காவியம் – 42

கானபூதி சொன்னது. “நான் அவனுக்குச் சொன்ன கதை சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்கிறது. அக்னிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக்காலத்தில் அந்த அரசு வடக்கே உஜ்ஜையினி முதல் தெற்கே அமராவதி வரை, கிழக்கே மகாநதிக்கரை முதல் மேற்கே துவாரகை வரை பரவியிருந்தது. நான்குதிசைகளில் இருந்தும் பிரதிஷ்டானபுரிக்கு வந்து சேர்ந்த சாலைகள் வழியாகப் பயணிகளின் வண்டிகளும், செல்வமும் நுழைந்துகொண்டே இருந்தன”.
பிரதிஷ்டானபுரியை நோக்கி வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் புலவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அங்கே சொல்லுக்குப் பொன்னுக்கு நிகரான மதிப்பிருந்தது என்னும் செய்தி நாடோடிகளின் நாக்குகளின் வழியாகவே பரவிக் கொண்டிருந்தது. சாதவாகனர்களின் புலவர் சபையில் சதுர்வித்வத்கோசம் என அழைக்கப்பட்ட நான்குவட்டங்கள் இருந்தன. நவரத்னாவளி என பெயர்கொண்ட முதல் வட்டத்தில் ஒன்பது பெரும்புலவர்கள் திகழ்ந்தனர். கனகமாலா என அழைக்கப்பட்ட இரண்டாவது வட்டத்தில் பதினெட்டு புலவர்களும், ரஜதமாலா என அழைக்கப்பட்ட மூன்றாவது வட்டத்தில் நூற்றியெட்டு புலவர்களும் இருந்தனர். அக்ஷமாலா என அழைக்கப்பட்ட நான்காவது வட்டத்தில் ஆயிரத்தெட்டு புலவர்கள் இருந்தனர். நான்காவது வட்டத்தில் நுழைவதற்கு ஆயிரக்கணக்கான புலவர்கள் போட்டியிட்டனர்.
ஒரு புலவர் அவையில் விவாதத்தில் தோல்வியுற்றாலோ, நோயுற்று சபைக்கு வரமுடியாமலானாலோ, உயிரிழந்தாலோ அடுத்த வட்டத்தில் இருந்த சிறந்த புலவர் அவ்வட்டத்திற்குள் அமர்த்தப்பட்டார். அதற்கென்று அவைகூடி போட்டிகள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு புலவருக்கும் அவையிலிருந்து அவர்களின் தகுதிக்கேற்ப பொருளும் இடமும் வழங்கப்பட்டது. வைரம் பதித்த கோல்காரன் முன்னால் வர சபைக்குள் நுழைவது நவரத்னாவளியின் புலவர்களுக்கு உரிமையாக இருந்தது. பொற்பூணிட்ட பல்லக்கும், வெள்ளிப்பூணிட்ட பல்லக்கும், மஞ்சள் கொடி பறக்கும் பல்லக்குகளும் அடுத்தடுத்த நிலையைச் சேர்ந்த புலவர்களுக்குரிய உரிமையும் பதவியுமாக வகுக்கப்பட்டிருந்தன.
புலவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வாக்பிரதிஷ்டான் என்னும் காவிய சபை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த நான்கு அரைவட்டங்களால் ஆனது. அதன் நடுவே அரசர் அமரும் அரியணைமேடை அமைந்திருந்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புலவர் அவை அங்கே கூடியது. அவர்கள் இலக்கிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அரசரின் ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கொண்டு சென்று தங்கள் இருக்கைகளில் அமரச்செய்யப்பட்ட புலவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கோல்கள் இருந்தன. பேச விரும்புகையில் அந்த கைக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை அசைத்தனர். சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் சபையில் பேச அனுமதி இருந்தது.
பிரதிஷ்டானபுரியின் அவையில் ஒரு நூல் அரங்கேறுவது என்பது இமையமலையின் சிகரத்தில் விளக்கேற்றி வைப்பதுபோல என்று கவிஞர்கள் பாடினர். ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அங்கே ஒரு நூல் அரங்கேறியது. ஆண்டுக்கு ஆறு காவியங்களேனும் அங்கே முன்வைக்கப்பட்டன. மூன்றாண்டுக்கு ஒரு காவியமே அரங்கத்தி புலவர்களிடம் ஏற்பு பெற்றது. அந்நூல்கள் அர்ஜுனனில் வில்லில் இருந்து அம்புகள் கிளம்புவதுபோல எடுக்கையில் ஒன்றும், தொடுக்கையில் நூறும், செல்கையில் ஆயிரமும், அடைகையில் லட்சமும் என பெருகி பாரதவர்ஷமெங்கும் சென்றன. அந்நூல்களின் முகப்பில் ‘பிரதிஷ்டான முத்ரித:’ என்னும் புகழ்மொழி இடம்பெற்றது. அந்தச் சொல் எந்த அவையின இரும்புக் கதவுகளையும் திறக்கும் தாழ்க்கோல் என அறியப்பட்டது.
