காவியம் – 53

சுடுமண் சிற்பம். பொமு1 சாதவாகனர் காலம். மதுரா

”குணாட்யர் என்னை நோக்கி வந்து இடையில் கைவைத்துக்கொண்டு நின்று அக்கேள்வியைக் கேட்டார். நான் புன்னகைத்தபடி பேசாமல் அமர்ந்திருந்தேன். அவர் உரக்க அதட்டி மீண்டும் கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரைச் சூழ்ந்து நிழல்கள் சிரிக்கும் கண்களுடன் நின்றிருந்தன” என்று கானபூதி சொன்னது.

“சொல், அவர் மீண்டும் தன் மாணவரைச் சந்தித்தாரா? அவர் செய்த பிழை என்ன என்று அவருக்கு அப்போதாவது புரிந்ததா?” என்றார் குணாட்யர்.

நான் ”கேள்விகளுக்கு பதில் சொல்லும் வழக்கம் எனக்கில்லை. நான் கதைகளையே சொல்வேன்” என்றேன்.

”சரி, சொல்” என்றார்.

“உட்கார்” என்றபடி நான் அமர்ந்தேன். அவரும் அமர்ந்தார். நான் கைகளை மண்ணில் வைத்தேன்.

”இரண்டு கைகளையுமா? நான் ஒரு கேள்வியைத்தான் கேட்டேன்”

“எந்த உருவத்திற்கும் நிழலுண்டு. இரண்டிரண்டாகவே இங்கே அனைத்தும் உள்ளன” என்றேன்.

குணாட்யர் எரிச்சலுடன் தலையசைத்து “சரி, தொடங்கு” என்றார்.

“தன் குடிலுக்கு வியாசமானசம் என்று பெயரிட்டிருந்தார் ரோமஹர்ஷணர். அவருடைய மாணவர்கள் சுமதி, அக்னிவர்ச்சஸ், மித்ராயுஸ், சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என ஆறுபேரும் முதன்மையாக அமைய நூறு மாணவர்கள் அவரிடம் காவியம் பயின்றார்கள். மூன்றாண்டுக்கு ஒருமுறை புதிய மாணவர்கள் வந்தனர். அவர்கள் கதைசொல்லிகளாக மாறி பாரதநிலமெங்கும் பரவிச்சென்று கொண்டிருந்தார்கள்.” என்று நான் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

ஒரு நாள் அந்தண மாணவனாகிய சாவர்ணி மாணவர்களுக்கு ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் அவ்வழியாகச் சென்ற ரோமஹர்ஷ்ணர் நின்று செவிகூர்ந்தார். குழப்பத்துடன் கையசைத்து அவரை அழைத்து “அந்த வரிகள் வியாசமகா காவியத்தில் இல்லை. அந்தக் கதையே காவியத்தில் இல்லை. நீ வேறேதோ காவியத்தை குழப்பிக்கொண்டிருக்கிறாய். என்ன ஆயிற்று?” என்றார்.

“இல்லை ஆசிரியரே. இங்கு வந்து தங்கிச்செல்லும் சூதர்களிடமிருந்து நான் இதை கற்றேன். இந்த கதையும், இவ்வரிகளும் வியாசரின் மூலநூலில் உள்ளவையே.”

“நீ எனக்குக் கற்பிக்கிறாயா? அப்படி இல்லை, நானறியாத வியாசகாவியமா?” என்று ரோமஹர்ஷ்ணர் சீறினார்.

“நீங்கள் மறந்திருக்கலாம், அல்லது…” என்று தயங்கிய சாவர்ணி “அல்லது உங்களுக்குச் சொல்லாத பகுதிகளை எஞ்சிய மாணவர்களுக்கு வியாசமுனிவர் கற்பித்திருக்கலாம்… இதுபோல பல விடுபடல்கள் நீங்கள் கற்பிக்கும் வியாசகாவியத்தில் உள்ளன. நான் அவற்றை இங்கு வந்த பாடகர்களிடமிருந்து கற்று இங்கே வரும் மாணவர்களுக்குக் கற்பிக்கிறேன்” என்று சொல்லி மீண்டும் தயங்கி “நான் வியாசரின் நோக்கத்தை அறியவில்லை. ஆகவே இந்த பகுதிகளை அந்தணரோ ,ஷத்ரியரோ ஆன மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கிறேன். நிஷாத மாணவர்களுக்கு நீங்கள் கற்பித்த வடிவிலேயே கற்பிக்கிறேன்” என்றார்.

கடும் சினத்துடன் தன் குடிலுக்குத் திரும்பிய ரோமஹர்ஷணர் தன் ஆறுமாணவர்களையும் அங்கே வரவழைத்தார். அவர்களில் எவரெல்லாம் அந்த கூடுதல் கதைகளை கற்பிக்கிறார்கள் என்று கேட்டார். நிஷாதகுலத்தைச் சேர்ந்தவனாகிய அகிருதவிரணன் தவிர அனைவருமே வேறுவடிவத்தைத்தான் கற்பித்தார்கள்.

