காவியம் – 51

கானபூதி சொன்னது. “மனிதர்கள் கதைசொல்லிகளாக ஆவது மிகப்பெரிய ஆபத்து. அவர்களுக்கு காலம் உண்டு, கதைகளுக்குக் காலம் இல்லை. அவர்கள் சொல்லும் கதைகள் அவர்களைக் கடந்து வளர்ந்து செல்வதை அவர்கள் பார்க்க நேரிடும். கதைகளை தங்கள் குழந்தைகள் என அவர்கள் நினைத்தார்கள் என்றால் அவற்றைப் பார்த்துப் பரிதவித்துக் கொண்டே இருப்பார்கள். கதைகளை முழுமையாகக் கைவிட்டு விட்டார்கள் என்றால் அவர்களால் புன்னகைத்தபடிச் சாகமுடியும்” புன்னகையுடன் என்னைப் பார்த்து “நான் காலமற்ற கதைசொல்லி. என் கதைகளுடன் நானும் வளர்கிறேன்…”
”நான் சலித்துவிட்டேன்” என்று நான் சொன்னேன். “இந்தக் கதைகளைக் கேட்டு நான் அடையப்போவதுதான் என்ன? இந்த வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இல்லை, எனவே என் துயரமும் முற்றிலும் பொருளற்றது என்று நான் உன் சொற்கள் வழியாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையா? நான் சோர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் சோர்வை ஏன் இழுத்து என் மேல் போட்டுக்கொள்ள வேண்டும்?”
“ஆமாம், நான் சொல்வதும் அதுதான்” என்று சக்ரவாகி என்னிடம் சொன்னது. “கதைகள் கேட்குந்தோறும் நீ மேலும் துன்பம் அடைகிறாய். உனக்கு இழைக்கப்பட்ட அநீதி இந்தக் கதைகளால் சற்றும் குறையவில்லை. கதைகள் அந்த புள்ளியை எல்லாப் பக்கங்களிலும் இழுத்து இழுத்து விரிக்கின்றன. அது பெரிதாகியபடியே செல்கிறது. உனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒரு சில மனிதர்களால் செய்யப்பட்டது அல்ல என்று நீ அறிகிறாய். அது எங்கெங்கோ ஊறி எங்கெங்கோ எப்படியெப்படியோ தேங்கும் நஞ்சு… அதைப்பார்த்து நீ மலைத்துச் செயலற்று நிற்கிறாய். எவரால் என்ன செய்யமுடியும் என்று எண்ணி எண்ணி களைப்படைகிறாய்…”
“தன்னால் கையாள முடிந்த சிறுவட்டத்தை மட்டுமே மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சூக்ஷ்மதரு சொன்னது. “எந்த விளையாட்டுக்கும் முதலில் நீங்கள் ஒரு களத்தைத்தானே வரைந்துகொள்கிறீர்கள்… களமில்லாமல் விளையாடமுடியுமா?” சிரித்து “உங்கள் மொழியில்கூட ஒரு பாடல் உண்டு. அரங்கின்றி வட்டாடுதல்…”
சக்ரவாகி சொன்னது “நம்மால் கையாளக்கூடியவற்றை மட்டுமே அறிந்து அந்த எல்லைக்குள் வாழ்வதென்பது ஒரு மாயையாக இருக்கலாம். அதிலுள்ள மாபெரும் அறியாமை என்பது நாம் நம் வாழ்க்கையை கையாளமுடியும் என்னும் நம்பிக்கைதான். ஆனால் அறியாமை என்பது எப்போதுமே பயனற்றதோ தீங்கானதோ அல்ல. பலசமயம் அறியாமைபோல மிகச்சிறந்த ஆறுதல் வேறில்லை. அது தீவிரமான ஆயுதமாக ஆவதும் உண்டு.”
”மனிதவாழ்க்கை என்பதே ஒருவகையான அறியாமைதான். அதைச் சிறப்பாக நடத்த அறியாமைதான் உதவும்” என்றது சூக்ஷ்மதரு. “நீ அறியுந்தோறும் செயலற்றவனாக ஆவாய் என்றால் அதனால் என்ன பயன்?”
என் காதருகே வந்து சக்ரவாகி கிசுகிசுத்தது. “நீ இதுவரை வாழ்ந்ததே அந்த வஞ்சத்தின் பலத்தால்தான். இந்தக்கதைகள் அதை மெல்ல மெல்லக் கரைக்கின்றன. அதை நீ கவனித்தாய் அல்லவா?”
