காவியம் – 64

பிரகாஷ் யாதவ் அவருடைய எதிரிகளாகிய ஆகாஷ் டாகூர் குடும்பத்தால் கொல்லப்பட்டான். பாட்னாவில் ஆகாஷ் டாகூர் குழுவுக்கும் பிரகாஷுக்கும்தான் நெடுங்காலமாக சண்டை நடந்துவந்தது. அது பிரகாஷின் தந்தை கனசியாம் யாதவுக்கும் ஆகாஷின் தந்தை ராதாமாதவ் டாகூருக்கும் இடையே தொடங்கியது. அவர்கள் இருவருமே எதிர்க்குழுக்களால் கொல்லப்பட்டார்கள். கனசியாம் கொல்லப்பட்ட பிறகு பிரகாஷ் அவரைக் கொன்ற ராதாமாதவ் டாகூரைக் கொன்றான். அதன்பிறகு மூன்று முறை பிரகாஷ் மேல் ஆகாஷ் கொலை முயற்சியில் ஈடுபட்டான். மூன்று முறையும் பிரகாஷ் தப்பித்ததுடன் ஆகாஷின் இரண்டு சகோதரர்களையும் கொன்றான்.
அதன்பிறகு ஒரு சமநிலையும், ஒருவரையொருவர் பயப்படும் நிலையும் உருவாகியது. ஆகாஷின் இளைய தம்பி சுகுமார் டாகூரின் கொலைக்காகத் தான் பிரகாஷ் இறுதியாக சிறையில் இருந்தான். எட்டாண்டுகள் அவனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. நன்னடத்தைக்காகவும் கர்ப்பூரி தாகூரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகவும் என ஏராளமான நாட்களை கழித்து நான்கே ஆண்டுகளில் அவன் வெளியே வந்தான். வெளியே வந்தபோது ஆகாஷ் தன்னை தொடர்ந்து தாக்கக்கூடாது என்பதற்காக அவனே சென்று ஆகாஷின் இரண்டு கடைகளை தாக்கி மூன்று அடியாட்களை கொன்றான். ஆகாஷ் திரும்ப தாக்கியதில் பிரகாஷின் ஒரு அடியாள் இறந்து போனான்.
அதன்பின் இருவரும் பாட்னாவில் ரகுவீர் சிங் என்ற வழக்கறிஞரின் அலுவலகத்தில் சந்தித்து சமரசம் பேசினார்கள். இருவரும் ஒருவரையொருவர் தாக்குவதில்லை என்றும், ஒருவருடைய இடத்துக்கு இன்னொருவர் செல்வதில்லை என்றும் ஒப்பந்தம் போட்டுக் கைகுலுக்கிக் கொண்டனர். இருவருக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புகள் பாட்னாவில் உருவாகிக்கொண்டிருந்தன.
சட்டென்று பாட்னா நான்கு பக்கமும் விரியத் தொடங்கியது. கடுகும் கோதுமையும் கரும்பும் விளைந்து கொண்டிருந்த வயல்கள் எல்லாமே வீடுகட்டும் நிலங்களாக மாறின. புதிய புதிய நகர்கள் உருவாகி வந்தன. விவசாயிகளை பேசிப் பயமுறுத்தி, பேருக்கு ஒரு முன்பணம் கொடுத்து நிலங்களை வாங்கி பதிவு செய்து, அவற்றை கட்டிடம் கட்டுவதற்கான துண்டுகளாக்கி, அதன்பின் கட்டிடம் கட்டும் நிறுவனங்களுக்கு விற்று, அந்தப்பணத்தில் ஒரு பகுதியை அந்த விவசாயிகளுக்குக் கொடுத்து, எஞ்சியதை எடுத்துக்கொள்வதுதான் இருவரும் செய்த தொழிலாக இருந்தது.
அவர்களைப் போன்றவர்கள் இல்லாமல் அந்த நிலத்தை கையகப்படுத்தவும் முடியாது. ஒவ்வொரு நிலமும் பல தலைமுறைகளாக பிரிக்கப்படாமலேயே இருந்ததனால் ஒரு நிலத்தின் மீது முப்பது நாற்பது பேர் உரிமை கொண்டாடினார்கள். யாருக்கு எவ்வளவு பங்கு எந்தவகையில் உரிமை என்பது பேசித் தீர்த்து வைக்க முடியாததாக இருந்தது. எவரும் விரும்பினால் கூட தங்கள் நிலத்தை வீடு கட்டுபவர்களுக்கு விற்க முடியாது.
