குற்றமுகங்கள் 11 பட்லர் லெஸ்லீ
பட்லர் லெஸ்லீ என்று அழைக்கப்பட்ட ராமேந்திரன் மதராஸ் ராஜஸ்தானியின் பகுதியாக இருந்த கண்ணனூரில் வாழ்ந்தவர். கல்கத்தாவிற்குச் செல்லும் போது அவரது பெயர் லெஸ்லீ. மதராஸில் அறை எடுத்து தங்கும் போது அவரது பெயர் சுகுமார். மூன்று பெயர்களில் வாழ்ந்த அவர் இறந்த போது வயது 39.

ஜேனி என்ற ஆங்கிலோ இந்தியத் தாயிற்கும் வணிகரான வி.வி.சந்திரனுக்கும் பிறந்த மகன் என்கிறார்கள். விவிசியின் குடும்பத்தினர் இதனை ஏற்கவில்லை. காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விதை எங்கே விழுந்து முளைத்தாலும் அதற்கு மரம் பொறுப்பாகாது என்றார்கள்.
ராமேந்திரனுக்குச் சிறுவயது முதலே சரியாகப் பேச்சுவரவில்லை. ஆகவே எதையும் எழுதிக்காட்டச் செய்தார். இதற்காக எப்போதும் பென்சிலும் காகிதமும் வைத்திருந்தார். எட்டு வயதில் தந்தையால் பாரக்பூர் அழைத்துச் செல்லப்பட்ட ராமேந்திரன் அங்கே ராணுவ அதிகாரி வீட்டில் சில ஆண்டுகள் பட்லராகப் பணியாற்றியிருக்கிறார். அதனால் பட்லர் லெஸ்லீயாக மாறினார்.
1886 ஆம் ஆண்டு ராமேந்திரன் மீது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடுக்கபட்டது. அதன்படி அவர் ஆங்கிலேயர்களிடம் சாராயம் மற்றும் கள் விற்பதற்கான உரிமை பெற்றதாகவும் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக் கள்ளவணிகம் செய்ததோடு அரசிற்குச் செலுத்த வேண்டிய இருபத்திமூன்றாயிரம் ரூபாயைச் செலுத்தமாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு வாதடுவதற்காகப் ராமேந்திரன் மும்பையிலிருந்து வழக்கறிஞர் கே.சி.மசானியை வரவழைத்தார். நாலரை ஆண்டுகள் நடைபெற்ற அந்த வழக்கில் ராமேந்திரன் மீது தவறில்லை என்றும் அவர் அபாரதமாக ஆயிரம் ரூபாய்க் கட்டினால் போதும் என்று தீர்ப்பளிக்கபட்டது கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. அத்தோடு ராமேந்திரன் கவர்னர் வரை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதையும் தெளிவாக்கியது.
ராமேந்திரன் மாதம் ஒருமுறை வங்காளத்திற்குப் பயணம் செய்துவந்தார். அவர் கிழக்கு இந்திய கம்பெனியின் அபின் வணிகத்திற்கு ரகசியமாக உதவினார், அதன் காரணமாகவே அவருக்கு நிறையப் பணம் கிடைத்தது என்று சொல்கிறார்கள். கல்கத்தாவில் அவரது பெயர் லெஸ்லீ. பத்திரிக்கையாளர். ஒரே விடுதியில் ஒரே அறையில் தான் எப்போதும் தங்குவது வழக்கம்.
ராமேந்திரன் தனது வாழ்நாள் முழுவதும் நிலம் வாங்கிக் கொண்டேயிருந்தார். எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலங்களை வாங்கினார் என்று முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இவ்வளவு வாங்க எப்படிப் பணம் கிடைத்தது. யாரை வைத்து எப்படி வாங்கினார் என்பது குறித்த விவாதங்கள் வழக்கின் போது பேசப்பட்டன. அவரது குடும்பத்திற்கே அந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.
ராமேந்திரன் நிலம் மற்றும் வீடுகள் வாங்குவதற்கென்றே பனிரெண்டு பேர் கொண்ட குழுவை வைத்திருந்தார். அவர்கள் அபயகாரிகள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யாருக்கு கடன் கொடுத்தால் எளிதாக நிலத்தைக் கைப்பற்ற முடியும் என அறிந்திருந்தார்கள். பழைய திவான்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள். கோவில் நிலத்தினைப் பெயர் மாற்றித் தனதாக்கிக் கொண்டார்கள். கணவனை இழந்த பெண்களுக்குச் சொந்தமான நிலத்தைச் சொற்ப பணத்தில் பெற்றார்கள். ஒரு பசுவை விலைக்கு வாங்கிவிட்டுப் பசு கட்டப்பட்டிருந்த நிலமே தங்களுடையது எனப் பத்திரம் பதிந்து கொண்டார்கள். இப்படியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாகியது.