சீற்றத்துடன் “இவை பொய்யான பகுதிகள். இவை மகாவியாசன் அறியாமல் அவன் காவியத்தில் சேர்க்கப்பட்டவை. அதற்கு நமக்கு உரிமை இல்லை. இனிமேல் இந்த வரிகள் இங்கே கற்பிக்கப்படலாகாது. நான் கற்பித்த பாடமே இங்கே திகழவேண்டும்” என்று அவர் ஆணையிட்டார்.

ஆனால் அவருடைய மாணவர்களில் அகிருதவிரணன் மட்டுமே தலையசைத்தான். பிறர் பேசாமல் நின்றனர்.

“நீங்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லையா? ”என்று ரோமஹர்ஷணர் கேட்டார்.

“வியாசரின் காவியம் ஐவருக்குச் சொல்லப்பட்டது. ஐவரும் சேர்ந்து எதைக் கற்பிக்கிறார்களோ அதுவே முழுமையானது. நாங்கள் முழுமையையே விரும்புகிறோம்” என்று அக்னிவர்ச்சஸ் சொன்னார்.

சாம்சபாயனன் “வியாசர் சிலவற்றை உங்கள் குலத்தவர் கற்கவேண்டியதில்லை என எண்ணியிருந்தால் அது பிழையல்ல” என்றார்.

“அக்காவியத்தை எழுதியவரே மீனவப்பெண்ணின் மகன்தான்” என்று ரோமஹர்ஷணர் சொன்னார்.

“அவர் அந்தணராகிய பராசர முனிவரின் மகன். அந்தணருக்கு ரத்தமரபு தந்தை வழியாகவே. தாய் வெறும் கருப்பைதான்” என்றார் மித்ராயுஸ்.

“இதை யார் சொன்னார்கள்? எங்கே இது சொல்லப்பட்டுள்ளது?”

“வியாசரே அவருடைய காவியத்தில் இதைச் சொல்கிறார்” என்று சுமதி சொன்னார். “வைசம்பாயனரின் மரபினர் கற்கும் பாடத்தில் மிகத்தெளிவாகவே இது சொல்லப்பட்டுள்ளது”

“இது பிழையானது, வேண்டுமென்றே கதை திரிக்கப்படுகிறது” என்றார் ரோமஹர்ஷணர், ஆனால் அவருடைய குரல் தழைந்து உடைந்திருந்தது.

“இந்தக் கதையை  வியாசர் உங்களிடமிருந்து மறைத்திருக்கலாம்” என்று அக்னிவர்ச்சஸ் சொன்னார். “வியாச மகாகாவியத்தில் போர்க்களக் காட்சியில் கடோத்கஜன் கொல்லப்படும் காட்சியில் மகாஞானியாகிய கிருஷ்ணனே அதைச் சொல்கிறான். முழுமையான ஞானத்தையும், முழுமையான வெற்றியையும் நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் அடையக்கூடாது, அவர்கள் அதை அடைவார்கள் என்றால் கொல்லப்படவேண்டும், கர்ணனால் கடோத்கஜன் கொல்லப்படவில்லை என்றால் தன் கையால் கொன்றிருக்க நேரிட்டிருக்கும் என்று கிருஷ்ணன் சொல்கிறார்”

”என்ன அறிவின்மை இது… யாதவ மன்னன் கிருஷ்ணனின் மகன்களே அசுரகுடியில் மணம்புரிந்தவர்கள். அவருடைய பெயரக்குழந்தைகள் அசுரர்கள். அவருக்காக படைகொண்டுவந்து களம்நின்றவர்கள் அசுரர்கள்” என்றார் ரோமஹர்ஷணர்.

“அது அறத்தை நிலைநாட்ட படை வேண்டும் என்பதற்காக அவர் செய்த ஒரு சூழ்ச்சி மட்டுமே” என்றார் சாவர்ணி. “அறத்தின் கொடி கடைசியாக மேலேறவேண்டும் என்பதே முக்கியம். அதற்காகச் செய்யப்படும் சிறு அறமீறல்கள் அறமென்றே கொள்ளப்படும். யானையின் உடலில் இருக்கும் உண்ணிகளும் சிற்றுயிர்களும் எல்லாம் இணைந்ததே யானை என்று வியாசரின் மொழி உள்ளது.”

“கடோத்கஜனின் வழியில் வந்தவர்களை அரசகுடியினராக ராஜசூயத்தில் அமர்த்தியிருக்கிறார் ஜனமேஜயன். அவர்கள் க்ஷத்ரியப் பெண்களை மணந்திருக்கிறார்கள்” என்று அவருடைய மாணவன் அகிருதவிரணன் சொன்னான்.

“ஒரே பசுவில் நாம் பால்குடிக்கிறோம், ஈக்கள் ரத்தம் குடிக்கின்றன, ஆகவே நாமும் ஈக்களும் உறவாக முடியாது என்று வியாசகாவியம் சொல்கிறது” என்றார் மித்ராயுஸ்.