ஆகாஷோ பிரகாஷோ அவர்கள் அத்தனை பேரையுமே ஒரே நாளில் மிரட்டி இழுத்து வந்து ஓரிடத்தில் அமர வைத்து, அத்தனை பேரிடமும் வரிசையாக பத்திரங்களை கொடுத்து எழுதி வாங்கி, அங்கேயே பத்திரப் பதிவாளரை வரவழைத்து அனைத்து சட்டச்சடங்குகளையும் முடித்து, முன்பணமும் கையில் கொடுத்து திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஒருவகையில் நிலத்தை அப்படி விற்றுவிட்டு டெல்லிக்கோ பாட்னாவுக்கோ கூலி வேலைக்கு சென்றுவிடுவது என்பது அவர்களுக்கும் உதவியாகத்தான் இருந்தது. தங்களுக்குள் நிலத்தின் உரிமைக்காக சண்டையிட்டு அடித்தும் வெட்டியும் அவர்கள் அதிலேயே சிக்கிக்கொண்டிருந்தார்கள்.
பிரகாஷ் சிறையிலிருந்து வெளிவந்த நான்காண்டுகளில் பாட்னாவில் ஐந்து இடங்களில் தன்னுடைய கட்டிடங்களை கட்டிவிட்டான். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அவனுடைய சொந்த ஊரிலேயே இருந்தார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எதிரிகளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். அவர்களுக்குத் தனியாகக் காவலும் இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் அவன் ஊருக்குச் சென்றுவந்தான். பாட்னாவில் அவனுக்கு நான்கு ஆசைநாயகிகள் தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அதைத்தவிர நினைத்தபோதெல்லாம் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்று வந்தான். ஒவ்வொரு முறையும் அவன் ராம்சரணையும் அழைத்துச் சென்றான்.
ராம்சரண் பிரகாஷின் ஒரு வேலைக்காக கல்கத்தா சென்றிருந்தான். மாலை தன் விடுதிக்கு திரும்பியதும் போன் வந்திருக்கும் செய்தியை விடுதி முகப்பில் சொன்னார்கள். அவன் திரும்ப அழைத்தபோது பிரகாஷ் கொல்லப்பட்ட செய்தியை அவனுடைய கணக்குப்பிள்ளை சொன்னார். பிரகாஷ் தன் ஆசைநாயகி ஒருத்தியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது நெடுநாட்களாக அவனை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு கும்பல் அவன் காரை நிறுத்தி இறங்கி வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதே ஓடி வந்து அவனையும் அவனுடன் சென்ற மெய்க்காவலனாகிய நீத்து யாதவையும் வெட்டிவிட்டு ஓடிச்சென்றுவிட்டார்கள். நீத்து அங்கேயே இறந்தான். பிரகாஷ் கூச்சல் கேட்டு ஓடிவந்தவர்களால் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தான்.
“அத்தனை பேரும் தலைமறைவாகிவிட்டோம். எங்கள் எல்லா அலுவலகங்களையும் ஆகாஷின் கூட்டம் வந்து தாக்கியது. பத்து பேருக்கு மேல் நல்ல அடி. நாங்கள் இந்த நகரத்தை விட்டே ஓடவேண்டும் என்று மிரட்டிச் சென்றிருக்கிறார்கள்” என்றார் பிரகாஷின் கணக்காளர். “நீதான் எங்களைக் காப்பாற்றவேண்டும். நீ உடனே திரும்பி வா” என்று மன்றாடினார்.
ராம்சரண் உடனடியாக பாட்னா வரவில்லை. பதினைந்து நாட்கள் அவன் கல்கத்தாவிலேயே தங்கியிருந்தான். பாட்னாவில் என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்து கொண்டபிறகு அவன் கல்கத்தாவிலேயே மேலும் ஓராண்டு காலம் தங்கினான். பிரகாஷின் வீடுகள் மற்ற சொத்துகள் எல்லாமே டாகூர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் பிரகாஷின் ரகசியச் சொத்துகளின் விவரங்கள் பெரும்பாலும் ராம்சரணிடமே இருந்தன.
