காவியம் – 47

சுருங்கிய நெற்றியுடன், சற்றே தலைசாய்த்து, சிவந்த குழிகளான கண்கள் நிலைக்க அமர்ந்திருந்த குணாட்யரின் அருகே சென்று அவருடைய தோளைத் தொட்டு க்ஷிப்ரன் என்னும் நிழல் சொன்னது. “இந்தக் கதை க்ஷுத்ரம் என்னும் வகைமையைச் சேர்ந்தது. இது கசப்பே சுவையென்றாகியது. காவியம் பயின்ற தங்களுக்கு இது உவப்பானதாக இருக்க வாய்ப்பில்லை… தாங்கள் இப்போதே இக்கதையை விட்டு வெளியேறலாம்.”
“கதையில் உண்மை இருக்குமென்றால் அது உத்தம காவியம்தான்…” என்று ஆபிசாரன் சீற்றத்துடன் சொன்னது. “முத்தும் ரத்தினங்களும் பதிக்கப்பட்ட பொய்யை விட கருங்கல் போன்ற உண்மையே உயர்வானது…”
“அழகானவற்றால் இந்தப் பிரபஞ்சத்தை நிறைத்த தெய்வங்களை நாம் இகழவேண்டுமா? என்றது க்ஷிப்ரன். “மலர்கள் ஒளிரும் பொன்னிறக்காலை இனிய உள்ளமும் அகன்ற கண்களும் கொண்டவர்களுக்காகவே நிகழ்கிறது.”
ஆபிசாரன் “சேற்றிலிருந்தே எல்லா மலர்களும் முளைத்தெழவேண்டும் என்று வகுத்தவை தெய்வங்கள்தான்” என்றது. ”அந்திக்கும் காலைக்கும் நடுவே இரவு விரிந்து கிடக்கிறது.”
“இதன் கசப்பு நம்மை கசப்பானவர்கள் ஆக்குகிறது” என்றது விரூபன் என்னும் நிழல்.
ஆபிசாரன் “வேர்கள் கசப்பானவை, நஞ்சுகொண்டவை. எல்லா வேர்களும் ஏதேனும் வகையில் மருந்தாகக் கூடியவை. நஞ்சுகள் எல்லாம் அளவறிந்து உண்டால் மருந்தே” என்றது.
“…மேலும் இந்தக் கதை எங்கு நிகழ்கிறது எப்போது நிகழ்கிறது என்பதே தெளிவில்லாமலிருக்கிறது. பைத்தியம் கண்ட கனவு என்று தோன்றுகிறது” என்றது சக்ரவாகி. “எந்த இலக்கணத்திலும் அடங்காத கதையாக உள்ளது. அறம் பொருள் இன்பம் வீடு என நால்வகை புருஷார்த்தங்களில் எதுவும் இல்லாத ஒரு நிகழ்வுப்பெருக்கு… இதனால் என்ன பயன்?”
“மலைகளும் முகில்களும் போல” என்றது ஆபிசாரன்.
“இது வெறும் கழிவு…” என்றது சியாமன்.
”எல்லா கழிவுப்பொருட்களையும் பூமி விரும்புகிறது. அவற்றை உண்டு அமுதாக்கி உயிர்களுக்கு வழங்குகிறது” என்றது ஆபிசாரன்.
கானபூதி “முடிவை அவர் எடுக்கட்டும்…” என்றபின் குணாட்யரிடம் “உங்கள் பொருள் இலக்கணப்படி க்ஷுத்ரம் என்றும், அணியிலக்கணப்படி வைக்ருதம் என்றும் சொல்லப்படும் கதை இது… நீ விலகவேண்டும் என்றால் இப்போதே செய்யலாம்” என்றது.
“நான் வகுக்கப்பட்டவற்றையும் செதுக்கப்பட்டவற்றையும் அங்கே பிரதிஷ்டானபுரியில் விட்டுவிட்டே இந்தக் காட்டுக்கு வந்தேன்… கட்டற்றுப் பெருகும் எதுவும் எனக்கு உகந்தவையே” என்றார் குணாட்யர்.
