ஆனந்தவிகடன் பேட்டி
எது உங்களை தொடர்ந்து எழுதவைக்குது? அந்த தூண்டுதல் என்னன்னு சொல்ல முடியுமா?
அடிப்படையிலே அந்தத் தூண்டுதல் ஒண்ணுதான். ஆனா ஒவ்வொரு வயசிலேயும் அதை வேற வேறயா புரிஞ்சுக்கறோம்.சின்னப்பையனா இருந்தப்ப நான் என்னை இந்த உலகுக்கு நிரூபிக்கணும்கிறதுக்காக எழுதினேன். அப்றம் புகழ், அடையாளம் எல்லாத்துக்காகவும் எழுதினேன். இந்த வயசிலே ஒரே காரணத்துக்காகத்தான், செயலிலே உள்ள இன்பத்துக்காகவும் நிறைவுக்காகவும்.
உண்மையிலே இதுதான் அடிப்படையான காரணம். இந்த உலகத்திலே இருக்கிற எல்லாமே செயல்வடிவா இருக்கு. செயலற்றிருக்குதுன்னு நமக்கு தோணுற கல்லு, மலை எல்லாமே செயல்வடிவாத்தான் இருக்கு. செயலிலேதான் நம்மோட நிறைவு இருக்கமுடியும்.
நமக்குன்னு ஒரு செயல் இருக்கு. நம்ம மனசு முழுசா குவிஞ்சு நம்ம ஆற்றல் முழுசா வெளிப்படுற இடம் எதுவோ அதுதான் நம்மோட செயல். அது எனக்கு இலக்கியம், தத்துவம் ரெண்டும்தான். இப்ப நான் எழுதுறது அதனாலே மட்டும்தான். மனித அறிவுங்கிறது ஒரு பெரிய பிரவாகம். நான் ஒரு துளியை அதிலே சேர்க்கிறேன். அதுக்காகத்தான் வந்திருக்கேன்னு தோணுது. அதைச் செய்றப்ப எனக்கு நிறைவு வர்ரது அதனாலேதான்.
எழுத்தாளனைச் சமூகம் கொண்டாடலைன்னு பலபேர் சொல்றாங்க. எழுத்தாளனை ஏன் சமூகம் கொண்டாடணும்?
ஒரு சமூகம் எதை, யாரை முன்னுதாரணமா கொண்டிருக்குங்கிறதுதான் அந்த சமூகம் எப்படிப்பட்டதுங்கிறதுக்கான ஆதாரம். இப்ப நாம யாரை கொண்டாடுறோம்? சினிமாநடிகர்களையும் அரசியல்வாதிகளையும்தான் இல்லையா? அந்த சினிமாநடிகர்கள் வெறும் பிம்பங்கள். அரசியல்வாதிகள் ஊழல், குற்றம் ,சாதிவெறி, மதவெறி வழியா அதிகாரத்தை அடையறவங்க. அப்ப அவங்களை முன்னுதாரணமா நம்ம குழந்தைகள் முன்னாடி நிறுத்துறோம். நம்ம குழந்தைங்க ரீல்ஸ்லே மூழ்கி கிடக்கிறாங்கன்னா அதுக்கு இதான் காரணம். பள்ளிக்கூட பையன் அரிவாள் எடுத்து இன்னொரு பையனை வெட்டுறான்னா இதான் காரணம்.
இந்தச் சென்னையிலே அரசியல்வாதிங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. சினிமாக்காரங்களுக்கு எவ்வளவு சிலை இருக்கு. கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு சிலை இருக்கா? இலக்கியமேதை புதுமைப்பித்தனுக்கு ஒரு ஞாபகச்சின்னம் உண்டா? அறிவை வழிபடுற ஒரு சமூகம் அவங்களைத்தானே கொண்டாடும். அவங்களைத்தானே தன்னோட பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டும்? உலகநாடுகள் முழுக்க அந்த ஊர் அறிஞர்களையும் எழுத்தாளர்களையும்தான் சிலைவைச்சு கொண்டாடுறாங்க. நாம அப்டி செய்றதில்லையே. நீங்க களையை விதைக்கிறீங்க, பயிர் விளையணும்னு எதிர்பார்க்கிறீங்க.
