செவ்வியல் சாளரம்
ஆங்கிலநாவல்கள் பற்றி நான் அரிதாகவே தமிழில் எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் வாசிப்பவன் என்றபோதிலும்கூட. ஏனென்றால், நான் தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் எழுதவந்தபோது இங்கே ஆங்கில நூல்களை குறிப்பிடுவது ஒரு மோஸ்தராக இருந்தது. தமிழில் எந்த நாவல்களைப் பற்றியும் எதுவும் எழுதப்பட்டதில்லை. ஆனால் பேசும்போது கண்கள் செருகி உணர்ச்சிகரமாக விவரிப்பார்கள். மலையாளத்தின் செவ்வியல்படைப்புகள் பற்றி விரிவான கட்டுரைகள் மாத்ருபூமி உள்ளிட்ட பெரிய இதழ்களில் வெளிவருவதை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தவன் நான். அதைப்போல தமிழில் எழுதவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆகவே தமிழ்ப்படைப்புகள் பற்றியே விரிவாக எழுதினேன். தமிழில் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றி எழுதப்பட்ட மொத்த பக்கங்களே மிகக்குறைவு– அதில் கணிசமான பக்கங்கள் நான் ஒருவன் எழுதியவையே.
ஆனால் பின்னர் கண்டுகொண்டேன், இங்கே ஆங்கிலவழிப் படைப்புகள் பற்றிக்கூட எதுவும் கட்டுரையாக எழுதப்படவில்லை. அசோகமித்திரன் மட்டுமே அமெரிக்க நவீன இலக்கியவாதிகள் பற்றி குறிப்பிடும்படி எழுதியிருக்கிறார். வெளிநாட்டு இலக்கியம் வாசிக்கிறேன் என்று காட்டிக்கொள்ள பெயர் சுட்டுவது மட்டுமே இங்கே நடந்துகொண்டிருந்தது – இன்றும் அவ்வழக்கமே நீடிக்கிறது. ஆகவே ஆங்கிலம் வழியாக வாசித்த உலக இலக்கியம் பற்றி நிறைய எழுதலாமெனும் எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது நான் விமர்சனத்தில் எனக்கான கொள்கைகளைக் கொண்டவன் ஆகிவிட்டிருந்தேன்.
சில பேரிலக்கியங்கள் பற்றி நான் மட்டுமே தமிழில் விரிவாக எழுதியிருக்கிறேன், உதாரணமாக ழீன் கிறிஸ்தோஃப் (ரொமெய்ன் ரோலந்து), லெ மிசரபில்ஸ் (விக்தர் யூகோ) . என் கொள்கைகளை ஒட்டி, எழுதவேண்டும் எனத்தோன்றிய நூல்களைப் பற்றி மட்டும் அவ்வப்போது நீண்ட கட்டுரைகளை எழுதினேன். உதாரணமாக, மேரி கெரெல்லி. அவருடைய மாஸ்டர் கிறிஸ்டியன் என் உளம்கவர்ந்த பேரிலக்கியம். இன்று அவரைப்பற்றி தேடினாலே கூகிள் என்னை நோக்கிக் கொண்டுவந்து விட்டுவிடும் என பகடியாகச் சொல்வதுண்டு. நான் தவிர எவரும் அவரைப்பற்றி சொல்வதில்லை. ஆனால் எனக்கு அவர் தல்ஸ்தோய் அளவுக்கே முக்கியமான படைப்பாளி .ஆகவே அவரைப்பற்றி எழுதினேன்.
அவ்வாறு நான் எழுதிய படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குச்சாளரம்தான், ஆனால் அதனூடாக வழக்கமாகத் தெரியும் படைப்பாளிகள் இதில் இல்லை. அரிதாகவே வாசகர்கள் அறிந்த படைப்பாளிகளே மிகுதி. நவீனத்துவம் என்னும் வடிவ இறுக்கத்திற்கு எதிராக என் கருத்துக்களை முன்வைக்கும் பொருட்டு செவ்வியல் நாவல்களை நான் விரித்துப்பேசினேன். அவ்வகை படைப்புகளே இதிலுள்ளன. விதிவிலக்கு கோபோ ஆப் எழுதிய மணல்மேடுகளின் பெண் போன்ற நாவல்கள்.
இவை வாசகர்களுக்கு உலக இலக்கியத்தின் அறியப்படாத சில பக்கங்களைக் காட்டும் என நினைக்கிறேன். உலக இலக்கியத்தை மட்டுமல்ல, இலக்கியத்தின் புதிய சில வழிகளைக் காட்டுபவை இவை. முன்பு நான் எழுதிய சிலகட்டுரைகளை இந்நூலில் சேர்க்க முயன்றேன். அன்று எனக்கு அவை கிடைக்கவில்லை. உதாரணமாக புடன்புரூக்ஸ் (தாமஸ் மன் )பற்றி நான் எழுதிய கட்டுரை. அவற்றையும் சேர்த்து எதிர்காலத்தில் இன்னொரு தொகுப்பு வெளிவரக்கூடும்.
இந்நூல் அடிப்படையில் ஆன்மிகம் என நான் நினைக்கும் ஒன்றைச் சொல்லும் நாவல்களைப் பற்றியது. மானுடவாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பேசும் படைப்புகளை நான் தொடர்ச்சியாக முன்வைத்துவந்தேன். வாழ்க்கையை துண்டுபடுத்தி செறிவாகப்பேசும் நவீனத்துவப் படைப்புகளை நிராகரிப்பதே என் நோக்கம். அவ்வகையில் பார்த்தால் நவீனச்செவ்வியலுக்கான ஒரு வலியுறுத்தலே இந்நூல் என்பேன்.
இந்நூல் மீண்டும் பதிப்பு பெறுகிறது. இதை முதலில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்) ,பின்னர் வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் ஆகியவற்றுக்கும் இப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் நன்றி.
ஜெ
மேற்குச்சாளரம் வாங்க மேற்குச்சாளரம் மின்னூல் வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