ஓராண்டுக்குப்பிறகு ராம்சரண் மீண்டும் பாட்னாவுக்கு வந்தான். பிரகாஷின் குழு முழுக்கவே கலைந்து நகரில் ஆகாஷ் மட்டுமே கொடி நாட்டிக்கொண்டிருந்தான். பாட்னாவின் இன்னொரு பகுதியில் ராம்சரண் தன் தொழிலைத் தொடங்கியபோது அதை கவனிக்காத அளவு ஆகாஷ் பெரியவனாக ஆகியிருந்தான். ராம்சரண் மீண்டும் தொழிலுக்கு வந்திருப்பது ஓராண்டுக்குப் பிறகுதான் ஆகாஷுக்கு தெரிந்தது . உடனே ஆகாஷை சென்று பார்த்து வணங்கி, ஒரு பெரிய தொகையையும் அளித்து பிரகாஷுக்காகத் தான் எந்த வகையிலும் பழி வாங்கப்போவதில்லை என்று ராம்சரண் ஆகாஷுக்கு தெரிவித்தான். அது தன் முழுமையான வெற்றி என எண்ணிய ஆகாஷ் ஓராண்டுகாலம் அவனை கண்காணித்த பிறகு விட்டுவிட்டான்.
மீண்டும் குழுச்சண்டைகளுக்குள் போக வேண்டியதில்லை என்று ராம்சரண் முடிவு செய்தான். பணம் சேர்ப்பதை ஒரு போதும் வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என்பது அவன் கற்றுக்கொண்ட முதல் பாடம். எப்போதுமே அரசாங்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் நெருக்கமாக இருக்கவேண்டும், அவர்கள் சொல்லும் வேலைகளை உடனடியாகச் செய்து கொடுக்கவேண்டும், ஆனால் அவர்களின் அரசியல் எதிரிகளுக்கு எதிரியாகிவிடக்கூடாது என்பது அவன் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம். அது அவனை வலிமையானவனாக ஆக்கியது.
பாட்னாவில் ஒரு சிறு அலுவலகம் வைத்து அவன் நிலம் வாங்கி விற்றுவந்தான். தன்னை எப்போதுமே வெளியே அதிகம் தெரியாமலேயே வைத்துக்கொண்டான். உள்ளூர் எம்.எல்.ஏக்கு அவன் பங்காளி போல் செயல்பட்டான். ஆனால் அவர் அவனும் இணைந்திருப்பதையும் எங்கும் எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் வழியாகத்தான் அவன் அஸ்வத்தை அறிமுகம் செய்துகொண்டான்.
அஸ்வத் ராம்சரணுக்கு ஓர் உதவி செய்தான். அவன் ஒரு நிலத்தை வாங்க முயன்று கொண்டிருந்தபோது அதன் பன்னிரண்டு பங்காளிகளில் ஒருவனின் மகன் மட்டும் எதையுமே புரிந்துகொள்ளாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். “போலீஸுக்குப் போவேன், போலீஸுக்குப் போவேன்” என்று அவன் கத்திக்கொண்டிருந்தான்.
ராம்சரணின் ஆட்கள் அவனை சமாதானம் செய்தார்கள், மிரட்டினார்கள். அவர்கள் அந்தப் பையனுடைய தந்தையை அழைத்துக் கொண்டு சென்றபோது அவன் ராம்சரணின் அடியாட்களில் ஒருவனை அரிவாளுடன் வந்து ஓங்கி வெட்டப்போனான். அந்த அரிவாளைப் பிடுங்கிய அடியாள் திரும்பி அந்தப்பையனை வெட்டியபோது அங்கேயே அவன் வெட்டுப்பட்டு விழுந்து இறந்தான்.
அடியாளைக் கைது செய்த போலீஸ்காரர் தெற்கிலிருந்து வந்தவர் குண்டப்பா நாராயணன் என்ற கர்நாடகக்காரர். அவர் கைது செய்யப்பட்ட அந்த அடியாளை இரவு முழுக்க வைத்து அடித்து காலையில் யாருக்காக அந்தக் குற்றத்தை செய்தான் என்ற வாக்குமூலத்தை வாங்கிவிட்டார். கைது வாரண்ட் தயாராகவிருக்கிறது என்ற செய்தியை ஒரு போலீஸ்காரரிடமிருந்து ராம்சரண் தெரிந்துகொண்டான். உடனடியாக எம்.எல்.ஏவை சென்று பார்த்தான். அவர் அஸ்வத்தை சென்று பார்க்கும்படிச் சொன்னார்.