அங்கே எல்லா மொழிகளில் இருந்தும் நூல்கள் வந்து ஆராய்ச்சி செய்யப்பட்டன. வேதமொழியும் சம்ஸ்கிருதமும் சபைக்கு வந்தன. பிராகிருதமும் பாலியும் வந்தன. தென்நாட்டு மொழியாகிய தமிழும் ஆராயப்பட்டது அம்மொழிகளின் கலப்பால் உருவான நூற்றுக்கணக்கான சங்கரபாஷைகளும் அபப்பிரஹ்ம்சங்களும் வந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மொழிக்கும் உரிய இலக்கண அறிஞர்களும் அவையில் இருந்தனர். ’வாக்யார்த்தாலங்கார நைபுண்ய’ என அழைக்கப்பட்ட அவர்கள் சொல், பொருள் ஆகியவற்றை ஆராய்ந்து நூல்களை மதிப்பிட்டனர்.
பிரதிஷ்டானபுரியில் மூச்சுக்களின் அளவுக்கே சொற்களும் பிறந்தன என்று ஒரு சொல்லாட்சி இருந்தது. சொற்கள் பெருகிப்பெருகி அந்நகரமே மாபெரும் தேனீக்கூடு போல முழங்கிக்கொண்டிருந்தது என்றனர் கவிஞர். எட்டுத்திசையில் இருந்தும் தேன் அங்கே தேடிவந்தது. தேன் ஒலிக்கும் கூடு என்று பிரதிஷ்டானபுரி பெயர்பெற்றது. ஆகவே அதை ’மதுபுர:’ என்றே பலநூல்கள் அதைக் குறிப்பிட்டன.
பலதிசைகளில் இருந்தும் புலவர் அங்கே தங்கள் சொற்களுடன் வந்து சேர்ந்தமையால் சொற்கள் மயங்கி உருமாறின. பொருளின் எடையை உதறி சொற்கள் சிறகுகள் கொண்டன என்று கவிஞர் கூறினர். ஆனால் சொற்கள் எல்லை மீறுந்தோறும் இலக்கணம் வலுப்பெற்றது. ஒவ்வொரு மொழி இலக்கணமும் இன்னொரு மொழியின் இலக்கணத்தை ஏற்றுக்கொண்டு தன்னை பெருக்கிக்கொண்டது. கவிதையை கற்பிக்கமுடியாது, இலக்கணத்தைக் கற்பிக்க முடியும். ஆகவே இலக்கணவாதிகள் பெருகினர், அவர்கள் கவிஞர்கள்மேல் ஆதிக்கம் கொண்டனர்.
பிரதிஷ்டானபுரியின் அவையில் காவியத்துடன் சென்று நிற்பது சிங்கங்களும் புலிகளும் சூழ்ந்த அவையில் புள்ளிமான் தனித்து சென்று நிற்பதுபோல என்று கவிஞர்கள் சொல்ல ஆரம்பித்தனர். வியாஹ்ரசதஸ் என்றே பகடிநூல்களில் பிரதிஷ்டானபுரியின் புலவர் மன்றம் குறிப்பிடப்பட்டது. சிலர் கழுதைப்புலிகளும் ஓநாய்களும்தான் அங்கே உள்ளன என்று சொன்னார்கள். இலக்கணத்தால் வேட்டையாடப்பட்ட கவிஞர்கள் அவைக்கு வெளியே நகரம் முழுக்க நிறைந்திருந்த சிற்றவைகளில் தங்கள் கவிதைகளையும் கதைகளையும் முன்வைத்தனர். ஆலயங்களிலும் சந்தைகளிலும் மட்டுமல்லாது உழவர்கூட்டங்களிலும் கதைகளும் பாடல்களும் நிறைந்தன.
பிரதிஷ்டானபுரியில் கதைகள் நூறுமேனி விளைந்தன என்றனர் நாடோடிப் பாடகர்கள். ‘கதாவிலசித:, காவ்ய சம்புஷ்ட: வித்யா விஃபூஷித: சிரஃபிரதிஷ்டான: பிரதிஷ்ட:’ என அந்நகரை வாழ்த்திய பெருங்கவிஞர் அஷ்டகரின் சொற்களை நாகனிகாவின் மைந்தன் சதகர்ணி தன் கோட்டை முகப்பில் பொன்னால் பொறித்து வைத்தான். அந்நகரின் ஓங்கிய கோட்டைவாசலில் நூல்களுடனும் கனவுகளுடனும் வந்து நின்ற ஒவ்வொருவரும் அண்ணாந்து அச்சொற்களைப் பார்த்து கைகூப்பி மெய்சிலிர்த்துக் கண்ணீர்மல்கினர்.