பிரமித்துப் போய் ரோமஹர்ஷணர் அமர்ந்திருந்தார். மறுநாளே அகிருதவிரணன் தவிர மற்ற மாணவர்கள் அவருடைய குருகுலத்தில் இருந்து கிளம்பிச்சென்றார்கள். அவருடன் அகிருதவிரணர் மட்டும் எஞ்சினார். நிஷாதர்களல்லாத மாணவர்களும் அகன்றபின்னர் ஒரு சிலர் மட்டுமே மிஞ்சியிருந்தார்கள்.

அவர் வியாச மாகாவியத்தின் பிற வடிவங்கள் என்னென்ன என்று அதன்பின்னர்தான் விசாரிக்கத் தொடங்கினார். வியாசரின் காவியம் அதற்குள் மும்மடங்கு பெரிதாகியிருந்தது. அதில் வைசம்பாயனர் கத்ரு மற்றும் வினதையின் கதையில் இருந்து தொடங்கி, பிரஜாபதிகளின் வரலாற்றை இணைத்து, யயாதியில் தொடங்கி அஸ்தினபுரியின் முந்தைய அரசர்களின் கதைகளை எல்லாம் விரிவாக பாடிச் சேர்த்திருந்தார். அத்ரி நூறு அறநூல்களை அதில் சேர்த்திருந்தார். யுதிஷ்டிரர் வனவாசம் சென்றபோது அந்நூல்களை எல்லாம் வெவ்வேறு முனிவர்களிடமிருந்து கேட்டதாக சொல்லப்பட்டிருந்தது. விதுரரும், பீஷ்மரும் வெவ்வேறு தருணங்களில் சொல்லும் அறவுரைகள் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தன. ஜைமினி வைதிக மரபின் பல துணைக்கதைகளைச் சேர்த்திருந்தார். சுமந்து ஒவ்வொரு கதைக்கும் முற்பிறவிக்கதைகளை இணைத்தார்.

அவர்கள் ஒருவர் இணைத்ததை இன்னொருவர் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே ஒருவர் சேர்த்த கதைக்கு பிற மூவரே சான்று என்று அவை சபைகளில் ஏற்பு பெற்றிருந்தன. அக்கதைகள் வழியாக யாதவர்கள் அனைவரும் தந்தைமுறையில் க்ஷத்ரியர்கள் என்று நிறுவப்பட்டிருந்தது. பாண்டவர்களின் பிறப்புக்கு தெய்வங்களே நேரடிக் காரணம் என்று சொல்லப்பட்டிருந்தது. வீரர்கள் அனைவருக்கும் அந்தணர்களோ முனிவர்களோ முதல் தந்தையர்களாக காட்டப்பட்டிருந்தது. அறமீறல்கள் அனைத்துமே முற்பிறவியின் சாபங்களால் நிகழ்ந்தேயாக வேண்டியவை என்று வாதிடப்பட்டிருந்தது.

அந்த விளக்கங்கள் அஸ்தினபுரியின் அரசர்களுக்கு தேவையானவை என்பதனால் அவை அரச ஆதரவுடன் நிலைநிறுத்தப்பட்டன. கூடவே அரசகுடிக்கு ஒவ்வாதவை அனைத்துமே நீக்கம் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டுக்கும் அந்த திருத்தங்கள் கூடிக்கூடி வந்திருப்பதை ரோமஹர்ஷணர் கண்டார். அவை நிஷாதர்களை ஒவ்வாதவர்களாக விலக்கி, யாதவர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்குமான இணைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்தன.

ஒருநாள் தன் குருகுலத்தை கைவிட்டுவிட்டு ரோமஹர்ஷ்ணர் கிளம்பி சுகவனத்தை அடைந்தார். அங்கே தன் மகன் சுகனின் மாணவர்களால் பராமரிக்கப்ப்பட்ட வியாசர் இறுதிப்படுக்கையில் இருந்தார். அவரை அவர்கள் வியாசரின் அருகே கொண்டுசென்றார்கள்.

“முதலாசிரியர் சொற்களின் உலகில் சிரஞ்சீவியாக மாறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள்” என்று மாணவர்கள் சொன்னார்கள்.

படுக்கையில் வியாசர் மெலிந்து வற்றி சிறு கரிய சுள்ளி போல கிடந்தார். அவர் அருகே அமர்ந்த ரோமஹர்ஷணர் குருவந்தனத்தை மெல்லிய குரலில் சொன்னார்.

“அவர் எதையும் கேட்பதில்லை, பேசுவதுமில்லை. பல ஆண்டுகளாக அப்படித்தான்” என்றார் ஒரு மாணவர்.

ஆனால் ரோமஹர்ஷணரின் குரலைக் கேட்டு வியாசரின் கண்கள் திறந்தன. அவர் உதடுகளில் ஒரு புன்னகை விரிந்தது. அவருடைய கை அசைந்து ரோமஹர்ஷணரை நோக்கி வந்தது. ஒரு மாணவன் வந்து அந்தக் கையை மெல்ல எடுத்தான். அவருடைய கண்களின் குறிப்பை உணர்ந்து அதை தூக்கி ரோமஹர்ஷணரின் தலைமேல் வைத்தான்.

