கல்வியின் வருங்காலம்
இன்றைய உலகில், தொழில்முறை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பலரும் ஏதோ ஒன்றைக் கற்பிக்கும் இடத்தில் உள்ளனர். ஒரு மென்பொருள் அணியின் தலைவர், கணினி நிரலை இளம் பொறியாளர்களுக்கு கற்பிக்கிறார். குழந்தைகளுக்கான கோடை முகாம்களில் பல வித கல்வி, கலை, விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. புதிய தொழில்கள், இயக்கங்கள் முதலியன தொடங்குவோர், அந்த நிறுவனத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு கற்பிக்க வேண்டி உள்ளது. கற்பிக்கும் இடத்தில் இருப்பவர்கள் துறை-சார் நிபுணர்களாக இருந்தாலும், கற்பிக்கும் முறையில் அனுபவம் இல்லாமல் இருக்கக் கூடும்.
நம் நாடு வளர வளர, கற்கும் ஆர்வமும், துறை-சார் ஆசிரியர்களுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு கலையை, அல்லது கல்வியைக் கற்பிப்பதற்கான அடிப்படை நெறிகள் யாவை?
நன்றி,
ஹரீஷ்
நவீன கல்வித்துறை சார்ந்த பயிற்றியல் பற்றி கல்வித்துறையாளர்களே பொருட்படுத்தும்படியான ஒரு கருத்தை சொல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். எந்தத்துறை ஆனாலும் அதில் நீண்ட கால நேரடி அனுபவம், அதன் விளைவான அவதானிப்புகள், அந்த அவதானிப்புகளை பொதுவெளியில் வைத்து அதன்மீது வரும் எதிர்வினைகள் சார்ந்த விவாதங்கள் -ஆகியவற்றினூடாகத் திரண்டு வரும் கருத்துக்கே மதிப்புள்ளது. தமிழில் பயிற்றியல் பற்றி எழுதப்பட்டவற்றில் பிரசுரமான நூல்களில் வசந்தி தேவி – சுந்தர ராமசாமி உரையாடல் ஒன்றே நான் கவனித்தவரை பெருமதியானது. (தமிழகத்தில் கல்வி)
தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது என்பது ஒரு கல்வித்துறையின் முதல் விதிகளில் ஒன்று. தமிழகத்தில் அதுவே நிகழ்வதில்லை. கல்லூரி ஆசிரியர் பணிக்கு ஒரு கோடி ரூபாய் வரை கையூட்டு என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பயிற்றியலின் நுட்பங்களைப்பற்றியோ அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப்பற்றியோ பேசுவதைப்போல பொருளற்ற ஏதுமில்லை.
முற்றிலும் தகுதியற்றவர்கள் பெரும் தொகை கொடுத்து அரசுப்பணிக்கு இன்று செல்ல முடியும். அவர்கள் எந்நிலையிலும் ஆசிரியராக ஒரு பங்களிப்பை வழங்கிவிட முடியாது. அத்தகைய கல்லூரிகளில் எந்த வகையிலும் தகுதியற்ற பல ஆசிரியர்கள் எந்தவகையிலும் பொருட்படுத்தப்பட முடியாத அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அனைத்து கல்லூரிகளிலும் முற்றிலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது மட்டுமே பயிற்றியலின் அடுத்த கட்டத்தைப்பற்றி நாம் எவ்வகையிலேனும் நாம் பேச முடியும்.
தனியார் கல்லூரிகள் இன்னொரு எல்லையில் உள்ளன. ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் பெறவேண்டிய நியாயமான ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. பல தருணங்களில் அந்த ஊதியம் அவர் உயிர்வாழ்வதற்கே போதுமானதாக இருப்பதில்லை. ஒரு அரசு கடைநிலை ஊழியருடைய சம்பளத்தைவிட குறைவாகவே ஒரு தனியார் கல்லூரியின் உயர்நிலை பேராசிரியர் ஊதியம் பெறுகிறார் எனும்போது அவர்களிடம் பயிற்றியல் நெறிகளைப்பற்றி பேசுவதோ தரமான பயிற்றுவித்தலை எதிர்பார்ப்பதோ எந்தவகையிலும் நியாயமானதல்ல.