”அவ்வாறென்றால் கதையைத் தொடர்கிறேன்” என்று கானபூதி சொன்னது. “பாடலிபுத்ரம் என்னும் நகரில் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மனைவியாக வாழும் ருக்மிணி முதல் காம இன்பத்தை அடையும்போது அவளுக்கு நாற்பத்து நான்கு வயது தாண்டியிருந்தது என்று சொன்னேன்…”
அப்போது அவள் உடல் பருத்து, வயிறு பெருத்து, கன்னங்கள் தொங்கத் தொடங்கியிருந்தன. பால்வெண்ணிறம் கொண்ட முகமாதலால் அவள் கண்களுக்குக் கீழே கருமை படியத் தொடங்கியிருந்தது. அவள் குரல் தணிந்து கனத்துவிட்டிருந்தது. பேச்சு நிதானமாக, நெளிந்து இழைந்து செல்வதுபோல் ஒலித்தது. எப்போதும் துயரத்தில் இருப்பதுபோன்ற முகம் அவளுக்கு அமைந்தது. உதடுகளின் இருபக்கமும் கன்னக்கோடுகள் ஆழமாக இருந்தமையால் உருவானது அந்த பாவனை. அந்தக் கோடுகள் அவள் துயரத்திலேயே இருந்தமையால் உருவானவை.
ஒவ்வொரு நாளும் ஒன்றென்றே நிகழும் ஒரு வாழ்க்கையை அவள் அடைந்து விட்டிருந்தாள். அந்த வாழ்க்கை அவளுக்கு முன்னரே உருவாகி அங்கே இருந்தது. பிரபாவதி மறைந்த மறுநாள் முதல் அவள் அதில் சென்று பொருந்திக் கொண்டாள். பிரபாவதி அஸ்வத் பிறந்து ஒரு வருடம் கழித்து இறந்தாள். அந்த ஓராண்டும் அவள் முழுக்க முழுக்க அஸ்வத்தைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள். ருக்மிணி பால்கொடுக்கும்போது தவிர அவனைத் தொடவே அவள் அனுமதிக்கவில்லை. அவனுக்கு மேலும் தாய்ப்பால் தேவை என்று இரண்டு வேலைக்காரர்களைக் கொண்டும் அவனுக்குப் பால்கொடுக்கச் செய்தாள்.
ருக்மிணி தன் படுக்கையறைக்குள்ளேயே இருக்கவேண்டியிருந்தது. பாலை நிறுத்தியபோது அவள் இருமடங்கு எடைகொண்டவள் ஆனாள். பிரபாவதி நோயுற்றபோதுதான் ருக்மிணியின் பொறுப்பில் வீடு வந்துசேர்ந்தது. பிரபாவதி இறந்த பதினாறாம் நாளே ஜோகினி காசிக்குச் செல்வதாகச் சொல்லி கிளம்பிச் சென்றாள். பூர்ணா தன் பேரன் ஒருவன் அழைப்பதாகச் சொல்லி கிளம்பினாள். அவர்கள் இருவரும் எவ்வளவு பணத்தை சுருட்டியிருந்தார்கள் என்று அவர்கள் சென்றபின் வேலைக்காரர்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் சென்றதை ருக்மிணி விடுதலையாக உணர்ந்தாள்.
அவள் பொறுப்பில் வீடு வந்துசேர்ந்தது அவளுக்கு முதலில் எந்தக் கிளர்ச்சியையும் அளிக்கவில்லை. அந்த வீட்டில் அவ்வாறே நீடிக்கவேண்டும் என்ற சலிப்பே இருந்தது. ஆனால் வீட்டை நடத்த நடத்த அவள் அதில் மகிழத்தொடங்கினாள். முதல்முதலாக ஒரு வேலைக்காரியை தண்டித்தபோது முதுகெலும்பு சொடுக்கி எழும் சிலிர்ப்பை அடைந்தாள். அதன்பின் வீட்டை ஆள்வதிலேயே மூழ்கிக்கிடந்தாள். தன்னால் அந்த வீடு நிகழ்வதாகவும், தான் இல்லை என்றால் ஒவ்வொன்றும் சிதறிவிடும் என்றும் எண்ணிக்கொண்டாள். அதை தானன்றி எவருமே உணர்வதில்லை என்று அடிக்கடி எண்ணி, அதைச் சொல்லவும் செய்தாள். இவை ஒவ்வொன்றும் தன் மறைந்த மாமியாரின் மனநிலைகளும் சொற்களும்தான் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.