அஸ்வத் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் சிக்கியிருக்கும் பிரச்னையைப் பற்றி ராம்சரண் சொன்னான். அஸ்வத் “இது உண்மையிலேயே பெரிய பிரச்னை. வழக்கு போட்டிருப்பவரும் முக்கியமான பதவியிலுள்ள அதிகாரிதான். அவர் ஒத்துக்கொள்ளாமல் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது” என்றான்.
ராம்சரண் அதைப்போன்ற பல பேச்சுகளை முன்னரே கேட்டிருந்தான். எப்போதுமே ஒரு பிரச்னையை பெரியதாக்கி, எளிதில் சமாளிக்க முடியாதது என்று காட்டிய பிறகுதான் அப்பிரச்னையை சமாளித்துக் கொடுப்பதைப்பற்றி அஸ்வத்தைப் போன்றவர்கள் பேசுவார்கள். அவர்களிடம் அந்தப் பிரச்னை உண்மையில் சிறியதுதான் என்று ஒருபோதும் வாதிடக்கூடாது. தான் சிக்கிக்கொண்டிருப்பது உண்மை, அஸ்வத் போன்ற ஒருவரால் அன்றி தனக்கு விடுதலையே கிடையாது என்ற நிலையைத்தான் எடுக்கவேண்டும். ஆகவே அவன் மேலும் மேலும் தணிந்து இந்த முறை மட்டும் தன்னை எப்படியாவது காப்பாற்றிவிடும்படி கெஞ்சினான்.
ஒருகட்டத்தில் அஸ்வத் ”பார்க்கிறேன்” என்றான். ”ஆனால் நடக்கவில்லை என்றால் பிறகு என்னைக் குறைசொல்லக்கூடாது”
”நடக்கும் உங்களால் முடியும்” என்று சொன்ன பிறகு ராம்சரண் அஸ்வத்துக்கு தான் கொண்டுவந்திருந்த பணத்தைக் கொடுத்தான். பணத்தை பொருட்படுத்தாதது போன்ற பாவனையுடன் எடுத்து அப்பால் வைத்தான் அஸ்வத்.
நாற்பத்தைந்து நாட்களில் அந்த வழக்கில் ராம்சரணின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு வேறு இருவருடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன. அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். முப்பது நாட்களில் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தபிறகு அந்த வழக்கு வழக்கம்போல தூக்கி நீதிமன்றக்கோப்புகளில் அடுக்கப்பட்டது. திரும்ப அது ஒருபோதும் விசாரணைக்கு வராது என்று உறுதியாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்திலேயே அந்தக் கோப்பில் உள்ள முக்கியமான காகிதங்கள் அனைத்தும் எடுத்து அழிக்கப்பட்டன. மேலும் சில ஆண்டுகளுக்குள் அந்தக் கோப்பே காணாமல் ஆகிவிடும். திரும்ப அது நீதிமன்றத்துக்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதே வழக்கம்.
அதிலிருந்து அஸ்வத்துக்கு ராம்சரண் நெருக்கமானவன் ஆனான். அஸ்வத் மேலும் சில வேலைகளுக்கு அவனிடம் வந்தான். ராம்சரண் சில வேலைகளுக்கு அஸ்வத்தை அணுகினான்.
ராம்சரண் ஒரு பாரில் குடித்துக்கொண்டிருந்தபோது அஸ்வத் அழைத்தான். அவன் தொலைபேசியை எடுத்து ”சொல்லுங்கள் பாய்சாப்” என்றான்
”உன்னை உன் அலுவலகத்திற்குக் கூப்பிட்டேன். நீ இங்கே பாரில் இருப்பதாக சொன்னார்கள். அதனால் தான் பாருக்கு கூப்பிட்டேன்” என்றான்
”அவ்வளவு அவசியமா இந்த ராத்திரியில்?” என்றான்.