சமகாலத்திலே எழுத்தாளனை கொண்டாடணும்னா அவனை போற்றிப் புகழணும்னு அர்த்தம் இல்லை. அவன் முக்கியமானவன்னு உணரணும்னு அர்த்தம். அவனோட எழுத்துக்களைப் படிக்கிறது அவன் புத்தகங்களை வாங்கி ஆதரிக்கிறதுதான் அவனைக் கொண்டாடுறது. அவன் எழுத்தை நம்பிக்கையோட செய்யணும். எழுத்துக்கான ஆதரவு கொஞ்சமாவது சமூகத்திலே இருக்கணும். கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரிச்சதனாலேதான் கம்பராமாயணம் உண்டாச்சு. கடந்த காலத்திலே மன்னர்கள் ஆதரிச்சாங்க. இப்ப மன்னர்கள் இல்லை. இப்ப மக்கள்தான் மன்னர்கள். அதைத்தான் இலக்கியவாதியை கொண்டாடுறதுன்னு சொல்றோம்.
அப்டி கொண்டாடுறப்ப நாம கொண்டாடுறது இலக்கியத்தையும் அறிவையும்தான். அதை நம்ம பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமா காட்டுறோம். அப்பதான் அவங்களிலே இருந்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் உருவாகி வருவாங்க.
என் அம்மா எனக்கு வைக்கம் முகமது பஷீரைத்தான் உதாரணமாச் சுட்டிக்காட்டினாங்க. அவரை மாதிரி ஆகணும்னுதான் நான் எழுத்தாளன் ஆனேன். இன்னிக்கு என் புத்தகம் அமெரிக்காவிலே புகழ்பெற்ற பதிப்பகங்களாலே வெளியிடப்படுது. அந்த மேடையிலே நின்னுட்டு நான் தமிழிலக்கியம் பத்தி பேசறேன். அவங்க தமிழ்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை. அங்க நம்ம மொழியையும் பண்பாட்டையும் கொண்டுபோயி நிறுத்துறேன். தொடக்கம் என் அம்மா வைக்கம் முகமது பஷீரை கொண்டாடினதுதான். இன்னிக்கு எழுத்தையும் எழுத்தாளரையும் கொண்டாடுங்க, நாளைக்கு உங்க பிள்ளைங்க உலக அரங்கிலே போயி நிப்பாங்க.
ஆனா இதை இங்க உள்ள அரசியல்வாதிங்களும் அவங்களோட அடிவருடிக் கும்பலும் ஒத்துக்க மாட்டாங்க. ஜனங்க இலக்கியவாதியையோ அறிவாளியையோ கொண்டாட ஆரம்பிச்சா அவங்களோட அதிகாரம் அழிய ஆரம்பிச்சிரும்னு பயப்படுவாங்க. இலக்கியவாதியை எல்லாம் கொண்டாடவேண்டாம்னு சொல்லுவாங்க. சரி, யாரைக் கொண்டாடணும்னு கேட்டா எங்களைக் கொண்டாடுங்கன்னு சொல்லுவாங்க… அவங்க கிட்டதான் அதிகாரம் பணம் எல்லாம் இருக்கு. அதனாலே தெருத்தெருவா சிலைவைச்சு, மண்டபம் கட்டி, மேடைபோட்டு பேசி அவங்களே அவங்களை கொண்டாடிக்கிடுவாங்க. வேற மாதிரி சிந்திக்கவே ஜனங்களை விடமாட்டாங்க. கொஞ்சபேராவது இவங்க உருவாக்குற இந்த மாயையிலே இருந்து வெளிவரணும். அதிகாரத்தை கொண்டாடுறதை விட்டுட்டு அறிவை கொண்டாடணும்.
அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டே வர்ர இந்தச் சூழலை எப்டி மதிப்பிடுறீங்க?
நான் திரும்பத் திரும்பச் சொல்றதுதான், அறமதிப்பீடுகள் குறைஞ்சிட்டு வருதுன்னு சொல்றது ஒரு அப்பட்டமான பொய். அது ஒரு மாயை. நேத்தைக்கு என்னென்ன அறமதிப்பீடுகள் இருந்திச்சோ அதைவிட இன்னிக்கு பல மடங்கு அறமதிப்பீடு வளர்ந்திருக்கு. இன்னும் வளரும். இதான் வரலாற்றை பாக்கத்தெரிஞ்சவன் உறுதியாச் சொல்லும் உண்மை.
