காவியம் – 49

கானபூதி என்னிடம் சொன்னது. “நான் என்னிடம் முனிவனாகிய வால்மீகி சொன்னவற்றை சொல்கிறேன். இங்கே ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளில் ஒரு கதை இது. ஒரு கதை என்பது ஒரு கதைக்கொத்து. எல்லாக் கதையும் அப்படித்தான்.”
“வால்மீகி சொன்ன கதை எது? அவருடைய கதையா?”
”அவர் தன் கதையில் இருந்து தொடங்கினார்” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது. “வால்மீக குலத்தில் மரன் என்ற பெயருடன் பிறந்த வால்மீகி ஐந்து வயது முதல் தன் தந்தையுடன் வேட்டைக்குச் செல்லத் தொடங்கியவர். தந்தையிடமிருந்து வேட்டையின் திறன்களையும், காட்டின் செய்திகளையும் அறிந்துகொண்டார். சிறந்த வேட்டைக்காரனாக அவர் வரக்கூடும் என்று அவருடைய குலத்தில் அறியப்பட்டார். ஆனால் பத்து வயதில் அவர் தனக்கே இருக்கும் ஒரு திறமையைப் பற்றி உணர்ந்துகொண்டார். அதை ஒரு விளையாட்டாக அதுவரை கருதிவந்தார், பிறரும் அவ்வாறே எண்ணினர். அது பிறரிடமில்லாத ஒரு சிறப்பு என அப்போதுதான் உணர்ந்தார்.”
மரன் குரல்களை நினைவுகொள்வதில் அவர்கள் அனைவருமே திகைத்துப்போகும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தான். ஒரே ஒருமுறை ஒரு குரலைக் கேட்டால் கூட எத்தனை காலம் கழித்தும் அப்படியே அந்தச் அச்சொற்களை திரும்பச் சொல்ல முடிந்தது. தனக்கு ஒரு சொல்கூட புரியாத சொற்றொடர்களைக்கூட அப்படியே திரும்ப ஒலித்தான். ஒருமுறை அவர்கள் வேட்டைக்குச் சென்றபோது மனிதக்குரல் கேட்டு பதுங்கிக் கொண்டார்கள். அவ்வழியாகச் சென்ற ஷத்ரியப் படைவீரர்கள் தொடர்ச்சியாக மாறிமாறிப் பேசிக்கொண்டு சென்றனர். அந்த மொழி அவர்கள் எவருக்கும் புரியவில்லை.
அவர்கள் திரும்பி வந்து ஷத்ரியர்கள் காட்டின் வழியாகச் சென்றதைப் பற்றியும், அவர்கள் பேசியதைப் பற்றியும் சொன்னார்கள். அவர்கள் பேசியதென்ன என்று குலப்பூசாரியான கீடர் கேட்டார். அவர்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் சிறுவனாகிய மரன் அந்த மொத்த உரையாடலையும் அப்படியே திரும்பச் சொன்னான். க்ஷத்ரியர்களின் மொழியை அறிந்திருந்த கீடர் அந்த உரையாடலை அவரே நின்று கேட்பதுபோல உணர்ந்தார். அருகே இருந்த கோசலநாட்டின் அரசன் அங்கே வேட்டைக்கு வரவிருப்பதாகவும், அப்பகுதியில் நீரோடைகளுக்கு அருகே அவன் தங்குவதற்கான கூடாரங்களை அமைப்பதற்குரிய இடங்களைத் தேடி அவர்கள் வந்ததாகவும் அவர் புரிந்துகொண்டார்.
அரசர்கள் வேட்டையாட வரும்போது அங்குள்ள மலைக்குடிகள் வீடுகளை கைவிட்டுவிட்டு காட்டின் ஆழத்திற்குள் சென்று மலைக்குகைகளில் பதுங்கிக் கொள்ளவேண்டும் என்பது வழக்கம். அவர்கள் சமைக்கக் கூடாது, புகை காட்டிக்கொடுத்துவிடும். கரடி அல்லது செந்நாய்களின் உலர்ந்த மலத்தை நீரில் கரைத்து தங்கள் ஆடைகளிலும் தாங்கள் செல்லும் வழியிலும் தெளித்துக்கொள்ளவில்லை என்றால் வேட்டைநாய்கள் தேடிவந்துவிடும். குழந்தைகள் அழுதாலும் கேட்காத தொலைவுக்குச் செல்லவேண்டும். குழந்தைகளுக்கு தேனை நிறையக் கொடுத்து அவர்களை தூக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும்.
அவர்கள் மலைகளில் ஊற்றுகள் உள்ள குகைகளில் பதுங்கிக்கொள்வது வழக்கம். வால்மீகி குலம் அதற்கென்று பல குகைகளை கண்டு வைத்திருந்தது. செல்லும்போது உலர்ந்த உணவு நிறைய வைத்திருக்க வேண்டும். அரசர்கள் எவ்வளவு நாட்கள் தங்குவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அரசர்கள் வேட்டையின்போது மலைக்குடிகளையும் விலங்குகள் போலவே அம்பெய்து கொன்று வீழ்த்துவார்கள். கிராமங்களை முழுமையாகவே எரித்து அழிப்பார்கள். சில சமயம் வேட்டைக்கு வந்த வீரர்கள் அன்னையரைக் கொன்றுவிட்டு குழந்தைகளை மட்டும் பிடுங்கி கொண்டுசென்று ஊரிலுள்ள விவசாயிகளுக்கு அடிமைகளாகக் கொடுத்துவிடுவார்கள். தங்கள் அம்புத்திறனை சோதித்துப்பார்ப்பதே அவர்களை எய்து வீழ்த்தித்தான்.
