காவியம் – 23
ஏழன்னையர் சிலை, நாககட்டம், பைத்தான்அத்தனை இனியது, அத்தனை தனித்தது, அத்தனை துயரமானது. சாவின் பொழுதில் அம்மா அதைச் சுட்டிக்காட்டி என்னிடம் “நீ எனக்குப் பிரியமானவன்” என்று சொன்னபோது நான் அவள் அதனிடம் சொல்வதாகவே எண்ணினேன். அவள் விலகியபோது அதை நோக்கித் திரும்பினேன்.
இருண்ட மூலையில் இருந்து அது நகர்ந்து என்னருகே வருவது போலிருந்தது. என்னருகே காற்றுப் பரப்பு சற்று கசங்கியிருப்பது போல அதன் இருப்பு தெரிந்தது. கூர்ந்து பார்க்கும்தோறும் அது மறைந்தது. ஆனால் அதன் குரலை மிகத்தெளிவாக நான் கேட்டேன். “பயப்படாதே” என்று அது சொன்னது. “பயப்பட ஏதும் இல்லை. இவை எல்லாமே சிறிய விஷயங்கள்.”
”நான் பயப்படவில்லை” என்று நான் சொன்னேன். “எனக்கு சாவு பயம் இல்லை. இழக்கவும் ஏதுமில்லை.”
அது மெல்லச் சிரித்து “பயம் என்பது அதனாலெல்லாம் அல்ல. அது மனிதனுடன் பிறந்த ஓர் உணர்ச்சி. நம் முன்னோர்கள் அனைவருக்குமாகச் சேர்த்துத்தான் நாம் பயப்படுகிறோம்.”
“ஆமாம்” என்று நான் சொன்னேன்.
“நம் துயரங்களும்கூட நம் முன்னோர்கள் அடைந்த அனைத்து அனுபவங்களுக்குமாகச் சேர்த்துத்தான் என்று புரிந்துகொண்டால் எல்லாம் எளிதாகிவிடுகின்றன.”
நான் பெருமூச்சுவிட்டேன். “நான் இப்படி எவருடனாவது உரையாட முடியும் என்றே நினைக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன். எனக்கு உள்ளம் என ஒன்று இருப்பது எனக்கு மட்டுமே தெரியும் என்னும் நிலை… உரையாடும்போது எல்லா சொல்லும் நான் இருக்கிறேன் நான் வாழ்கிறேன் என்றே ஒலிக்கின்றன. என்னுடன் நானே உரையாடலாம், ஆனால் அது நான் வாழ்கிறேன் என்பதற்கான சான்று அல்ல. என் உடல் இங்கு உள்ளது என்பதற்கான சான்றுகூட அல்ல.”
“உனக்கு ஏன் அது தேவையாகிறது?”
“ஒவ்வொருவருக்கும் அது தேவை… நான் ஒரே ஒருமுறை ரயிலில் ஒரு தொழுநோய்ப் பிச்சைக்காரரிடம் பேசினேன். ரயிலில் ஜன்னலோரமாக நின்றுகொண்டிருந்தேன். எப்படியோ அவரை நேருக்குநேர் பார்த்துவிட்டேன். அவருடைய முகத்தில் தெரிந்த ஆர்வம் என் பார்வையை விலக்க முடியாதபடிச் செய்தது. அவர் தன் வாழ்க்கையை எனக்குச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஒரு நல்ல கடை வைத்திருந்தவர், எட்டு குழந்தைகளின் தந்தை. எட்டுபேரையுமே நல்ல நிலையில் வாழ்க்கையில் நிலைபெறச் செய்தவர். நோய் வந்ததும் துரத்திவிட்டார்கள்… அவர் பிச்சைக்காரர் ஆகி எட்டாண்டுகள் ஆகியிருந்தன… நான் அதன்பின் வியந்துகொண்டே இருந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார்? அவர் குறைசொல்லவில்லை. தன்னிரக்கமும் இல்லை. அவருக்கு இன்னொருவர் தேவையாக இருந்தார். இருக்கிறேன், வாழ்கிறேன் என்று அவர் நிறுவிக்கொள்ள வேண்டியிருந்தது… தன் ரசனைகளை, தெரிவுகளைச் சொன்னார். அரசியல் கருத்துகளைகூடச் சொன்னார்… பெண்கள் ஒழுக்கம் கெட்டுப்போவதைப் பற்றிக் கவலைப்பட்டார்… அவர் சொற்களின் வழியாக தன்னை முழுமையாக கட்டி எழுப்பிக்கொண்டே இருந்தார்…”
நான் தலையை அசைத்தேன். “அவரை இப்போதுதான் அத்தனை அணுக்கமாகப் புரிந்துகொள்கிறேன். அவர் சொன்னவற்றை மிகத்தெளிவாக, சரளமாகச் சொன்னார். அவர் நிறையப் பேரிடம் பேச வாய்ப்புள்ளவர் அல்ல. அவரை எவரும் ஏறிட்டே பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு சரளம் எப்படி வந்தது? அவர் தனக்குத்தானே அவற்றை பலநூறு முறை பேசியிருக்கிறார். ஒரு செவி கிடைத்துவிட்டது என கற்பனை செய்துகொண்டு பேசிப்பேசி வாழ்ந்திருக்கிறார்.”