அன்று ஹரீந்திரநாத் நன்கு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வீட்டில் குடிப்பதில்லை. தன் கடையிலிருந்து மாலைநேரம் சென்று அமர்ந்து குடிப்பதற்கான இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். கங்கைக்கரையோரமாக அவர் வாங்கி ஒரு காவலனின் பொறுப்பில் விட்டிருந்த ஓர் இரண்டடுக்கு ஓட்டுக் கட்டிடம். அங்கே அவருடைய நண்பர்கள் வருவார்கள். அனைவருமே குடிப்பதுண்டு. அங்கே அவர்கள் மாமிச உணவும் உண்டார்கள். மாமிச உணவு உண்டாலொழிய குடியின் தீவிரத்தை உடம்பு தாங்காது என்று பூபிந்தர் சிங் சொல்லி அவரை நம்பவைத்திருந்தார். குடி மாமிச உணவை விரைவாக எரித்து உடலுக்கு வெப்பசக்தியை அளிக்கிறது. ’மாமிசம் உண்ணும் விலங்குகளின் உடலில் வெப்பம் அதிகம்’ என்று அவர் சொன்னார். “வேண்டுமென்றால் ஒரு நாயை தொட்டுப்பார்… கங்கைக்கரையில் பைத்தியங்கள் குளிர்காலத்தில் நாய்களை கட்டிப்பிடித்தபடி தூங்குகின்றன”
முதலில் ஒவ்வாமை இருந்தாலும் மாமிச உணவு தன் உடலை வலுப்பெறச் செய்கிறது என்று ஹரீந்திரநாத் நம்பத்தொடங்கினார். ‘பிற உணவுகள் எல்லாம் உடம்புக்குள் சென்று செரித்து உடம்பால் மாமிசமாக மாற்றப்படுகின்றன. மாமிச உணவு மட்டுமே நேரடியாக நம் உடலில் மாமிசமாக மாறிவிடுகிறது’ என்று பூபிந்தர் சிங் சொன்னபோது அந்த தர்க்கம் அவருக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. குடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பி வெவ்வேறு பெண்களை தேடி செல்வார்கள். எப்போதுமே நண்பர்களுடன் சேர்ந்து அதற்கெல்லாம் செல்வது அவரது வழக்கம். அது தேவையில்லாத பேச்சுகளையும் பேரங்களையும் நடத்தும் பொறுப்பிலிருந்து அவரை விடுவித்தது. அத்துடன் கூட்டமாக சென்றால் தவறுசெய்கிறோம் என்ற உணர்வும் இல்லாமலாகியது.
ஹரீந்திரநாத் எந்தப்பெண்ணிடம் செல்வதென்பதை முழுக்க தன்னுடைய டிரைவர் சந்துலாலின் தேர்வுக்கே விட்டிருந்தார். சந்துலால் அதைப் பெரும்பாலும் அன்று மதியமே முடிவு செய்து அந்தப் பெண்ணுக்குத் தகவல் தெரிவித்திருப்பான். எந்த இல்லத்திற்கு அவன் கூட்டிச் செல்கிறானோ அதையொட்டி அவனுக்கு அந்தப் பெண்கள் பணம் கொடுத்தார்கள். அதன்பொருட்டு அவர்கள் அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். எந்தப் பெண்ணிடம் கூட்டிச்செல்கிறான் என்பதை ஹரீந்திரநாத்திடம் எப்போதுமே மிகுந்த வேடிக்கையாகவும், நேரடியான ஆபாசத்தன்மையுடனும் சொல்ல சந்துலாலுக்கு தெரிந்திருந்தது. ஹரீந்திரநாத்தின் ஆண்மைக்காகவும் அழகுக்காகவும் அவரை விபச்சாரிகள் விரும்புகிறார்கள் என்று அவன் சொன்னான்.
“நீங்கள் பிராமண வீர்யம் கொண்டிருக்கிறீர்கள். ஷத்ரிய சௌர்யமும் கொண்டிருக்கிறீர்கள். வீர்யசௌர்யவல்லப என்று பழங்காலத்து அரசர்களை நூல்கள் பாடுகின்றன. இரண்டு குணங்களும் கொண்டவர்கள் இந்தப் பாட்னாவிலேயே ஓரிருவர்தான். ஆகவே பெண்கள் உங்கள் மேல் அத்தனை பித்தாக இருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான்.
அவர் அதில் மகிழ்ந்து கைகளை காரில் இருக்கையில் ஓங்கித் தட்டி சிரித்தார். தளர்ந்த உதடுகளிலிருந்து வழிந்த எச்சிலை கைக்குட்டையால் துடைத்தபடி ”ஆனால் அவர்கள் என்னிடமிருந்து கருவுறக்கூடாது. என்னுடைய விந்து இந்தப் பெண்களிடம் வீணாகிவிடக்கூடாது” என்றார்.
“அப்படி நிகழாது. அதற்காகத்தான் நான் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு மாத்திரைகளைக் கொடுக்கிறேன். இந்த மாத்திரைகள் உங்களுக்கு வீர்யத்தை கூட்டுவதுடன் தகுதியற்ற பெண்கள் உங்கள் கருவை சுமப்பதை தடை செய்துவிடும்” என்று அவன் சொன்னான்.