“ஆமாம், மனிதர்களின் குரூரத்தையும் இழிவையும் இல்லாமலாக்கிக் காட்ட ஒரே வழிதான் உள்ளது. அவர்கள் எத்தனை அற்பமானவர்கள் என்று காட்டுவதுதான் அது. அதைத்தான் இந்தக் கதைகள் செய்கின்றன” என்று நான் சொன்னேன். “மொத்த மனித வாழ்வே அற்பமானது என்று எண்ணத் தொடங்கிவிட்டேன்… நான் கிளம்புகிறேன்.”
“நல்லது, கிளம்புவதென்றால் அது உன் விருப்பம்” என்றது கானபூதி. “நான் எவரையும் இங்கே நிறுத்துவதில்லை. கதைகள் தோற்றுவிடும் ஓர் இடம் உள்ளது, கதைகேட்பவன் கதையில் ஆர்வமிழக்கும் புள்ளி. கதைகேட்பவன் ஆர்வமிழக்கையில் என்னென்ன நிகழ்கிறது என்று எல்லா கதைசொல்லிகளுக்கும் தெரியும். ஏனென்றால் கதைசொல்லும்போது நாங்கள் கேட்பவர்களையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்…“
“கதைகேட்பவன் ஆர்வமிழந்தால் சட்டென்று கதை வெறும் மொழியாகவும், சொற்களாகவும் ஆகிவிடுகிறது. நிகழ்வுகளாகவும், மனிதர்களாகவும், எண்ணங்களாகவும் மாறுவது நின்றுவிடுகிறது” என்று கானபூதி தொடர்ந்து சொன்னது. “அக்கணமே கதை இறந்துவிடுகிறது. கதைகேட்பவன் கதையை வேண்டுமென்றே எதிர்நிலையில் நின்று கேட்டால், தர்க்கபூர்வமாக உடைக்க முற்பட்டால், தனக்குப் பிடித்ததுபோல மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால், தனக்கு தெரிந்ததை கதைமேல் போடத்தொடங்கினால் கதை தன் எல்லா மாயச்சக்திகளையும் இழந்துவிடும். சிறகு உதிர்ந்து வண்ணத்துப்பூச்சி புழுவாக ஆவதைப் போல” என் தோளைத் தொட்டு “நீ கிளம்பலாம்…” என்று சொல்லி புன்னகைத்தது.
நான் என் கழியை ஊன்றி, உடலை உந்தி எழுப்பிக்கொண்டு கிளம்பினேன். கானபூதியின் தெளிந்த கண்களிலும், குழந்தைகளுக்குரிய பால்பற்கள் ஒளிவிட்ட அழகிய உதடுகளிலும் இருந்த சிரிப்பை இறுதியாக ஒருமுறைப் பார்த்தேன். “எவ்வாறானாலும் நீ என்னிடம் கனிவுடன் இருந்தாய்… நன்றி” என்றேன்.
நான் நடக்கத் தொடங்கியபோது ஆபிசாரன் மட்டும் என் பின்னால் வந்தது. “மெய்யாகவே போகிறாயா?” என்றது.
”ஆமாம்”
“போய் என்ன செய்யப்போகிறாய்? அதே வஞ்சத்துடன் எரிந்தபடி அந்த படிக்கட்டில் அழுக்குக்குவியலாக படுத்துக் கிடக்கப்போகிறாய் இல்லையா?”
“அதுதான் நான் செய்யவேண்டியது. ராதிகாவுக்கு நான் செய்யவேண்டிய கடமை அது… ஒரு பிராயச்சித்த நோன்பு அது. அங்கே கிடந்து செத்து மட்கினால்தான் அவளுக்கான என் கடன் தீரும்…”
“சரி” என்று ஆபிசாரன் சொன்னது. “நான் ஒன்று கேட்கிறேன்… ஒருவேளை கானபூதி உன் கதையில் உள்ள அடிப்படையான உண்மையை உன்னிடமிருந்து மறைக்கிறதா?”
நின்று, “என்ன சொல்கிறாய்?” என்று நான் கேட்டேன்.