”அவசியம்தான். எனக்கு இதை நாளை வரைக்கும் வைத்திருக்க முடியாது” என்று அஸ்வத் சொன்னான்.
”இன்றைக்கு கொஞ்சம் முன்னால்தான் இதைக் கேள்விப்பட்டேன். இன்று முழுக்க இதுவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதை இப்போதே முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் கோழையும் மடையனும் ஆகிவிடுவேன்” என்றான்.
“நாமாக அப்படி ஆகவேண்டியதில்லை” என்று ராம்சரண் சொன்னான். “நாம் இயல்பாக இருந்தாலே போதும்”
அந்தக் கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் அஸ்வத் “நான் நேரில் வருகிறேன்” என்றான்.
“வாருங்கள், நான் காத்திருக்கிறேன்”
அவன் குடித்துக்கொண்டிருந்த பாருக்கு அஸ்வத் நேரில் வந்து எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லி முடித்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். “அது அப்படித்தான் போகுமென்று எனக்குத் தெரியும்” என்று அவன் சிகரெட் புகையை தன் சுட்டுவிரலால் தட்டியபடி சொன்னான்.
உரையாடல் முடித்து அஸ்வத் மறுநாள் காலை பத்துமணிக்கு அழைப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றான். ராம்சரண் அவனுக்கு விடைகொடுத்துவிட்டு மெல்லிய தள்ளாட்டத்துடன் நடந்து தன் காரை நோக்கிச் சென்றபோது தன்னை ஒரு ஷேக்ஸ்பியர் கதாபாத்திரமாக உணர்ந்தான். போலீஸிடம் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர் மேற்கோள் இருந்தது. ஆனால் அந்த வாக்குமூலத்தை கொடுத்து நீண்டநாட்கள் ஆகிறது. அல்லது இனிமேல்தான் கொடுக்கப்போகிறானா? அதைப்பற்றி எவரோ எங்கோ பேசிக்கொண்டார்கள். ஆனால் அது எந்தக் கதாபாத்திரம்? எத்தனை யோசித்தாலும் அவனால் நினைவுகூர முடியவில்லை. ஒதெல்லோ? மாக்பெத்? ஹாம்லெட்? அவனுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பிராஸ்பரோதான். ஆனால் அவருக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை.
அவன் காரில் ஏறிக்கொண்டதுமே மனம் மாறி இன்னொரு பாருக்குச் செல்லும்படி காரை ஓட்டிய அபய்குமாரிடம் சொன்னான். அவன் மறுபேச்சு பேசாமல் அங்கே கொண்டுசென்றான். செல்லும்போது ராம்சரண் அபய்குமாரிடம் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம்…. இல்லையா?” என்றான். அபய்குமார் ஒன்றும் சொல்லவில்லை.
ராம்சரண் அந்த பாரில் அமர்ந்துகொண்டு மீண்டும் குடித்தான். தன் அலுவலகத்திற்கு அழைத்து போன் வந்தால் அந்த பாருக்கு அழைக்கும்படிச் சொன்னான். கொஞ்சநேரத்தில் போன் வந்தது. இம்முறை ஹரீந்திரநாத் அழைத்தார்.
அவன் அதற்குள் அஸ்வத் தன்னிடம் பேசியதை பெரும்பாலும் மறந்துவிட்டிருந்தான். “என்ன விஷயம்? ”என்றான். “நான் இங்கே ஹாம்லெட் ஆக இருக்கிறேன். To be or not to be… எப்படி இருக்கிறது? அதாவது To be or not to be…I am a bee, honey bee ”
ஹரீந்திரநாத் “நான் அங்கே வருகிறேன்… உன்னிடம் பேசவேண்டும்” என்றார்.
“உங்கள் மகன் பேசினார். அவர் ஏதோ சொன்னார்… அதாவது அவருடைய மனைவி… அதாவது ஊர்வசி தேஷ்பாண்டே. அவள் ஒரு சமர் பையனுடன்…”
“இரு, நானே வருகிறேன்”
அவர் பாருக்கு வந்து அவன் முன் அமர்ந்தபோது அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு விழித்து தெளிவாக இருந்தான்.
“உங்களுக்காகக் காத்திருந்தேன் பாயி” என்றான் ராம்சரண். ”உங்கள் மகன் சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது… உங்கள் மகள் ராதிகா விஷயம்தானே?”