பெண்களுடன் தங்கி, விடிவதற்கு முன்பு வீட்டுக்குத் திரும்பும்போது ஹரீந்திரநாத் நல்ல தூக்கத்திலிருப்பார். அவனே அவரை இடையையும் தோளையும் பிடித்து தூக்கி கொண்டு வந்து வீட்டில் அவருடைய படுக்கையில் படுக்க வைத்து கதவை மூடிவிட்டு செல்வான். பெரும்பாலும் அவன் தன் வீட்டுக்கு செல்வது விடிந்தபிறகுதான். தூங்கி எழுந்து மாலையில் தான் அவன் கடைக்கு வருவான். காலையில் ஹரீந்திரநாத்தை கடைக்கு கூட்டிச் செல்வதற்கும் பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் பிக்ரம் சிங் என்னும் வயதான கூர்க்கா டிரைவர் இருந்தார்.
அன்று மாலை சந்துலால் வராததனால் ஹரீந்திரநாத் தன் இல்லம் திரும்ப வேண்டியிருந்தது. இரவுணவை அவர் சாப்பிடும்போதே அவன் அங்கு வந்து சேர்வதாக சொல்லியிருந்தான். ஆனால் வேலைக்காரன் வாங்கிவந்த பிரியாணியை அவர் தன் நண்பருடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வேறெவரோ வந்து சந்துலால் தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று வீட்டுக்கு திரும்பிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் தன் நண்பரின் காரில் தன்னை வீட்டில் கொண்டு விடச்சொன்னார். வரும்போது அவர் சந்துலால் வர்ணித்த அந்தப்பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.
வீட்டுக்கு வந்து படுக்கைக்கு வந்தபோதும் அந்த பெண்ணைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தார். அவள் பழைய லக்னோவில் இருந்து வந்த ராஜதாசி என்று சந்துலால் சொன்னான். நவாப்களின் ரத்தம். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முகம் கொண்டவள். அந்தக் காமத்தூண்டுதலால் வேலைக்காரியை அழைத்து ருக்மிணியை அழைத்து வரச்சொன்னார்.
ருக்மிணி சலிப்பு நிறைந்த முகத்துடன் வந்து ”நான் நாளைக்கு காலை படித்துறைக்கு பூஜைக்காக போகவேண்டும்” என்று சொன்னாள்.
”போ, அதற்கென்ன…” என்று அவர் அவளைக் கையைப்பிடித்து இழுத்தார்.
அவள் அவருடைய வாயிலிருந்து வந்த அந்த மணத்தை விரும்பினாள். ஏனென்றால் இரண்டு ஆண்டுகளாகவே அவளும் சிறிதளவு மது அருந்தப் பழகியிருந்தாள். அவளுடைய பணிப்பெண் பீரு வாங்கிக்கொண்டுவந்து ரகசியமாக அளிக்கும் மது அது. அதை எப்படி நீருடன் கலக்கி இரவு தூங்குவதற்கு முன் குடிப்பதென்று பீருதான் அவளுக்குக் கற்பித்திருந்தாள். மது அருந்துவது முகலாய அரசிகளின் வழக்கமென்றும், ராஜபுதன அரசிகளும் இதை அருந்துவதுண்டு என்றும் அவள் சொன்னாள். அரசிகள் மது அருந்துவதற்கு காரணம் அவர்களின் பொறுப்பு மிக அதிகம் என்பதுதான். சாதாரண பிராமணப்பெண்கள் மது அருந்தத் தேவையில்லை, ஏனெனில் அவர்களுக்கு நோன்புகள் மட்டும்தான் இருக்கின்றன. அரசிகள் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களின் உடல் ஆற்றல் பெறவேண்டியிருக்கிறது. உடல் ஆற்றல் பெறவேண்டுமென்றால் அது உணவை முழுமையாக எரிக்க வேண்டும். உணவை எரிப்பதற்கான தீ உடலில் எரிந்துகொண்டே இருப்பதற்கு மது அவசியம். “யாக குண்டத்தில் நெய்யை ஊற்றுவது போலத்தான் நெஞ்சுக்குள் மதுவை ஊற்றுவது” என்று பீரு சொன்னாள்.
முதலில் தயங்கினாலும் அது முழுக்க முழுக்க பழச்சாற்றில் இருந்து எடுக்கப்படுவது என்று பீரு சொன்னபோது சிறிதளவு குடிக்க ருக்மிணி ஒப்புக்கொண்டாள். அதன்பிறகு அந்த சுவை அவளுக்குப் பிடித்துப்போயிற்று அதைவிட அதைக் குடித்துவிட்டு படுக்கும்போது உடலின் அத்தனை தசைகளும் மெல்ல மெல்ல இறுக்கங்களை இழப்பதை அவள் விரும்பி அனுபவித்தாள். தன் கால்களில் இருக்கும் ஓயாத உளைச்சல் இல்லாமலாகி, அவை உயிரழந்தவை போல தளர்ந்து கிடப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அருந்தாதபோது கால்களில் இருக்கும் ஓயாத வலியால் தூங்க முடியாமல் அவள் புரண்டுகொண்டே இருந்தாள். தன் கால்களின் வலியைப்பற்றி அவள் பீருவிடம் சொன்னபோதுதான் முதல் முறையாக அவள் மதுவை அங்கே கொண்டுவந்தாள். “க்ஷத்ரியப் பெண்களுக்கு எல்லாம் கால்வலி இருக்கும் தேவி. ஏனென்றால் அவர்கள் நிலைகொள்பவர்கள். உறுதியாக அவர்கள் நின்றாகவேண்டும் அல்லவா?”