அவர்கள் உடனே ஊரிலிருந்து கிளம்பினார்கள். பெண்களும் குழந்தைகளும் அடர்ந்த காட்டுக்குள் இருந்த மலைக்குகை ஒன்றுக்குள் சென்றனர். ஆண்கள் உணவுப்பொதிகளைச் சுமந்தபடி தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்கிய குடில்கள் இருப்பது தெரிந்தால் அப்பகுதியில் அவர்கள் வாழ்வது தெரிந்துவிடும் என்பதனால் சிலர் மட்டும் தங்கி சிதல்புற்றுகள் போல கட்டப்பட்டிருந்த மண்வீடுகளின் மேல் மண்ணை அள்ளிக் குவித்து, அவற்றின்மேல் புல்விதைகளைத் தூவி, நீரூற்றி முளைக்க வைத்தனர். அதன்மேல் சருகுகளையும் குவித்து, வேட்டைநாய்கள் அங்கே வராதபடி சிறுத்தை மலம் கலந்த நீரையும் தெளித்துவிட்டு வந்தனர்.
அவர்களின் மூதாதையர் வாழ்ந்த அந்தக் குகைகளுக்குள் நுணுக்கமான ஓவியங்கள் நிறைந்திருந்தன. அவர்களின் கனவுகளில் வந்துகொண்டே இருக்கும் ஓவியங்கள் அவை. அவற்றில் தெளிந்த அழகிய கண்களும், இனிய சிரிப்பும் கொண்ட ஓர் உருவம் அவர்களை நோக்கிப் பேசமுயல்வதுபோல இருந்தது, அது கனவுகளில் அவர்களுடன் பேசியது.
அவர்கள் குகைகளில் தங்கியிருக்கையில் அரசன் வேட்டையாட வருவது பற்றிய தகவல் எப்படித் தெரிந்தது என்று பேசியபோது மரன் அந்தப் பேச்சை அவர்களுக்காக பலமுறை அப்படியே திரும்பச் சொன்னான். அவர்கள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது கீடன் “இவனுக்கு மொழி நன்றாக வருகிறது” என்றார்.
“மொழி என்றால் என்ன?” என்றான் மரன்.
“இதோ வெளியே இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக ஒரு ஓசையை பதிலாக வை. ஒவ்வொரு கல்லுக்கும் மண்ணுக்கும் ஒரு ஓசையை வை. அந்த ஓசைகளாலான ஓர் உலகம் உள்ளது. அதுதான் மொழி” என்றார் கீடர்.
மரன் மனம் மலைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.
“அந்த உலகத்தைத்தான் நம் மூதாதையர் இந்தக் குகைகளுக்குள் வரைந்திருக்கிறார்கள்…” என்றார் கீடர்.
குகைக்குள் அவர்கள் எவரும் செல்வதில்லை. மரன் குகைக்குள் பிரிந்து பிரிந்து சென்றுகொண்டே இருந்த கிளைகளுக்குள் அலையத் தொடங்கினான். மொழி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான். ஒருநாள் நேருக்குநேர் பார்க்கப்போகும் ஒரு தெய்வத்தை எண்ணிக்கொள்வதுபோல. அங்கே அவன் தன்னை பிற்கால வாழ்க்கை முழுக்க தன்னை ஆட்சி செய்த தெய்வத்தை ஓவியத்தில் கண்டான், அன்றே கனவுக்குள்ளும் அதைக் கண்டுவிட்டான். அங்கே தங்கியிருந்த சில நாட்களிலேயே அவனுக்குள் பிறகு அவன் கண்டடைந்த அனைத்தும் நுழைந்து நிறைந்துவிட்டன.
ஆனால் தன்னால் பறவைகளின் ஓசைகளையோ, விலங்குகளின் ஓசைகளையோ நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை என்று அவன் அறிந்தான். தன்னுடையது மானுடமொழி மட்டுமே என்று புரிந்து கொண்டான். பிறகுதான் தன் ஆர்வம் சொற்களில் அல்ல, பொருளில் என்று உணர்ந்து கொண்டான். அதை தத்துவம் என்றும், ஞானம் என்றும் உணர்ந்துகொள்ள மேலும் பல ஆண்டுகள் ஆகியது. அதுவரை அவன் சொற்களைக் கற்றுக்கொள்வதில் பித்தாக இருந்தான். எப்போதும் ஊர்களின் விளிம்புகளிலேயே சுற்றியலைந்தான். உடலில் பச்சைநிறம் பூசிக்கொண்டு புதர்களுக்குள் அசையாது ஒளிந்திருந்து மக்கள் பேசுவதைக் கேட்டான். நிஷாதர்கள் அனுமதிக்கப்படும் சந்தைகளுக்குச் சென்று அங்கே வணிகர்கள் பேசுவதைக் கேட்டான்.