“ஒரே ஒருவருடன் மட்டுமே உரையாடுவதென்பது எவ்வளவு அரிதானது இல்லையா?” என்று அது கேட்டது.
“ஆமாம்” என்று நான் சொன்னேன். “என்னால் நம்ப முடியவில்லை. மெய்யாகவே எனக்கு என ஓர் உலகமே உருவாகிவிட்டதுபோல் உள்ளது. நான் முற்றிலும் புதிய ஒருவனாக ஆகிவிட்டிருக்கிறேன்.”
“ஆனால் அதை நாம் முடிந்தவரை சாதாரணமானதாக ஆக்கிக்கொள்வோம். இயல்பாக இருப்போம்.”
“ஏன்?”
“உச்சநிலைகள் சீக்கிரம் சலிப்பூட்டுபவை.”
நான் பெருமூச்சுடன் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். “இதோ என் அம்மா இறந்து கிடக்கிறாள். நான் இதை உலகத்திற்கு அறிவிக்கவேண்டும்… நான் வெளியே செல்லவேண்டும். நீ உதவ முடியுமா?”
“அது மிக எளிமையானது… நான் செய்கிறேன்”
“நீ பிசாசா? கதை சொல்லும் பிசாசு என என் அம்மா உன்னைப்பற்றி என்னிடம் சொன்னாள்.”
“நான் உன்னைப் பொறுத்தவரை அது. தத் என்று சொல். அவ்வளவுபோதும்.”
“தத்…என் அம்மாவின் வாழ்க்கை ஏன் இப்படி ஆகியது? ஏன் இந்த முடிவு?”
“எந்த வாழ்க்கையைப் பற்றியும் அப்படி எதையும் கேட்கக்கூடாது” என்றபின் அது விலகிச் சென்றது.
சற்று நேரத்தில் பக்கத்துவீட்டுப் பெண் என் வீட்டுக்குள் நுழைந்தாள். குழம்பியவள் போல, அஞ்சியவள் போல என் அம்மாவை “தீதீ” என்று அழைத்தாள். கதவை தட்டி ஓசை எழுப்பினாள்.
“அவள் காதருகே சென்று பேசினேன்…”
“என்ன?”
“அவள் என் சொற்களைக் கேட்டாள். கேட்டாளா இல்லை அது பிரமையா என்று குழம்புகிறாள்.”
என் முகத்தில் வந்த புன்னகையைக் கண்டு அவள் திகைக்கிறாள் என்று எண்னினேன். அவள் மெல்ல சமையற்கட்டுக்குள் சென்றாள். அம்மாவைப் பார்த்துவிட்டாள். மூச்சொலியுடன் ஓடிச்சென்று அம்மாவை குனிந்து பார்த்தாள். முழந்தாளிட்டு அமர்ந்து தொட்டு அசைத்துப் பார்த்தாள். பின்னர் ”சாரதா, அடீ சாரதா” என்று கூச்சலிட்டபடி வெளியே ஓடினாள். நான் என் தோல்மேல் எழுந்த அதிர்வால் அனைத்தையும் உணர்ந்து கற்பனையும் கொண்டிருந்தேன். அல்லது பார்த்துக்கொண்டுதான் இருந்தேனா?