“மிதக்கவிடு…” என்று வியாசர் சொன்னார்.

அவருடைய உதடுகளை கூர்ந்து பார்த்த மாணவன் அதை உரக்கச் சொன்னான். ரோமஹர்ஷணருக்கு அது புரியவில்லை.

வியாசர் மீண்டும் “ஒழுகட்டும்” என்றார்.

ரோமஹர்ஷ்ணர் கைகூப்பினார். வியாசர் கண்களை மூடிக்கொண்டார். அவர் கால்களை தொட்டு தலைமேல் வைத்துவிட்டு ரோமஹர்ஷ்ணர் கிளம்பினார்.

ஆனால் அவர் தன் குருகுலத்திற்குச் செல்லவில்லை. தெற்குநோக்கிச் செல்லத் தொடங்கியவர் பிறகு மீண்டு வரவில்லை. அவரைப்பற்றிய எந்தச் செய்தியையும் எவரும் அறியவில்லை.

அப்படிக் கிளம்பிச் செல்லும்போது ரோமஹர்ஷணருக்கு எழுபது வயது தாண்டியிருந்தது. அவர் வியாசர் தன் காவியத்தை முடித்தபிறகுதான் நிஷாத குலத்தைச் சேர்ந்தவளாகிய மரீசியை மணம்புரிந்தார். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமலிருந்தது. அக்குழந்தை பிறந்து அதற்கு நான்கு மாதம் நடக்கும்போதுதான் ரோமஹர்ஷணர் தெற்கே கிளம்பிச்சென்று மறைந்தார். அக்குழந்தைக்கு சியாமன் என்று பெயரிடப்பட்டிருந்தது.

சியாமனை அகிருதவிரணன் வளர்த்தான். பல்முளைப்பதற்குள்ளாகவே குழந்தை சொல் பேசத் தொடங்கியது. ஒருமுறை செவிகளில் கேட்கும் எதையும் அப்படியே திருப்பிச் சொன்னது. எத்தனை காலமானாலும் மறக்காமலிருந்தது. ஒரு வயது முடிந்ததும் அது வியாசமாகாவியத்தையே சொல்லத் தொடங்கியது. திகைக்கச்செய்யும் செவித்திறன் கொண்டிருந்த அதற்கு உக்ரசிரவஸ் என்று  அகிருதவிரணன் பெயரிட்டான்.

தன் பதினேழு வயதுக்குள் வியாசகாவியத்தின் எல்லா வடிவங்களையும் கற்றறிந்தவராக உக்ரசிரவஸ் இருந்தார். பாரதநிலத்திலுள்ள எல்லா கதைகளையும் அறிந்திருந்தார். எப்போதும் எவராலும் சொல்லப்படாத கதைகள்கூட அவருக்குத் தெரிந்திருந்தன. எங்கோ எவரோ ஒரு கதையை நினைத்தால்கூட அவர் அதை அறிந்துவிடுவார் என்றார்கள். பல்லாயிரம் விதைகள் நிறைந்த நிலம் போன்று முடிவில்லாத கதைகள் கொண்டது அவருடைய உள்ளம் என்று சூதர்கள் சொன்னார்கள்.

தாய் மரீசியும், ஆசிரியரான அகிருதவிரணனும் மறைந்தபின் உக்ரசிரவஸ் கிளம்பி வடக்கே சென்றார். அவரை சூதர்கள் கூடும் ஞானவனமாகிய நைமிசாரண்யத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவர் அவர்களுக்குக் கதைகள் சொல்லத் தொடங்கினார். வியாசகாவியமாக அறியப்பட்டிருந்த கதைத்தொகுப்பில் இருந்து மறைந்துபோன எல்லா கதைகளும் திரும்பி வந்தன. வியாசர்கூட அறியாத ஆயிரக்கணக்கான கதைகள் வந்து சேர்ந்துகொண்டன.

ஆனால் உக்ரசிரஸ் சொன்ன வியாசகாவியத்துடன் பாரதவர்ஷம் தொடர்ச்சியாகப் போரிட்டுக்கொண்டே இருந்தது. அது மேலும் பற்பலத் தலைமுறைக்காலம் திருத்தப்பட்டது, கதைகள் வெட்டிச்சுருக்கப்பட்டன. பலகதைகளைச் சொல்வதே சாவுத்தண்டனைக்குரிய குற்றம் என்று அரசர்களால் அறிவிக்கப்பட்டது. தண்டனைகள் வழியாகவும் பரிசுகள் வழியாகவும் சூதர்களின் நினைவுகள் தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டன. ஆனால் உக்ரசிரவஸின் சொற்கள் அழியவில்லை. அவற்றை தொலைதூரக் காடுகளில் நிஷாதர்கள் பாடலாகப் பாடினார்கள், கூத்துகளாக ஆடினார்கள். நால்வகைச் சாதியினரும் அவற்றை தங்கள் பேச்சுகளில் எப்போதுமே வைத்திருந்தார்கள்.

