பசுமையின் பொருள்
என்னிடம் பொதுவாக சினிமாக்காரர்கள் கேட்பதுண்டு, “சென்னையிலே ஏன் சார் தங்க மாட்டேங்கிறீங்க? நம்ம தொழில் இங்கதானே?” நான் அதற்குப் பதில் சொல்வேன். “ஆமா, ஆனா தொழில்மட்டும்தான் இங்க” நான் வாழ்வது குமரிநிலத்தில். அங்கிருந்து நான் செல்லுமிடங்களில் எல்லாம் திரும்பத் திரும்பக் கண்டடைவதும் என் நிலத்தையே. விஷ்ணுபுரம் மட்டும் அல்ல, கொற்றவை மட்டும் அல்ல, வெண்முரசே கூட பெரும்பாலும் இந்நிலம் உருவாக்கிய என் அகநிலத்திலேயே நிகழ்கிறது.
இந்நிலத்தில் இருந்து என்னை விலக்காமலிருப்பது எது என எண்ணிப்பார்க்கிறேன். முதன்மையாக பசுமைதான். பசுமையை நான் கவனிக்காமலிருக்கலாம், ஆனால் மானசீகமாகப் பசுமைக்குள்ளேயே இருந்துகொண்டிருக்கிறேன். அது பசுமை இல்லாத நிலத்திற்குள் நுழையும்போதுதான் எனக்குத் தெரிகிறது. ரயில் ஆரல்வாய்மொழியை கடந்ததுமே அந்த இழப்புணர்வு உருவாகிவிடுகிறது. எண்ணங்களில் நுணுக்கமாக ஒரு மாறுதல் அமைகிறது. அதை என்னால் விளக்கமுடியாது. ஏதோ ஒன்று.
நான் இதைப் பற்றி யோசித்ததுண்டு. 1976 ல் எட்டாம் வகுப்பு மாணவனாகிய நான் ஒரு பேச்சுப்போட்டியில் பரிசு பெற்று பாரதிவிழாவுக்காக எட்டையபுரம் சென்றபோதுதான் ‘மையத்தமிழக’ எல்லைக்குள் நுழைந்தேன். இருபுறமும் வெறிச்சிட்டு காய்ந்துகிடந்த நிலம் என்னை அழச்செய்தது. என்னவென்றே தெரியாமல் கண்ணீர்விட்டபடி அதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அந்த மனநிலை இன்றும் அப்படியே நீடிக்கிறது.
நான் ஆரல்வாய்மொழி கடந்தால் அதன்பின் தென்தமிழகத்தில் எங்குமே செல்ல விரும்புவதில்லை. கூடுமானவரை தவிர்ப்பேன். முடிந்தால் மழைக்காலத்தில் மட்டும் செல்வேன். விதிவிலக்கான இடங்கள் தென்காசி, குற்றாலம் அல்லது தேனி, கம்பம். ஈரோடு, கோவைப் பகுதியை பரவாயில்லை எனலாம். ஊட்டி பிடிக்கும் என்றாலும் அங்கே செல்லும் பாதையின் சுழற்சி என்னை களைப்பாக்கிவிடும். அங்குள்ள குளிர் வெளியே இருக்கும் அனுபவத்தையே இல்லாமலாக்கிவிடுகிறது என்றும் தோன்றுவதுண்டு.
நான் பிறந்து வளர்ந்த தெற்கு குமரிமாவட்டம் பசுமைமாறாக் காடுகள் சூழ்ந்தது. இதை எழுதிக்கொண்டிருக்கும் மே மாத நடுவில் அங்கே பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆண்டு முழுக்க மழை உண்டு. வயல்கள் உலர்வதற்கான பருவம் இல்லை என்பதனாலேயே சிலவகை நெல் அங்கே விளையாது. வீடுகளுக்கு மேல் மரங்கள் கவிந்து காட்டுக்குள் குடியிருக்கும் உணர்வே இருக்கும். நான் பச்சை நடுவிலேயே பிறந்து வளர்ந்தவன். அப்படியென்றால் பசுமை சலிப்படையச் செய்யாதா என்ன? விசித்திரமானவைதானே நம்மை கூடுதலாகக் கவரவேண்டும்?