இருபத்தெட்டு வயதில் அவன் பன்னிரு மொழிகளின் எட்டு லட்சம் சொற்களை அறிந்தவனாக இருந்தான். அந்தச் சொற்கள் அவன் உள்ளத்திற்குள் குவிந்து அவன் தலையை எடைகொண்டவனாக ஆக்கின. அவனால் தலையைத் தூக்கவே முடியவில்லை. எவருடைய கண்களையும் பார்க்க முடியவில்லை. பிறரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். பேசியபோது அவன் என்ன சொல்கிறான் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அறியாத சொற்கள் அதில் நிறைந்திருந்தன. அவன் தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கியபோது அவனை நிழல்கள் பிடித்துக்கொண்டுவிட்டன என்று அவனுடைய குலத்தவர் சொன்னார்கள்.
நிழல்களால் பிடித்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பூசாரிகள் பலவகையான மீட்புச் சடங்குகளைச் செய்வதுண்டு. தெய்வங்களுக்குப் பலிகொடுத்து வேண்டிக்கொள்வது, நோன்புகள் நோற்கச் செய்வது, தொலைவில் இருந்த மாய ஊற்றுக்களுக்குக் கூட்டிச்சென்று நீராடவைப்பது. அனைத்துக்கும் பிறகும் மரன் சித்தம் பிறழ்ந்தவனாகவே இருந்தான். அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த சொற்களின் பெருக்கு அவன் வாயில் தன்னிச்சையாக வெளிவந்தபடியே இருந்தது. அவன் தூக்கத்திலும் பேசிக்கொள்ளலானான். ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை கைவிட்டனர்.
மரன் அந்தக்காட்டிலேயே அலைந்து திரிந்தான். கிடைக்கும் உணவுகளை உண்டான், உடல் ஓய்ந்தபோது படுத்தான். பெரும்பாலும் ஊர்களின் எல்லைகளிலேயே அவன் இருந்தான். சிலர் அவனை கல்லால் அடித்து துரத்தினார்கள். சிலர் ஏதாவது உணவை எறிந்து கொடுத்தார்கள். அவன் முடி வளர்ந்து சடையாகியது. உடலில் அணிந்திருந்த தோலாடைகள் மட்கி உடலோடு ஒட்டிக்கொண்டன. உடலில் இருந்து மட்கும் இலைகளின் வாடை எழுந்தது. அவனை மக்களில் சிலர் பைசாசிகன் என்றும் அழைக்கலாயினர்.
அந்நாட்களில் ஒருமுறை மரன் காட்டின் விளிம்பில் புதருக்குள் அமர்ந்திருந்தபோது ஒரு குரலைக் கேட்டான். அது பாடிக்கொண்டிருந்தது, ஆனால் எந்தச் சொல்லும் இல்லை. சொற்களையே கேட்டு, சொற்களில் மூழ்கியிருந்த அவன் சித்தம் அதைக்கேட்டு திகைத்தது. அதைச் சொற்களாக ஆக்கிக்கொள்ள அவன் அகம் தவித்தது. அதில் தோற்றுச் சலித்ததும் அவன் அருகே இருந்த ஒரு கல்லை எடுத்துக்கொண்டு வெறியுடன் கூச்சலிட்டபடி அந்த இசையை எழுப்பிக்கொண்டிருந்தவரை நோக்கி ஓடினான்.
நாரதமரபு என்று சொல்லப்படும் சொற்கள் இல்லாத பாடல்முறையை நாதயோகமாக பயின்றுவந்த ஒரு துறவி அவர். நாரதர் என்னும் அடைமொழியை அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள். சுருதநாரதர் அவன் ஓடிவருவதைப் பார்த்து பாடியபடியே புன்னகையுடன் நின்றார். அவன் அருகே வந்து அவரைப் பார்த்தபடி நின்றபின், அந்தக் கல்லை கீழே போட்டான். பிறகு குழறியகுரலில் ”அது என்ன மொழி?” என்று கேட்டான்.
அவன் நான்கு மொழியின் வெவ்வேறு சொற்களைக் கலந்து அவ்வாறு கேட்டான். நான்கு மொழியையும் அறிந்திருந்த சுருதநாரதர் “நான் பாடுவதுதான் ஆதிமொழி. கைக்குழந்தைகளின் மொழி. விலங்குகளின் மொழி, உனக்கு வலித்தாலோ, மட்டற்ற மகிழ்ச்சி அமைந்தாலோ உன் உதடுகள் பேசும் மொழியும் இதுதான். ஆற்றுப்பெருக்கு தேங்கி குளங்களாக ஆவதுபோல இந்த மொழியைத் தான் துண்டுகளாக ஆக்கி சொற்களாக மாற்றியிருக்கிறார்கள்” என்றார்.
அவன் திகைத்துப்போய் அவரைப் பார்த்தான். பின்னர் அவர் முன் பணிந்து கண்ணீருடன் “என்னைச் சொற்களில் இருந்து விடுவியுங்கள்” என்றான்.