நேத்து இருந்த அற மதிப்பீடு என்ன? தீண்டாமை, சாதிவெறி, ஈவிரக்கம் இல்லாத உழைப்புச் சுரண்டல் இதெல்லாம்தானே? அந்திவரை வேலை செஞ்சுட்டு கூலிக்கு நடையாநடந்த காலம்தான் அறம் வாழ்ந்த காலமா? பண்ணையடிமை முறை, பட்டினி இதெல்லாம் அறமா?
நேத்து அறம் வாழ்ந்ததுன்னு சொல்றவன் யார்? உயர்சாதிக்காரன், பரம்பரையா உக்காந்து தின்னவன் சொல்லலாம். இப்பதான் உழைக்கிறவங்களுக்கு முறையா ஊதியம் இருக்கு. அவனும் பட்டினி இல்லாம வாழ முடியுது. அவன் பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகுது, படிச்சு முன்னேற வாய்ப்பிருக்கு. அவன் சொல்ல மாட்டான்.
இப்பதான் மனுஷன் எல்லாமே சமம்ங்கிற சிந்தனை வந்திருக்கு. பெண்களுக்கு உரிமைகள் வந்திருக்கு. குழந்தைகளை கொடுமைப்படுத்தக்கூடாதுங்கிற எண்ணமே ஒரு தலைமுறையாத்தான் வந்திருக்கு. நம்ம அம்மாக்கள் அப்பாக்களுக்கு அடிமையா வாழ்ந்தாங்க. இன்னிக்குள்ள பெண்கள் சுதந்திரமா இருக்காங்கன்னா அதுக்குக் காரணம் அ.மாதவையா முதல் பாரதி, புதுமைப்பித்தன் வரையிலான எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் நம்ம சிந்தனையை மாற்றினதுதான்.
அறமதிப்பீடுகள் வளர்ந்திருக்குன்னா அதுக்குக் காரணம் மார்க்ஸ் முதல் காந்தி வரையிலான சிந்தனையாளர்கள்தான். திருவள்ளுவர் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள்தான். அவங்களோட பங்களிப்பாலேதான் நாம் இன்னிக்கு வாழுறோம். அதை கொஞ்சம்கூட உணராம என்னமோ நேத்து எல்லாமே சரியா இருந்ததுன்னு சொல்றது நன்றிகெட்டத்தனம்.
ஆமா, அறமதிப்பீடுகள் இன்னும் வளரணும். இன்னும் நெறைய மாறணும். அதுக்காகத்தான் இன்னிக்கு எழுதிக்கிட்ருக்கோம். எழுதிக்கிட்டேதான் இருப்போம்.
தொடர்ச்சியா நெறைய எழுதுறீங்க. தரமாகவும் எழுதறீங்க. எப்டி இது சாத்தியமாகிறது?
செய்க தவம்னு பாரதி சொன்னான். எது உங்க செயலோ அதை முழுமூச்சா செய்றதுதான் தவம். எனக்கு எழுத்து தவம்தான். முன்னாடி ஒருமுறை சொன்னேன். புத்தருக்கு தியானம் எதுவோ அதுதான் எனக்கு இலக்கியம்னு. எனக்கு கவனக்கலைவு கெடையாது. நேரவிரயம் கெடையாது.
நான் நெறைய எழுதுறேன், உண்மை. ஆனா உலக இலக்கியத்திலே மாஸ்டர்ஸ்னு நாம சொல்ற அத்தனைபேரும் என்னைவிட எழுதினவங்கதான். 51 வயசிலே செத்துப்போன பிரெஞ்சு எழுத்தாளர் பால்ஸாக் என்னைவிட அரைப்பங்கு ஜாஸ்தியா எழுதியிருக்கார். கொஞ்சம் இலக்கிய ரசனையும், கொஞ்சம் உலக இலக்கிய அறிமுகமும் உள்ள யாருக்கும் தெரியுறது ஒண்ணு உண்டு- நான் தமிழிலே எழுதினாலும் இன்னிக்கு உலக அளவிலே எழுதிட்டிருக்கிற முக்கியமான இலக்கியவாதிகளிலே ஒருவன்.
