கவிஞனின் ஏரிக்கரையில்…
வேர்ட்ஸ்வெர்த் மேல் அருண்மொழிக்கு மோகம் அதிகம். சின்னவயதிலேயே உருவானது. அவரது இயற்கை வர்ணனைக் கவிதைகளை திரும்பத் திரும்ப படிப்பாள். சம்பந்தமில்லாமல் எல்லா உரைகளிலும் வேர்ட்ஸ்வெர்த் நுழைவதும் உண்டு. தஞ்சை என்னும் ‘தண்ணியில்லாக் காட்டில்’ பிறந்து வளர்ந்ததனால் உருவான பற்று என்று நான் சொல்வதுண்டு. நானெல்லாம் வேர்ட்ஸ்வெர்த்துக்கே பாடம் கற்பிக்கும் தகுதிகொண்டவன், எங்கள் ஊர் அப்படி என்பேன்.
வேர்ட்ஸ்வெர்த் வாழ்ந்த நகருக்கு வரும் திட்டமும் அருண்மொழியும் லண்டன் முத்து என சான்றோராலும், காட்ஜெட் முத்து என பகைவர்களாலும் அழைக்கப்படும் முத்துக்கிருஷ்ணன் கேசவனால் உருவாக்கப்பட்டது. முத்து என்னிடம் ‘அக்கா லண்டன் வராங்க. அப்டியே லேக் டிஸ்ட்ரிக்ட் போறாங்க… நீங்களும் வரலாம்’ என்று சொன்னபோது நானும் சேர்ந்துகொள்ள முடிவெடுத்தேன். காவியம் எழுதிக்கொண்டிருந்தேன். நடுவே ஓர் ஓய்வு என்பது நாவலில் இருந்து விலக்கிவிடும் என்ற சந்தேகமும் இருந்தது. ஆகவே கடந்த சில நாட்களாக வீட்டிலேயே அமர்ந்து வெறிகொண்டவனாக எழுதி 25 அத்தியாயம் முன்னால் சென்றுவிட்டேன்.
ஆனாலும் விட்டுவிடக்கூடாது. ஆகவே ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததுமே இரண்டு அத்தியாயங்களை கூர்ந்து வாசித்து திருத்துகிறேன் – உண்மையில் என்னால் எதையும் திருத்த முடியாது. வாசிப்பதுதான் வழக்கம். இதில் சில அத்தியாயங்களை எழுதும்போது அவற்றின் கசப்பால் நானே வேகமாகக் கடந்து சென்றிருக்கிறேன். முழுக்க எழுத்துப்பிழைகள். விஷ்ணுபுரம் பதிப்பகம் மீனாம்பிகைதான் சரிசெய்து கொண்டிருக்கிறார். இந்நாவலுக்குள் இருந்து வெளிவராமலேயே திரும்பி வந்துவிட்டேன் என்றால் வெற்றி என்று பொருள்.
விந்தையான சவால்தான். இந்த பகுதி பிரித்தானியாவின் வடக்கே. ஆகவே ஆர்ட்டிக் காற்று நேரடியாகவே வீசும் இடம். லண்டனைவிட ஓரிரு டிகிரி குளிர் அதிகம். ஆண்டில் பெரும்பாலும் எல்லா நாட்களிலும் மழை. இது வசந்தகாலம். ஏரிகள், பெரும் புல்வெளிகள், மழைமுகில் திரண்ட வானம் எல்லாமே ஒரு மங்கலான ஒளியில் சுடர்விட்டுக்கொண்டிருக்கின்றன. நான் அவற்றில் என்னையறியாமலேயே ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் நாவலின் கடும்கசப்பை தக்கவைக்கப் போராடிக்கொண்டும் இருக்கிறேன். அவ்வப்போது மறந்துவிட்ட அரிய ஏதோ நினைவுக்கு வருவதுபோல, எவரோ ஓங்கி ஓர் அடி போடுவதுபோல மித்ரன் காட்சனின் நினைவும் வந்துசெல்கிறது. இதுவும் வாழ்க்கையின் ஒரு சுவை, ஒரு காலகட்டம் போல.