ராமேந்திரனுக்குச் சொந்தமாக 121 வீடுகள் இருந்தன என்கிறார்கள். தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதே நேரம் உள்ளூரில் மரியாதை வேண்டும் என்பதற்காகத் தாணுப்பிள்ளை குடும்பத்து பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தம் 32 படுக்கைகளுடன் 20 குளியலறைகள் கொண்ட பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தார்.
இரண்டு மனைவிகள் மூலமாக அவருக்குப் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் நால்வர் பிறந்த சில மாதங்களில் இறந்து போனார்கள். ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் ராமேந்திரன் வாழ்ந்து வந்தார். அதிகமாக நிலமுள்ளவன் ஆயிரம் கைகள் கொண்டவனாகப் பலம் பெறுகிறான் என்று ராமேந்திரன் நம்பினார். எந்த ஊரில் இடம் வாங்குகிறாரோ அதன் பெயரை தனது உடம்பில் பச்சைகுத்திக் கொண்டார். அவரது முதுகு, கைகள், தொடை, கழுத்து என எங்கும் எழுத்துக்களாக இருந்தன.
இவ்வளவு சொத்திற்கு அதிபதியாக இருந்த ராமேந்திரனுக்குத் திடீரென ஒரு நாள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. எதைச் சாப்பிட்டாலும் குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. அவரால் வாழைப்பழத்தைக் கூடச் சாப்பிட முடியவில்லை. இதற்கான வைத்தியம் செய்வதற்காக அவர் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களிடம் சென்றார். அவர்கள் கொடுத்த மருந்தால் சற்று குணமானது. ஆனால் காகம் சாப்பிடுகிற அளவைப் போல உணவைக் கொறிக்க முடிந்ததேயன்றி வயிறு நிறையச் சாப்பிட முடியவில்லை.
ஆங்கில வைத்தியம் செய்து கொள்வதற்காக அவர் மதராஸிற்குச் சென்றார். டாக்டர் டெகார்ட்டிடம் சிகிட்சை எடுத்துக் கொண்டார். இரண்டரை மாத சிகிட்சைக்குப் பிறகு நலமடைந்து சொந்த ஊர் திரும்பினார்.
அதன் மறுநாள் அவரது வீட்டில் பெரிய விருந்து நடைபெற்றது. நூற்றியெட்டு வகைப் பதார்த்தங்கள் அதில் இடம்பெற்றன. இலையின் முன்னால் அமர்ந்த போது ராமேந்திரனுக்குத் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அவர் ஒரு வாய்ச் சோறு சாப்பிட்டிருப்பார். அப்படியே மயங்கி இலையில் விழுந்து இறந்து போனார்.
ராமேந்திரன் சொத்துக்கு அவரது இரண்டு மனைவியர் மற்றும் உறவினர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். வழக்கு தொடுத்தார்கள். கோர்ட் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலம் அவரது பெயரில் இருந்த்து எனக் கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டது. அந்தக் கணக்கெடுப்பிற்கு முன்பாகவே அவரது அபயகாரிகள் பத்திரங்களைத் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள். பல வீடுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கே சொந்தமானது.
ராமேந்திரன் பலரையும் ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்திய விபரம் வழக்கின் போது தெரிய வந்தது. அதில் மூன்று கொலைகளும் சம்பந்தப்பட்டிருந்தன ஆகவே அவரது சொத்து முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
நூறு வீடுகளின் அதிபதியாக இருந்த ராமேந்திரனின் பிள்ளைகள் குடியிருக்க வீடின்றி வீதிக்கு வந்தார்கள். அதில் ஒரு பையன் மனநிலை பாதிக்கபட்டு கிழிந்த சட்டையோடு பஜாரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.
ராமேந்திரனுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. அவர் ஆடம்பரமாக வாழ்ந்த வாழ்க்கையை விடவும் கையில் சோற்றோடு இறந்த நிகழ்வு தான் மக்கள் மனதில் அழியாமலிருந்தது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