”உன் மனம் தொட்டுத் தொட்டு அலையும் ஒரு புள்ளி இருக்கிறது. அத்தனை குரூரம் மனிதர்களில் எப்படி உருவாகிறது என்று நீ எண்ணிக்கொண்டே இருக்கிறாய். ஒரு கொடிய செயலைச் செய்யும்போது மனிதர்கள் எதை அடைகிறார்கள்? எப்படி அச்செயல் வரை வந்து சேர்கிறார்கள்? அதைத்தான் நீ அறியவிரும்பினாய். அதை கானபூதி இதுவரைச் சொல்லவே இல்லை.”
“நாம் அதை நான் விரும்பியதுபோல பேச வைக்க முடியாது. எந்தக் கேள்விக்கும் அது பதில் சொல்லாது.”
“உண்மை, அது கதைசொல்லி. கதைகளையே அது சொல்லமுடியும். ஆனால் கதைசொல்லியும் கதையை கட்டுப்படுத்த முடியாது. நீ அதை கதைசொல்ல வைத்தால் மட்டும் போதும், எப்படியும் கதை வளர்ந்து அந்தப் புள்ளியைத் தொட்டுவிடும்” ஆபிசாரன் என்னை தொட்டு “உண்மையில் கதைசொல்லிகள் நேராகச் சென்றால் உண்மையை அவர்களால் தொடவே முடியாது. அவர்கள் கதையின் முடிச்சுகளிலும் சுழல்களிலும் அலைவார்கள். தற்செயலாக உண்மையை தொட்டுவிடுவார்கள். கானபூதி தனக்குத் தோன்றிய கதைகளைச் சொல்லட்டும். கதைகள் அதன் கட்டுப்பாட்டை இழந்து விரியட்டும். உண்மை வெளிவந்துவிடும்.”
“நான் என்ன செய்யவேண்டும்?”
“நீ கேள்விகளைக் கேட்டு அதைக் கதைசொல்ல வைக்கவேண்டும்… அந்தக் கதைகளிலுள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்லி அதை தோற்கடித்து மேலும் சொல்லவைக்கவேண்டும்… இந்த ஆட்டத்தில் நீ வென்றபடியே இருக்கவேண்டும்…”
“நான் வென்றபடியே இருக்கமுடியுமா என்ன?”
“நீ வெல்வாய்… ஏனென்றால் நீ வெல்லவேண்டும் என கானபூதி உள்ளுர விரும்புகிறது”
“ஏன்?”
“ஏனென்றால் கதைகேட்பவன் தன்னை வெல்லவேண்டும் என விரும்பாத கதைசொல்லி இல்லை. அந்த வெற்றி கதைசொல்லியின் தோல்வி, ஆனால் கதையின் வெற்றி. அந்த வெற்றிகள் வழியாக கதை தன்னை கதைசொல்லியிடமிருந்து விடுவித்துக்கொண்டு கதைகேட்பவனிடம் சென்றுவிடுகிறது. அந்த விடுதலையை கதைசொல்லி விரும்புகிறான்”
நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ”யோசிக்காதே… திரும்பிச் சென்று ஒரு கேள்வியைக் கேள்” என்று ஆபிசாரன் சொன்னது. “ஆனால் கதைசொல்லியிடம் எப்போதும் நேரடியான கேள்வியைக் கேட்கக்கூடாது. அடிப்படையான கேள்விகளையும் கேட்கக்கூடாது. அது திகைத்து தெரியவில்லையே என்றுதான் சொல்லும். சாதாரணமான ஒரு நடைமுறைக் கேள்வியைக் கேள். அது உற்சாகமடைந்து கதைசொல்லத் தொடங்கும்… நல்ல கதைசொல்லி என்பவன் கதைகளை விரித்துக்கொண்டே செல்பவன். ஆற்றல் அற்ற கதைசொல்லிதான் சொல்லியவற்றையே திரும்பச் சொல்பவன்… கானபூதி ஒருபோதும் திரும்பச் சொல்வதில்லை. மீண்டுமொருமுறை சொல்லப்படாமல் விரியும் கதை எப்படியோ ஆழத்திற்கும் செல்லும்.”
நான் திரும்பிச் சென்று கானபூதியின் அருகே நின்றேன். கானபூதி மரத்தில் மறைந்துவிட்டிருந்தது. நான் அருகே சென்றதும் அது தோன்றியது. “திரும்பி வந்துவிட்டாய்!” என்றது.
“என்னிடம் ஒரு கேள்வி உள்ளது” என்று நான் சொன்னேன். “அதை மட்டும் கேட்டுவிட்டுப் போய்விடுகிறேன்.”