”உக்ரசிரவஸ் சொன்ன கதைகள் அகற்றவே முடியாத குரல்களாக நீடித்தன. நீண்ட காலம் கழித்து அவை ஜைனர்களாலும் பௌத்தர்களாலும் எழுதி நூல்வடிவமாக ஆக்கப்பட்டன” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன். “ஆனால் எவருக்கு எவை தேவையோ அவை மட்டுமே அவர்களால் பேணப்படுகின்றன. நிஷாதர்களே அரசர்களானபோது  அவர்கள் நிஷாதர்களின் கதைகளை மறந்தனர். தங்களை க்ஷத்ரியர்கள் என்று காட்டும் கதைகளைப் புனைந்துகொண்டனர்.”

“பாரதத்தில் அரசுகளை உருவாக்கிய ஒவ்வொருவருக்காகவும் வியாசகதை விரித்தும் திரித்தும் எழுதப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கதைவடிவம் உருவானது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது உடைமாற்றிக்கொண்டது என்று அறிஞர்கள் சொன்னார்கள். விண்ணில் இருந்து உடைந்து விழுந்த அசுரர்களின் நகரங்களைப் போலவே அதுவும் என்றனர். அதன் துண்டுகள் ஆங்காங்கே புதிய நகரங்களாக உள்ளன. ஆயினும் பெரும்பகுதி மண்ணுக்குள் புதையுண்டு மறைந்துவிட்டது” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன்.

குணாட்யர் சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். பின்னர் “நான் எப்போதுமே இதை உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு காவியத்தைப் படிக்கும்போதும் இதற்கு அடியில் இன்னொரு காவியம் உண்டு என்னும் எண்ணமே எனக்கு எழுந்தது. நான் படித்த பெரும்பாலான காவியங்களின் அடியில் இருந்தது வியாசகாவியம். வியாசகாவியத்தைப் படிக்கும்போது அதில் ஊடுருவி ஒலிக்கும் வேறு குரல்களை மிகத்தெளிவாகவே நான் அடையாளம் கண்டேன். என்னால் எது வைசம்பாயனுடையது, எது அத்ரியின் குரல், எது ஜைமினி எழுதியது, சுமந்து சேர்த்தது என்ன என்று பிரித்துவைக்கமுடியும். அதை என் மாணவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.”

“வியாசகாவியத்தில் வியாசனுக்கு இணையான இன்னொரு அறியப்படாத கவிஞன் இருந்துகொண்டே இருக்கிறான் என்று நான் என் மாணவர்களிடம் சொல்வதுண்டு” என்று குணாட்யர் தொடர்ந்து சொன்னார். ”அவன் வியாசனின் நிழல். வியாசனை நிரப்புபவன், ஆனால் வியாசனின் எதிர்நிலை. அவன் யார் என்று நானே யோசித்ததுண்டு. மகாசூதர் என அழைக்கப்படும் உக்ரசிரவஸ் வியாசகாவியத்தின் கதைசொல்லி என்றும், பல கதைகளை அவரே உள்ளே நுழைத்திருக்கக் கூடும் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். உண்மையில் அந்த எண்ணம் வியாச்காவியத்தைப் பயில்பவர்கள் அனைவருக்கும் உண்டு.”

குணாட்யர் சொன்னார். ஒருமுறை சதகர்ணிகளின் அவையில் பேசிய பிரபாகர பட்டர் என்னும் அறிஞர் நகுஷப்பிரஸ்னம் பற்றிப் பேசும்போது அது சூதர்களின் கருத்து, வியாசனுடையது அல்ல என்று சொன்னார். ‘குலம் என்பது பிறப்பால் அமைவது அல்ல; அந்தணன் என்றும் க்ஷத்ரியன் என்றும் வைசியன் என்றும், சூத்திரன் என்றும் மனிதர்கள் தங்கள் செயல்கள் வழியாகவே உருவாகிறார்கள்’ என்று நகுஷனுக்கு யுதிஷ்டிரன் சொன்ன வரியை வாசித்து அதை வியாசர் எழுதியிருக்க வாய்ப்பில்லை, பின்னர் உக்ரசிரவஸ்தான் அதைச் சேர்த்தார் என்றார். அதன் செய்யுளமைப்பும் சொல்லிணைவு முறையும் வியாசருடையதல்ல என்று நிரூபிக்க முயன்றார்.

நான் எழுந்து ”ஆதிகவி வால்மீகி பிறப்பால் யார்? மீனவப்பெண் பெற்ற மகன் அல்லவா வியாசன்? எத்தனை ஞானிகள் வேடர்களாகவும் காடர்களாகவும் பிறந்து வேதஞானம் எய்தினர் என்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அதை வியாசர் எழுதாமலிருக்கலாம், ஆனால் அதுதான் வியாசரின் எண்ணம். உக்ரசிரவஸ் எழுதியவை எல்லாமே வியாசர் எழுதி, பின் மறைந்தவை. அல்லது அவர் எழுத எண்ணி எழுதாமல் விட்டவை” என்று சொன்னேன்.