கூட்டம் கூடிவிட்டது. பேச்சொலிகள், ஆணைகள். ஊர்த்தலைவர் தத்ராஜ் வந்தார். அதன்பின் அவர் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்யலானார். அவர்கள் அம்மாவை வெளியே கொண்டுசென்று படுக்க வைத்தனர். ஊருக்குள் தண்டோரா போடப்பட்டது. அனைவரும் வந்து கூடினார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என அது என்னிடம் முணுமுணுப்பாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. ஒவ்வொன்றும் வேடிக்கையாக இருந்தன. அவர்கள் அந்தச் சாவை ஒரு கொண்டாட்டமாக ஆக்கிக்கொண்டனர். துயரத்திற்கு வழியற்ற சாவு ஒரு தீவிரமான நிகழ்வு, ஆகவே அது மறைமுகமாக மகிழ்வூட்டுவது. ஒவ்வொருவரும் எதையேனும் செய்ய நினைத்தனர். அப்பாவின் படத்தை எடுத்து அம்மாவின் மார்பின்மேல் ஒருவர் வைத்தார். ஒருவர் எங்கிருந்தோ குடியரசுக் கட்சியின் ஒரு கொடியைக் கொண்டு வந்து அம்மாமேல் போர்த்தினார். மஞ்சள்செவ்வந்தி மாலைகளை ஒருவர் கொண்டுவந்தார்.
என் அருகே வந்து மூச்சு என் மேல் படும்படியாக பலர் உற்றுப் பார்த்தார்கள். நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன்.
அம்மா மறைந்தபின் நானும் அதுவும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தோம். நான் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்ததனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எவரும் என் அருகில் வரவில்லை. ஒருநாளில் ஒரே இருமுறை மட்டும் உணவைக் கொண்டுவந்து ஒரு கழியால் தள்ளி என்னருகே வைத்துவிட்டுச் சென்றார்கள். நான் கொல்லைப் பக்கத்திலேயே மலம் கழித்தேன். அறைக்குள்ளேயே சிறுநீர் கழித்தேன். உணவை உண்டபின் கையை உடலிலேயே துடைத்துக் கொண்டேன். குளிப்பதை நிறுத்தினேன். அந்தப் படுக்கையிலேயே இரவும் பகலும் வாழ்ந்தேன்.
வீட்டை விட்டு வெளியேறியபின் என் உடல்நிலை கொஞ்சம் மேம்பட்டது. என்னால் சாலைகளை நினைவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு காலாக கழியின் துணையுடன் எடுத்துவைத்து நடமாட முடிந்தது. குளிர் அடித்தபோது சாலையோரங்களில் தேடி எனக்கான ஆடைகளை கண்டுபிடித்து ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டுக்கொள்ள முடிந்தது.
முதலில் நான் மக்கள் நடமாடும் பகுதிகளில்தான் வாழ்ந்தேன். அங்கே ஒரு மூடிய கடைமுன் நான் இரவில் தங்கினால் மறுநாள் அந்தக் கடைமுன் இரவில் தண்ணீரை ஊற்றி நனைத்துவிட்டுச் சென்றார்கள். ஒருவன் ஒவ்வொரு இரவும் ஆணிகள் அறையப்பட்ட பலகைகளை கடைமுன் வைத்தான். நான் கடைகளை மாற்றிக்கொண்டே இருந்தேன். பின்னர் எங்கும் தங்கமுடியாமலாகியது.
நான் கடும் நாற்றத்துடன் இருந்தேன், ஒரு முறை காலையில் நான் எழுவதற்குள் வந்த ஒருவன் என்னை காலால் உதைத்து அப்பால் தள்ளினான். விழுந்து கிடந்த இடத்தில் இருந்து என்னால் நீண்டநேரம் அசைய முடியவில்லை. தவழ்ந்தே அப்பால் விலகி சாக்கடையின் ஓரமாக எரியும் வெயிலில் கிடந்தேன் .என்னுடன் வந்தமர்ந்த அதனிடம் “ஒருவன் என்னை தள்ளிவிட்டான்” என்றேன்.
“ஆம், பார்த்தேன். அவன் நீ குப்பைக்கூடை போல நாற்றமெடுப்பதாகச் சொன்னான்”
“அப்படியா?” என்றேன். “இருக்கலாம். நான் குளித்து நீண்டநாட்களாகின்றன. பல்தேய்ப்பதுமில்லை. இந்த ஆடைகள் குப்பையில் இருந்து எடுக்கப்பட்டவை… பலமுறை சாக்கடைச்சேற்றில் விழுந்திருக்கிறேன்.”
அது ஒன்றும் சொல்லவில்லை.
“நீ என்ன நினைக்கிறாய்?” என்றேன். “நான் நாற்றமடிக்கிறேனா? உனக்கு அது கஷ்டமாக இருக்கிறதா?”