“சொல்”
”நீ சொன்ன கதைகளில் எந்தக் கதையில் குணாட்யர் சீற்றமடைந்து என்னைப் போல கதை கேட்டது போதும் என்று எழுந்து சென்றார்?” என்றேன். “எந்தக் கேள்வியைக் கேட்டபடி அவர் திரும்பவும் வந்தார்?”
“திரும்பி வந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறாய் அல்லவா?”
”ஆமாம், அப்போதும் இந்த ஆபிசாரன் இருந்திருக்கும்” என்று நான் சொன்னேன்.
கானபூதி சிரித்து “உண்மை” என்றது. “உட்கார். அந்தக்கதையைச் சொல்கிறேன். அது குரங்குத்தாவல் போலச் செல்லும் கதை” என்று தன் இரு கைகளையும் மண்ணில் வைத்தது.
நான் “எல்லா கதைகளையும்போல” என்றேன்.
”ஆமாம்” என்று சிரித்து கானபூதி கதைசொல்லத் தொடங்கியது. மற்ற நிழல்கள் ஒவ்வொன்றாக வந்து எங்களைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டன.
”நான் குணாட்யருக்குச் சொன்ன கதை இங்கே வாழ்ந்த கதைசொல்லிகளின் நீண்ட மரபு ஒன்றைப் பற்றியது” என்று கானபூதி சொன்னது. “அவர் அக்கதை வழியாக அவர் கற்றவற்றின் தொடர்ச்சியை அறிந்துகொள்வார் என்று நான் நினைத்தேன். தொடர்ச்சி என்பது தெரிவதும் தெரியாதவற்றாலும் ஆனது அல்லவா?”
வால்மீகியின் மாணவர்களில் ஒருவரான லோமஹர்ஷணர் அவர் மறைந்தபின் வால்மீகியின் ஆசிரமத்தை தன் வாழ்நாள் முழுக்க தலைமைதாங்கி நடத்தினார். அவருடைய மகன் ரோமஹர்ஷணன் அவருக்குப் பின் அந்த ஆசிரமத்தை நடத்தினார். அவ்வாறு நூற்றிப் பன்னிரண்டு தலைமுறைக்காலம் அந்த ஆசிரமம் அங்கே நடந்தது. ராமனின் கதையைப் பாடும் சூதர்கள் அங்கே சென்று அங்கிருக்கும் முதல் ஆசிரியனின் கையால் ஏடு எடுத்து தரப்பட்டு தங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற மரபு உருவாகியது. வால்மீகியிடமிருந்து ராமனின் கதை கேட்டவர்கள் என அவர்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முடிந்தது.
வால்மீகி ஆசிரமத்தின் நூற்றிப்பன்னிரண்டாவது தலைமுறையின் ஆசிரியராகத் திகழ்ந்த லோமஹர்ஷ்ண வால்மீகியின் மகனுக்கு அப்போது எட்டு வயது. அவன் பெயர் ரோமஹர்ஷணன். அவன் ஒருநாள் தன் தந்தை ராமகதையை ஓதிக்கொண்டிருக்கும்போது பொறுமையின்மை காட்டி அசைந்து அமர்ந்தான். லோமஹர்ஷணர் அதை கவனித்து “என்ன? வேறெங்காவது உன் நினைவு ஓடுகிறதா?” என்று கேட்டார்.
“இது ஷத்ரியனின் வெற்றிக்கதை. நாம் நிஷாதர்கள். நாம் ஏன் இந்தக் கதையை ஓதவேண்டும்?”
“இதை எழுதியவர் நிஷாதர். விரிவாக்கியவர் நம் மூதாதையான லோமஹர்ஷணர்” என்று லோமஹர்ஷணர் சொன்னார். “அத்துடன் நாம் நிஷாதர்கள் அல்ல, சூதர்கள்”
“அது இன்னும் இழிவு. நிஷாதர்களை விட நமக்கு இருக்கும் கூடுதல் தகுதி என்பது நம்மிடம் பிராமணரத்தக் கலப்பு உள்ளதுதான் என்றால் அதை நாம் வெளியே சொல்லிக்கொள்ளவே கூடாது” என்று ரோமஹர்ஷணன் சொன்னான்.
“இங்கே அறத்தை நிலைநாட்டவந்தவனின் கதை இது. இந்த அறத்தை நம்பியே இங்கே மனிதர்களும் விலங்குகளும் வாழ்கிறார்கள்” என்று லோமஹர்ஷ்ணர் சொன்னார்.