ஏன் நெறைய எழுதுறாங்க பெரிய இலக்கியவாதிகள்? ஏன்னா அவங்க மத்தவங்களை சந்தோஷப்படுத்த எழுதுறதில்லை. சொந்த வாழ்க்கைச்சிக்கல்களை மட்டும் எழுதுறதுமில்லை. அவங்களுக்குச் சில அடிப்படையான தத்துவக் கேள்விகள் இருக்கு. அதை ஒருபக்கம் சரித்திரத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் மனிதசிந்தனையோட பாரம்பரியத்திலே வைச்சு பார்க்கிறேன். இன்னொரு பக்கம் நம்ம பண்பாட்டிலே வைச்சுப் பார்க்கிறேன். அப்ப அது விரிஞ்சுகிட்டே போகும். அதனாலே எழுதித்தீராது. எழுத்தோட தரம் கூடிட்டே தான் போகும்.
சலிப்பில்லாத மொழி, திடமான ஒரு ஸ்டைல் இவ்ளவு சிறப்பா எப்டி வசப்பட்டுது?
மொழிநடை அல்லது ஸ்டைல்னா என்ன? நம்ம மனசுக்குள்ள ஒரு உரையாடல் ஓடிட்டே இருக்கு இல்லை? நம்ம கைரேகை போல ஒவ்வொருவருக்கும் அது ஒரு மாதிரி. நம்ம நடை அந்த மனமொழியா ஆயிட்டுதுன்னா அதான் நம்ம ஸ்டைல். ஆனால் அதை அடையறது ரொம்ப கஷ்டம். ஏன்னா நாம பேசுற, எழுதுற மொழி வெளியே இருந்து வர்ரது. அது பொதுவான மொழியாத்தான் இருக்கும். அந்த பொதுமொழிய நம்ம மொழியா மாத்தணும்னா நமக்குள்ள நாம போய்ட்டே இருக்கணும். கூடவே எழுதுற மொழிய பயிற்சி பண்ணிட்டே இருக்கணும்.
ஆனா அந்த அகமொழி கூட ஒரே மாதிரி ஆயிட வாய்ப்பிருக்கு. அப்ப நம்ம அகமொழியை நாம மாத்தணும். அதுக்கு தொடர்ச்சியா வாசிக்கணும். தொடர்ச்சியா வேற வேற அறிவுக்களங்களுக்குள்ள போய்ட்டே இருக்கணும். விஷ்ணுபுரம் எழுதுறப்ப நான் ஆலயக்கலை மரபுக்குள்ள மூழ்கி கிடந்தேன். கொற்றவை எழுதுறப்ப பழந்தமிழ் இலக்கியத்திலே வாழ்ந்தேன். பின் தொடரும் நிழலின் குரல் எழுதுறப்ப ரஷ்ய இலக்கியத்திலே இருந்தேன். இப்ப வரலாற்றுக்கு முன்னாடி இருக்கிற குகைஓவியங்களிலேயும் கற்காலத்து சின்னங்களிலேயும் வாழ்ந்திட்டிருக்கேன். அதுக்கேற்ப மொழி மாறிடுது. அதான் அது சலிக்காமலேயே இருக்கு.
நல்ல எழுத்தை எழுதணும்னா எழுத்தாளனா முழுமூச்சா வாழணும். அதுதான் ரகசியம்.
போதிய கருத்துச் சுதந்திரம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?
இந்தியாவைச் சுத்தி இருக்கிற மத்த நாடுகளோட ஒப்பிட்டுப்பாத்தோம்னா கண்டிப்பா முழுமையான கருத்துச் சுதந்திரம் இருக்கு. இங்க எழுத்தாளனை ஜெயிலுக்கு அனுப்புறதில்லை. புத்தகங்களை தடை பண்றதில்லை. தணிக்கை இல்லை.
ஆனா சில்லறை அரசியல்வாதிகள் உருவாக்குற நெருக்கடி இருக்கு. இப்ப நான் கம்யூனிச சிந்தாந்தத்த அல்லது திராவிட இயக்கச் சிந்தனையை விமர்சிச்சா உடனே என்னை சங்கின்னு சொல்லி முத்திரையடிப்பாங்க. சங்கிகளையும் கூடவே விமர்சிக்கிறேன். அவங்க என்னை தேசத்துரோகின்னும் விலைபோனவன்னும் சொல்லுவாங்க.