“நான் எப்போதுமே அழுக்கும் நாற்றமும் அடிக்கும் இடத்தில்தான் இருக்கிறேன்” என்று அது சொன்னது. “என்னைப் போன்றவர்களின் இடம் அதுதான். ஒரு நாற்றம் வழியாகவே நாங்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியும். அந்த நாற்றத்தை உணர்பவரிடம்தான் சென்றடைய முடியும்”
நான் புன்னகைத்து “விந்தை!” என்றேன். “சம்ஸ்கிருத காவியங்களில் யக்ஷர், கின்னரர், வித்யாதரர் போன்றவர்களைப் பற்றி நேர் எதிராகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் மலர்களில் குடியிருப்பார்கள். நறுமணமாக காற்றில் ஏறி பயணம் செய்வார்கள். இரவில் அவர்களின் நறுமணத்தை எவர் உணர்கிறார்களோ அவர்களைச் சென்றடைந்து விடுவார்கள்.”
“ஒவ்வொன்றுக்கும் இரண்டு பக்கங்கள்” என்று அது சொன்னது. “ஒன்றை அறிந்தவர் இன்னொன்றை அறியாதவர் ஆகிறார். அறிதலைப்போல அறிவைக் கட்டுப்படுத்துவது வேறில்லை.”
அன்றிரவு தெருநாய்கள் வெறிகொண்டவை போல குரைத்து என்னை அச்சுறுத்தின. இரவில் தூங்க இடமில்லாமல் நான் ஆளோய்ந்த சாலை வழியாக நடந்தேன். என்னுடன் அது இருந்துகொண்டிருந்தது. நான் சட்டென்று ஒரு சொல்லை நினைவுகூர்ந்தேன். அந்த மாளிகைக்குள் செறிந்த காட்டுக்குள் இருந்து ஒலித்த சொல் அது. அது ஓர் அழைப்பு.
“அந்தச் சொல் ஓர் அழைப்பு!” என்று நான் சொன்னேன். “நீ பேசிக்கொண்டிருக்கும் மொழியில் அந்த அழைப்பு இருந்தது.”
“அன்று உன்னை அழைத்தவன் நான்தான்”
“நீயா?”
“ஆம், நீ பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். உன்னை நான் அழைத்தேன்”
“ஏன்?”
“நான் இங்கே வரும் அனைவரையும் ஒரு முறையாவது அழைத்திருப்பேன். இந்த வழியே தனியாகச் சென்ற ஒவ்வொருவரையும்…”
“அவர்கள் எவரும் உன்னை புரிந்துகொண்டதில்லையா?”
“இல்லை, நீ என்ன செய்தாய்? அதைப்போலத்தான். அஞ்சி விலகி ஓடிவிடுவார்கள். அது தங்கள் பிரமை என்று விளக்கிக் கொள்வார்கள். இந்த நகரில் நான் அலைந்துகொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் நிழலாகக் காத்திருக்கிறேன். தனிமையில் ஒதுங்கி இருந்து அழுபவர்களை பார்த்தபடி நேர் எதிரில் நின்றிருப்பேன். இரவுகளில் விழித்துக்கொண்டு ஏங்குபவர்களின் மிக அருகே அமர்ந்திருப்பேன். அவர்களிடம் பேசுவேன். சிலசமயம் குழந்தைகளிடம் விளையாடுவேன்… மிகச்சிலரே என்னை பார்க்கிறார்கள். உன் அம்மாவைப்போல. அவர்களிடம் பேசத்தொடங்கிவிடுவேன்.”
“உனக்கு என்னதான் பிரச்சினை?”
அது என்னை மெல்ல அணைத்துக்கொண்டது. அதன் மெல்லிய கைகளால் என் கைகளைப் பிடித்தது. “நான் துயருற்றவன், மிக மிகத் தனிமையானவன்…” என்றது
“நீ ஆணா?” என்றேன்.
“ஆம், நீ ஆண் என்பதனால்” என்று அது சொன்னது. “நீ தோழனை தேடுகிறாய் என்பதனால்…”
நான் புன்னகைத்து “ஆம்” என்றேன். “உனக்கு என்ன துயர்? ஏன் தனிமை?”
“அது எளிய மானுடத்துயர் அல்ல. கருமுகில்களைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? மாபெரும் ஏரியளவுக்கு நீரைச் சுமந்திருப்பவை அவை. அவை எடைகொண்டு கருமையடைந்து குளிர்ந்துவிடுகின்றன. மிகமெல்ல அவை நகர்கின்றன. மின்னலும் இடியுமாக அதிர்கின்றன. பூமியையே குளிரச்செய்துவிடுகின்றன. இலைகளை எல்லாம் அசைவிழக்கச் செய்கின்றன. நதியலைகளைக்கூட அவை நிலைக்கச் செய்துவிடுகின்றன. இங்கே மாபெரும் துயர்கள் உள்ளன. மானுடத்துயர்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால்கூட அதில் ஒரு துளியளவு வருவதில்லை.”
