக்கடைகளில் மட்டும் கூச்சல் விடிய விடிய நீடித்தது. அங்கே அமர்ந்திருந்த சிலர் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயன்றனர்.
“அந்தக் காவியத்தை அவையில் படிக்காமல் இருந்தது நல்ல விஷயம்… அந்தப் பெட்டியை திறந்ததற்கே நகரில் பைத்தியம் பரவிவிட்டது” என்றார் ஒருவர்.
“அது நிஷாதர்களின் சூது. அவர்கள் ஆபிசார மந்திரங்கள் வழியாக இந்நகரை கைப்பற்ற முயன்றார்கள்… நாம் அதில் ஒரு சொல்லைக்கூட செவிகொள்ளவில்லை. ஆகவே தப்பித்தோம்”
அரண்மனையின் உப்பரிகையில் நின்று நகரில் எழுந்த பைத்தியக்கூத்தை பார்த்துக் கொண்டிருந்த அக்னிபுத்ர சதகர்ணி பெருமூச்சுவிட்டார்.
அவர் அருகே நின்ற அமைச்சர் மாதவர் “அவ்வப்போது இவர்களுக்கு இப்படி ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. நாம் அதை அளித்தாகவேண்டும்” என்றார். “ஓர் அரசர் அவ்வப்போது தன் குடிமக்களுக்கு போரையும் அழிவையும்கூட அளிக்கவேண்டும் என்று அர்த்தசாஸ்திரங்கள் சொல்கின்றன”
நகர் முழுக்க குணாட்யரின் மாபெரும் காவியம் ஓலைக்கிழிசல்களாகப் பரவி காற்றில் அலைக்கழிந்தது. பின்னிரவில் வீசிய காற்று அதை அள்ளிக்கொண்டுசென்று சுவர்களின் அருகே சேர்த்தது. சில சுவடிகள் இல்லங்களின் சாளரங்களில் சிக்கி இருந்து புறாபோலச் சிறகடித்தன.
“அவை உள்ளே வர முயல்கின்றன. அவற்றை உள்ளே விடக்கூடாது… அந்த சுவடிகளில் ஆபிசார மந்திரங்கள் இருக்கலாம்” என்றார்கள் கிழவிகள். சுவடிகளை அவர்கள் கைகளால் தொடாமல் கழிகளால் தள்ளி வெளியே விட்டனர்.
தன் இல்லத்தில் சர்வவர்மன் அமைதியிழந்து தாடியை தடவியபடியும் கைகளை சேர்த்து இறுக்கியபடியும் முகப்புக்கும் அறைக்குமாக அலைக்கழிந்தார்.
அவருடன் இருந்த சுபகர் “எல்லாம் நாம் எண்ணியவாறே முடிந்தது. அவர்கள் இருவரும் இந்நேரம் தங்கள் ஆசிரியரைத் தேடி காட்டுக்குச் சென்றிருப்பார்கள்” என்றார். “நகரம் அடங்கிவிட்டது…ஓசைகள் ஓய்ந்துவிட்டன”
“ஆம்” என்று சர்வ வர்மன் சொன்னார். ”ஆனால் மக்கள் நாளைக் காலை தங்களைப் பற்றி நினைக்கவே கூச்சப்படுவார்கள். என்ன நடந்தது என்றே அவர்களுக்குப் புரியாது. அத்தனை எளிதாக இன்னொருவரால் கையாளப்படத்தக்கவர்களா நாம் என்று எண்ணி எண்ணி வெட்கப்படுவார்கள்”
“அது ஒரே ஒரு காலைப்பொழுதுக்குத்தான். அனேகமாக அவர்கள் இந்த நாளைப் பற்றி பேசிக்கொள்ளவே மாட்டார்கள். அப்படியே கடந்துசென்றுவிடுவார்கள்” என்று சுபகர் சொன்னார்.
“ஆமாம், ஆனால் மனிதர்கள் அப்படிக் கடந்துசெல்பவை எல்லாம் அவர்களுக்குள் கல்லிடுக்கில் ஈரம்போல நுழைந்து நிரந்தரமாக தங்கிவிடுகின்றன. எதிர்பாராத முறையில் அவை வெளியாகவும்கூடும்” என்றார் சர்வவர்மர். “சட்டென்று ஏதோ ஒன்று நடந்து அவர்கள் அனைவரும் அப்படியே குணாட்யர் மாபெரும் ஞானி என்று ஏற்றுக்கொள்ளலாம். குற்றவுணர்ச்சி தாளாமல் இந்நகரமே சென்று அவர் காலில் விழவும்கூடும்”
“நாம் அப்படியெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்று சொன்னபோது சுபகரின் உற்சாகமும் முற்றாக வடிந்துவிட்டிருந்தது. “நான் வருகிறேன்” என்று அவர் கிளம்பினார்.