அத்துடன் இன்றைய கல்வி முறை என்பது தனியார் துறைகளில் கடும்போட்டி கொண்டது. மாணவர்களின் வெற்றி விகிதம் மட்டுமே அப்போட்டியின் இறுதி இலக்காக இருக்கிறது. அதில் வெல்லும் கல்லூரிகளே லாபம் ஈட்டக்கூடியதாக திகழ முடிகிறது ஆகவே மாணவர்களை தேர்வு வெற்றிக்காக முரட்டுத்தனமாக பயிற்றுவித்தல் மட்டுமே அங்கே நிகழ்கிறது. அதை டீச்சிங் (Teaching) என்பதை விட கோச்சிங் (Coaching) என்பதே சரியானதாக இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லி எழுதவைத்து, மாணவர்களின் மண்டைக்குள் புகுத்தி ,அவர்கள் தன்னிச்சையாகத் தேர்வில் அவற்றை எழுதச்செய்து உயர்மதிப்பெண் பெற வைத்து வெளியே அனுப்புவது மட்டுமே தனியார் கல்லூரிகளில் இன்றுள்ள கல்வி முறையாக இருக்கிறது. அங்கும் இந்த பயிற்றியலின் நெறிகளைப் பற்றி எந்தக்கவலையும் எவருக்கும் இருப்பதில்லை.
இவ்விரண்டு தளங்களுக்கும் அப்பால் ஒரு சிறிய வட்டத்தில் இங்கே தரமான கல்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது பெரும்பாலும் தனிப்பட்ட அக்கறையுடன் சில நிறுவனங்கள் நடத்தி வரும் கல்வி நிலையங்களே. உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்பின் ரிஷிவேலி போன்ற நிறுவனங்கள்.
இவை ஒரு பாதுகாக்கப்பட்ட வட்டத்துக்குள் அக்கல்வியை வழங்குகின்றன கல்விப்போட்டியில் இருந்து விலகி, ஊழலுக்கு அப்பால் இவற்றை நடத்த வேண்டும் என்றால் அவற்றுக்கான நிதி ஆதாரம் வலுவானதாக இருக்கவேண்டும். அந்த நிதியாதாரத்துக்கு பங்களிப்பாற்றக்கூடிய மாணவர்களே அதில் சேரமுடியும். ஆகவே பெரும்பாலும் இந்தக் கல்வி நிலையங்களில் செல்வந்தர்களின் குழந்தைகளே படிக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து நேரடியாக ஐரோப்பியக் கல்லூரிகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.
இந்தியாவின் கல்வி முறையின் மிகப்பெரிய பலவீனமென்பது அக்கல்விமுறையின் போக்குகளை தீர்மானிப்பவர்களின் குழந்தைகள் எவரும் அதில் பயில்வதில்லை என்பதுதான். ஆரம்பப்பள்ளி முதலே ஆசிரியர்களின் குழந்தைகள் அவர்கள் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் படிப்பதில்லை. செல்வந்தர்களின் பிள்ளைகள், அதிகாரிகளின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தரமான பள்ளிகளில் பயில்கிறார்கள். பெரும்பாலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.
ஆகவே இங்கிருக்கும் கல்வி முறை என்பது ஒருவகையில் மாணவர்களின் இயலாமையை அதிகாரிகளும் அரசும் கல்வியாளர்களும் சேர்ந்து சுரண்டுவதாகவே உள்ளது. இன்றைய சூழலில் பயிற்றியலின் சீர்திருத்தங்கள் அல்லது முன்னெடுப்புகளைப்பற்றி பேசுவதென்பது முற்றிலும் பொருளற்றது. அடிப்படையில் இங்குள்ள கல்வி முறையில் சீர்திருத்தம் வந்தாலொழிய நாம் அந்த விவாதங்களுக்குள் கடக்க முடியாது.
அவ்வாறெனில் தனி பயிற்றியல் வட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியுமா? அது எந்தவகையில் சாத்தியமென்று அதில் நடைமுறை பிரச்னைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இன்று அறிவியலை கலைகளை சர்வதேச தரத்துடன் கற்பிக்கும் சிறிய கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். அக்கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் இணைந்து ஒரு கல்வி வட்டமாக ஆகிக்கொள்ள முடியும். அவர்கள் அதற்குரிய மாணவர்களையும் கண்டடைய முடியும்.