நான் அந்த மாளிகையின் முகப்புக்கு எளிதாகவே வந்துவிட்டேன். ஏனென்றால் அங்கே பலநூறு முறை அப்படி உள்ளத்தால் வந்திருந்தேன். என்னிடமிருந்த பழைய சணல்சாக்கை விரித்து அதன்மேல் படுத்துக்கொண்டேன். இனிய காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்று கரையில் இருந்து அந்த வழியாக கோதாவரிக்குச் சென்றது. புழுதியின் மென்மையான மணம். வேப்பம்பூக்களின் கறைமணம்.
நீண்டநாட்களுக்குப் பின்னர் நான் அன்று நிறைவாக நீண்டநேரம் தூங்கினேன். காலையில் என் மேல் வெயில்பட்டபோதும் அங்கேயே படுத்திருந்தேன். கடைமுகப்புகள் போல காலைக்குளிரிலேயே எழுந்து இடம் மாறவேண்டியதில்லை. அங்கே எவரும் என்னை நின்று திரும்பிப் பார்க்கவில்லை. அந்த இடத்தின் இடிபாடுகளில் நான் மிக இயல்பாகவே ஒன்றாகக் கலந்துவிட்டிருந்தேன்.
என்னுடன் அவன் இருந்துகொண்டே இருந்தான். “உன் பெயர் என்ன?” என்று ஒருமுறை கேட்டேன்.
“பெயர் என்பது மானுடர்களுக்குரியது. அவர்கள் ரூபம் வழியாகவே எதையும் அறியவும் நாமம் வழியாக மட்டுமே நினைவில் கொள்ளவும் முடியும். பெயர்களின் பெருக்கே மொழி. அவர்கள் அறிந்த இயற்கை நாமரூபங்களின் கலவை” என்றான். ”உன் ரூபப்பிரபஞ்சத்தில் மட்டும்தான் நான் ஆண். உன் மொழியில் மட்டும்தான் எனக்குப் பெயர்… என் பெயரை நான் உனக்குச் சொல்லும் தருணம் அமையவில்லை.”
“எப்போது அத்தருணம் அமையும்? என்னுடன் நீ இருந்துகொண்டே இருக்கிறாய். இந்த வாழ்வில் எனக்கு நீ மட்டுமே இருக்கிறாய்”
”நீ என்னை விரும்புவதனால் உன்னுடன் இருக்கிறேன். உன் அம்மா இறந்தபின் எனக்கும் வேறு எவருமில்லை” என்று அது சொன்னது.
”நான் உன்னைப் பார்க்கவேண்டும், உன் கண்களும் சிரிப்பும் மிக மிக அழகானவை என்று அம்மா சொன்னாள். நான் அழகென்பதை அறிந்தே நீண்ட நாட்களாகின்றன. அறிந்த அழகையே என் உள்ளம் மறந்துவிட்டிருக்கிறது.”
“அதற்கு அனுமதி வேண்டும்”
“எவருடைய அனுமதி?”
“என் தெய்வத்தின் அனுமதி…”
“எங்கிருக்கிறது அந்த தெய்வம்?”
“இங்கே மிக அருகே, கோதாவரியின் நாககட்டத்தில்…”
“என் பாட்டி உன்னைப் பார்த்த இடத்தில்… என் அம்மாவும் ஒருமுறை உன்னை அங்கே பார்த்திருக்கிறாள்”
“ஆம், அருகேதான்…”
“என்னை அழைத்துச்செல்… எனக்கு உன் தெய்வத்தைக் காட்டு.”
“எதற்காக? நீ முதலில் அதை உறுதிப்படுத்திக் கொள். எதற்காக என் தெய்வத்தைச் சந்திக்க விரும்புகிறாய்?”
“எனக்கு நீ வேண்டும். முழுமையாக வேண்டும். உன்னைப் பார்க்கும் கண் வேண்டும்… அது மட்டும்தான் என்னிடம் எஞ்சியிருக்கும் ஆசை இப்போது”
“சரி, அழைத்துச்செல்கிறேன். ஆனால் வாழ்க்கையில் எந்த முன்னோக்கிய நகர்வும் போலத்தான் இதுவும், திரும்பவே முடியாது…”
“ஆமாம், ஆனால் வேறு வழியில்லையே. முன்னோக்கிச் சென்றாகவேண்டுமே”
“ஒழுகிச்செல்லலாம். நாம் பொறுப்பை ஏற்கவேண்டியதில்லை. நாமே சென்றோம் என்றால் எண்ணி வருந்த நேரிடும்.”