அதுவரை பேசாமலிருந்த ரத்னாகரர் “நான் வரும் வழியெல்லாம் தெரு முழுக்க அந்த மாபெரும் காவியத்தின் ஓலைகள் சிதறிக்கிடப்பதைக் கண்டேன்” என்றார். “மண்ணில் போட்டு மிதித்தார்கள். கிழிந்த ஓலையை எடுத்து மேலும் கிழித்தார்கள். ஒருவன் ஓலைகளை அள்ளிப்போட்டு அதன்மேல் சிறுநீர் கழிப்பதைக் கண்டேன்.”
சர்வவர்மன் வெறுமே பார்த்தார்.
“அது காவியம் என்பதற்கே எதிரான உணர்வு அல்லவா? கல்விக்கும் ஞானத்திற்கும் எதிராக பாமரர் கொள்ளும் வஞ்சம் அல்லவா?” என்றார் ரத்னாகரர். “சாமானியர் கண்களில் நாம் அனைவருமே அதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களுக்கு காவியமும் இலக்கியமும் எல்லாம் என்னவென்றே தெரியாது. தெரியாததனால் இதன் மேல் அச்சம். அச்சத்தில் இருந்து காழ்ப்பு. காழ்ப்பினால் அவர்கள் இதை முழுக்க விலக்கிக் கொள்கிறார்கள். இதை அணுகவே முடியாதவர்கள் ஆகிறார்கள்”
ரத்னாகரர் தொடர்ந்தார். “நாம் அவர்களின் தலைக்குமேல் அமர்ந்திருக்கிறோம். அவர்களின் பார்வையில் முற்றிலும் அர்த்தமில்லாத ஒன்றுக்கு பொன்னும் புகழும் மதிப்பும் கிடைக்கின்றன. ஆகவே அவர்கள் நாம் அனைவரையும் வெறுக்கிறார்கள். இந்நகரின் ஆட்சி அவர்களில் ஒருவருக்குக் கிடைத்தால் நாமனைவரும்தான் முதலில் தலைவெட்டி வீசப்படுவோம்… சர்வவர்மரே, நாம் இன்று நகரத்தெருக்களில் கண்டது அந்த உணர்ச்சியை அல்லவா?”
“போதும், நாம் இதை நாளைப் பேசுவோம்”
”ஐயமே தேவையில்லை. அது மகத்தான காவியம்தான்… மானுட இனம் உருவாக்கியவற்றிலேயே அதுதான் மிகப்பெரிய காவியம். இனி அதற்கிணையான ஒன்று உருவாகவும் வாய்ப்பில்லை” என்றார் ரத்னாகரர். “அதை அழித்துவிட்டோம். நாம் எதை நம்பி வாழ்கிறோமோ அதன் அடித்தளத்தையே தயங்காமல் இடித்துவிட்டோம். அந்த துயரம் கொஞ்சமேனும் இல்லை என்றால் நாம் கற்ற கல்விக்கு என்ன மதிப்பு?”
“ஆமாம், நாம் நம் முதற்பெருங்காவியத்தை கொலைசெய்தோம்… ஆனால் அதை நான் செய்யும்போது உங்களில் ஒருவர்கூட ஏன் எதிர்க் குரல் எழுப்பவில்லை?” என்றார் சர்வவர்மர். “ஏனென்றால் உங்களுக்கெல்லாம் தெரியும், அந்தக் காவியம் இருக்குமென்றால் நீங்களும் நானும் எழுதியவை அனைத்தும் பொய்யாக ஆகிவிடும். இங்குள்ள அனைத்துமே அர்த்தமற்றவை ஆகிவிடும். அது இல்லையென்றால்தான் நாம் உண்மை என்று நிலைகொள்ள முடியும். நாம் காவியத்தை தெய்வமாக வழிபடுபவர்கள் அல்ல. அதன் காலடியில் தலையை வெட்டி பலிகொடுப்பவர்களும் அல்ல. நாம் அந்தப் பசுவை கறந்து உண்பவர்கள். அது பால்கறக்காவிட்டால் அதை காட்டுக்கு துரத்திவிடுவோம்”
ரத்னாகரர் “எனக்கும் தெரியும் அது. ஆனால் எனக்கு நெஞ்சம் ஆறவில்லை” என்றார்.
“ஆறும்…நாளை தெருக்களை நன்றாகக் கூட்டிவிடுவார்கள். அத்தனைபேரின் பேச்சில் இருந்தும் இன்றைய நாள் அப்படியே மறைந்துபோகும். கண்ணுக்கு முன் நின்றிருப்பது மட்டுமே நம் நினைவிலும் நீடிக்கும். நாமும் மிக விரைவிலேயே மறந்துவிடுவோம்… இன்றைய ஒரு இரவைக் கடப்பது மட்டும்தான் கடினம்…ஆனால் நாம் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பொழுது ஓடிப்போகும். இரவு விடியும்” என்றார் சர்வ வர்மர்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