பிரதிஷ்டானபுரியின் வாக்பிரதிஷ்டான் சபை கூடும் மாளிகைகள் அடங்கிய திரிரத்னகோசம் என்னும் நான்காவது கோட்டையின் வாசலான திரிரத்ன ஶ்ரீமுகம் என்றும் அழைக்கப்பட்ட முகப்பில் ஒருநாள் பதினைந்து வயதான சிறுவன் ஒருவன் வந்து நின்றான். மெலிந்த உடலும், கன்னங்கரிய நிறமும், பெரிய கண்களும் கொண்டிருந்த அவன் அந்தணர்களுக்குரிய சிகையும் பூணூலும் மேலாடையும் மிதியடியும் அணிந்திருந்தான். அங்கே அப்படி பெரும்புலவர்களை நேரில் காண்பதற்காகவும் அவர்களிடம் மாணவர்களாகச் சேரமுயல்வதற்காகவும் இளைஞர்கள் வந்து நிற்பதுண்டு. அவர்களிடமிருக்கும் பணிவும் அச்சமும் அவனிடம் இருக்கவில்லை. அவன் தலைநிமிர்ந்து ஒருவகையான ஏளனத்துடன் அங்கே வரிசையாக மாளிகைக்குள் நுழையும் பண்டிதர்களைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
வாக்பிரதிஷ்டான் சபைக்குச் சென்றுகொண்டிருந்த நவரத்னாவளியில் ஒருவரான பிரபாவல்லபர் என்னும் பெரும்புலவரின் பல்லக்குக்கு முன்னால் கைகளை விரித்துக் கொண்டு சென்று நின்ற அந்த இளைஞன் “பொன்னால் பூண் போடப்பட்ட பல்லக்கு… வெள்ளியாலான மிதியடிகள்… இப்படி ஆடம்பரங்களில் திளைப்பதற்கு வெட்கமே இருக்கக்கூடாது. அறியாமையால் மட்டுமே அது கைவரும்” என்று கூவினான்.
அவனை பிரபாவல்லபரின் மாணவர்கள் பிடித்து விலக்கினர். அவன் அதை மீண்டும் மீண்டும் கூவினான். பிரபாவல்லபர் “என்ன சொல்கிறான்?” என்று கேட்டு பல்லக்கின் திரையை விலக்கினார்.
அவன் அதை மீண்டும் கூவினான். “நீர் ஒரு மூடர்… வேதமோ வியாகரணமோ அறியாதவர். நான் அறைகூவுகிறேன். எனக்குத் தெரிந்த வேதமும் வியாகரணமும் உங்களுக்குத் தெரியாது…” என்றான். “நாந் தரையில் நிற்கும்போது நீர் பல்லக்கில் போவது கீழ்மை!”
அவனை படைவீரர்கள் பிடித்து வெளியே தள்ளினார்கள். அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான். மேலும் பண்டிதர்கள் வந்தபோது வேறு வழியாக உள்ளே வந்து அதே போல அவர்களை இகழ்ந்தான். அவன் அந்தணன் என்பதனால் அவனை பிரதிஷ்டானபுரியின் வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மறுநாளும் அதன்பிறகு வந்த ஒவ்வொரு நாளும் அவன் அங்கே அப்படி அவர்களை இகழ்ந்து கொண்டிருந்தான். அவன் ஒரு பைத்தியக்காரன் என்று புலவர்களும் பிறரும் முடிவுசெய்தனர். அவனைப்பற்றி ஓரிரு சொற்களில் ஏளனம் செய்ததும் அவனை மறந்தும் விட்டனர்.
பிரதிஷ்டானபுரியின் அவையில் கனகமாலா என்னும் இரண்டாவது வட்டத்தைச் சேர்ந்த ரத்னாகரர் என்னும் கவிஞர் அந்த சபையின் வயதில் இளையவர், ஆனால் அவர் தக்ஷசிலாவில் சென்று பயின்று வந்திருந்தார். ஆகவே அவர் மேல் பிறருக்கு அச்சமும் வெறுப்பும் இருந்தது. ஆனால் அவர் கண்முன் அனைவரும் அவரை புகழ்ந்தும் நயந்தும் பேசினார்கள். பிரபாவல்லபரிடம் பலரும் அவரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் நுழையவேண்டும் என்று ரத்னாகரர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி உருவேற்றினார்கள். அவர் வெளிப்படையாகவே ரத்னாகரரை வெறுத்தார்.
