காவியம்-7

அன்னையும் பிள்ளைகளும். சாதவாகன காலகட்டம் . பொயு 1 . பைதான் அருங்காட்சியகம்.

அப்பா மிகமிக வேகமாக மறக்கப்பட்டார், ஆனால் அது மிக இயல்பாகவும் இருந்தது. அப்பாவின் கொலை அத்தனை பரபரப்பாக இருந்ததும் அவர் மிக வேகமாக மறக்கப்படக் காரணமாகியது. அவரது கொலை செய்தித்தாள்களில் முதலிடம் பெற்றது, நகரில் எல்லா இடங்களிலும் பேசப்பட்டது. ஆகவே அது விரைவிலேயே அனைவருக்கும் தெரிந்ததாக ஆகி, பழகிப்போன செய்தியாக மாறி, ஆர்வமூட்டாததாக ஆகியது. ஒரு மாதம் கடந்தபின் நான் மட்டுமே காவல்நிலையத்திற்குச் சென்றுவந்தேன், அப்பாவுடன் அலைந்த இளைஞர்கள்கூட என்னுடன் வருவதற்கு முன்வரவில்லை. அதன்பின் நானும் காவல்நிலையத்திற்குச் செல்லவில்லை. அப்பாவைக் கொன்றவர்கள் எவர் என அனைவருக்கும் தெரிந்திருந்தது, அவர்களை போலீஸ் கண்டுபிடிக்கவே இல்லை.

அப்பாவின் உடல் பிணச்சோதனைக்குப் பின் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அந்த ஆஸ்பத்திரிக்கு வெளியில் ஐந்தாயிரம்பேருக்கு மேல் கூடியிருந்தார்கள். எங்கள் சாதியினரில் அங்கே வராத ஆண்கள் அனேகமாக எவருமில்லை. அவர் உடலை பெரிய ஊர்வலமாக கோதாவரிக்கரைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்றோம். உயர்சாதியினருக்குரிய நாககட்டத்திற்கு அப்பால் புதர்மண்டிய இடிந்த படிகள் கொண்ட காலாகட்டத்தில் அவர் எரியூட்டப்பட்டார். போலீஸ் நிலையத்தின் முன் மறுநாள் நீதிகேட்டு ஒரு தர்ணா செய்தோம். மும்பையில் இருந்து தலைவர்கள் வந்து என்னிடம் துக்கம் விசாரித்தனர், அது புகைப்படத்துடன் நாளிதழ்களில் செய்தியாக வந்தது. ஒரு வாரத்திற்குள் எல்லாம் சட்டென்று அடங்கிவிட்டது.

அம்மா அப்பாவின் உடலை ஒரு நிமிடம்கூட பார்த்திருக்க மாட்டாள். சாக்கடையில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட அவர் உடல் கருமையாக ஒரு பூதச்சிலை போலிருந்தது. அதிலிருந்து சாக்கடைக்குழம்பு வழிந்து சொட்டியது. உடல் எடுக்கப்பட்ட இடத்தின் பள்ளத்தில் கரிய நீர் ஊறித்தேங்கியது. அங்கே நிற்கமுடியாத அளவுக்கு நாற்றம். காலில் கட்டப்பட்ட  கம்பியால் தூக்கி எடுக்கப்பட்டபோது அவர் உடல் தலைகீழாக, ஒரு கால் விலகி விரிந்திருக்க, கைகள் தொங்கியிருக்க மேலெழுந்து வந்தது. உடலை சாலையில் போட்டனர். முகம் புழுதியில் படிய கைகள் விசித்திரமாக வளைந்து பரவியிருக்க அவர் குப்புறக் கிடந்தார். அம்மா அப்போதுதான் செய்தி தெரிந்து அலறியபடி ஓடிவந்தாள். அப்பாவை அவள் அந்த கூட்டத்தில் தேடினாள். எங்கே என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி, சட்டென்று அடையாளம் கண்டாள். ’அஹ்’ என்று ஒரு மூச்சொலி மட்டும் எழுந்தது. கைகளை வாயில் வைத்து விழித்த கண்களுடன் நின்றாள். பின்னர் அருகே நின்ற பெண்ணிடம் போவோம் என்று தலையசைத்தாள். உறுதியான காலடிகளுடன் திரும்பிச்சென்றாள்.