’எங்ககூட நின்னு நாங்க சொல்றத அப்டியே எழுது, இல்லாட்டி நீ எங்க எதிரியோட ஆளு’ இதான் நம்ம அரசியல்வாதிங்களோட அணுகுமுறை. அவங்க உருவாக்குற காழ்ப்புங்கிறது இங்க பெரிய பிரச்சினைதான். அவங்களுக்கு பெரிய ஆள்பலமும் பணபலமும் உண்டு. அதனாலே அவதூறு பண்றது ஈஸி. அதான் அவங்களோட ஆயுதம். அதைவைச்சு பயமுறுத்துறாங்க.
ஆனா நான் வாசகர்களை நம்பறேன். அவங்க எப்டியும் எங்கிட்ட வந்து சேந்திருவாங்கன்னு நினைக்கிறேன். தொண்ணூறு பேர் அரசியல் பிரச்சாரங்களை நம்பலாம், பத்துபேர் புத்தகங்களை வாங்கி வாசிச்சு நம்மகிட்ட வருவாங்க… அதான் நடந்திட்டிருக்கு.
அறுபது வயதுக்குமேல் டால்ஸ்டாய் , தாகூர் மாதிரியானவங்க உச்சகட்ட படைப்புகளைக் குடுத்திருக்காங்க… உங்களோட புதிய படைப்பு என்ன?
உண்மையிலே பாத்தா ஐம்பதை ஒட்டின வயசிலேதான் பெரிய படைப்புகளை மாஸ்டர்ஸ் எழுதியிருக்காங்க. என்னோட ஐம்பது வயசிலேதான் நான் வெண்முரசு எழுதறேன். மகாபாரதததை ஒட்டி எழுதின 26 நாவல்கள் வரிசையா… உலகிலேயே பெரிய இலக்கியப்படைப்பு அதுதான்.
ஆனா அதை எழுதி முடிச்சதுமே ஒருநாளைக்கு ஒரு கதை வீதம் 136 கதைகளை எழுதினேன். 13 தொகுதிகளா வந்திருக்கு. அப்றம் சின்ன நாவல்கள் அஞ்சு எழுதினேன்.
இப்ப கடல் நாவல் வெளிவரப்போகுது. கடல் சினிமாவுக்காக நான் ஒரு நாவல் வடிவத்தைத்தான் எழுதி மணி ரத்னத்துக்கு குடுத்தேன். பெரிய நாவல், அறுநூறு பக்கம் வரும். அந்த நாவல் புத்தகமா இப்பதான் வரப்போகுது.
இன்னொரு நாவல் எழுதிட்டிருக்கேன். காவியம்னு பேரு. இந்தியாவிலே உள்ள காவியமரபோட உண்மையான ஆழம் என்னன்னு ஆராயற ஒரு நாவல். நாவல் நடக்குற இடம் பிரதிஷ்டானபுரின்னு ஒரு பழைய நகரம். இப்ப அதோட பேரு பைத்தான். அங்கே போயி தங்கி எழுத ஆரம்பிச்சேன்…
தமிழ் இலக்கியம் உலக அளவிலே மதிக்க்கப்படுதா? தமிழ் இலக்கியத்துக்கு இன்னிக்கு இந்திய அளவிலேயாவது இருக்கிற இடம் என்ன?
என்னோட அறம்ங்கிற புத்தகம் பிரியம்வதா ராம்குமார் மொழிபெயர்ப்பிலே இங்கிலீஷ்லே வந்தது. Stories of the true ன்னு புத்தகத்தோட பேரு. மிகப்பெரிய அளவிலே வரவேற்பு கிடைச்ச புத்தகம் அது. அமெரிக்காவிலே உள்ள American Literary Tranlaters Assocoation ங்கிற அமைப்பு உலக அளவிலே ஆங்கிலத்திலே செய்யப்படுற இலக்கிய மொழிபெயர்ப்புக்கு விருது குடுக்குது. நாற்பது உலகமொழிகளிலே இருந்து இறுதிப்பட்டியலுக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஆறு புத்தகங்களிலே ஒண்ணா என்னோட புத்தகம் இருந்தது.