”அது இந்த சிறிய காட்டுக்குடிலில் அமர்ந்து நாம் எண்ணிக்கொள்வது மட்டுமே. ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதனாலேயே அது உண்மை என்று நாம் நினைக்கிறோம். வெளியே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இன்று பாரதம் முழுக்க புதிய நாடுகள் உருவாகி வந்துகொண்டே இருக்கின்றன. நிஷாதர்களும் அசுரர்களும் அரசுகளை அமைத்து முடிசூடி அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் நகரங்கள் பெருகி வளர்கின்றன. அங்கே கல்வியும் கலைகளும் செழிக்கின்றன. சூதர்கள் அவர்களையும் பாடிப் புகழ்ந்து பரிசுபெறுகிறார்கள். அவர்களை பாட்டுத்தலைவர்களாகக் கொண்ட காவியங்கள்கூட உருவாகிக்கொண்டிருக்கின்றன” என்று ரோமஹர்ஷணன் சொன்னான்.
“அவர்களுக்கும் உரிய அறத்தைத்தான் இந்நூல் பேசுகிறது” என்று லோமஹர்ஷணர் சொன்னார்.
“இல்லை, உருவாகி வந்துகொண்டிருக்கும் புதிய அரசுகளுக்கு வேத ஏற்பு இல்லை என்று க்ஷத்ரியர்கள் சொல்கிறார்கள். அவற்றுக்கு எதிராக அவர்கள் அணிதிரள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு முன்னுதாரணமாக வைத்திருப்பது ராமனைத்தான். ராமனின் புகழைப் பரப்ப அவர்கள் பொன்னும் பொருளும் அளிப்பது அதனால்தான். அவர்களின் நோக்கில் க்ஷத்ரியர்கள் மட்டுமே அறத்தின் காவலர்கள், க்ஷத்ரியர் அல்லாதவர்கள் க்ஷத்ரியர்களுடன் இணைந்து நின்றால் மட்டுமே அறத்திற்கு சார்பானவர்கள், க்ஷத்ரியர்களை எதிர்ப்பவர்களை எந்த வகையில் கொன்றாலும் அது அறம்தான். அதைத்தான் இந்த நூல் வழியாக அவர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் இங்கிருந்து அதற்குரிய சூதர்களையும் பாடல்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.”
“நீ உளறிக்கொண்டிருக்கிறாய். இங்கே இந்த வகையான பேச்சுக்களுக்கு இடமில்லை” என்று சீற்றத்துடன் லோமஹர்ஷணர் சொன்னார்.
“ஒரு பெரும்போர் எப்படியும் வந்தாகவேண்டும் என்று சொல்கிறார்கள். போர் வழியாகத்தான் இன்றைய மோதல் முடிவுக்கு வரும். போரில் முழுமையாகத் தோற்கடிக்கப்படாமல் க்ஷத்ரியர் பிறரை ஏற்கவே மாட்டார்கள். அந்தப் போருக்கு அணிதிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் நூல் இது” என்று சொன்னபடி ரோமஹர்ஷணன் எழுந்தான். “இனி நான் இதைக் கற்கமாட்டேன்.”
“அப்படியென்றால் நீ விலகிச்செல்லலாம்…” என்று லோமஹர்ஷணர் சொன்னார். “ஆனால் நீ இனிமேல் என் மகன் அல்ல. உன் மகனுக்கு நீ என் பெயரைப் போடக்கூடாது.”
ஒருகணம் தயங்கியபின் ஒரு சொல்லும் பேசாமல் வணங்கிவிட்டு ரோமஹர்ஷணன் வால்மீகியின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பினான். எங்கே செல்வது என்று தெரியாமல் அவன் தெற்கு நோக்கி நடந்தான். அது எப்போதுமே அப்படித்தான். வடக்கிலுள்ளோர் தெற்குக்கும் தெற்கிலுள்ளோர் வடக்குக்கும் செல்கிறார்கள். அது ஞானத்தை அளிக்கும் என்பதும் உண்மை. ஏனென்றால் நமக்கு விருப்பும் வெறுப்பும் இல்லாத நிலத்திலுள்ள வாழ்க்கையிலேயே நாம் உண்மையை கண்கூடாகக் காணமுடியும்.