அந்த மாணவர்கள் இன்றைய வெறிகொண்ட கல்விப்போட்டிக்குள் நுழையக்கூடாது. மறுபக்கம் முற்றிலும் ஊழல்மயமான அரசு சார் கல்வி அமைப்புக்குள்ளும் நுழையக்கூடாது என்றால் அவர்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்பது பெரிய கேள்வி .அதை அளிக்கும் மாணவர்கள் மிகச்சிலரே. அவர்களுக்காக மட்டும் அந்நிறுவனங்களை நடத்த முடியாது. தகுதியும் ஆர்வமும் கொண்ட அனைவருக்கும் இடமளிப்பதாக கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
இன்றைய சூழலில் அதற்கான நிதி உண்டு என்றெனக்கு தோன்றவில்லை. வருங்காலத்தின் கல்வி எந்தவகையில் இருக்கக்கூடும் என்று ஒரு எழுத்தாளனாகவும், கல்வி பற்றி தொடர்ந்து அக்கறை கொண்டவனாகவும், சர்வதேச அளவில் நல்ல கல்வி நிலையங்களுக்கு சென்று அங்கு நிகழும் கல்வியை ஓரளவு பார்த்தவனாகவும் சில எண்ணங்கள் எனக்கு இருக்கின்றன.
இன்று போல் ஒரு தொழிலுக்கு தேவையான அடிப்படைப் பயிற்சியை மட்டுமே மூர்க்கமாக அளிக்கும் பயிற்சிமுறைக் கல்வி மெல்ல வழக்கொழிந்து வருகிறது. அது தேவைதான், அப்பயிற்சியை அடையும் பல்லாயிரவர் எப்போதும் இருக்க வேண்டும்தான். அது கைத்தொழில் பயிற்சி போல ஒருவகையான தேர்ச்சி மட்டும்தான். தொழில்தேர்ச்சி கொண்டவர்கள் எப்போதும் தேவைதான். ஆனால் அதற்கு மேல் தனி அறிவுதகுதி கொண்ட மாணவர்களுக்கான இன்னொரு வகையான கல்லூரிகள் இருக்கவேண்டும்.
அக்கல்லூரிகளில் இன்று போல அறிவியலும் கலைகளும் தொழில் நுட்பமும் முற்றாகப் பிரிந்திருக்க முடியாது. ஏனெனில் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலகட்டத்துக்குப் பிறகு எல்லாக் கலைகளும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. தொழில்நுட்பத்தை மானுட நுண்ணறிவால் எவ்வாறு திறம்படப் பயன்படுத்தி செயற்கையறிவுத் தொழில்நுட்பம் சென்றடைய முடியாத களங்களுக்கு படைப்பூக்கம் சென்றடைய முடியும் என்பதுதான் இன்றைய வினா.
உதாரணமாக இசை. இன்று செயற்கையறிவுத் தொழில்நுட்பம் ஒரு சராசரி இசையை, அதாவது இன்று வரை போடப்பட்ட இசையிலிருந்து உருவாக்கப்பட்ட ஓர் இசையை, மிக எளிதாக உருவாக்கித் தரமுடியும். ஆகவே இன்று வரையிலான இசையை கற்பித்து, அவற்றிலிருந்து தேவையான ஓர் இசையை உருவாக்கும் பயிற்சியை மட்டும் அளித்து, ஒரு மாணவனை வெளியே விட்டால் அவன் எல்லாவகையிலும் செயற்கை நுண்ணறிவுடன் தோற்றுபோய்விடுவான்.
மாறாக இன்றுவரையிலான இசையை அவனுக்கு கற்பிக்கும்போதே நவீன ஒலித்தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கற்பித்து, கூடவே அடுத்தகட்ட முன்நகர்வுக்கான கற்பனையையும், அது சார்ந்த நுண்ணறிவையும் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி இருக்குமென்றால் இன்று இசைக்கல்வியே மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக ஆகக்கூடும். இதையே இலக்கியத்திற்கும் பிற கலைகளுக்கும் சொல்ல முடியும்.