“நான் இதுவரை எதற்கும் வருந்தவில்லை.”
“எதையும் எண்ணி வருந்துவதே இல்லையா? செய்திருக்க வேண்டாம் என்றும், சென்றிருக்க வேண்டாம் என்றும் எண்ணிய தருணங்களே இல்லையா?”
“இதோபார், இங்கே இப்படி அமர்ந்திருக்கிறேன். பழையவற்றில் இருந்து என்னை முழுமையாகத் துண்டித்துக் கொள்ளாமல் இப்படி அமரமுடியாது. எனக்கு நேற்று இல்லை. நினைவுகள் என எதுவுமே இல்லை. எனக்கு எதுவும் மிச்சமில்லை, ஒரு துளிகூட”
“அப்படியென்றால் இன்றிரவு”
அன்று இரவு அவன் என்னை அழைத்துச்சென்றான். அவனுடைய அருகமைவுணர்வும், அவ்வப்போது சில உதிரிச்சொற்களும். நான் கோதாவரியின் நீரின் ஒலியைக் கேட்க ஆரம்பித்தேன். நள்ளிரவில் ஒலிக்கும் வௌவால்களின் பறத்தலோசை.
”இது நாக கட்டம்”
நான் படிகளில் என் கைத்தடியை ஊன்றி மெல்ல இறங்கினேன்.
“இந்த படிக்கட்டுக்கு நீ வந்திருக்கிறாய். இங்கே ஏழு அன்னையரை நிறுவியிருக்கிறார்கள், தெரியுமல்லவா?”
”ஆமாம் படிக்கட்டிலேயே புடைப்புச் சிற்பமாக இருக்கும். மிக மழுங்கிப்போன சிலை. செங்குழம்பு வேறு பூசப்பட்டிருக்கும். ஏழன்னையரும் ஒரே உருவம்போல இணைத்துச் செதுக்கப்பட்டிருப்பார்கள்.”
“அது இந்த படிக்கட்டுகள் கட்டப்படுவதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றங்கரையில் இருந்த கல். அதற்கும் முன்பு இங்கிருந்த காட்டுக்குள் இருந்த கல். அதை பல்லாயிரமாண்டுகள் அதைச் செதுக்கியவர்கள் வழிபட்டனர். பின்னர் அவர்கள் மறைந்துபோய், எவரும் அறியாமல் பல ஆயிரமாண்டுகள் காட்டுக்குள் கிடந்தது.”
படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டே இருந்தேன். நீண்டதொலைவுக்குச் சென்றுவிட்டது போலிருந்தது பல பாதாள உலகங்களைக் கடந்து ஆழத்திற்கு அமிழ்ந்துவிட்டதுபோல.
”வந்துவிட்டோம்”
படிகளில் அமர்ந்தேன். என் கழியை நீட்டி நீட்டி தட்டி அந்தச் சிலையை தொட்டுவிட்டேன். பிறகு நெருங்கிச் சென்று அதை வருடினேன். ”பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, சிம்ஹி, வராகி, சாமுண்டி, ஜ்யேஷ்டை.”
“அவள்தான்… ஜ்யேஷ்டை என்றால் மூத்தவள். அவர்கள் அறுவருக்கும் முதல்வி, அனைவருக்கும் அன்னை.”
“அழுக்கின், இருட்டின் அரசி.”
“வேர்களின் தலைவி. வேர்கள் உறங்கும் மண்ணின் ஆழத்தில் வாழ்பவள். உப்பாக மண் முழுக்க நிறைந்திருப்பவள். அவளை நோக்கி அனைத்தையும் செலுத்தும் சாவின் தேவியான சாமுண்டி அவள் மகள். மண்ணை அகழ்ந்திறங்கும் வராகி சாமுண்டியின் மகள். முளைத்தெழுபவள் சிம்ஹி, இலைத்தழைப்பு கௌமாரி, மலர் மகேஸ்வரி, விதை பிராம்மி… ஒருவரிலிருந்து ஒருவரென எழும் ஏழு தலைமுறைகள்…”
நான் பெருமூச்சுடன் “ஆம், அப்படியும் ஒரு பாடம் இருக்கக்கூடும்.”
“அவள் எழும் பொழுது அணுகி வருகிறது.”