ரத்னாகரர் அலங்காரங்கார சாஸ்திரம் பற்றி இயற்றிய ‘காவ்யாலங்கார புஷ்பாவலி’ என்னும் இலக்கணநூலை சபையில் முன்வைத்தார். அதற்காகவே காத்திருந்த பிரபாவல்லபர் அந்நூலை கடுமையாக கண்டித்துப் பேசினார். அதன் ஒவ்வொரு வரியிலும் இலக்கணப்பிழை கண்டுபிடித்தார். அவர் தொடங்கிவைக்க மற்ற புலவர்கள் அந்தப் பாதையை பிடித்துக்கொண்டார்கள். அங்கே ஒருவரை வதைப்பதென்றால் ஒரு தொடக்கம் கிடைத்ததுமே அத்தனை பேரும் பாய்ந்து வந்துவிடுவது வழக்கம்.
பிரபாவல்லபர் ரத்னாகரரின் வரிகளில் இருந்த உவமைகளையும் உருவகங்களையும் நேரடியாகப் பொருள் எடுத்துக்கொண்டு தாக்கினார். “நத்தை ஊர்ந்து செல்லும் பாதை ஒளிவிடுவதில்லை. வெளிச்சத்தில் அது அப்படி நமக்கு தோன்றுகிறது. இடம் மாறி நின்றால் அந்த ஒளி மறைந்துவிடும்” என்று அவர் சொல்ல அதன்பின் நீண்டநேரம் நத்தை உண்மையில் ஒளியை உருவாக்குகிறதா என்று கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டார்கள். நத்தைவெளிச்சம் என்று அதை ஒரு கேலிச்சொல்லாக உடனே மாற்றிக்கொண்டனர். சூரியன் ஒரு பெரிய நத்தையா இல்லையா என்று விவாதம் உருமாறியது.
“அலங்கார இலக்கணத்தை அலங்காரங்கள் வழியாகத்தான் சொல்லமுடியும். இது சொல்லிலக்கணம் போலவோ, எழுத்திலக்கணம் போலவோ, பொருள் இலக்கணம் போலவோ திட்டவட்டமாக வகுத்துச் சொல்லத்தக்கது அல்ல. அலங்காரம் என்பது மொழியில் நேரடியாகச் சொல்லப்பட முடியாத ஒன்றை வேறுவகையில் உணர்த்துவதற்கான முயற்சி. ஆகவே அதில் சஹ்ருதயனின் கற்பனைக்கே முதன்மை இடம். ஆகவே அலங்கார சாஸ்திரமும் சஹ்ருதய விஃபாவனத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கமுடியும்” என்று ரத்னாகரர் சபையில் மன்றாடினார்.
ஆனால் அதற்குள் சபையின் மொத்த மனநிலை அந்நூலை அழிக்க முடிவுசெய்துவிட்டிருந்தது. பிரபாவல்லபரின் ஆதரவாளர்கள் அவரை குத்திக்கிழித்தனர். “பதங்கம் சிறகுகளைக் கனவுகாணவில்லை. ஏனென்றால் பூச்சிகள் கனவுகாண்கின்றன என்பதற்கு ஆதாரமே இல்லை” என்று சுகுமார சர்மா சொன்னார். “பதங்கம் எப்படி சிறகைக் கனவுகாண முடியும்? ஒருவருக்கு முன்னரே தெரியாத ஒன்று கனவிலே வருமா என்ன?”
“இது உவமை, உவமைக்கு இந்தவகையான தர்க்கம் கிடையாது” என்றார் ரத்னாகரர், அழும்குரலில்.
”இலக்கணமே இலக்கியத்தை உருவாக்குகிறது” என்று பிரபாவல்லபர் அவருடைய வழக்கமான வரியைச் சொன்னார். அதை தேவர்கள் அருளிய மந்திரத்தை சொல்வதுபோல தன்னம்பிக்கையும் பணிவும் இணையாகக் கலந்த, புன்னகையா துயரமா என்று அடையாளம் காணமுடியாத ஒரு முகபாவனையுடன் சொல்வது அவருடைய வழக்கம். “ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் பழுதற இணையும்போதே பொருள் பிறக்கிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய தனிப்பொருட்கள் மனிதர்களுக்குரியவை அல்ல, அவை தெய்வங்களுக்குரியவை. சொற்களைச் சேர்த்து உருவாக்கும் பொருளே மனிதர்களுக்குரியது. அதை உருவாக்குவது இலக்கணம். இலக்கணமே மொழி.” என்று அவர் தொடர்ந்தார்.