இந்த ஊரில்தான் வேர்ட்ஸ்வெர்த் பிறந்தார். விண்டர்மீர் (Windermere) என்னும் ஏரியின் பெயர்தான் இந்த ஊருக்கும். வேர்ட்ஸ்வெர்த்தும் குடும்பமும் நீண்டநாட்கள் வாழ்ந்த Dove Cottage என்னும் வீடு இங்கே அருகே Grasmere என்னும் இடத்தில் உள்ளது. இந்த ஏரிக்கரை ஒரு சுற்றுலா மையம். ஆனால் மொத்தச் சுற்றுலாவுமே வேர்ட்ஸ்வெர்த்தின் நினைவை ஒட்டியே உள்ளது. அவர் வாழ்ந்த வீடு, அவர் நடந்த இடம், அவர் அமர்ந்த உணவகம் என அவர் நினைவை இந்த ஊரே சொல்லிக்கொண்டிருக்கிறது. பளிச்சிடும் நீர் நிறைந்த ஏரிகளும், கண்நிறைக்கும் பசுமையலைகளான புல்வெளிகளும் இன்னும் தீவிரமாக அவரைப்பற்றிச் சொல்கின்றன.
வழக்கமாக பயணங்களில் தீவிரமான அலைச்சல்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள், சந்திப்புகள், வெவ்வேறு இடங்களுக்குச் செல்லுதல். தூங்குவதும் விழிப்பதும் மட்டுமே நமக்குரிய பொழுதுகள். அது ஒரு வகையான கொண்டாட்டம். இந்தப் பயணத்தில் ஒன்றுமே செய்யாமல் ஒரு வாரம் என்பதுதான் அருண்மொழியின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆகவே இந்த ஏரிக்கரையில் , மிதமான குளிர் கொண்ட வசந்தகாலச் சூழலில் பெரும்பாலும் அமைதியாக நாட்கள் செல்கின்றன.
இந்நாட்களில் ஒரு புதியவழக்கத்தை தொடங்கியிருக்கிறேன். ஊரில் இருக்கும்போதே மீண்டும் கையால் எழுதத்தொடங்கினால் என்ன என்னும் எண்ணம் எழுந்தது. நல்ல காகிதம், பேனா ஆகியவற்றை பற்றிய இழப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எழுதும்போது உருவாகும் அகக்கூர்மை தட்டச்சிடும்போது அமைவதில்லையோ என்னும் எண்ணமும் உள்ளது. செல்லுமிடமெல்லாம் குறிப்பேட்டுடன் செல்வதும், அதைப்பற்றி ஏதேனும் எழுதிக்கொள்வதும் பழையகாலப் பயணிகளின் வழக்கம். அண்மையில் வாசித்த நூல் ஜெர்மானிய அறிவியலாளரும் சாகசப்பயணியுமான அலக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் பற்றிய இயற்கையை கண்டுபிடித்தல் என்னும் வாழ்க்கை வரலாறு. அதில் ஹம்போல்டின் குறிப்புகளை பற்றி வாசிக்கையில் ஒரு குறிப்பேட்டை கையில் வைத்திருக்க ஆசை எழுந்தது.
நாகர்கோயில் அலக்ஸாண்டிரியா பிரஸ் ரோடு கடைக்குச் சென்று ஒரு சின்ன டைரி வாங்கி வந்தேன். ஆனால் இங்கே வந்தபோது நண்பர் டாக்டர்.பார்கவி (ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்) இரண்டு அழகிய டைரிகளை அளித்தார். ஒன்றில் நாட்குறிப்புகள் எழுதத் தொடங்கினேன். இன்னொன்றில் சும்மா கவிதைகள். எனக்கான கவிதைகள், வெளியிடுவதற்கானவை அல்ல, பெரும்பாலும் வெளிவர வாய்ப்பில்லை, ஆகவே எவரும் பீதி அடையவேண்டியதில்லை.
இந்த வகையான தங்குமிடங்களை இப்போது அதிகம் விரும்ப ஆரம்பிக்கிறேன். ஓர் இடத்திற்குச் சென்று அந்த இடத்திலேயே ஒரு குட்டி ‘ரொட்டீன்’ உருவாவது. அந்த இடம் நாம் ‘சென்றுபார்த்த’ இடமாக அன்றி நாம் ‘வாழ்ந்த’ இடமாக ஆவது. இந்த இடம் அப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. கவிஞன் மறைந்து இருநூறாண்டுகள் ஆகின்றன. ஆனால் அவனுடன் இங்கே இந்த ஏரிக்கரையில் தங்கமுடிகிறது. அவனுடைய உதிரி வரிகள் அவ்வப்போது கடல்மணலில் அரிய கிளிஞ்சல்கள் போல தட்டுப்படுகின்றன. சிலசமயம் அவற்றை தொட்டு எடுப்பதற்குள் மறைந்தும் விடுகின்றன.