அவ்வாறு வரும் வழியில் ரோமஹர்ஷண வால்மீகி இந்த மரத்தடியில் வந்து அமர்ந்தான். நான் அவன் முன் தோன்றினேன். என்னை அச்சமின்றி ஏறிட்டுப்பார்த்தவர்கள் ஒரு காலகட்டத்திற்கு ஒருவரே தோன்றுகிறார்கள். அவனிடம் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவன் செல்லவேண்டிய இடம் கிருஷ்ண துவைபாயன மகாவியாசன் வாழும் வியாசவனமே என்று சொன்னேன். “அவர் அங்கே நூல்களில் இருந்து புராணங்களையும், சூதர்களிடமிருந்து வம்சகதைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மகாகாவியத்தை எழுதும் கனவு அவருக்கு இருக்கிறது. நீ அங்கே செல். உன்னிடமிருந்து கதைகள் என்பவை தோன்றுபவையோ மறைபவையோ அல்ல, அவை நிலைகொண்ட ஒற்றைக் கடலின் அலைகள் என அவர் அறியட்டும்” என்றேன்.
அவன் வியாசனைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தான். நான் வியாசனின் கதையை அவனுக்குச் சொன்னேன். மீனவகுலத்துப் பெண் காளியின் மகன் அவர். காளி இளமையிலேயே விசித்திரமானவளாக இருந்தாள். முரட்டுத்தனமும் அதற்குரிய உடல் வலிமையும் கொண்டிருந்தாள். எதற்கும் கட்டுப்படாதவளாக இருந்தாள். இளமையிலேயே கங்கையில் குதித்து மறுகரை வரை நீந்தி திரும்பி வந்தாள். வெறும் கைகளால் மீன்களைப் பிடித்து பச்சையாகவே தின்றாள். மீனின் ரத்தம் படிந்த உடையும், மீன்செதில் படர்ந்த உடலுமாக அவள் ஒரு மீன்போலவே இருந்தாள்.
அவள் வளர்ந்தபோது தலைமுடி சிக்குபிடித்து பின் சடையாகியது. அவள் எவரிடமும் நேருக்குநேர் பார்த்துப் பேசுவதில்லை. அவளிடம் பேசப்படுபவை அவள் வரைக்கும் சென்று சேர்கின்றனவா என்றும் எவருக்கும் தெரியவில்லை. ஊரில் அவளை பைத்தியக்காரி என்றுதான் அழைத்தனர். எப்போதுமே நீரின் வாடை எழும் உடல்கொண்டிருந்தமையால் மத்ஸ்யகந்தி என அழைத்தார்கள். படகோட்டுவதில் தனித்திறமை கொண்டிருந்தாள். புயலிலும் மூடுபனியிலும் அனைவரும் அஞ்சிப் பின்வாங்கும்போதும் அவள் படகை ஓட்டினாள்.
திடீரென்று ஒருநாள் அவள் கருவுற்றாள். அவளை புணர்ந்தவர் யார் என்று எவருக்கும் தெரியாது. அவள் கருவுற்ற செய்தியை அறிந்து அவள் தந்தையும் குலமும் அவளை துரத்தி வெளியேற்றினார்கள். அவள் ஆற்றின் நடுவே நாணல்கள் செறிந்த ஒரு தீவில் சென்று தங்கினாள். அங்கே ஏற்கனவே ஊராரால் பிச்சி என்றும் பேய்ச்சி என்றும் துரத்தப்பட்ட ஒரு கிழவி இருந்தாள். முன்பு அவள் ஒரு பேற்றுத்தாதியாக திகழ்ந்தவள். அவள் அறியாத மொழிகளைப் பேசத்தொடங்கியதும் அவளை அஞ்சி மக்கள் விலக்கினார்கள். அவள் அவர்களையும் விலக்கினாள். அவள் நாவிலிருந்து பைசாசிக மொழி பெருகி வந்துகொண்டே இருந்தது.
அந்தப் பேய்ச்சியிடம் சென்று சேர்ந்த காளி அங்கேயே ஆண்குழந்தை ஒன்றை பெற்றாள். கன்னங்கரிய குறுகிய தோற்றம் கொண்டிருந்த அக்குழந்தையை அந்த பிச்சியிடம் விட்டுவிட்டு அவள் கங்கைக்கே திரும்பிவிட்டாள். அவள் அங்கே இருந்தபோது அந்தக் கிழவி பேசிய ஒரு சொல்லும் அவளுக்கு புரியவில்லை. அது விசித்திரமான ஒலிகளாகவே அவளுக்குத் தோன்றியது. விலங்குகளின் ஓசை, பறவைகளின் ஓசை, நீரின் நெருப்பின் ஓசை எல்லாம் கலந்து உருவான ஒலிப்பெருக்கு. ஆனால் அவள் கனவுகளில் அவளிடம் அந்த கிழவி பேசுவதாக உணர்ந்தாள். அவளிடமிருந்து அவள் ஆயிரக்கணக்கான கதைகளைக் கேட்டறிந்தாள்.