“இலக்கணமற்ற மொழி எவருக்கும் பயன்படுவது அல்ல. அது விண்ணிலிருக்கும் தூயநீர் போன்றது. மழையெனப் பொழிந்து ஆறென ஓடினாலன்றி அதற்கும் நமக்கும் எந்த உறவுமில்லை. இலக்கணமே மொழியை மண்ணென்றும், அதன்மேல் நகர்களென்றும், கோட்டைகளென்றும், அதற்குள் மாளிகைகள் என்றும், அறைகள் என்றும், அமர்விடங்கள் என்றும் மாற்றுகிறது”
அவர் சொல்லி இடைவெளி விட்டதும் சபையினர் ”ஆகா!” “ஆகா!” என ஓசையெழுப்பினார்கள்.
“அந்த பீடத்தில் அமர்பவர்களும் இலக்கணத்தால் உருவாக்கப்பட்டவர்களே” என்று பிரபாவல்லபர் தொடர்ந்தார். “இலக்கணமே நம்மைப்போன்ற பண்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது. நாம் பேசும் மொழியும் நாம் அணியும் உடைகளும், நமது நடத்தையும் அனைத்தும் இலக்கணத்தால் உருவானவை. இலக்கணமற்ற மானுடரை கிராதர் என்றும் நிஷாதர் என்றும் அரக்கர் என்றும் கூறுகிறோம். பண்பட்டது மட்டுமே பயனுள்ளது என்று அறிக. என் பிரியத்திற்குரிய இளைய அறிஞரே, அந்த மரம் வெற்றுச்சொல். அறைக்குள் இருக்கும் இந்த மஞ்சம் இலக்கணத்திற்குட்பட்ட மொழி. இதன்மீதுதான் நாம் துயில முடியும்”.
“ஆனால் கவிதை எப்போதுமே இலக்கணத்தை விட்டு மேலெழுகிறது… கூட்டில்தான் பறவை முட்டையிடமுடியும். அங்கேதான் குஞ்சு பிறக்கவும் சிறகு கொள்ளவும் முடியும். ஆனால் அந்தச் சிறகைக்கொண்டு அது கூட்டை விட்டு வானிலெழாவிட்டால் அது பறவையே அல்ல” என்று ரத்னாகரர் சொன்னார்.
“நாம் பறவைகளின் இலக்கணத்தைப் பற்றிப் பேசவில்லை” என்று பிரபாவல்லபர் சொன்னதும் சபையே சிரித்தது. அவர் தீவிரமாக “இலக்கணம் மொழியின் கணிதம். கணிதம் பருப்பொருளின் இலக்கணம். இவையன்றி மனிதர் அறியத்தக்கதும் கற்பிக்கத்ததுமான அறிவென்று இப்புவியில் பிறிதில்லை” என்றார்.
“ஆமாம்! ஆமாம்!” என்று பிரபாவல்லபரின் மாணவர்களும் நண்பர்களும் ஆராவாரம் செய்தார்கள்.
ரத்னாகரன் இருகைகளையும் விரித்து உரக்க சொன்னார். ”சபையிலிருக்கும் அறிஞர்களே, மனிதக் கைகள் எவ்வண்ணம் இருக்கவேண்டும் என்பது இலக்கணம். கட்டைவிரல் ஒவ்வொரு செயலிலும் இருக்கவேண்டும் என்பதும், சிறுவிரல் பெரும்பாலான செயல்களில் விலகியிருக்கவேண்டும் என்பதும் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் கைகள் செயலற்றவை ஆகும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் கைவிரல்களின் ரேகைகள் ஒன்றல்ல. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொன்றாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் ஊழை வகுத்த தெய்வம் அதை அவர்களின் கைரேகைகளிலேயே பொறித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை என படைத்த பிரம்மம் இலக்கணத்திற்கு அடங்காத பெருவிரிவென்றே தன்னைக் காட்டுகிறது”
அவன் சீற்றம் கொள்ளும் தோறும் பிரபாவல்லவர் கனிந்து கனிந்து வந்தார். அன்பு நிறைந்த கண்களால் அவனைப் பார்த்து ”இளைஞரே, நெறிகளெனத் தன்னை வெளிக்காட்டுவதே பிரம்மம். நீர் வீழ்வதும் தீ எழுவதும் இலக்கணம் சார்ந்தே நிகழ்கிறது. அவை இலக்கணத்தை மீறுமென்றால் இப்புவி அழியும். இலக்கணம் தெய்வமென்றால் அதன்மேல் ஓயாது மோதும் இலக்கணமீறல் என்பதே மாயை ஆகும்” என்றார்.