”ஆட்கொள்ளும் எதுவும் தெய்வமே” என்று சுருதநாரதர் சொன்னார். “நீ அந்த தெய்வத்தை தவம் செய். அது உனக்கு அருளும்”
“எனக்குத் தவம் செய்யத் தெரியாதே… எனக்குக் கற்றுக்கொடுங்கள்”
“தவம் செய்யத் தெரியாத உயிர்களே இல்லை. முட்டைமேல் அமர்ந்திருக்கும் பறவைகூடத்தான் தவம் செய்கிறது. கூட்டுப்புழு தவம் செய்கிறது” என்றார் சுருதநாரதர். “உன்னைக் குவித்துக்கொள், அதுதான் தவம். ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொல். அது ஒரு சரடுபோல ஆகி அனைத்துச் சொற்களையும் கோத்து உனக்கு ஒரு சீரான மனத்தை உருவாக்கித் தரும், அதுதான் மந்திரம்”
“எந்த மந்திரம்… எனக்கு மந்திரம் உபதேசியுங்கள்” என்று மரன் கேட்டான்.
“நீ தான்தோன்றி. உனக்கு இன்னொருவர் சொல்லும் மந்திரம் தேவையில்லை. உன் செவியில் நீ கேட்ட முதல் சொல்லே உன் மந்திரம்.”
“என் அம்மா நான் கைக்குழந்தையாக இருக்கும்போது என் பெயரை என் செவியில் சொன்னாள். அதை நான் நினைவு வைத்திருக்கிறேன்…”
“அதையே சொல்” என்று சுருதநாரதர் வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அதன் பின் மூன்று ஆண்டுக்காலம் மரன் தன் பெயரையே இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தத் தவம் முழுமையடைந்தபோது துவர்க்கும் கனி இனிப்படைவதுபோல அவர் கனிந்தார். காட்டில் இருந்து கிளம்பி ஊர்களுக்குள் சென்றார். அவருடைய ஞானத்தால் அவர் முனிவரானார். முனிவர்களுக்கு மூலம் இல்லை என்பதனால் அவர் எவர் என்று யாரும் கேட்கவில்லை. செல்லுமிடங்களில் அவர் கேட்ட எல்லா நூல்களையும் அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சரயு நதியின் கரையில், சித்ரகூட மலைக்குச் செல்லும் வழியில் தன் ஆசிரமத்தைக் கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். அவருக்கு வால்மீகி முனிவர் என்ற பெயர் அமைந்துவிட்டிருந்தது. பதினெட்டு மாணவர்கள் அவருடன் இருந்தனர். அப்போது ஒருநாள் கோசலத்தை ஆட்சி செய்த தசரதனின் மகனாகிய ராகவ ராமன் தன் அரசுப்பட்டத்தை துறந்து, மனைவி சீதையுடனும் தம்பியுடனும் அவ்வழியாக சித்ரகூடம் சென்றான். அவன் வால்மீகியைப் பற்றி அறிந்து ஓர் இரவு அவருடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டான். வால்மீகி அவனை விருந்தினருக்கான குடிலில் தங்கவைத்தார். அந்தியில் அவருடைய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டபின் அவர்கள் மறுநாள் காலையில் சித்ரகூடத்திற்குச் சென்றனர்.
பின்னர் நீண்டநாட்கள் கழித்துத்தான் அவர் சீதையைக் கண்டார். அந்த கால இடைவெளியில் நிகழ்ந்தவை எவற்றையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒருநாள் அவர் தன் மாணவர்களுடன் சரயுவில் நீராடச் சென்றபோது அங்கே நாணல்களின் நடுவே ஒரு பாறையில் கருவுற்றவளவான ஒரு பெண் உடலைக் குறுக்கிக்கொண்டு, மரவுரியால் தலையை போர்த்தியபடி, அமர்ந்திருப்பதைக் கண்டார். அவள் யார் என்று பார்க்க அவர் தன் மாணவர்களை அனுப்பினார். அவர்கள் வந்து அது அயோத்தியின் அரசன் ராகவ ராமனின் மனைவி சீதை என்றும், காட்டுக்குள் வந்திருப்பதாகவும் சொன்னார்கள். அவர் பதறிப்போய் அருகே சென்று அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டுவந்து தன் ஆசிரமத்தில் தங்கச் செய்தார்.
சீதையை மனம் தேற்றி பேசவைக்க பலநாட்கள் ஆகியது. அவளிடமிருந்துதான் அவர் அனைத்தையும் தெரிந்துகொண்டார். அவள் விதேகநாட்டின் அரசரும், வேதஞானியுமாகிய ஜனகரின் வளர்ப்பு மகள். தனக்கு ஒரு மகன் இல்லாததனால் அதர்வவேத நெறிப்படி புத்ரகாமேஷ்டி வேள்வி ஒன்றைச் செய்ய எண்ணினார். அந்த வேள்வி கன்னிநிலம் ஒன்றில்தான் செய்யப்பட முடியும் என்பதனால் தொலைவில் இருந்த கோரைப்புல் செறிந்த காடு ஒன்று அதற்காகக் கண்டடையப்பட்டது. அந்நிலத்தை உழுது புரட்டும் பணியை முதல் கொழு பிடித்து அவர் தொடங்கி வைத்தபோது புதருக்குள் ஓர் அழுகுரல் கேட்டது. அவர் புதர்களுக்குள் சென்று பார்த்தபோது அங்கே பெண் ஒருத்தி குழந்தை ஒன்றைப் பெற்றபின் இறந்திருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையே தன் வேள்வியின் பயன் என்று எண்ணி அதை எடுத்துவந்து தன் மகளாக்கிக் கொண்டார்.