எங்களுக்குள் விவாதம் நீண்டநேரம் நிகழ்ந்தது. சபையிலுள்ளவர்கள் அனைவருமே பிரபாகரரை ஆதரிப்பதைத்தான் என்னால் காணமுடிந்தது. வியாசகாவியத்திலுள்ள யக்ஷபிரஸ்னம் முதலிய பகுதிகள் எல்லாமே உக்ரசிரவஸால் இயற்றப்பட்டவை என்று ஸ்ரீதர சார்வபௌமன் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அனைவருமே கைதூக்கி அதை ஏற்று ஒலியெழுப்பினார்கள்.

குணாட்யர் சொன்னார் “அவ்வாறென்றால் உக்ரசிரவஸ் இன்னொரு வியாசர். வியாசரின் தொடர்ச்சி அவர். அவர் இன்றி வியாசர் நிறைவடையவில்லை என்று நான் சொன்னேன். அவையிலிருந்தவர்கள் என்னை ஏளனம் செய்து ஒலியெழுப்பினார்கள். என்னை மறுப்பவர்கள் எழுந்து பேசுங்கள் என்று நான் அறைகூவினேன். எவருமே எனக்கு எதிராக கோல்தூக்கி எழவில்லை. என்னை ஆதரிப்போர் யார் என்று மீண்டும் கேட்டேன். ஒரு குரல்கூட உயரவில்லை”

“உக்ரசிரவஸ் இயற்றியவற்றில் மிகச்சிறு பகுதி மட்டுமே இன்றுள்ள வியாசகாவியத்தில் உள்ளது. இன்ற் பயிலப்படும் காவியத்தின் பெரும்பகுதி வியாசரின் நான்கு மாணவர்களாலும் அவர்களின் மாணவர்களின் தலைமுறைகளாலும் இயற்றிச் சேர்க்கப்பட்டதுதான்” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன். “வியாசகாவியத்திற்கு அடியில் அறியப்படாத வேர்ப்பரப்பாக அந்த நிழல்காவியம் விரிந்து கிடக்கிறது. அந்த வேர்விரிவு தெற்கே குமரிமுனை முதல் வடக்கே இமையப்பனிமலை வரை, கிழக்கே மணிபூரகம் முதல் மேற்கே காந்தாரம் வரை பரவியிருக்கிறது.”

அதன்பின் நான் கைகளை அசைத்து “கதையில் இருந்து எழும் முதற் கேள்வி இது குணாட்யரே. சொல்லுங்கள், வியாசர் வைசம்பாயனர் முதலியோர் தன் சொற்களை மாற்றியமைப்பார்கள் என்று அறிந்திருந்தாரா?”

குணாட்யர் “ஆம், எந்த ஆசிரியனும்  மாணவர்களை அறிந்திருப்பான்” என்றார். “தான் காவியம் இயற்றும்போது ஒரு சொல்கூட மறுப்பு தெரிவிக்காத மாணவன் எதிர்காலத்தில் அதை மாற்றிக்கொள்வான் என்றும் அவர் உணர்ந்திருப்பார்.”

“சரியான பதில்” என்று சொல்லி நான் அவரை தோளில் தட்டிச் சிரித்தேன். “இதோ இரண்டாவது கேள்வி. உக்ரசிரவஸின் மாற்றங்களை வியாசர் ஏற்றுக்கொண்டிருப்பாரா?”

“உக்ரசிரவஸை அவர் ரோமஹர்ஷணரிடமே பார்த்திருப்பார். தோன்றவிருக்கும் செவிகளை முன்னரே உணர்ந்துதான் ரோமஹர்ஷணரை தன் மாணவராக ஏற்றிருப்பார்” என்று குணாட்யர் பதில் சொன்னார்.

“மிகச் சரியான பதில்… இறுதியில் அவர் ரோமஹர்ஷணருக்குச் சொன்ன சொற்களில் கூட அந்தக் குறிப்பே இருந்தது” என்று நான் சொன்னேன். குணாட்யரை தழுவி அவர் செவிகளைப் பிடித்து இழுத்து “நீ அறிஞன்… இலைகளை கண்டு வேர்களின் எண்ணிக்கையைச் சொல்ல எவரால் முடிகிறதோ அவனே மெய்யான அறிஞன்” என்றேன்.

குணாட்யர் “நான் எதையுமே புதியதாகக் கற்கவில்லை என்று தோன்றுகிறது. நான் கற்ற பின்னர்தான் கற்றவற்றை அறியத் தொடங்கினேன். வேர்களுடன்தான் நான் பிறந்திருக்கிறேன். எல்லாமே என்னுள் இருந்து முளைத்தெழுந்தவைதான். நீரூற்றியதை மட்டுமே இந்நகரமும் ஆசிரியர்களும் செய்திருக்கிறார்கள்.”