ரத்னாகரர் மேலும் சீற்றமடைந்தார். சினத்தில் அவருக்கு அழுகை வந்து குரல் உடைந்தது. ”இலக்கணத்தின் பார்வையில் இங்கே சபையில் இருக்கும் சுபத்திரருக்கும் ,அதற்கப்பால் அமர்ந்திருக்கும் கல்மாஷருக்கும், அப்பால் இருக்கும் ஸ்ரீதரருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிச்சிறப்பு என்ன?” என்றார.
அவரை முழுமையாக வென்றுவிட்டதை உணர்ந்த பிரபாவல்லபர் மேலும் கனிவுகொண்டு ”இன்னமும்கூட புரிந்துகொள்ளாமலிருக்கிறாயே. உன் ஆசிரியர்களை நான் வணங்குகிறேன்” என்றார். சபை சிரித்தது. “மகனே, நாம் அனைவரும் வாயால் உண்டு குதத்தால் கழிகிறோம். கண்ணால் பார்த்து காதால் கேட்டு வாயால் மொழிகிறோம். நமக்கிடையே வேறுபாடென்பது நாம் எண்ணிக்கொள்வதே. பொதுமையை நோக்கிச் செல்பவன் தெய்வத்தை அணுகுகிறான். தனித்துவத்தை நாடுபவன் தன்னைத்தானே பெருக்கிக்கொள்கிறான். தனித்துவமே ஆணவம். ஆணவமே அழிவு” என்றார்.
“தனித்துவம் இல்லாமல் கவிதையா? என்ன இது?” என்று ரத்னாகரர் தன்னை மறந்து வெளிவந்த அழுகையுடன் சொன்னார்.
“குழந்தை, பொதுமை நோக்கிச் செல்வது தேவர்களின் இயல்பு. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரே முகம், ஒரே விழிகள். அவர்களின் பெயர்களும் ஒன்றே. ஆனால் ஒவ்வொரு அசுரரும் தனிப்பெயரும் ,தனிமுகமும் தனக்கென ஆணவமும் கொண்டவர்கள். ஆணவம் நெருப்பு போல. இருத்தலும் பெருகுதலும் அதற்கு ஒன்றுதான். பெருகும்போது எங்கோ அது அழிந்தாகவேண்டும் என்பதும் நெறியென்று உள்ளது. தனித்தன்மையை நாடுபவன் தன்னை தெய்வங்களுக்கு முன் தருக்கி நிறுத்துகிறான். அவனை அது அழிக்கும்” என்றார் பிரபாவல்லபர்.
ரத்னாகரர் தத்தளித்துக் கொண்டிருக்கையில் கீர்த்திதரர் எழுந்து “என்னை பிரம்மம் மறுக்காமலிருப்பதாக. நான் பிரம்மத்தை மறுக்காமலிருப்பேனாக. இருபக்க மறுப்பும் எவ்வகையிலும் நிகழாமலிருப்பதாக. ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
சபை “ஓம்! ஓம்! ஓம்!” என்று குரலெழுப்பியது.
கைகளைக் கூப்பிக்கொண்டு ரத்னாகரர் அமர்ந்துகொண்டார்.
அன்று பல்லக்கில் திரும்பிச் செல்லும்போது பிரபாவல்லபர் தன் மகனும், ,முதன்மைச் சீடனுமாகிய வாக்வல்லபனிடம் சொன்னார் “மகனே, கவிதையை கற்றுக்கொள்ளாதே. அது காலந்தோறும் மாறுவது. கணந்தோறும் புதிதாக நிகழ்வது. அதன் பின்னால் செல்பவர்கள் புகையைப் பற்றிக்கொள்ள விரும்பும் குழந்தைகளைப் போன்றவர்கள். இலக்கணம் என்பது இதோ தெற்கே நிமிர்ந்து நின்றிருக்கும் விந்திய மலைமுடிகளைப் போன்றது. அது என்றும் அங்குதான் இருக்கும் அதிலிருந்து ஒரு கல் கொண்டு வந்து நம் இல்லத்தில் போட்டோமென்றால் இங்கும் அது விந்தியனாகவே இருக்கும். எப்படிப் புரட்டினாலும் எங்கு போட்டாலும் அது கல்தான். எத்தனை தலைமுறைகளானாலும், யுகங்கள் புரண்டு சென்றாலும் அது கல்லாகவே நீடிக்கும். இலக்கணத்தை பற்றிக்கொள். அது கற்பாறையுடன் சேர்த்து வீட்டைக்கட்டிக்கொள்வது போல“
ஆனால் மறுநாள் சபைகூடியபோது ரத்னாகரர் தன் கோலை தூக்கிக் காட்டினார். “சான்றோர்களே, இங்கே ஒரு நூலை முன்வைக்கும் ஆசிரியன் தனக்குத் துணையாக ஓர் அறிஞரை கூட்டிவரலாம் என்று நெறி உள்ளது. நான் என் தோழனாகிய அறிஞனை சபையில் முன்வைக்க எனக்கு அனுமதி வேண்டும்” என்றார்.