அந்தக் குழந்தை வராஹியை தெய்வமாக வழிபடுபவர்களும், கலப்பைக் கொழுவை குல அடையாளமாகக் கொண்டவர்களுமாகிய மிருத்திகர் என்ற தொல்குடியைச் சேர்ந்தது என்று இறந்த பெண்ணின் உடலில் இருந்த பச்சைகுத்திய அடையாளங்களில் இருந்து தெரிந்தது. கர்ப்பிணியான அவள் வழிதவறி அங்கே வந்து இறந்திருக்கிறாள். மிருத்திகர்கள் தொன்மையான அசுரகுடியைச் சேர்ந்தவர்கள். மிருத்திகாவதி என்னும் அசுரநகரம் மண்ணில் விழுந்து சிதறியபோது தெறித்த துண்டுகளில் ஒன்று தங்களுடையது என்பது அவர்களின் நம்பிக்கை. நிஷாதகுலத்தைச் சேர்ந்த அக்குழந்தையை அரசர் இளவரசியாக ஆக்கமுடியாது என்று அந்தணர்களும் அமைச்சர்களும் சொன்னார்கள்.
ஆனால் ஜனகர் வேதங்களையும் உபவேதங்களையும் கற்றவர். அவருடைய ஏழுதலைமுறை முன்னோர் அதர்வவேத அறிஞர்களாக திகழ்ந்தார்கள். அவர்களின் சபையில் வேதவிவாதங்கள் பலநூறாண்டுகளாக நடந்துவந்தன. அதர்வவேத நெறிகளின்படி அவளை தன் மகளாக ஏற்றுக்கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று அவர் சொன்னார். அவர் வேதத்தின் “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” என்ற முதல் மந்திரத்தைச் சொன்னபடி கொழுவைப் பிடித்த அதே கணத்தில்தான் குழந்தையின் அழுகையைக் கேட்டார். அதுவே அக்குழந்தை அவர் மகள் என்பதற்கான வேதங்களின் ஏற்பு என்று சொன்னார்.
சில மாதங்கள் நீண்ட அந்த விவாதம் ஜனகர் ஒரு பெரிய பூதவேள்வியை நிகழ்த்தி, அதில் தர்ப்பைப்புல்லில் இந்திரன் முதலிய தேவர்களை நேரில் வரவழைத்து, குழந்தைக்குப் பெயரிடச் செய்ததுடன் அடங்கியது. வராகியின் பெயர்களில் ஒன்றாகிய சீதா என்று அவளுக்கு பெயரிடப்பட்டது. உழுபவள் என்று அதற்குச் சொற்பொருள். வைதேகி என்றும் ஜானகி என்றும் அவள் அழைக்கப்பட்டாள். அவள் வந்துசேர்ந்தபின் ஒவ்வொரு நாளும் மழை பெய்து விதேகம் செழித்தது. அதன் கருவூலமும் களஞ்சியமும் மழைக்கால ஏரிபோல எக்கணமும் உடைந்துவிடும் என அச்சமூட்டியபடி வளர்ந்தன என்று கவிஞர்கள் பாடினார்கள்.
அவளை கோசலத்தை ஆட்சி செய்த ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகன் ராமன் மணந்தான். அவனே தசரதனின் முதல்மகன் என்பதனால் தந்தைக்குப் பிறகு அவனே முடிசூட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசன் கேகயத்து அரசியான தன் இரண்டாவது மனைவிக்கு அவள் மகனை முடிசூட்டுவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தான். ஆகவே இறுதிநேரத்தில் மூத்தவன் தன் தம்பியுடன் காட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. அவனுடன் சீதையும் அவன் தம்பியும் உடன் சென்றனர்.
காட்டிற்கு வந்த அவர்களைத்தான் வால்மீகி சந்தித்தார். சித்ரகூடத்தில் தங்கியிருந்த போது அவளை அரக்கர் குலத்து அரசன் ராவணன் கவர்ந்துகொண்டு சென்றான். அவள் பூமிதேவி, மண்ணை ஆற்றலுள்ளவன் கவரலாம், ஆளமுடிந்தவன் ஆளலாம் என்று அரக்கர் குலத்து அரசன் சொன்னான். அவளை அவன் காமத்திற்கு இரையாக்கவில்லை, அவள் தன் அரசியாகவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தான். மண்மகளை அவன் வென்றால்தான் அவன் வெற்றி முழுமையடையும் என்று எண்ணினான்.