ஹரீந்திரநாத் அழைக்கும்போது அவள் மதுவை அருந்திவிட்டு, படுப்பதற்காக எளிய பருத்தி உடைகளை அணிந்துகொண்டிருந்தாள். அவர் அழைப்பதாகத் தெரிந்ததும் அவள் அவசரமாக தாம்பூலத்தை போட்டுக் கொண்டு அங்கே வந்தாள். அவர் அவளை இழுத்து படுக்கைக்கு கொண்டு சென்றபோது அவளும் தன் உடலெங்கும் கிளர்ச்சியை உணர்ந்தாள். அவள் அவருடன் நீண்ட இடைவேளைக்குப்பின் கொண்ட உறவு அது. அவள் அடைந்த உடல் உச்சத்தை அவர் கவனிக்கவில்லை. அவர் முழுப்போதையில் இருந்தார். அப்போது எந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறார் என்றே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அது அவருக்குத் தெரியவில்லை என்பதனால் அவள் அதை மறைக்கவில்லை.
அவர் தூங்கத்தொடங்கிய பிறகு அவள் எழுந்து கதவைத் திறந்து சிறு உப்பரிகைக்கு சென்று இரவில் பாட்னாவின் தெரு வெளிச்சமும் புழுதியும் குப்பைகளுமாக ஓய்ந்து கிடப்பதை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்போது அந்த ஆங்கில இந்திய மருத்துவரைத்தான் அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். பெருமூச்சுவிட்டுக் கொண்டும், உதிரி உதிரியான எண்ணங்களால் அடித்துச்செல்லப்பட்டும், அங்கே நின்றிருந்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மனம் கலங்கி அழத்தொடங்கினாள். நீண்டநேரம் மௌனமாக அழுதுகொண்டிருந்துவிட்டு, கண்களைத் துடைத்தபடி தன் படுக்கையறைக்குச் சென்று மீண்டும் சற்று மது அருந்திவிட்டு, படுத்து அந்த மயக்கத்தில் தூங்கிவிட்டாள்.
ஓராண்டுக்குப் பின்னர் ருக்மிணி அந்த ஆங்கில இந்திய டாக்டரை தற்செயலாகச் சந்தித்தாள். ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்காக அவள் உள்ளூரில் இருந்த பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தாள். அங்கே அவள் வேலைக்காரி சம்பாவுடன் வந்துகொண்டிருந்தபோது எதிரில் அவர் சென்றார். அவளை விட நாலைந்து வயது குறைவானவர் என்றாலும் இளமையாகவே தெரிந்தார். பார்த்த கணமே அவள் அவரை அடையாளம் கண்டுகொண்டாள். நெஞ்சுக்குள் துள்ளும் ஓர் எலி இருப்பது போல இதயத்தை உணர்ந்தாள். மீண்டும் ஏதோ நோயைச் சொல்லி அந்த மருத்துவமனைக்கே சென்றாள். அவர் அங்கே மருத்துவராகப் பணியாற்றுவதையும், அவர் பெயர் டாக்டர் கிறிஸ்டியன் சாண்டர்ஸ் என்றும் தெரிந்துகொண்டாள்.
அவர் என்ன துறையில் சிறப்பு மருத்துவர் என்பதை அவள் எவரிடமும் விசாரிக்காமலேயே நுணுக்கமாக கவனித்துப் புரிந்துகொண்டாள். எப்போதுமே அவள் வெளியுலகுக்கு தனியாகச் சென்றதில்லை. தானாகவே ஓர் அந்நியரிடம் பேசியதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்கள் இருந்தார்கள். எதுவுமே தனக்குத் தெரியாது என அவள் எண்ணினாள். ஆனால் அத்தனை கூர்மையாக தன்னால் எல்லாவற்றையும் செய்ய முடிகிறது என்பது அவளுக்கே ரகசியமான ஒரு மகிழ்ச்சியை அளித்தது. நாட்கணக்கில் அவள் அந்த இன்பத்தில் திளைத்தாள். விதவிதமாக வியூகங்களை அமைத்துக்கொண்டே இருந்தாள்.