உண்மையில் அப்படி இல்லை. பச்சை எந்நிலையிலும் சலிப்பதில்லை. நான் பசுமையான காட்சிகள் கொண்ட திரைப்படங்களைத்தான் இளமையிலேயே விரும்பியிருக்கிறேன். பசுமையான காட்சிகள் கொண்ட ஓவியங்களில்தான் ஈடுபாடு. பசுமையை சித்தரிப்பதனாலேயே வங்கநாவல்களையும் மலையாள நாவல்களையும் விரும்பியிருக்கிறேன். சங்கப்பாடல்களில் பாலைபாடிய பெருங்கடுங்கோ ஒரு பெருங்கவிஞன் என நினைக்கிறேன். ஆனாலும் குறிஞ்சியின் கபிலனே எனக்கான கவிஞன்.
பசுமை என்பது வண்ணம் அல்ல. உயிரின் வெளிப்பாடு அது. அதை நம்முள் இருந்து ரசிப்பது நிறங்களை ரசிக்கும் கலைமனம் அல்ல, நம்முள் வாழும் ஆதிவிலங்கு. பசுமை என்பது அதற்கு உணவு. அடைக்கலம். செழிப்பு. பசுமையான நிலங்களில் நாய்கள் களிப்புற்று கூத்தாடுவதைக் கண்டிருக்கிறேன். மாடுகளுக்கு அவை உணவு. நாய்களுக்கு அப்படி ஏதுமில்லை. அவை பசுமையென்ற வண்ணத்தை அறிவதே இல்லை. அவை அறிவது உயிரின் பொலிவை மட்டுமே.
கோடையின் உச்சியில் இன்று காலைநடை செல்கிறேன். சென்னையில் இருந்து சைதன்யா ‘இங்கே தீப்பற்றி எரிவதுபோல் இருக்கிறது’ என்றாள். நான் கண்ணைநிறைக்கும் பெரும்பசுமை கொண்ட இடங்கள் வழியாக பார்வதிபுரத்தில் உலவிக்கொண்டிருக்கிறேன். பசுமை அருகே நின்று அதன் மேல் மானசீகமாகக் கவிழ்கிறேன். ஒரு புள்ளாக அதன்மேல் பறக்கிறேன். ஒரு மாடாக அதன்மேல் மேய்கிறேன்.
இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து செல்லவிருக்கிறேன். கவிஞர் வேர்ட்ஸ்வர்த் பிறந்த லேக் டிஸ்ட்ரிக்டுக்கு. (Cumberland ,Cumbria). அங்கே ஒருவாரம் ஓய்வு. இங்கிலாந்தின் முதன்மைச் சிறப்பென நான் எண்ணுவது அது மொத்தமாகவே ஒரு ‘வறனுறல் அறியாச் சோலை’ என்பதுதான். ஆண்டு முழுக்க மழை. அதிலும் ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் மழை இல்லாத பொழுதே இல்லை. மூர்க்கமாக வளர்ந்த புல் பச்சைநுரை போல பரவிய வெளிகளில் மழையில் ஊறியபடி நின்று பசுக்கள் மேய்ந்துகொண்டிருக்கும். ஈரமாகச் சொட்டிக்கொண்டே இருக்கும் கூரைகளுடன் வீடுகள்.
பிரிட்டனின் இருண்ட குளிர்ந்த கிராமக்காட்சிகள் இம்ப்ரஷனிச ஓவியங்கள் போலிருக்கும். அங்கிருந்துகொண்டுதான் வேர்ட்ஸ்வெர்த் தன் கவிதைகளை எழுதியிருக்க முடியும். அங்கேதான் இயற்கையை தெய்வத்தின் இடத்தில் வைக்கும் இயற்கைவாத தரிசனங்கள் உருவாகியிருக்கமுடியும். பசுமையில் இருந்து மேலும் பசுமைக்கு ஒரு பயணம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