அவள் அரக்கர்களின் தலைநகரமான இலங்கையில் சிறைப்பட்டிருந்த செய்தியை அறிந்து அவள் கணவன் ராமன் வானரர் என்னும் குலத்தைச் சேர்ந்த காட்டு மனிதர்களை படையாகத் திரட்டிச் சென்று, ராவணனை தோற்கடித்து அவளை மீட்டுவந்தான். அயோத்தி திரும்பிய பின் அவன் தம்பி அரியணையை விட்டுக்கொடுக்க அவன் அரசனானான். ஆனால் அவளை க்ஷத்ரிய நாட்டின் அரசியாக ஆக்க முடியாது என்று அயோத்தியின் அந்தணர்களும், சில குடித்தலைவர்களும் சொன்னார்கள். அவள் பூமியின் மகள், விண்ணிலிருந்து அவளுக்கு ஏற்பு இல்லை என்றார்கள். சூரியனின் கதிரோ, இந்திரனின் இடிமின்னலோ, அக்னியோ அவளை ஏற்கவேண்டும் என்று சொன்னார்கள். ராமன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்தான். அதில் விண்ணிலிருந்து இறங்கி தர்ப்பையில் பற்றிக்கொண்ட அக்னி அவளை ஏற்றுக்கொண்டு வாழ்த்தியது. அவள் அயோத்தியின் அரசி ஆனாள். அவள் துயரம் முடிவுற்றது என்று தோன்றியது.
ஆனால் அவள் கருவுற்றபோது அந்தக் கரு தங்கள் அரசனுடையதுதானா என்ற அலர் ஊரில் கிளம்பியது. இம்முறை அது எளிய குடிமக்களிடமிருந்து திரண்டு வந்தது. அவள் பல ஆண்டுகாலம் அரக்கர்களின் காவலில் இருந்தவள். அரக்கர்கள் நெறிகளை கடைப்பிடிப்பார்கள் என்று கேள்விப்பட்டதுமில்லை. அவள் பெற்றுத்தரும் குழந்தையை எப்படி அரசனாக ஏற்கமுடியும் என்றனர் மக்கள். அளிக்கப்படும் அனைத்து அழுக்குகளையும் ஏற்றுக்கொள்வது பூமி. அவள் பூமிமகள், அவள் நெறியும் அதுவே. ஆகவே அவள் பெறும் குழந்தைகள் அரசனுடைய குருதியைச் சேர்ந்தவையாக இருக்க வாய்ப்பில்லை என்றனர். அந்தச் செய்தியை அறிந்ததும் ராமன் அவளைத் துறந்து மீண்டும் காட்டுக்கு அனுப்பி விட்டான். விரும்பினால் அரக்கரோ பிறரோ அவளைக் கவர்ந்துசெல்லட்டும் என்று அவன் எண்ணினான்.
‘கண்நோய் வந்தவனுக்கு தீபம் போல அவள் அவனுக்கு ஒவ்வாமையை அளித்தாள்’ என்று வால்மீகி என்னிடம் சொன்னார். ’மண்ணையும் பொன்னையும் போலவே இந்த நகர்மக்கள் பெண்ணையும் நடத்துகிறார்கள். மண்ணை உடைமையென நினைக்காத மக்களே பெண்ணையும் மதிப்புடன் எண்ணுவார்கள். அவர்களின் குலங்களில் மட்டுமே பெண் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்’ என்றார்.
அவ்வாறுதான் சீதை வால்மீகியின் ஆசிரமத்திற்கு வந்துசேர்ந்தாள். அவள் ராமனைப் பற்றி கசந்து ஏதும் சொல்லவில்லை. தனிமையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் சரயுவில் கழுத்து பின்னி காதல்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாரைகளைப் பார்த்து நின்றபோது, ஒரு கணத்தில் அறியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைந்து விம்மி அழத்தொடங்கினாள். அருகே நின்றிருந்த வால்மீகி அதைக் கண்டார். அவள் அருகே சென்று “அழாதே மகளே, உன் துயரங்கள் முடியும்” என்றார்.
“நான் இரண்டு முறை உயிர்கொண்டு மீண்டு வந்தேன். இனி அது நிகழாது. நான் முழுமையாக இறந்துவிட்டேன்” என்று சீதை சொன்னாள்.
அவளைப் பார்த்ததும் அது உண்மை என்று வால்மீகி அறிந்தார். அவள் கண்களின் ஒளி அணைந்துவிட்டிருந்தது. உடல் வெளிறி மெலிந்திருந்தது. அவள்மேல் ஏற்கனவே சாவு வந்து படிந்துவிடிருந்தது.
அவர் அன்றிரவு நீண்டநேரம் தூங்காமலிருந்தார். பின்னர் விடியலில் சற்று தூங்கினார். அரைவிழிப்பில் அவருக்குள் தோன்றிய வரிதான் ’மாநிஷாத’ என தொடங்கும் பாடல். அதை அவர் ஓர் ஏட்டில் குறித்துப் போட்டார். ’காதலில் மயங்கிய பறவைகளில் ஒன்றை கொன்ற நீ ஊழிக்காலம் வரை நிலையிலாது அலைவாய்’ என்ற வரி எவருக்கான சாபம் என்று அவருக்குத் தெரியவில்லை. தன் நாவில் எழுந்த முதல் கவிதைவரியே சாபமாக அமைந்ததை எண்ணும்போது திகைப்படைந்தார். அதை எவரிடமும் சொல்லாமல் வைத்துக்கொண்டார்.
ஒவ்வொரு நாளும் சீதை அவருடைய ஆசிரமத்தில் நலிந்தபடியே வந்தாள். அவர் சொன்ன எந்த ஆறுதலும் அவளிடம் சென்று சேரவில்லை. அவள் கருமுதிர்ந்து இரண்டு ஆண்குழந்தைகளைப் பெற்றாள். அவர்களுக்கு லவன் என்றும் குசன் என்று பெயர் சூட்டப்பட்டது. நிஷாதர்களின் மொழியில் உப்பு என்றும் புல் என்றும் அப்பெயர்களுக்குப் பொருள். அப்பெயர்களைச் சூட்டியவள் அவளே. நிலத்தின் அழியாத உயிர் என திகழ்பவை அவை.