பிரபாவல்லபர் அதை எதிர்பார்க்கவில்லை ”யாரவர்? இங்கே இதற்கு முன் இல்லாத ஒருவர் என்றால் அவருடைய தகுதி என்ன?” என்று கேட்டார்.
“இங்கு இதற்கு முன் நுழையாதவர்தான். அவருக்குத் தகுதி என நான் நினைப்பது அவர் என் நண்பர் என்பதுதான். அவருக்கு தகுதி இல்லை என்று இந்த சபையில் நிறுவப்பட்டால் சபை என்னை தண்டிக்கலாம்” என்றார் ரத்னாகரர்.
“இதை அனுமதிக்கக்கூடாது” என்று பிரபாவல்லபர் சொன்னார். ஏதோ சூது உள்ளது என்று அவருக்கு தோன்றிவிட்டது
தலைமை அமைச்சரான விஷ்ணுகுப்தர் “சபை முறைமைகளின்படி அவரை அனுமதித்தே ஆகவேண்டும்” என்றார். அவருக்கு முந்தையநாள் பிரபாலவல்லபர் கொஞ்சம் தலைதூக்கிவிட்டார் என்ற கசப்பு இருந்தது, அவரை தட்டிவைக்க விரும்பினார்.
பிரபாவல்லபர் மேற்கொண்டு பேசமுடியாமல் அதை ஏற்றுக்கொண்டார். சபையில் இருந்த அரசர் அக்னிபுத்ர சதகர்ணி அங்கே ஒரு வேடிக்கை நிகழ்வதைப் பார்க்க விரும்பினார்.
சபையின் கோல்காரன் அழைத்ததும் உள்ளே நுழைந்தவன் அவர்கள் நன்கு அறிந்திருந்த அந்த பைத்தியக்கார இளைஞன். அவன் குளித்து, நல்ல ஆடை அணிந்து, வந்திருந்தான். அவனைக் கண்டதும் சபையில் சிரிப்பு ஓடியது. ஆனால் பிரபாவல்லபர் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று சந்தேகப்பட்டார். அவனைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இளைஞன் கரிய நிறத்துடன், உயரமில்லாதவனாகவும் ஒடுங்கிய நெஞ்சு கொண்டவனாகவும் இருந்தான். அரசரை நோக்கி “சதஜனபதநாயக, உபயவிஜய, உதயமார்த்தாண்ட, வியாஹ்ரவீர்ய, சர்வஜனப்ரிய, சகஸ்ரகுலசேகர, நிருபதுங்க, புருஷோத்தம, பத்மஹஸ்த, வஜ்ரஹஸ்த, சத்ருபயங்கர, மித்ரபரிபாலக, உத்துங்கசீர்ஷ, அஜயசரித்ர, அஜாதசத்ரு, அபயவரத, அசலமகாகீர்த்தி ,ஸ்வஸ்திஶ்ரீ ,அக்னிபுத்ர சதகர்ணிக்கு கௌதம கோத்திரத்தில் பிறந்தவனும் சோமசர்மன் என்னும் வைதிக பிராமணணனின் மகனுமாகிய குணபதியின் வாழ்த்துக்கள்” என்றான்.
அதுவும் ஒரு நடிப்பு போலிருக்கவே சபையினர் சிரித்தனர்.
“வணங்குகிறேன் அந்தணரே, நீங்கள் இங்கே ரத்னாகரரின் நூலை ஆதரித்துப் பேச வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று அரசர் கேட்டார்.
“ஆமாம், அவர்தான் என்னை அழைத்துவந்தார்” என்று அவன் சொன்னான்.
“அதற்கு முன் இந்த சபையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கவிரும்புகிறேன். இந்தச் சபையில் நின்றிருக்கும் தகுதி உங்களுக்கு உண்டு என்று எண்ணுகிறீர்களா? அதை நிரூபிக்கமுடியுமா?” என்றார் பிரபாவல்லபர்.
“ஆமாம், நான் முற்றிலும் தகுதிகொண்டவனே. ஆனால் என் தகுதியை மதிப்பிட இந்த சபையில் உள்ளவர்களுக்குத் தகுதி உண்டா?” என்று குணபதி கேட்டான்.
சபையினர் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். சிலர் சிரித்தனர்.
அரசர் சிரித்தபடி “சபையினரின் தகுதியை முதலில் நீங்கள் சோதிக்கலாம் அந்தணரே” என்றார்.