“நான் சொல்வதைக் கேள்…” என்று அவர் சொன்னார். அவரும் அந்த பையனை சென்று பார்த்து மிரட்டவேண்டும் என்றுதான் சொன்னார். ஆனால் அது அஸ்வத்துக்கு தெரியக்கூடாது என்றார்.
அவர் சொல்லி முடித்ததும் ”இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்தப்பையனை மிரட்ட வேண்டிய தேவையெல்லாம் கிடையாது. உங்கள் பெண்ணை கூப்பிட்டு ஒரு வார்த்தை கடுமையாகச் சொல்லி, இது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னாலே போதும். படிக்கும் பெண்கள் எதையாவது படித்துவிட்டு இந்த மாதிரி கொஞ்சம் அத்துமீறுவதுண்டு. சொல்லபோனால் ஒரு நாலைந்து முறை அவனிடம் படுத்தாலே அவர்களுக்கு பித்தம் தெளிந்துவிடும்” என்றான் ராம்சரண்
தான் சொன்னதை எண்ணி தனக்குத்தானே சிரித்துக்கொண்டு ராம்சரண் “ஏற்கனவே அவள் படுத்திருந்தாளென்றால் நாம் சொல்லும்போது கொஞ்சம் எதிர்த்து, கொஞ்சம் அழுது, கொஞ்சம் தனியாக அமர்ந்து சோகம் நடித்து, அதன்பிறகு உண்மையை உணர்ந்து வெளியே வந்துவிடுவாள். அவனிடமிருந்து தன்னை பிரித்த பழியை முழுக்க நம் மீது போட்டுவிட்டு வசதியாக நீங்கள் சொல்லும் பணக்காரனை கல்யாணம் செய்துகொண்டு வாழ ஆரம்பித்துவிடுவாள். கைநிறைய வளையலைப் போட்டுக்கொண்டு, நெற்றி நடுவகுப்பில் குங்குமம் வைத்து, சரிகை சேலையை தலைமேல் முக்காடாகப் போட்டுக்கொண்டு, குலதெய்வ கோயிலுக்கு பதவிசாகப் போய்க்கொண்டிருப்பாள். இதை ஒரு பத்துப் பதினைந்து முறையாவது பார்த்திருப்பேன்” என்றான்.
”இது அப்படியல்ல. இவளை உனக்குத் தெரியாது. இவள் எது செய்தாலும் எனக்கு எதிராகத்தான் செய்வாள். இப்போது இதைச் செய்வதே எனக்கு எதிராகத்தான்.”
ராம்சரணின் மூளை மீண்டும் நழுவிச்செல்ல ஆரம்பித்தது. அரைக்கவனமாக, ”உங்களுக்கு எதிராகவா?” என்றான்.
”ஆமாம் என்னை அவள் ஒரு புழு என்று நினைக்கிறாள். நான் என்ன செய்கிறேன், எப்படிப்பட்டவன் என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றார் ஹரீந்திரநாத். “என்னையும் என் மகனையும் அவள் அளவுக்கு அறிந்த எவருமே இல்லை”
”அது எப்படி? நீங்கள் பேசிக்கொள்வதில்லையா?”
”நாங்கள் பேசிக்கொள்வதே இல்லை. அவள் சிறு பெண்ணாக இருக்கும்போதே நாங்கள் பேசிக்கொண்டதில்லை. உண்மையில் பேசிக்கொண்டிருந்தால் எதையாவது சொல்லி நியாயப்படுத்தவோ மறைக்கவோ செய்துவிடலாம். ஒருவருக்கொருவர் பேசாமலே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போது எதையுமே மறைக்க முடிவதில்லை. அவளுக்குத்தான் எங்கள் குடும்பத்திலேயே என்னைப் பற்றித் தெரியும். என் மீது உள்ள கோபமும் அருவருப்பும்தான் அவளை அந்தத் திசைக்கு செல்ல வைத்தது.”
“இருக்கலாம்” என்றான் ராம்சரண். அதை வேறு எவரோ தன்னிடம் சொல்லிக்கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. கேட்டுக்கொண்டிருப்பவரும் வேறு யாரோதான். தலையை உலுக்கி, தழைந்து வந்த இமைகளை தூக்கிக்கொண்டான்.