எதிர்காலத்தில் desigining என்று சொல்லப்படும் வடிவ வரைவுகள் மற்றும் planing என்று சொல்லத்தக்க திட்ட வரைவுகளில் எது நுண்ணறிவால் செய்யப்படுமோ அதற்கு அப்பால் செல்லும் கற்பனைக்கு மட்டுமே மதிப்பிருக்கும். அத்தகைய திறமை வாய்ந்த நிபுணர்களை உருவாக்க வேண்டுமென்றால் முழுக்க முழுக்க சுயஅறிவை ,சுயசிந்தனையை சுயகற்பனையை வளர்க்கும் ஒரு கல்வி முறை உருவாக்கப்படவேண்டும்;
அந்தக் கற்பனை இனிதாக எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. எனக்கு மட்டும் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு அமைந்தால் அப்படி ஒன்றை தொடக்கம் முதல் இறுதி வரை வடிவமைத்து உருவாக்குவேன் என்று ஒரு பகல்கனவாக எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன். அதில் இலக்கியமும் கலைகளும், அறிவியலும், தொழில் நுட்பமும் ஒன்றை ஒன்று ஆதரிப்பவையாக இருக்கும். ஒன்றின் இடைவெளியை இன்னொறு நிரப்பக்கூடியதாக, ஒன்று இன்னொன்றை பயன்படுத்துவதாக இருக்கும்.
ஒரு மென்பொருள் நிபுணர் ஓவியத்தில் நுண்பயிற்சி உடையவராக இருந்தால் அவர் அதனூடாக செயற்கை நுண்ணறிவை கடந்து செல்ல முடியும். அவருக்கு இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி இருக்குமென்றால் செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் யோசிக்காத ஒரு களத்துக்கு சென்று அவர் நிற்க முடியும். அவர் இசையில் தேர்ச்சி கொண்டவராக இருந்தால் செயற்கை நுண்ணுணர்வை தன் நுண்ணுணர்வால் கடந்து செல்ல முடியும். அப்படிப்பட்ட கல்வியை பலவகையில் கலைத்திறனும் கற்பிக்கும் திறனும் கொண்ட கலைஞர்கள் தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவர்களை இணைத்து தான் உருவாக்க முடியும்
இன்றைய நமது பேராசியர்களில் கல்வியலாளர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை அப்படியே மாணவர்களுக்கு கற்பித்து மூளையில் ஏற்றும் முனைப்பு கொண்டவர்கள். அத்தகையோரால் சுயசிந்தனையையோ சுய கற்பனையையோ கண்டடையவோ வளர்க்கவோ முடியாது.மரபான வகுப்புகளும் உறுதியான பாடத்திட்டங்களும் மாணவர்களின் சுயசிந்தனை, நுண்ணுணர்வு ஆகியவற்றை வளர்ப்பதில் பயனளிக்காது. ஆனால் ஒருவகையான கற்கும் குழுக்களாக வகுப்புகளை அமைக்க முடியுமென்றால் அது சாத்தியமாகும்.
மிகச்சிறிய அளவில் அதை முழுமையறிவு வகுப்புகளினூடாக மிக வெற்றிகரமாக செய்து நிறைவுற்றிருக்கிறேன். அது சாத்தியம்தான் என்றும், அதன் வெற்றிகளும் தோல்விகளும் என்னென்ன என்றும் இப்போது கண்டுகொண்டிருக்கிறேன். ஆனால் இதை நம் சூழலில் எவ்வகையிலும் முன்னெடுக்க இயலாதென்றும் தெரிகிறது. இத்தகைய ஒரு கல்விநிறுவனம் இன்று நிகழவேண்டும் என்றால் அதற்கான நிதி எங்கிருந்து வரும் என எண்ணினாலே இது பகற்கனவாக சுருங்கிவிடும்.
தமிழ்ச் சூழலில் முதலில் முற்றிலும் தகுதி கொண்ட, முழு ஆர்வத்தால் மட்டுமே ஒன்றை கற்க வருகிற மாணவர்கள் அவசியமானவர்களாக இருக்கிறார்கள். தொழில் வாய்ப்புக்காக மட்டுமே கற்க வரக்கூடிய ஒருவர், வெறும் தொழில் நுட்பம் மட்டுமே தெரிந்துகொள்ள வரும் ஒருவர் இதற்கு எந்தவகையிலும் பயனற்றவர்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கல்வியில் மாணவருக்கு இலக்கியப் வாசிப்பு தேவை என்றிருக்கும்போது, ஒருபோதும் நூல்களை வாசிக்க மனமில்லாதவரும் அதை குறுக்கு வழியில் தாண்டிச்செல்ல முயல்பவருமான ஒரு மாணவர் அக்கல்விக்கு வந்தால் அவர் விலக்கப்பட வேண்டும். அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட வேண்டும். அதாவது அவர் தோற்கடிக்கப்படவேண்டும். வாசிக்காமல் அக்கல்வியை முடிக்கமுடியாது என்னும் நிலை இருந்தாகவேண்டும்.