திரும்பி வந்த காளி ஒவ்வொரு நாளும் அழகானாள். அவளுடைய பேரழகைக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். அவளில் ஏதோ தெய்வம் கூடிவிட்டிருப்பதாக எண்ணினார்கள். அவள் கங்கைக் கரையில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினாள். அப்போது சந்திரகுலத்தைச் சேர்ந்தவனும், அஸ்தினபுரியின் அரசனுமாகிய சந்தனு தன் படையினருடன் படகில் அவ்வழியாகச் சென்றான். திடீரென்று வீசிய புயலில் அவன் படகு கவிழ்ந்தது. அவன் கங்கையின் அடிநீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். படைவீரர்கள் பரிதவித்து அவனைத் தேடியும் கண்டடைய முடியவில்லை.
கங்கையின் ஆழத்திற்குச் சென்ற அவனை நீரில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்த காளி காப்பாற்றி தன் குடிலுக்கு கொண்டு சென்றாள். அங்கே கண்விழித்த அவன் தன்னைக் காப்பாற்றியவள் பேரழகியான மீனவப்பெண் என்று அறிந்தான். அவளுடைய அறிவு அவனைத் திகைக்கச் செய்வதாக இருந்தது. “இத்தனை மொழிகளும் இத்தனை நூல்களும் உனக்கு எப்படித் தெரிந்தன?” என்று அவன் கேட்டான்.
“நான் நிழல்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்று அவள் சிரித்தபடி பதில் சொன்னாள்.
சில மாதங்களுக்குப்பின் சந்தனு மீண்டும் தன் அமைச்சர்களுடன் திரும்பி வந்து காளியின் தந்தையிடம் பேசி அவளை கன்னிதானமாகப் பெற்று மணம்புரிந்து கொண்டான். அவளை சத்யவதி என்று பெயர் மாற்றம் செய்து தன் அரசியாக ஆக்கிக்கொண்டான்.
அந்த கிழட்டு மருத்துவச்சியால் தீவில் வளர்க்கப்பட்டதனால் கரியநிறம் கொண்ட சத்யவதியின் மகன் கிருஷ்ண த்வைபாயனன் என அழைக்கப்பட்டான். பதினெட்டு வயது வரை அவன் அவளுடன் அந்தப் பிச்சி பேசிய மொழியை மட்டுமே அறிந்தவனாக வாழ்ந்தான். அவனைக் கண்டால் பிறர் அஞ்சி ஒளிந்து கொண்டார்கள். நீண்ட சடைமுடிகளும், தீ போல எரியும் கண்களும், நாணலால் ஆன ஆடையும் அணிந்த அவனை பைசாசிகன் என்று நினைத்தார்கள். அவனும் தன்னை பிற மனிதர்களைச் சேர்ந்தவன் என்று நினைக்கவில்லை.
ஒருநாள் காலையில் கிருஷ்ணன் கண்விழித்து எழுந்தபோது பிச்சியின் உடல் அருகே கருமையாக எவரோ அமர்ந்திருப்பதாக கண்டான். தெளிந்த கண்களும், வெண்சிரிப்பும் கொண்ட ஓர் உருவம். அவன் “யார்?” என்று கேட்டபடி எழுந்தபோது அது மறைந்துவிட்டது. அவன் சென்று தன்னை வளர்த்த முதியவளை தொட்டுப் பார்த்தபோது அவள் இறந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.
அவனால் அதன் பின் அங்கே தங்க முடியவில்லை. அவன் தெற்கே கிளம்பினான். விந்தியமலை நோக்கி வந்தவன் இந்த மரத்தடியில் வந்து அமர்ந்தான். ஆற்றில் ஒழுகும் எல்லா பொருளும் ஒரு பாறையை முட்டிச்செல்வதைப்போல தெற்கும் வடக்கும் செல்பவர்கள் விந்தியனை நோக்கி நடந்தால் இங்கே வந்தாகவேண்டும். நான் அவனிடம் பேசினேன்.
என் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். என்னைக் கூர்ந்து பார்த்து ”உன்னைப் பார்த்திருக்கிறேன்” என்றான். “உன் மொழி எனக்குப் புரிகிறது… நான் வெளியே வந்தபின் எனக்கு புரியும் மொழியைப் பேசிய முதல் குரல் உன்னுடையது” என்றான்.
நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.
அவன் ”நான் உன்னுடன் இருந்துகொள்கிறேன். எனக்கு இங்கே மனிதர்களின் மொழி எதுவும் தெரியவில்லை. எவருடைய வாழ்க்கையும் புரியவில்லை.நான் பைசாசிகன் என்று அவர்களால் துரத்தப்படுகிறேன்” என்றான்.
“நீ இங்கே வாழமுடியாது. ஏனென்றால் நீ மனிதன்” என்று நான் சொன்னேன். “நீ அறிந்தவற்றுக்கு அப்பால் இங்கே ஏதுமில்லை. நீ அவற்றை மீண்டும் அறியவேண்டும் அவ்வளவுதான். உனக்கு நான் அதற்கான மந்திரத்தைச் சொல்கிறேன். அதர்வவேதத்தின் அழிவற்ற சொல் அது. அது அதர்வத்தை உனக்காகத் திறக்கும். அதர்வம் பிற அனைத்தையும் திறக்கும்.”
நான் அந்த மந்திரத்தை அவன் செவிகளில் சொன்னேன். “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” அவன் அதை மூன்றுமுறை திரும்பச் சொன்னான். ”அதன் இறுதிச் சொல் உன் நாக்கில் எப்போதும் இருக்கவேண்டும். பிருத்வ்ய… எப்போதும் பூமியுடன் உனக்குத் தொடர்பு இருக்கவேண்டும். வெறுங்காலுடன் நட. வெறுந்தரையில் படு. மண்ணை எண்ணிக்கொண்டிரு. இங்குள்ள எல்லாம் மண்ணில் முளைத்தவையே என்று அறிந்துகொள்.”
”அவன் என்னை வணங்கி கிளம்பிச் சென்றான். மண்ணிலுள்ள அனைத்து மெய்ஞானங்களையும் அறிந்தவன் என்று புகழ்பெற்றான். ’வியாசோச்சிஷ்டம் ஜகத்சர்வம்’ என அவனைப் பற்றி கவிஞர்கள் சொன்னார்கள். அவன் நா தொட்ட எச்சிலே இங்குள்ள அனைத்து ஞானமும் என்று பொருள். அது உண்மையும்கூட.” என்று நான் ரோமஹர்ஷணனிடம் சொன்னேன். “நீ அவனைத் தேடிச்செல். அவனிடம் மாணவனாகச் சேர்ந்துகொள்.”
“அவர் என்னைச் சேர்த்துக் கொள்வாரா?” என்று அவன் கேட்டான்.
“உனக்கு என்ன தெரியும் என்று அவர் சோதனைசெய்வார். அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் உன்னிடம் பதில் இருக்கும். அவர் உன்னை விடமாட்டார்” என்று நான் சொன்னேன்.
ரோமஹர்ஷ்ணன் என்னை வணங்கிவிட்டு கிளம்பிச் சென்றான். அவன் வியாசனை அணுகி அவருடைய மாணவனாக ஆனான். அவருக்கு ஏற்கனவே வைசம்பாயனன், அத்ரி, ஜைமினி, சுமந்து என்னும் நான்கு மாணவர்கள் இருந்தார்கள். வியாகரணமும், காவியமும், நியாயமும், தர்மசாஸ்திரங்களும் அறிந்த அந்தணர்கள். ஆனால் நிஷாதனாகிய ரோமஹர்ஷ்ண வால்மீகி அவருடைய முதல் மாணவராக ஆனான்.
கானபூதி என்னிடம் சொன்னது. “ரோமஹர்ஷணர் வியாசனின் காவியத்தை முழுமையாக்கி முன்னெடுத்தவர். அவருக்கு சுமதி, அக்னிவர்ச்சஸ், மித்ராயுஸ், சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என ஆறு மாணவர்கள் அமைந்தனர். அதில் சாவர்ணி மட்டுமே அந்தணன். சுமதியும் மித்ராயுஸும் சூதர்கள். அக்னிவர்ச்சஸும் சாம்சபாயனனும் ஷத்ரியர்கள். அகிருதவிரணன் நிஷாதன்”
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