“உன்னுள் இருக்கும் வேர்கள் அனைத்தையும் நான் முளைக்கச் செய்கிறேன்…. உக்ரசிரவஸ் அறிந்த அனைத்தையும் நீ அறியச் செய்கிறேன்…” என்று நான் குணாட்யரிடம் சொன்னேன். ”நீ என் கதைகளை முழுமையாக வாங்கிக்கொள்ளும் பெரிய கலம் என்று உணர்கிறேன்”

பைத்தானின் மாளிகைக்குள் செறிந்திருந்த காட்டில் நான் கானபூதியின் கதையைக் கேட்டு அமர்ந்திருந்தேன்.

“குணாட்யரிடம் நான் வியாச காவியம் முளைத்தெழுந்த வேர்நிலம் என திகழ்ந்த அந்த ஆதிகதைகளை சொல்லத் தொடங்கினேன். மண்ணில் இருந்து ஒவ்வொரு மணல்துளியாக எடுத்தேன். ஒரு மணலுக்கு ஒரு கதை வீதம் அவருக்குச் சொன்னேன். காட்டின் மணல்பரப்பே குறைந்து வந்தது. அவர் அமர்ந்திருந்த மண் குழிந்து குழிந்து ஆழமாகியது. அவர் கழுத்தளவு புதைந்தார், நெற்றிவரைப் புதைந்தார். கதைகளில் அவர் மூழ்கிப்போனார்” என்றது கானபூதி.

நான் “கதைகளில் புதைவதென்பது ஆழ நடப்படுவதுதானே?” என்றேன்.

“ஆமாம்” என்று கானபூதி சொன்னது. “நான் சொன்ன இக்கதை உனக்கென திரட்டிக்கொண்ட கேள்விகள் இவை. முதல் கேள்வி இது. வியாசர் மாணவர்களை தெரிவுசெய்வதில் பிழை இயற்றினாரா?”

ஆபிசாரன் என் செவியில் “ஆம், அவர் தன் சொல்லை அழிக்கும் மாணவர்களைத் தேர்வுசெய்தார். அவர் தனக்கு அந்தணர்களின் சபையில் ஏற்பு தேவை என நினைத்தார். ஆகவே அந்தணர்களை மாணவர்களாக ஏற்றுக்கொண்டார்” என்றது

நான் யோசித்து, அதை அப்பால் தள்ளிய பின்பு தலைநிமிர்ந்து கானபூதியிடம் “இல்லை, சரியான கதைகேட்பவர் என எவருமில்லை. இருந்தால் அவர் வியாசரின் நாக்கு மட்டுமேயாக எஞ்சிய ரோமஹர்ஷணர்தான். அவரிடம் அந்நூலை அளித்திருந்தால் ஆதிகவி வால்மீகி செய்த பிழையையே தானும் செய்திருப்பார். சிதைவே வளர்ச்சி. வளர்ச்சியே வாழ்வு. மாறாதது மறையும். அப்பிழையைச் செய்யக்கூடாது என்ற தெளிவால்தான் வியாசர் தனக்கான மாணவர்களை தெரிவுசெய்தார்” என்றேன். “அந்த மாணவர்கள் வியாசரின் மறுவுருவங்கள் அல்ல. அன்றிருந்த சமூகத்தின் பிரதிநிதிகள் அவர்கள். அன்றிருந்த ஒவ்வொரு தரப்பும் அவருடைய மாணவர்களாக அவர் முன் அமர்ந்திருந்தது.”

“அவர் தன் சமகாலத்தின் முன் தன்னுடைய காவியத்தை படையலிட்டுவிட்டுச் சென்றார். தெரிந்து திட்டமிட்டு அதைச் செய்தார், அது சரியானது என்றே இதுவரையிலான காலம் காட்டுகிறது” என்று நான் தொடர்ந்தேன். “எந்தக் கவிஞனும் அதைத்தான் செய்யமுடியும். ஒரு நூலை அச்சமூகம் எப்படிப் படிக்கிறது, எப்படி விரித்துக் கொள்கிறது, எவற்றை மறுக்கிறது என அவன் முடிவுசெய்யவே முடியாது. காட்டை நம்பி மரங்கள் தங்களை விதைத்துக் கொள்கின்றன.”

”உண்மை” என்று கானபூதி சொன்னது. “இரண்டாவது கேள்வி இது. இங்குள்ளப்  பெருங்காவியங்களுக்கு அடியில் அறியப்படாத மாபெருங்காவியங்கள் உள்ளன என்று குணாட்யர் உணர்ந்தது பிழையா? உண்மை என்றால் அவை ஏன் புதைக்கப்படுகின்றன?”

“குணாட்யர் உணர்ந்தது உண்மை” என்று நான் சொன்னேன். “ஆனால் அவை புதைக்கப்படவில்லை, இயல்பாகவே புதைகின்றன. ஒவ்வொரு கட்டிடமும் புதையுண்ட அடித்தளத்தாலானது. தன் எடையால் அது அடித்தளத்தை மேலும் புதைத்துக் கொண்டே இருக்கிறது”

“உண்மை” என்று கானபூதி சொன்னது.