“சரி. நானே சோதனையை வைக்கிறேன். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரநூல்கள், நூற்றியெட்டு அடிப்படை வியாகரண நூல்கள், பதினெட்டு புராணங்கள், சபையில் ஏற்பு பெற்ற எழுபத்திரண்டு காவியங்கள் உட்பட இந்தச் சபையிலுள்ளவர்கள் அவர்கள் அறிந்த எந்த நூலில் இருந்தும் என்னிடம் கேள்வி கேட்கலாம். ஒரு பாடலின் முதற் சொல்லையோ இறுதிச்சொல்லையோ சொல்லி அது எந்தப் பாடல் என்று கேட்டால் மூன்று நொடிகளுக்குள் நான் அந்தப்பாடலையும் அதன் பொருளையும் சொல்வேன். அவர்கள் தாங்கள் அறிந்த எந்த சொல்லுக்கும், எந்தப் பாடலுக்கும் பொருள் கேட்கலாம். ஒரு சொல்லைச் சொல்லி அது வேதங்களிலும் பிறநூல்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்றுகூடக் கேட்கலாம்” என்றான் குணபதி.
“நான் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இங்கே வருமென்றால் அக்கணமே நான் இந்த எழுத்தாணியால் என் கழுத்தைக் குத்திக்கொண்டு இந்தச் சபையிலேயே செத்துவிழுவேன். ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டால் கேள்வி கேட்டவர் எழுந்து என்னைப் பணிந்து வணங்கவேண்டும்… மூன்றுமுறை அவ்வாறு என்னை பணிந்தவர் அதன்பின் என் சொல்லுக்கு வாழ்நாள் முழுக்க முழுமையாகக் கட்டுப்படவேண்டும்” என்று குணபதி தொடர்ந்தான்.
“இந்த சபையில் எவரேனும் என்னைவிடக் கற்றவர் என்று தன்னைப்பற்றி கருதினால் அவரிடம் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அவர் பதில் சொன்னால் போதும். அவ்வாறு அவர் பதில் சொல்லிவிட்டால் அவரை நான் பணிந்து வணங்கி அக்கணமே அவையை விட்டு வெளியேறுவேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் அவர் என் கால்களை தன் தலையில் அணியவேண்டும்”
சபை திகைத்துவிட்டது. அப்படி ஓர் அறைகூவல் அந்தச் சபையில் எழுந்ததே இல்லை. சிறிதுநேரம் எந்த கேள்வியும் எழவில்லை. பிரபாவல்லபர் தன் மாணவர்களிடம் கண்காட்ட அவர்கள் கேள்வி கேட்கலானார்கள். பின்னர் அவையிலிருந்த அனைவருமே கேள்வி கேட்டனர். எல்லா கேள்விக்கும் அவன் பதில் சொன்னான். பெரும்பாலும் கேள்வி தொடங்கும்போதே பதிலைச் சொல்லி அடுத்தவருக்காக கைகாட்டினான். சற்றுநேரத்தில் மொத்த சபையும் அவனை வணங்கிவிட்டது.
நவரத்னாவளியின் ஒன்பது புலவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அரசரின் கண்களில் சிரிப்பு நிறைந்தது. “பிரபாவல்லபரே, நீங்கள் கேட்கும் கேள்விக்கு இந்தச் சிறுவனால் ஒருபோதும் பதில் சொல்லமுடியாது. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார்.
பிரபாவல்லபர் திகைத்து அரசரைப் பார்க்க சபை சிரித்துக்கொண்டிருந்தது. அவர் தட்டுத்தடுமாறி எதையோ கேட்டு முடிப்பதற்குள் அவன் பதில் சொன்னான். அவர் எழுந்து சென்று அவன் கால்களைத் தொட்டு வணங்கினார்.
அரசர் அடுத்தடுத்து ஒன்பது பேரிடமும் கேள்விகேட்கும்படிச் சொன்னார். ஒவ்வொருவராக அவன் முன் பணிந்தார்கள். அவன் கேள்விகேட்க வேண்டிய தேவையே இருக்கவில்லை.
பிரதிஷ்டானபுரியின் புலவர்சபையான காவ்யப்பிரதிஷ்டானின் தலைமைப் புலவனாக அவன் அமரச்செய்யப்பட்டான். அவனுக்கு வைரம் பதித்த பொற்கோலை அளித்த அரசர் அக்னிபுத்ர சதகர்ணி “இனிமேல் இந்த சபையின் முதன்மைப் புலவர் நீங்கள்தான். அந்தப்பொருளில் இனி உங்கள் பெயர் குணாட்யன் என்றே அழைக்கப்படட்டும்” என்றார்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