“நான் அவளிடம் கெஞ்சினேன், பேசப்பேச அழுதுவிட்டேன். ஆனால் அவள் நான் சொல்வதைக் கேட்க மாட்டாள். நான் அழுதால் அவள் இன்னும் உறுதியாகத்தான் ஆவாள். என்னை ஜெயிப்பதாக நினைத்துக்கொள்வாள். இப்படிச் சொல்கிறேனே, அவள் அவனை விடவேமாட்டாள். அவன் பயந்து போய் அவளை விட்டால் உண்டு” என்றார் ஹரீந்திரநாத்
அவன் ”இது அஸ்வத் பாய் பேசுவதுபோலவே இருக்கிறது” என்றான் ராம்சரண். “அல்லது நான் கொஞ்சம் கூடுதலாகவே குடித்திருக்கிறேன்… நீங்கள் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேதானே? அல்லது அவர் மகனா?”
அவர் அவனை அலட்சியம்செய்து “பங்கிகள் பயந்தாங்கொள்ளிகள். சிறுவயதிலேயே அவர்கள் நிறைய அடிகளையும் அவமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஒரு பெரிய அடியோ அவமானமோ வருகிறது என்றால் பயந்து விலகிவிடுவார்கள். அது மிக எளிது. நீதான் அதை செய்ய வேண்டும்.” என்றார்.
”அதை செய்துவிடலாம் அது ஒரு பதினைந்து நிமிட வேலை. இங்கிருந்து காசி வரைக்கும் போகவேண்டும் அவ்வளவுதான்” என்று ராம்சரண் சொன்னான்.
“உடனே அதைச் செய்” என்றார் ஹரீந்திரநாத்.
”ஆனால் அது வேண்டுமா என்று இன்னொரு தடவை நீங்கள் யோசிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவேளை அதில் ஏதாவது பிரச்னை ஆகலாம். இந்த மிரட்டல் எல்லாமே எங்கு நிற்கும் என்பதை நாம் முன்னரே சொல்லமுடியாது. சாதாரணமாக, நாம் நினைத்த இடத்தில் நிறுத்திவிடலாம். ஆனால் மிகச்சில தருணங்களில் அது நிறுத்த முடியாமலும் ஆகும். அது நம் கையை விட்டு போனால் கிரிமினல் கேஸ் ஆகலாம். செய்தி ஆகலாம். அப்படியெல்லாம் ஆனால் நீங்கள் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்ற விஷயம் வெளியே வந்துவிடும். நீங்கள் பெரிய மனிதர், எல்லாமே பெரியதாக ஆகிவிடும். நீங்கள் அவனை ஆள்வைத்து மிரட்டியது அவளுக்குத் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாள் என்பதும் நாம் யோசிக்கவேண்டியதுதான்”
”அப்படி ஆகாமல் தடுப்பது உன்னுடைய பொறுப்பு. அந்தப் பையனை நீ மிரட்டி ஓடவிடு” என்றபின் ”அவனுக்கு ஒரு நல்ல ரத்த காயம் வேண்டும்.” என்றார்.
ராம்சரண் ”ரத்தக்காயமா?” என்றான்.
”ஆம், அவன் சாகக்கூடாது. ஆனால் அவன் ரத்தத்தை பார்த்து அவன் பயப்பட வேண்டும். நான் இந்தப் பங்கிகளையும் சமர்களையும் மகர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அடிதடியில்லாத சாதியினர். ரத்தத்தை பார்த்தால் அவர்கள் அரண்டு விடுவார்கள். ரத்தம் கண்ணில் காட்டப்படவேண்டும். அவன் எங்கு போனாலும் அந்த ரத்தத்தின் வடு அவனுக்குத் தெரியவேண்டும். அதைப் பார்த்து அவன் பயந்துகொண்டே இருக்கவேண்டும்.”