சட்டென்று நான் ஒரு கெடுநாற்றத்தை உணர்ந்தேன். மட்கிய இலைகளின், அதனுடன் கலந்த விலங்குகளின் சாணியின், புழுதியின் நாற்றம். அது அணுகி அணுகி வந்தது. ஏதோ ஓரிடத்தில் அது நறுமணம் ஆக மாறியது. கோதாவரியின் குளிர்ந்த காற்றை உணர்ந்தேன். குளிர் ஏறி ஏறி வந்து பல அடுக்கு ஆடைகளுக்கு அடியில் என் உடல் நடுங்கத் தொடங்கியது. என் கண்களுக்குள் இளநீல அலைகள். அவை ஒளியென்றாயின. பின்னர் நான் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினேன்.
கோதாவரியின் நீர்ப்பரப்பு இருட்டுக்குள் தன்னொளியுடன் ஒழுகிக்கொண்டிருந்தது. வான் முழுக்க விண்மீன்கள் செறிந்திருந்தன. என்னருகே ஓர் இருண்ட குவியல்போல அவன் நின்றிருந்தான். இருட்டு செறிந்து உருவான ஒரு குமிழிபோல. படிகளின்கீழே ஒளி கூடிக்கூடி வந்தது.
மூவர் நீரில் இருந்து படியேறி வந்தனர். வலப்பக்கம் விழிக் குழிகளுக்குள் துறித்த வெறிக்கண்களும், மண்டையோட்டு முகமும், மண்டைமாலை அணிந்த எலும்புக்கூடு உடலும், பின்னால் விரிந்து பறக்கும் கரிய கூந்தல் அலைகளுமாக சாமுண்டி. இடப்பக்கம் சிறுபிறைவடிவ கொடும்பற்களுடன் மேலுதடு வளைந்து எழுந்த கூர்ந்த பன்றிமுகமும், இலைக் காதுகளும், சிறிய மின்னும் விழிகளும் கொண்ட கருநீல உடையணிந்த தடித்த பெண்ணுருவமாக வராஹி. நடுவே பெரிய குடவயிறும், தொங்கிப்படிந்த முலைகளும், குறுங்கால்களும், உருண்ட முகத்தில் வெண்ணிறச் சிரிப்பு போலத் தெரிந்த பெரிய பற்களுமாக ஜ்யேஷ்டை அன்னை.
நான் கைகூப்பி அமர்ந்திருந்தேன். மூவரும் என் முன் நின்றனர். என்னருகே நின்ற அவன் “கேள்” என்றான். “நீ வேண்டுவதை அன்னையிடம் கேள்.”
என் கூப்பிய கை நடுங்கிக் கொண்டிருந்தது. என் நாக்கு பேசுவதை மறந்துவிட்டிருந்தது. என் உள்ளத்தில் ஒரு சொல்லும் இல்லை. மூன்று அன்னையரும் என் முன் காற்றில் திகழும் சுடர் போல நின்றிருந்தனர்.
சட்டென்று நான் என் வலுவான காலால் படிக்கட்டை உதைத்து முன்னோக்கி விழுந்து சாமுண்டி அன்னையின் காலடியில் சென்று சரிந்தேன். என் நெற்றியும் மூக்கும் மண்ணில் அறைபட்டன. என் வலுவான கையால் கற்படிகளை அறைந்து அறைந்து கூவினேன். “சாவின் அன்னையே! தேவியே! எனக்கு அவளை காட்டு… ராதிகாவின் முகத்தை நான் பார்க்கவேண்டும். அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசவேண்டும்… அவளைத் தவிர நான் வேண்டுவது ஒன்றுமே இல்லை. அவளை காட்டு என் தாயே.”
நான் பார்த்த அக்காலடி எலும்பாலானது. நான் அந்தக் கால்களை நோக்கி உந்தி உந்தி சென்றபடி “அம்மா! அம்மா! அம்மா!” என்று கூவினேன். “எனக்கு ராதிகா வேண்டும்… ராதிகா ராதிகா” என்று வெறிகொண்டவனாக கூச்சலிட்டேன்.
என் மேல் எவரோ குனிவது போலிருந்தது. இன்னொரு படிக்கு நான் குப்புறக் கவிழ்ந்து உருண்டேன். என் தலை கற்படிகளில் அறைபட்டது. வலியை உணர்ந்தபடி, செயல்படாத கைகால்களில் வலிப்பு எழ நான் மயங்கிவிட்டேன்.