இறுதியில் அவள் திட்டமிட்டு அவருடைய நோயாளியாகச் சென்றாள். அவர் அமர்ந்திருந்த அறைக்கு வெளியே வேலைக்காரியுடன் அமர்ந்திருந்தபோது அவள் மிக அமைதியாக இருந்தாள். ஆனால் அங்கு வந்து அமர்வது வரை உச்சகட்ட பதற்றம் கொண்டிருந்தாள். கிளம்பும்போது அந்த சந்திப்பைத் தவிர்த்துவிடலாமா என்றுகூட எண்ணினாள். காரில் ஏற வரும்போது ஒவ்வொரு காலடியிலும் தயக்கம் இருந்தது. காரில் ஏறி அது கிளம்பியபோது இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் வந்த நிம்மதிதான் அவளை காப்பாற்றியது. மீண்டும் ஆஸ்பத்திரி வாசலில் அந்த பதற்றம் தொடங்கியது. மயங்கி விழுந்துவிடுவோம் என்னும் அச்சம்கூட வந்தது.
அவள் பெயர் அழைக்கப்பட்டதும் அவள் எழுந்து உள்ளே சென்றாள். நர்ஸ் அவளுடைய கோப்புகளை கொண்டுசென்று டாக்டரின் மேஜை மேல் வைத்துவிட்டு வெளியே சென்றாள். டாக்டர் அவளிடம் ஒரு முக்காலியில் அமரும்படிச் சொன்னார். அவள் அமர்ந்துகொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் தன்னை நினைவுகூர்கிறாரா என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தாள். நினைவுகூர எந்த வாய்ப்பும் இருல்லை. எத்தனையோ ஆண்டுகள் தாண்டிவிட்டிருந்தன. அந்த நாளில்கூட அவள் மனதுக்கு வெளியே ஒன்றுமே நிகழவில்லை.
வாய்ப்பே இல்லை என்னும் எண்ணம் அவளுக்குச் சோர்வை அளித்தது. ஆனால் உடனே அது ஒரு திரைபோல மறைந்துகொள்ள வசதியாக அமைந்தது. அவள் புன்னகைத்துக் கொண்டாள். அவரையே பார்த்துக்கொண்டு, தான் யோசிப்பதெல்லாம் அவருடைய சோதனையில் சிக்குமா என எண்ணிக்கொண்டாள். அவர் அவளுடைய மருத்துவக் குறிப்புகளைப் பார்த்தார். அவள் தொடர்ந்து எதையும் சாப்பிடாமல் இருந்தபோதுதான் அவளை அவர் முன்பு பார்க்கவந்தார். அப்போதும் வயிற்றுப் பிரச்சினைகளைத்தான் அவள் சொல்லியிருந்தாள்.
அவர் அவளிடம் “புண் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, பார்த்துவிடலாம்” என்றார். அவர் குழம்பியிருப்பது தெரிந்தது. அவர் அவளிடம் அங்கிருந்த உயரமான ஒடுங்கிய மேடைக்கட்டிலில் படுக்கும்படிச் சொன்னார். நர்ஸை அழைத்து அருகே நிற்கச் செய்து அவளிடம் ஒவ்வொரு பொருளாக மெல்லிய குரலில் கேட்டார். நர்ஸ் அவளுடைய சேலையை நெகிழ்த்தி அவள் வயிற்றை வெளிப்படுத்த அவர் அதன்மேல் கைவைத்து அழுத்திச் சோதனை செய்தார். அவருடைய பார்வை ஒரு கணம் திரும்பி அவள் கண்களைச் சந்தித்துச் சென்றது.
ஒருகணம்தான், அவளுக்குத் தெரிந்துவிட்டது, அவர் அவளை நினைவுகூர்ந்துவிட்டார். ஆனால் மறுகணமே தீப்பட்டதுபோல் அவள் உள்ளம் சுருங்கி அதிரத்தொடங்கியது. அவர் கண்களில் ஒவ்வாமைதான் இருந்தது. அருவருப்பா, சீற்றமா, பயமா என்று தெரியாத ஒன்று. அவள் அவர் சொல்வதற்குள்ளாகவே எழுந்து அமர்ந்துவிட்டாள். அவர் கையுறையை கழற்றியபடி விலகிச்சென்று நர்ஸிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் முக்காலியில் மீண்டும் சென்று அமர்ந்தபோது தரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் பேசுவது எதையும் அவள் கேட்கவில்லை.