அக்குழந்தைகளைப் பெற்றதும் அவள் முழுமையாக அவர்களை மறந்தாள். தனக்கான சிறிய குடிலில் இரவும் பகலும் தனியாகவே இருந்தாள். எவரிடமும் எப்போதும் பேசவில்லை. எவரையும் பார்க்கவுமில்லை. அவள் எதையேனும் பார்க்கிறாளா என்றே சந்தேகமாக இருந்தது. அவள் இறந்துவிட்டபின் அவளுடைய நிழல்தான் அங்கே வாழ்கிறதா என்று அவருடைய மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். அவள் எதற்காகவோ காத்திருக்கிறாள் என்று அவருக்கு ஒரு சமயம் தோன்றியது.
வால்மீகி லவனையும் குசனையும் வளர்த்துக்கொண்டிருந்தார். அவர்களுக்காக என்றோ தான் மறந்துவிட்ட விற்கலையை நினைவுகூர்ந்து கற்பித்தார். வால்மீகிகள் மட்டுமே அறிந்த நாணல்களை அம்புகளாக்கும் வித்தையை அவர்களுக்குப் பயிற்றுவித்தார். மொழியையும் நூல்களையும் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் துடிப்பான இளைஞர்களாக வளர்ந்தார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்பதை எவரும் சொல்லக்கூடாது என்று தன் மாணவர்களிடம் ஆணையிட்டிருந்தார். அவர்களிடம் அதைச் சொல்லவேண்டியவள் அவர்களின் தாய்தான். எந்தவகையில் எப்போது சொல்லவேண்டும் என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும் என்றார்.
அவர் ஒவ்வொரு நாளும் இரவில் தான் எழுதிய அந்த இரண்டுவரிக் கவிதையை நினைவுகூர்ந்தார். அதை மறந்துவிட்டு தூங்க முயன்று நெடுநேரம் விழித்திருந்தார். அதன்பின் அவர் ஒன்று கவனித்தார், சரயுவில் அதன் பிறகு நாரைகள் வந்திறங்கவே இல்லை. அது அவரிடம் விசித்திரமான ஒரு பதற்றத்தை உருவாக்கியது. அந்த அமைதியின்மை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது. அவளுடைய கண்ணீர் இந்த மண்ணில் விழுந்திருக்கிறது என்று ஒருநாள் ஓர் எண்ணம் வந்தபோது அவரால் அமர்ந்திருக்கவே முடியவில்லை.
தனியாகக் காட்டில் நீண்டதொலைவு அலையும் வழக்கம் அவரில் உருவாகியது. அது அவருக்கு தொடர்பற்ற எண்ணங்களை உருவாக்கி அகத்திலும் அலையச் செய்தது. அச்சமும் துயரமும் அளிக்கும் ஒன்றிலேயே குவிந்துவிட்ட சிந்தனையை அப்படிச் சிதறடித்துக் கொண்டபோது ஆறுதலடைந்தார். அவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ எங்கே பயின்ற வரி என நினைவு மயங்கியது. எவரோ தலைக்குமேல் இருந்து அதை தூக்கி தன் மேல் போட்டதுபோல தோன்றியது.
எண்ணிச் சலித்து திரும்ப வந்தபோது உடல் நன்றாகக் களைத்திருந்தது. மாலைவகுப்பை நடத்தமுடியாதபடி பிந்தியிருந்தமையால் அவருடைய மாணவனாகிய ரோமஹர்ணன் அவருக்குப் பதிலாக வகுப்பை நடத்தி முடித்திருந்தான். அவர் இரவு பழங்கள் மட்டுமே உண்ணுபவர். அன்று அதை மறுத்துவிட்டு தர்ப்பைப்புல் மெத்தைமேல் படுத்துக்கொண்டார். அவருக்கு அருகே, கண்ணால் பார்த்துவிடலாம் போல அந்த வரி அமர்ந்திருந்தது. ’மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’
‘நாம் அவள் மைந்தர்கள்’ என்று உரக்கச் சொன்னபடி எழுந்து அமர்ந்தார். பூர்ஜமரப் பட்டையாலான சுவடியையும், வண்ணத்தூரிகையையும், மையையும் எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்கினார். விடியும்போது அவர் எண்பது பாடல்களை எழுதி முடித்திருந்தார். விடிந்தபின் தன் குடிலை விட்டு வெளியே வந்து எழத்தொடங்கிய சூரியனைப் பார்த்து ‘வரந்தருபவனாகிய சூரியனே இருளை அகற்றுக! உன் ஒளியால் என் புலன்களை நிரப்புக! மகத்தான சிந்தனைகள் என்னில் எழுவதாக! ஆம், என்னில் எழுவதாக!” என்று பிரார்த்தனை செய்தார்.