விழித்துக்கொண்டபோது கோதாவரியின் படிக்கட்டில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன். எப்போது அங்கே வந்தேன் என்று எண்ணிக்கொண்டு எழ முயன்றபோதுதான் என் உடலின் ஆற்றலின்மையை அறிந்தேன். ஒரு கணத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்று தெரிந்தது. சற்று தன்நினைவு மயங்கியதும் அவன் வந்து என்னில் படிந்துவிடுகிறான். அந்தக் கல்லூரி மாணவன், காவிய ஆய்வாளன், கவிஞன்.
சற்று அப்பால் எவரோ அமர்ந்திருப்பதைக் கண்டேன். இருண்ட கரிய உருவம். படிகளில் அமர்ந்து முழங்கைகளை கால்முட்டின்மேல் வைத்து தலைதாழ்த்தி இருந்தது. அதன் சடைமுடிக் கற்றைகள் தொங்கி முகத்தை மறைத்தன. இருபக்கமும் சடைகள் தொங்கி படிகளில் படிந்திருந்தன.
“நீயா?” என்று நான் கேட்டேன்.
அது என்னை நிமிர்ந்து பார்த்தது. இப்போது அதை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இருண்ட பிசாசின் முகம். ஆனால் தெளிந்த விழிகள், பேரழகு கொண்ட விழிகள். என்னால் அப்பார்வையின் எழிலில் இருந்து சிந்தனையை விலக்க முடியவில்லை.
அது எழுந்து என்னை நோக்கி வந்தது. நான் நிகழ்ந்த அனைத்தையும் நினைவுகூர்ந்தேன். “என்னை மன்னித்துவிடு… என்னால் முடியவில்லை. ஏன் அப்படி கேட்டேன் என்றே தெரியவில்லை. என்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை”
என் கண்களில் இருந்து நீர்வழிந்தது. கைகளைக் கூப்பியபடி “ஆனால் நான் அதைக் கேட்டதற்காக வருந்தவில்லை. அதுதான் என்னுள் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. வேறுவழியே இல்லை. நான் மிக எளியவன்… நான் வெறும் மனிதன்… இன்னொரு முறை அன்னையர் எழுந்து வந்தால்கூட மீண்டும் அதைத்தான் கேட்பேன்…ராதிகாவைத் தவிர எனக்கு எதுவுமே முக்கியமில்லை…”
அது என்னருகே வந்து குனிந்தது. ”பரவாயில்லை, அன்னையர் உனக்கு அனைத்தையும் அருளினார்கள். பேரருள் கொண்ட மூத்தவள் உன்னை தூக்கி தன் மடியில் படுக்கவைத்தாள். தன் மார்புடன் உன்னை அணைத்துக்கொண்டு உன் நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டாள்.”
நான் கண்ணீருடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மிகமிகக் கனிந்த புன்னகை. எந்த மானுட முகத்திலும் அத்தனைபெரிய கருணை திரள முடியாது. பார்ப்பவன் தன்னை முழுமையாகவே அதன்முன் படைத்துவிடச் செய்யும் புன்னகை. நான் கைகளை நெஞ்சுடன் சேர்த்துக் கொண்டு அழத்தொடங்கினேன்.
அது என்னை அணைத்துக் கொண்டது. “அழாதே, என் கண்ணல்லவா?” என்றது. சட்டென்று அது பெண்ணாகிவிட்டது. அன்னை போல் “அழாதே. உன்னுடன் நான் இருக்கிறேன்… என் செல்லம் அல்லவா? அழாதே” என்றது.
“ராதிகா! ராதிகா! நான் என்ன செய்வேன். என் உள்ளம் அடங்கவில்லையே. என் செல்லத்தை நான் சரியாகப் பார்க்கக்கூட இல்லையே. அவளிடம் விரும்பிய அளவு பேசக்கூட இல்லையே” என்று அரற்றியபடி நான் இளங்கரடியுடையது போன்ற அதன் மென்மயிர் மார்பில் முகம்புதைத்துக் கொண்டேன்.
“காலத்தில் பின்நகர தெய்வங்களாலும் இயலாது” என்று அது சொன்னது. “ஆனால் உன் அழலை நான் எடுத்துக் கொள்கிறேன். என்னுள் நிறைந்திருக்கும் ஊழித்தீ போன்ற அழலுக்குள் அதையும் சேர்த்துக்கொள்கிறேன். அழாதே… என் குழந்தை அல்லவா நீ? என் ரத்தினம் அல்லவா?”
மென்மையாக அது என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் உடலின் மணம். தொடுகையின் மென்மை. எனக்கு மட்டுமாக ஒலித்த அந்தக் குரல். நான் அதன் அணைப்பில் மயங்கி தூங்கிவிட்டேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