ஆனா அந்த விருது வியட்நாம் நாவலுக்குப் போச்சு. அந்த விருதுவிழாவுக்கு பிரியம்வதா போயிருந்தாங்க. அங்க உள்ளவங்க தமிழ்ங்கிற மொழியைப்பத்தியே கேள்விப்பட்டிருக்கலை. ஆனா வியட்நாம் மொழியிலே இருந்து நூத்துக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலே வந்திருக்கு. அந்த புத்தகங்களை வாசிச்சு வாசிச்சு அந்தக் கலாச்சாரம் அங்க உள்ள வாசகர்களுக்குத் தெரிஞ்சிருந்தது. அதனாலே அந்த நாவலை அவங்க கூடுதலா ரசிச்ச்சாங்க. வியட்நாம் கூட அமெரிக்கா போர் புரிஞ்சதனாலே வியட்நாம் பத்தி தெரிஞ்சிருக்குன்னு வைச்சுக்கலாம். அந்தவகையான அறிமுகம் தமிழுக்கு இல்லை.
தமிழிலே இருந்து இலக்கியங்கள் அமெரிக்காவிலே சர்வதேசப்பதிப்பா வர்ரது அனேகமா கிடையாது. சின்ன பதிப்பகங்கள் போட்ட புத்தகங்களே ஒண்ணுரெண்டுதான் அங்க வந்திருக்கு. ALTA விருதுக்குப் பிறகு என்னோட அறம் கதைகளோட மொழியாக்கமான Stories of the true ங்கிற சிறுகதைத் தொகுப்பும் வெள்ளையானை நாவலோட மொழியாக்கமான The white elephant ங்கிற புத்தகமும் அமெரிககவோட முக்கியமான பதிப்பகமான FSG நிறுவன வெளியீடா சர்வதேசப்பதிப்பா வருது. ஏழாம் உலகம் நாவலோட மொழிபெயர்ப்பு The Abyss ங்கிற பேரிலே Transit பதிப்பகம் வழியா அமெரிக்காவிலே சர்வதேசப் பதிப்பா வெளிவருது. இது தமிழுக்கு பெரிய தொடக்கம்.
ஆனா இந்த புத்தகங்களுக்கு நாம அங்க ஒரு வாசிப்பை உருவாக்கி எடுக்கணும். இயல்பா அவங்களாலே நம்ம இலக்கியத்தை வாசிக்க முடியாது. ஏன்னா நம்ம கலாச்சாரமே அவங்களுக்குத் தெரியாது. நம்ம நாட்டை அவங்க மேப்பிலேதான் பாக்கணும். அதிலே தமிழ்நாடுன்னு தனியா ஒரு ஏரியா இருக்குன்னு எடுத்துச் சொல்லணும். அதனாலே இங்கேருந்து நெறைய புத்தகங்கள் அங்க போகணும். அவங்க நெறைய வாசிக்க வாய்ப்பு இருக்கணும். அப்டிபோகணும்னா இந்த புத்தகங்கள் நெறைய விக்கணும். நான் எப்பவுமே தமிழோட நல்ல படைப்புகளை எல்லாம் தொடர்ச்சியா எல்லா மேடைகளிலேயும் முன்வைக்கிறவன்.
துருக்கி, கொரியா, ஜப்பான் படைப்புகள் அமெரிக்காவிலே நூற்றுக்கணக்கிலே வருது. நோபல் பிரைஸ் கூட வாங்குது. ஏன்னா அமெரிக்காவிலே வாழுற புலம்பெயர்ந்த துருக்கி, கொரியா, ஜப்பான் மக்கள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்குறாங்க. அதிலேயே ஒரு அடிப்படையான விற்பனை அமைஞ்சிருது. அதனாலே பதிப்பகங்கள் நம்பி புத்தகங்களை போடுறாங்க. தமிழ் ஜனங்களும் அதேபோல இந்த புத்தகங்களை வாங்கினா ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.
ரெண்டு காரணத்துக்காக இந்த புத்தகங்களை அவங்க வாங்கணும். ஒண்ணு, அங்க பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு நம்ம பண்பாட்டையும் இலக்கியத்தையும் அறிமுகம்பண்ண இதான் வழி. இன்னொண்ணு, தமிழ் இலக்கியம் உலக அரங்கிலே அறியப்பட்டாத்தான் தமிழர்களுக்குப் பெருமை.