அன்று தொடங்கி முந்நூற்றி ஐம்பது நாட்களில் அவர் அவளுடைய கதையை எழுதி முடித்தார். அது மண்ணின் கதை. மண் வெறும் உடைமையென்றும் ஆனதன் வரலாறு. அதன் முடிவில்லாத கருணை வெறும் பொறுமை என்று புரிந்துகொண்டதன் கதை. அதர்வரின் சொல்லில் தொடங்கிய அந்தக் காவியம் சீதையின் பிறப்பு முதல் அவள் சிறுமைப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வெளிறி அழிந்துகொண்டிருந்தது வரை வந்து நிறைவடைந்தது.
அன்னையின் கண்ணீர் மண்ணில் விழுந்தபின் கிரௌஞ்சங்கள் வராமலாயின. அவற்றுக்காகவே பெய்யும் மழை பொய்த்தது. வயல்கள் வறண்டு மணல்பரப்புகளாக ஆயின. ஊற்றுகள் காய்ந்து உப்பரித்தன. விலங்குகளும் பறவைகளும் விலகிச் சென்றன. அரசர்களின் அரண்மனையிலும் வறுமை வந்து சேர்ந்தது. அவர்கள் நிமித்திகர்களிடம் கேட்டபோது பூமியின் அளவிடமுடியாத பொறுமை அகன்றுவிட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவளுடைய முலை வற்றிவிட்டது. கண்ணீரும் நின்று விட்டிருக்கிறது. அவள் அருளினாலொழிய இனி மண்ணில் மழைத்துளி விழவாய்ப்பில்லை.
தன் காவியத்தின் உச்சமாக, ஐம்பத்தாறு நாட்டின் க்ஷத்ரிய அரசர்களும் ராமன் தலைமையில் வரிசையாக வந்து தங்கள் மணிமுடி சூடிய தலைகளை சீதையின் முன் மண்பட வைத்து வணங்கி மன்னிப்பைக் கோரும் காட்சியை வால்மீகி எழுதியிருந்தார். ஆனால் சீதை மனம் இரங்கவில்லை. அந்தணர்கள் வந்து அவளைப் பணிந்து கழுவாய் செய்வதாகச் சொன்னார்கள். வைசியர்கள் தங்கள் பொன்னை முழுக்க கைவிடுவதாகச் சொல்லி அழுதார்கள். மேழிகளைத் தூக்கிக்கொண்டு விவசாயிகளும், தாகத்தால் நாக்கு வறண்டு தள்ளாடிய மாடுகளை இழுத்துக்கொண்டு ஆயர்களும் வந்தார்கள். எவரையும் அவள் பார்த்ததாகவே தெரியவில்லை.
இறுதியாக கையில் இறந்துபோன குட்டிக்குரங்கு ஒன்றை எடுத்துக்கொண்டு கவிஞன் ஒருவன் வந்தான். தாகத்தால் தவித்த அந்தக் குரங்குக்குட்டி அருகே சென்ற பாம்பின் உடலின் மினுமினுப்பை நீர் என்று நினைத்து குனிந்து நக்கியது, பாம்பால் கடிபட்டு இறந்தது. ‘அன்னையை நம்பித்தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. அன்னை மடிமேல் தான் நிற்கின்றன. அன்னை மீதான முழுமையான நம்பிக்கையால்தான் அன்னையை மறக்கின்றன. ஆனால் அன்னை கைவிட்டபின் அவை அனைத்தையுமே நம்புகின்றன’ என்றான்.
சீதை குனிந்து அந்த குரங்குக் குட்டியைப் பார்த்தாள். அவள் முகத்தில் கனிந்த புன்னகை வந்தது. அவள் அந்த குரங்குக்குட்டியை மெல்ல தொட்டபோது அது எழுந்து நின்றது. அதன் வாய் தாகத்தால் திறந்தது. அவள் அதை அருகே இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு முலையூட்டினாள். தாகம் மிகுந்த குரங்கு குட்டி அவள் முலைப்பாலை வேகமாக வாய்நுரைக்கக் குடித்தது.
’அசோகவனத்தின் தனிமையில் என்னை தேடிவந்தாய். நீண்டகாலத்திற்குப் பின் என்னைச் சிரிக்கவும் வைத்தாய். அன்று நான் உன்னிடம் கொண்ட கடன் இது’ என்று சீதை அதன் மெல்லிய பிடரியை வருடியபடிச் சொன்னாள். ’இந்தப் பூமியில் என் மேல் மிச்சமின்றி அன்புவைத்த வேறொருவர் இல்லை. துயரற்றவனும் துயர்நீக்குபவனும் ஆகுக.’
வால்மீகியின் காவியம் இந்த வரிகளுடன் முடிந்தது. ‘அவளுடைய முலைசுரக்கத் தொடங்கியதும் வானத்தில் மேகங்கள் திரண்டு மழைகொட்டத்தொடங்கியது.’
“சீதாயனம் முடிவில் மண்ணைப் புகழும் பன்னிரு துதிச்செய்யுள்களை தொடர்ச்சியாக கொண்டிருந்தது. வராகியை வணங்கும் தொன்மையான மக்கள் மண்ணைப் போற்றிப் பாடும் பாடல்களை ஒட்டி அமைந்த செய்யுட்கள் அவை” கானபூதி சொன்னது “ஆனால் அந்தக் காவியம் அல்ல பின்னர் நீடித்த நூல். வால்மீகி எழுதிய காவியம் இன்றில்லை.”
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