“நாம் காவியங்களில் படிப்பது சொல்லப்பட்டவற்றை அல்ல, சொல்லப்படாதவற்றை. த்வனி என்று அதை காவியமீமாம்சை சொல்கிறது. சொல்லப்பட்டவை துளி என்றால் த்வனி கடல். சொல்லப்பட்டவை முடிவுள்ளவை என்றால் சொல்லப்படாதவை முடிவிலி வரை செல்பவை. இந்தப் பூமியிலுள்ள பல்லாயிரம் பல்லாயிரம் காவியங்களிலும், கவிதைகளிலும், கதைகளிலும் உள்ள த்வனிகளை ஒன்றாக்கினால் உருவாகும் ஒரு மாபெரும் காவியம் இங்கே நாம் அனைவரின் உள்ளத்திலும் உறைந்துள்ளதா? அதைக் கொண்டுதான் நாம் இந்த காவியங்களையும் கவிதைகளையும் கதைகளையும் பொருள்கொள்கிறோமா?” என்றேன்

“நாம் விரும்பும் காவியங்களுக்கு அடியில் நாம் விரும்பாதவற்றாலான காவியம் ஒன்று உண்டு. நாம் அழகென்றும் உயர்வென்றும் எண்ணும் அனைத்துக்கும் அடியில் நஞ்சாலும் மலத்தாலும் நெருப்பாலுமான பிறிதுசில உண்டு” என்று நான் தொடர்ந்து சொன்னேன். ”நஞ்சும் மலமும் நெருப்புமான அது ஒரு வைதரணி… ஆறல்ல கடல். அந்த பெருகிச்சுழிக்கும் கொடிய வெளியைக் கடந்து அமுதும் நஞ்சும் ஒன்றேயான ஒன்றை நாம் அடையக்கூடும்… மனிதர்களுக்கு இங்கே இவை எல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதனாலேயே இவற்றுக்கு அப்பால் ஆழத்திலுள்ள அதுவும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பொருள். அளவற்ற துன்பம் மனிதர்களுக்கு சாத்தியமாகிறது என்பதனாலேயே அளவற்ற இன்பமும் சாத்தியம்தான் என்றாகிறது.”

பேச்சை இழந்து நான் நிறுத்திக் கொண்டேன். கானபூதியும் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் பேசாமல் நீண்டநேரம் அமர்ந்திருந்தோம். அமைதியைக் கலைத்து சக்ரவாகி சொன்னது “நீ ஒரு கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுவிட்டாய்”

ஆபிசாரன் “இல்லை, அவர் கிளம்பிச்செல்லவும்கூடும்” என்றது. “உண்மையில் அதுவே நல்லது”

சூக்ஷ்மதரு “அவரிடம் கேள்வி உள்ளது” என்றார்.

நான் கானபூதியிடம் “நான் ஒரு கேள்வியை யோசித்தேன்” என்றேன்.  “ஆனால் என் அகத்தில் அந்தக் கேள்வியை உந்தி விலக்கிவிட்டு முன்னால் வந்த இன்னொரு கேள்வி இது. என்னால் இந்தக் கேள்விகளில் இருந்து மீளவே முடியாது”

“சொல்” என்றது கானபூதி.

“மனிதர்களில் சிலர் இனியவையும் உயர்வானைவையும் ஆனவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறர்கள். ஆனால் அவர்களை விட பற்பல மடங்கு மனிதர்கள் கொடியவையும் கீழானவையும் ஆனவற்றையே நாடிச் செல்கிறார்கள். ஒரு தவம்போல அவற்றை விரும்பிச் செய்கிறார்கள். அவர்களைச் செலுத்தும் அந்த உணர்வுதான் என்ன? தீமையிலுள்ள அந்த பெரும் கவர்ச்சி எது? கொடியவை அளிக்கும் பேரின்பம் என ஒன்று உண்டா?” என்று நான் சொன்னேன். “இன்னும் தெளிவாகவே கேட்கிறேன். ராதிகாவைக் கொன்றவர்கள் அந்தக் கொலையை இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தங்கள் உள்ளங்களில் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தக் கொலையை செய்யும்போது நூறுமுறை பயிற்சி செய்த நாடகத்தை நடிப்பதுபோல் இருந்தார்கள். தீமையில் உறையும் அந்த மகிழ்ச்சியின் ஊற்று என்ன?”

கானபூதியின் கண்கள் கனிந்தன. “என்னிடம் இதே கேள்வியைத்தான் குணாட்யரும் கேட்டார்” என்றது. “துரியோதனனின் சபையில் திரௌபதி சிறுமைசெய்யப்பட்ட போது அங்கிருந்த சாமானியப் படைவீரர்கள், அவைமூத்தவர்கள், அமைச்சர்கள் போன்றவர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்று அவர் கேட்டார்”

“நான் அவருக்குச் சொன்ன கதையை இப்போது உனக்குச் சொல்கிறேன்” என்று சொல்லி கானபூதி தன் இரு கைகளையும் நிலத்தின்மேல் வைத்தது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.