ஆனா ஒண்ணு, தரமான இலக்கியத்தை அங்க கொண்டுபோகணும். இங்க உள்ள வெகுஜன ரசனைக்கான எழுத்தை அங்க கொண்டுபோனா மதிக்க மாட்டாங்க. என்னோட கதைகளோட எந்த நல்ல மொழிபெயர்ப்பை குடுத்தாலும் உலகத்திலே உள்ள நல்ல இலக்கிய இதழ்களிலே வெளியாயிடுது… நல்ல பதிப்பகங்கள் பிரசுரிக்குது… ஏன்னா அதிலே அந்த தரம் உண்டு. அந்த வகையான படைப்புகளுக்கு கிடைக்கிற அங்கீகாரம்தான் நமக்கு பெருமை…
தமிழ்விக்கின்னு ஒரு பெரிய கனவை முன்னெடுக்கிறீங்க…அடுத்த கனவு என்ன?
தமிழ்மொழிக்கு ஒரு பண்பாட்டுக் கலைக்களஞ்சியம் வேணும்னுதான் தமிழ் விக்கியை ஆரம்பிச்சோம். 2022லே வாஷிங்டனிலே வெளியீட்டுவிழா நடந்தது. இன்னிக்கு பத்தாயிரம் பதிவுகளோட மிகப்பெரிய ஒரு இணையக் கலைக்களஞ்சியமா வளந்திட்டிருக்கு… தமிழ்விக்கி சார்பிலே பெரியசாமித்தூரன் நினைவா தமிழ் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய விருதை ஆண்டுதோறும் குடுக்கறோம். ஏற்கனவே மூத்த எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2010 முதல் குடுத்திட்டிருக்கோம்…
இனி ஒரு பெரிய கனவு 2026லே அமெரிக்காவிலே நவீனத் தமிழிலக்கியத்துக்காக ஒரு மாநாடு….இங்கேருந்து ஒரு ஐம்பது எழுத்தாளர்களை அங்கே கொண்டுபோயி அறிமுகம் பண்ணணும். நாம எழுதுறத அந்த ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்றது நோக்கம். இப்ப எனக்கு கிடைச்சிருக்கிற கவனத்தை தமிழ் இலக்கியம் மேலே திருப்பணும்னு நினைக்கிறேன்…
வாழ்க்கையோட பொருள் என்னன்னு நினைக்கிறீங்க?
நம்ம வாழ்க்கைக்கு பொருள் உண்டு, ஆனா அதை நாம அறிய முடியாது. ஏன்னா பிரபஞ்சத்துக்கு பொருள் உண்டுன்னா, இயற்கைக்கு பொருள் உண்டுன்னா, இங்க உள்ள மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருள் உண்டுன்னா அந்தப் பொருள்தான் நம்ம வாழ்க்கைக்கும் இருக்கு. எல்லாம் ஒட்டுமொத்தமா ஒண்ணுதான். நம்மாலே பிரபஞ்சத்தை அறியவே முடியாது. அதனாலே வாழ்க்கையோட பொருள் என்னான்னு கேக்கிறது பயன் இல்லாத வேலை.
நம்ம வாழ்க்கைக்கு நாம பொருளை குடுத்துக்கலாம். நமக்குள்ள என்ன ஆற்றல் இருக்குன்னு நாம உணரமுடியும். நாம செய்யவேண்டிய செயல் என்னன்னு தெரிஞ்சுகிட முடியும். அதைத் தெரிஞ்சு முழுமூச்சா அதைச்செய்றதுதான் நிறைவும் மகிழ்ச்சியும். அதுதான் நாம நம்ம வாழ்க்கைக்கு அளிக்கிற அர்த்தம். என் வாழ்க்கைக்கு அப்டி ஒரு அர்த்தத்தை என்னோட 26 வயசிலே நான் தான் குடுத்தேன். நாப்பதாண்டுகளா அதுதான் என்னோட வாழ்க்கை.
நன்றி ஆனந்தவிகடன்
பேட்டி நா.கதிர்வேலன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