ஆஸ்பத்திரியில் இருந்து கார் கிளம்பி, தன்மேல் காற்று பட்டபோதுதான் எத்தனை வியர்த்துக் குளிர்ந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். “வேகமாகப் போ, வேகமாக போ” என்று டிரைவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். கார் வேகம் கொள்ளுந்தோறும் அவள் அமைதியிழந்தாள். வீட்டுக்குத் திரும்பி தன் அறைக்குச் சென்றபோதுதான் அவளால் பாதுகாப்பாக உணரமுடிந்தது.
படுக்கையிலேயே அவள் நீண்டநேரம் அமர்ந்திருந்தாள். வெளியே சன்னல் வழியாக ஆடிக்கொண்டிருந்த வாதாம் மரத்தின் பெரிய பளபளப்பான இலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல எண்ணங்கள் நிதானமடைந்தபோது என்ன நிகழ்ந்தது என்று எண்ணிப்பார்த்தாள். ஒன்றுமே நிகழவில்லை, எல்லாமே அவளுக்குள் நிகழ்ந்து அடங்கியவை மட்டும்தான். அவளாலேயே அதை தொகுத்துச் சொல்லிக்கொள்ள முடியாது. இன்னொருவர் அவள் சொன்னாலும்கூட என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முடியாது. அவள் மீண்டும் அவரைப் பார்க்கப்போவதே இல்லை. அவர் இனி அவள் உலகிலேயே இல்லை. அஞ்சுவதற்கு ஒன்றுமே இல்லை.
அவள் அன்று நீண்டநேரம் நீராடினாள். வேறு ஆடைகளை அணிந்து கொண்டு சம்பாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அங்கே நீண்டநேரம் பூஜைகளில் கலந்துகொண்டு இருட்ட ஆரம்பித்த பிறகு திரும்பி வந்தாள். அப்போது அனைத்தையும் முழுமையாகவே கடந்துவிட்டிருந்தாள். வீடு திரும்பியதுமே வழக்கம்போல ஒரு பிரச்சினை காத்திருந்தது. வேலைக்காரிகளில் ஒருத்தி வீட்டிலிருந்த பித்தளைப் பாத்திரம் ஒன்றை திருடிக்கொண்டு செல்ல முயன்றபோது பிடிக்கப்பட்டிருந்தாள். அவளை பார்த்து சாந்தமாக, “சரி, இனி வராதே” என்று சொல்லி அனுப்பினாள். ஹரீந்திரநாத் அன்று வரமாட்டார் என்று செய்தி வந்தது.
ராதிகா அன்று இரவு எட்டுமணிக்குத்தான் வந்தாள். அவளுக்கு பேட்மின்டன் காரிலேயே பேட்மின்டன் ஆடுவதற்கான குட்டை ஆடையை அணிந்தவள் அந்த ஆடையுடனேயே களைத்துப்போய் வந்திறங்கினாள். “என்னடீ இவ்வளவு நேரம்?” என்று அவள் நெற்றியின் கலைந்த மயிரை வருடியபடி ருக்மிணி கேட்டாள்.
“முடியவேண்டுமே? நான் மட்டும் நன்றாக ஆடினால் போதுமா? பிரியா எல்லாவற்றையும் கெடுத்துவிடுவாள் போலிருக்கிறது. நான் குளித்துவிட்டு வருகிறேன். நல்ல பசி” என்று அவள் மாடிக்குச் சென்றாள்.
மாடியில் அவளுக்கு ஏதோ ஃபோன் வந்தது. அவள் உரக்கச் சிரித்துப் பேசுவது கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் ராதிகாவுக்கான இரவுணவை எடுத்து வைக்கும்படிச் சொன்னாள். அவளுக்கு சாப்பாட்டுக்குப் பின் இனிப்பு இருந்தேயாகவேண்டும். பாட்னாவில் சில குறிப்பிட்ட கடைகளில் கல்கத்தா இனிப்பு, குறிப்பாக ரசகுல்லா கிடைக்கும். அது அவளுக்கு மிகப்பிடித்த சுவை.
ராதிகா வந்து சாப்பிட ஆரம்பித்தபோது அவள் அப்பால் அமர்ந்துகொண்டு, தன் வழக்கப்படி பட்டுநூலால் லேஸ் பின்னியபடி அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். கல்லூரியில் எப்போதுமே அவளுக்கும் சிலருக்கும் போட்டி இருந்தது. அந்தப் போட்டியாளர்கள் எப்போதுமே அவளால் மட்டம் தட்டப்பட்டார்கள். அல்லது அதை மட்டும்தான் அவள் தன் அம்மாவிடம் சொன்னாள்.
ராதிகா இனிப்பை தின்று கைகளை நக்கியபடி “அவர்கள் என்னென்ன திட்டம் போடுகிறார்கள் என்றெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்குள்ளேயே நான் ஒற்றர்களை வைத்திருக்கிறேன். என்ன, கொஞ்சம் செலவு, அதனால் பரவாயில்லை” என்றாள்.