ராம்சரண் யோசித்தபின் ”அதைச் செய்துவிடலாம். ஆனால் இன்னொருமுறை நீங்கள் யோசியுங்கள். அது புதிய ஊர். நம் கட்டுப்பாட்டிலுள்ள பாட்னா அல்ல அங்கே போய் நாங்கள் இதை செய்யவேண்டும். சட்டென்று ஊர்க்காரர்கள் எங்களைப் பிடித்துவிடலாம். ஒரு இடத்தை நாங்கள் கணக்குப்போட்டு வைத்திருப்போம், அந்த இடம் நாங்கள் நினைத்தது போல் இல்லாமல் இருக்கலாம். அல்லது சம்பந்தமே இல்லாத ஒரு முரட்டுப் போலீஸ்காரர் அங்கே வந்துவிடலாம்.” என்றான்.
இன்னொரு மிடறு அருந்திவிட்டு “எல்லாவற்றையும் விட அந்தப்பங்கிக்கு அங்கே கட்சிக்காரர்களோ சாதிச் சங்கமோ ஏதோ ஒன்று இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு அவர்கள் எல்லாருமே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கோஷ்டியில் சேர்ந்திருக்கிறார்கள். சோஷலிஸம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு எல்லாமே பிரச்னைகளாகக்கூடும். அதை எல்லாம் முன்னரே யோசிக்க வேண்டும்.” என்று சொன்னான்.
”இனி யோசிக்க நேரமில்லை. நீ இப்போதே இங்கிருந்தே கிளம்பி காசி செல்லவேண்டும். நாளை காலை நீ காசியில் இருக்கவேண்டும். மதியத்துக்குள் அவனுக்கு அடி விழுந்திருக்கவேண்டும்.”
ராம்சரண் ”அவ்வளவு சீக்கிரமாகவா?” என்றான்.
“ஆமாம், நமக்கு நேரமில்லை. நான் பேசியது அஸ்வத்துக்குத் தெரியவேண்டாம். நமக்கிடையே பேச்சு இருப்பதே அவனுக்குத் தெரியவேண்டாம். அவன் சொல்லி நீ செய்ததாகவே இருக்கட்டும்.” என்றார் ஹரீந்திரநாத். “அவன் உன்னைக் கண்டிப்பாக கூப்பிடுவான், அவனுக்கும் என்னைப்போலவே அவளிடம் பயம்தான். நீ வீட்டில்தானே இருப்பாய்?”
”நான் இன்னொரு பாருக்கு போகப் போகிறேன்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.
”இன்னொரு பாரா?” என்று ஹரீந்திரநாத் கேட்டார்.
”நான் நேற்று எல்.எல்.பி பட்டம் வாங்கியிருக்கிறேன்”
”பணம் கொடுத்தா?”
”பணம் கொடுத்தா? பாய், நான் முறையாகப்படித்து பரிட்சை எழுதி ஜெயித்திருக்கிறேன்.”
“நீ பட்டம் பெற்றவனா?” என்று ஹரீந்திரநாத் கேட்டார்.
”ஜெயிலில் இருக்கும்போதே பி.ஏ பட்டம் பெற்றேன். ஜெயிலுக்கு போகும்போதே நான் ஓராண்டு முடித்திருந்தேன். மிச்சம் இரண்டு ஆண்டுகளையும் அங்கேயே எழுதினேன். வெளியே வந்தபிறகு சட்டம் படிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் பத்துப்பதினைந்து ஆண்டுகளாகிவிட்டிருந்தன.”
”வக்கீல் பட்டமா? அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?”
”ஒன்றும் செய்யப்போவதில்லை. ஏதாவது பாக்கியிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது. அதையும் செய்து வைப்போம். சட்டென்று யாராவது நம்மை வெட்டி தெருவில் போட்டால் கூட இது ஒன்று மிச்சமிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு சாகமாட்டேனே…”
”ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பைத்தியம் இருக்கிறது. சரி நான் வருகிறேன்” என்று அவர் கிளம்பிச் சென்றார்.
அவர் சென்றபின் அவன் மீண்டும் அமர்ந்து யோசித்தான். அது என்ன ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம்? எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. பாரிலேயே மேஜைமேல் கவிழ்ந்து தூங்கிவிட்டான். அதன் கதவை உள்ளிருந்து மூடிவிட்டார்கள். அவனுடைய டிரைவர் வெளியே காவலிருந்தான். உள்ளே மின்விசிறி மட்டும் சுழன்றுகொண்டிருந்தது. அப்போதுதான் அஸ்வத் அவனை அழைத்தான்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