ஓர் ஏரிக்கரையில், ஒரு மலையடிவாரத்தில் தொடர்ச்சியாகத் தங்குவது என்பது ஒருவகையான ‘மலையை விழுங்கும்’ அனுபவம் என தோன்றுகிறது. அந்த மாபெரும் இருப்பு கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ள தொடங்குகிறது. நாம் அதன் அகவடிவம் ஒன்றை நமக்காக உருவாக்கிக்கொள்கிறோம். நாம் அதை சுருக்கிக்கொள்ளாமல் இருந்தால் நமக்குள்ளும் அதன் பேருருவம் நிலைகொள்ளத் தொடங்குகிறது. சிற்றலைகளுடன் குளிர்ந்துகிடக்கும் ஓர் ஏரியை எனக்குள் தேக்கியபடி இங்கே அமர்ந்திருக்கிறேன். அவ்வாறு சில நாட்களுக்கு முன் கோதாவரியை வைத்துக்கொண்டு பைத்தானில் அமர்ந்திருந்தேன்.
வேர்ட்ஸ்வெர்த் இங்கே நீண்டகாலம் தங்கியிருக்கிறார். அவருடைய தங்கை டோரதி அவருடனேயே நீண்டகாலம் வாழ்ந்தவர். வேர்ட்ஸ்வெர்த் கவிதைகள் அளவுக்கே டோரதியின் நாட்குறிப்புகளும் கவித்துவமானவை. இயற்கையை அதற்கப்பாலுள்ள பிறிதொரு மெய்மையின் வெளிப்பாடாகக் கருதும் ஆன்மிகப்பார்வை கொண்டவை வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகள். கற்பனாவாதம் (Romanticism), இயற்கைவாதம் (Naturalism)என்னும் இரண்டு இயக்கங்களின் தோற்றுவாய் அவரும் அவர் நண்பர் கூல்ரிட்ஜும் என்றும் சொல்லப்படுகிறது. ஒன்று அழகியல் இயக்கம். இன்னொன்று அதன் ஆன்மிகசாரமாக அமைந்த தரிசனம்.
வேர்ட்ஸ்வர்த்தின் இல்லத்திற்கும் நினைவகத்திற்கும் சென்றோம். வசதியான வீடுதான். இந்த வசந்த காலத்திலேயே இல்லத்திற்குள் விளக்கு தேவையாக இருக்கிறது. அப்படியென்றால் ஆண்டு முழுக்க அரை வெளிச்சமே இருந்திருக்கும். அல்லது அரையிருள். ஆகவேதான் அவருக்கு மேகம் திறந்து மண்ணில்கொட்டும் வசந்தகால வெளிச்சம் தெய்வத்தின் அருளென்றே தோன்றியிருக்கிறது. வேர்ட்ஸ்வெர்த் கவிதைகளை மட்டும் வைத்துப் பார்த்தால் நீங்காத வசந்தம் வாழும் நிலம் இது.
நண்பர் லண்டன் முத்து எங்களுடன் பல ஆண்டுகளாக பயணங்களுக்கு வருபவர். 2010 வாக்கில் நாங்கள் சென்ற அருகர்களின் பாதை பயணத்திற்காக ஜெர்மனியில் இருந்து வந்து கலந்துகொண்டார். இப்போது அந்தப்பயணமெல்லாம் வரலாற்றின் பகுதியாக ஆகிவிட்டது. பயணத்தோழர்கள் அனைவருமே வாசகர்களுக்கு நாவல்களின் கதாபாத்திரங்கள் போல அறிமுகமானவர்களாக ஆகிவிட்டார்கள். அவருடன் அவர் மகன் சித் வந்திருக்கிறார். முத்து ஒரு சாகசவிரும்பி. ஏரியில் படகோட்டுவது, மலைகளில் ஏறுவது என பலவகை செயல்பாடுகள் உண்டு. (அவரை நான் கம்போடியா பயணத்தில் நீச்சல்போட்டியில் இரண்டு முறை வென்றேன் என்பதும் வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டிய ஒன்று.)