ஒரு மேல்நாட்டு பல்கலைக்கழகம் மிக எளிதாக அவர்களை வெளியே அனுப்பிவிடும். ஆனால் இங்கே ஒரு குறிப்பிட்ட படிப்பில் நுழையும் அத்தனை பேரையுமே எப்படியேனும் அந்தப்பட்டத்தை அளித்து வெளியே விடுவதைத்தான் எல்லா கல்வி நிறுவனங்களும் செய்து வருகின்றன. தோல்வி என்பதே இல்லாத கல்விதான் இன்று இருக்கிறது. ஒரு படிப்பில் சேர்வதுதான் முக்கியம், சேந்தவர் ஒருபோதும் அதை முடிக்காமல் ஆவதில்லை.
ஓர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நுழைபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முதல் ஆண்டிலேயே வெளியே அனுப்பப்படுகிறார்கள். உண்மையான ஆர்வமில்லாத ஒருவர் அக்கல்வியைக் கற்கவே முடியாது. ‘என்னால் புத்தகங்கள் வாசிக்க முடியாது. நான் புத்தககங்களை பற்றிய குறிப்புகளை மட்டுமே தேர்வு எழுதுவேன். ஆனால் எனக்கு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெறவேண்டும்’ என்று ஒருவர் சொன்னாரென்றால் அது கேலிக்குரியதாகத்தான் அங்கு பார்க்கப்படும் ஆனால் தமிழகத்தில் இருக்கும் பல நூறு ஆங்கிலத்துறைகளில் ஒரு மாணவர் கூட ஒரு புத்தகத்தைக்கூட ஒருமுறை கூட வாசிக்காமல் முனைவர் பட்டம் வரை சென்றடைபவர்களே மிகுதி. இந்த சவாலைத்தான் நாம் சந்திக்க வேண்டும்.
எந்தத்துறையிலானாலும் மெய்யாகவே. அதில் ஆர்வம் கொண்ட ஒருவர் தான் அதற்குள் நுழைய வேண்டும் அண்மைக்காலம் வரை ஓவியம் இசை போன்ற கலைகளில் இந்த வாய்ப்பு இருந்தது. ஏனெனில் முற்றிலும் இசையார்வம் இல்லாத, முற்றிலும் ஓவிய ஆர்வமில்லாத ஒருவர் அந்தக் கல்லூரியில் சேர்வதற்கே வாய்ப்பில்லை. ஆகவே எப்படியோ அதற்குள் சென்றபிறகு அக்கலைகளை அவர் கற்று தேர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறார். அதே நியதி அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் பிற துறைகளுக்கும் வருமெனில் இங்கும் நாம் உண்மையான திறனுடைய நிபுணர்களை கல்வி வழியாக உருவாக்க முடியும். அது தான் இன்றைய காலகட்டத்துக்கு தேவையான கல்வி என்று நான் நினைக்கிறேன்.
இப்போதிருக்கும் அக்கறையற்ற அரசுக்கல்லூரிக் கல்வி, குரங்குகளைப் பழக்குவதுபோன்ற தனியார்க்கல்லூரிக் கல்வி இரண்டுமே மிகமிக வேகமாக செயற்கை நுண்ணறிவால் செல்லாதவையாக ஆக்கப்பட்டுவிடும். நாமாகவே எந்த கல்வியியல் மாற்றத்தையும் செய்யமாட்டோம். ஏனென்றால் இன்று இங்கே கல்வி என்பது ஒரு மாபெரும் தொழில். ஆனால் அது முற்றாகத் தோற்கடிக்கப்படும்போது மாறியே ஆகவேண்டிய நிலை வரும். அதைப்பற்றியே பேசுகிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 837 followers