ருக்மிணி அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் கொஞ்சம் படிக்கவேண்டும். ஆனால் இப்போதே தூக்கம் வருகிறது” என்றபடி ராதிகா இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறி மாடிக்குச் சென்றாள். உடனே மூன்று மூன்று படிகளாக தாவி கீழிறங்கி வந்து “என்னை நாளைக் காலை ஐந்து மணிக்கு எழுப்பச்சொல். காலையில் படிக்கிறேன். இப்போது தூக்கம் வருகிறது” என்று சொன்னபின் மேலே சென்றாள்.
ருக்மிணி அதன்பின் வேலைக்காரர்களுக்கு மறுநாளைக்குரிய ஆணைகளை அளித்துவிட்டு, பூஜையறைக்குச் சென்று வணங்கினாள். பூஜையறையில் ஃபணீந்திரநாத்தின் படத்துடன் பிரபாவதியின் படமும் இருந்தது. பிரபாவதி அந்தப் புகைப்படம் எடுக்கும்போது, அந்த கிளிக் ஓசையில் துணுக்குற்றிருக்க வேண்டும். அவள் திகைப்புடன் பார்ப்பது போலிருந்தது. அவளுடைய நிரந்தரமான முகமாக அந்த திகைப்பு நிலைகொண்டுவிட்டது. ஃபணீந்திரநாத் வழக்கம்போல சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவள் மாடிக்குச் சென்றபோது நன்றாகவே இருட்டிவிட்டது. சாலையில் வண்டிகள் ஏதும் ஓடவில்லை. காற்றில் மரங்கள் அலைபாயும் ஓசை மட்டும் கேட்டது. அவள் தன் அறை நோக்கிச் செல்லும்போது ராதிகாவின் அறை விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்தாள். அருகே சென்று கதவை மூடுவதற்கு முன் ராதிகாவைப் பார்த்தாள். மார்பின்மேல் ஒரு புத்தகத்துடன், இளநீல விளக்கொளியில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். சற்றே அழுத்தமான நிறத்துடன் பெரிய இமைகள் மூடியிருந்தன. உதடுகள் கொஞ்சம் திறந்து, பற்களின் கீழ்விளிம்பு தெரிய, அவள் தூங்கிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான எதிலோ ஆழ்ந்திருப்பவள் போலத் தோன்றச்செய்தது.
அலைபோன்ற ஒன்று வந்து தன்னை அறைந்துசென்றதுபோல ருக்மிணிக்குத் தோன்றியது. அந்நடுக்கம் அவள் கால்களை வலுவிழக்கச் செய்ய, சுவர்மேல் கைகளை ஊன்றிக்கொண்டாள். நடந்து தன் அறைக்குச் சென்றபோது ஓரிரு காலடிகளிலேயே அந்த அதிர்வு அகன்று, மீண்டும் இயல்பாக ஆனாள். படுக்கையில் சென்று படுத்துக்கொண்டபோது அவள் உடல் நன்றாகவே தளர்ந்துவிட்டிருந்தது. கால்களின் நரம்புப் புடைப்புகளில் உளைச்சல் எழுந்தது. கதவை மூடிவிட்டு பீரு கொடுத்த புட்டியை எடுத்து சிறிதளவு ஊற்றி நீர் கலந்து குடித்துவிட்டு படுக்கையில் படுத்தபோது அவளுக்கு அன்றைய நாள் நினைவில் இருக்கவில்லை. வேறேதோ நினைவுகள் வந்துகொண்டிருந்தன.
கானபூதி தன் வலக்கையை நோக்கி “இந்தக் கைக்குரிய கேள்வி இது” என்றது. “ருக்மிணி அன்று உறங்குவதற்கு முன் நினைத்துக்கொண்டது எதைப் பற்றி?”
“தன் மாமியாரான பிரபாவதியைப் பற்றி” என்று சொல்லி குணாட்யர் உரக்கச் சிரித்தார்.
“ஆம்” என்ற கானபூதி “இரண்டாவது கேள்வி, பூஜையறையில் இருக்கும் தன் மாமியாரின் படத்தை ருக்மிணி மெய்யாகவே வணங்கினாளா?” என்றது.
“ஆம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் குணாட்யர். மேலும் உரக்கச் சிரித்துக்கொண்டு “மனிதர்கள் இன்னொருவரை வணங்குவதில்லை” என்றார்.
கானபூதியும் சிரித்துவிட்டது. நிழல்கள் சிரித்துக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக்கொண்டன. இருண்ட காடு முழுக்க அந்தச் சிரிப்பு எதிரொலிகளுடன் கலந்து நிறைந்தது.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