லண்டன் வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத்தான் இங்கே வந்தோம். அங்கே இரண்டுநாட்கள் வீட்டில் நண்பர் கோமதி இல்லத்தில் தங்கினோம். கோமதி எழுத்தாளரும்கூட, லண்டனில் இருந்து வெளிவரும் இதழ்களில் எழுதுகிறார். ஒருநாள் ஷேக்ஸ்பியரின் ஊரான ஸ்டிராட்போர்டு ஊரில் நண்பர்கள் பிரசாத் – அனிதா இல்லத்தில் தங்கினோம். அங்கே நண்பர்கள் வந்து சந்தித்தார்கள். கூட்டமாக பேசியபடியும் சிரித்தபடியும் அலைந்துகொண்டிருந்தோம். எப்போதும் என் வாழ்வின் கொண்டாட்டங்களில் முதன்மையானவை பயணங்கள், நண்பர்களுடன் இருப்பது ஆகியவை. வாழ்க்கையையே ஒரு பயணத்தில் இருந்து அடுத்தது என்றுதான் வகுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் முடிந்ததும் ஜூனிலேயே ஒரு சிக்கிம் பயணம். ஜூலையில் ஐரோப்பா பயணம். அக்டோபரில் அமெரிக்கா பயணம்…
இந்தப் பயணத்தில் ஒரு செவ்வியல் கவிஞனின் ஊரில் இருந்து ஒரு கற்பனாவாதக் கவிஞனின் ஊருக்கு வந்திருக்கிறோம். நான் இதுவரை சென்ற கவிஞர்களின், எழுத்தாளர்களின் ஊர்களை நினைவுகூர்கிறேன். ஷேக்ஸ்பியரின் ஊருக்கு நான் செல்வது இரண்டாவது முறை. எமர்சனின் வால்டோ போல எக்காலமும் அழியாத உணர்வுகளாக என்னில் நிறைந்திருக்கும் சில ஊர்கள் உண்டு. அவற்றைப் பற்றி மட்டும் ஒரு தனிநூல் எழுதலாம் என்னும் எண்ணம் உருவாகிறது. நினைவுகளையும் தரவுகளையும் திரட்டிக்கொண்டு எழுதவேண்டும்.
இன்னும் மூன்றுநாட்கள் இங்கே இருப்போம். இதே ஏரியைப் பார்த்தபடி. இப்போது பார்கவியும் அவர் அம்மாவும் உடனிருக்கிறார். இன்னும் ஓரிரு நண்பர்கள் வரக்கூடும். இந்நாட்கள் அருண்மொழிக்குரியவை. அவள் தனக்கான ஒரு மனநிலையில் சிறுமியைப்போல கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். வேர்ட்ஸ்வெர்த் வரிகளை மனப்பாடம் செய்து சொல்லிக்கொள்வது. தனக்குத்தானே சிரித்து மகிழ்வது. கவிதையை அப்படி ரசிக்கும் மனநிலையை வாழ்க்கை முழுக்க நீட்டிக்கமுடியும் என்றால் எல்லா நாட்களும் இனியவைதான். அப்படி யோசிக்கும்போது நல்ல வாசகர் இலக்கியத்தின் படைப்பாளியை விட அதிருஷ்டம் கொண்டவர் என்று தோன்றுகிறது. படைத்தலின் அவஸ்தைகள் இல்லை, இன்பம் மட்டுமே அவருக்கு உள்ளது.
I wandered lonely as a cloudThat floats on high o’er vales and hills,When all at once I saw a crowd,A host, of golden daffodils;Beside the lake, beneath the trees,Fluttering and dancing in the breeze.நான் உடனிருக்கிறேன். கூடுமானவரை உள்நோக்கி திரும்பியபடி. அமைதி என்பது மௌனமாகச் சிதறிப்பரந்து கொண்டிருத்தல் என்றால் இது அதுதான். அமைதி என்பது எண்ணியிராத கணத்தில் சட்டென்று குவிதல் என்றால் இது அதுவும்தான். முகில்களைப்போல தனித்து அலைவது என்று கவிஞர் சொல்வது இதைத்தான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