நான் சடலத்துடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அங்கே என்னென்னவோ சட்டச்சடங்குகளில் எனக்கு துயரம்கொள்ள நேரமிருக்கவில்லை. குமுறிக்கொந்தளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் வெளியே கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். அப்பா ஒரு சவப்பெட்டியில் துணியால் சுற்றிக்கட்டப்பட்டு அளிக்கப்பட்டார். உடலை கொண்டுவந்து குடியரசுக் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைத்திருந்தோம். அம்மா இரு பெண்கள் கூட வர, மெல்ல நடந்து வந்து ஒரு முறை அப்பாவின் உடலைப் பார்த்துவிட்டு அருகே அமர்ந்துகொண்டாள். அழவில்லை, முகம் சோர்ந்திருக்கவுமில்லை. ஆனா அவள் உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவள் ஏதோ சொல்லிக்கொண்டே இருப்பதைப்போல.

அதன்பின் அவள் அம்மா ஆழ்ந்த அமைதி கொண்டவளாக ஆனாள். தேவைக்கு மட்டும் ஓரிரு சொற்கள் பேசினாள். நான் அவளிடம் ஏதாவது பேச முயன்றேன். ஆனால் அவள் கண்களையே என்னால் சந்திக்க முடியவில்லை. ஆனால் வழக்கம் போல சமையல் செய்தாள், வீட்டுவேலைகளையும் பிறவேலைகளையும் செய்துகொண்டே இருந்தாள். ஆனால் அந்த இறுக்கம் சில நாட்களே நீடித்தது. அதன்பின் விரைவாக அவள் மீண்டாள். மீண்டும் அந்த துடிப்பான இளங்கன்னியாக ஆனாள். ஆனால் உறுதியான இரும்புப்பதுமை போலவும் இருந்தாள். இரவுபகலாக வேலைபார்த்தாள். தானாகவே சுவையாகச் சமைத்து உண்டாள்.

அம்மா மீண்டது எப்படி என்று அவள் பின்னர் என்னிடம் சொன்னாள். அப்பாவின் சடலத்தைக் கண்டதும் அவள் வாயில் எழுந்த சொற்கள் என்ன என்பதை அவளே இரண்டு நாட்களுக்கு பிறகுதான் உணர்ந்தாள். “மன்னித்துவிடுங்கள் நாநா”  என் அப்பாவை அம்மா நாநா என்றுதான் அழைத்தாள். நானும் அப்பாவை அப்படித்தான் அழைத்தேன். எப்படியோ அப்படி அழைப்பது நிலைகொண்டுவிட்டது. அந்தச் சொற்கள் அவள் உதடுகளில் இலைநுனி நடுங்குவது போல நிகழ்ந்துகொண்டே இருந்தன. அவள் அறிந்தும் அறியாமலும்.

ஏன் அப்படி மன்னிப்பு கேட்கிறோம் என்று அம்மா வியந்துகொண்டிருந்தாள். அவள் நல்ல மனைவியாகவே இருந்தாள். சமையலில், தனிப்பட்ட உறவில், பின்னர் அப்பா மேற்கொண்ட பொதுவாழ்க்கையில் எல்லாம் அவருக்கு முற்றிலும் இசைந்து சென்றாள். அவர் அவளைப் பற்றி ஒருமுறைகூட ஏமாற்றம் கொள்ள நேரவில்லை. அவர்களுக்குள் பெரிய பூசல்கள் எதுவும் உருவாகவில்லை. சொல்லப்போனால் அப்பா தன் மனைவியின் ஆற்றலை நம்பியே வாழ்ந்தார். அவர் உளம் தளர்ந்தபோதெல்லாம் அம்மாவிடம் வந்துதான் ஒடுங்கிக்கொண்டார். தெய்வங்கள் அளிக்கும் ஆற்றலுக்கும் நம்பிக்கைக்கும் இணையானவற்றை அம்மாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ஆனால் அவர் ஒரு கணம்கூட அவளை வெல்லவில்லை. காமத்தில்கூட. ஆணுக்குரிய அந்த இன்பத்தை அவள் அவருக்கு அளிக்கவே இல்லை. அந்தக் குறையை அவர் உணர்ந்திருந்தாரா என்று அவரேகூடச் சொல்லிவிட முடியாது. தான் மன்னிப்பு கோருவது அதன்பொருட்டே என உணர்ந்ததும் அம்மாவின் அகம் துயர்கொள்ளத் தொடங்கியது. அவளை அமைதியானவளாக ஆக்கியது. ஆனால் மெல்ல மெல்ல அவளுக்குள் அந்த துயர் அடங்கியது. அவள் உதடுகள் நிலைத்தன. அப்போது அவர் அவளுக்குள் இருந்து முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தார். அவளுடைய அம்மாவும் அப்பாவும் மறைந்துவிட்டதுபோல. பிறகெப்போதும் அம்மா அப்பாவை நினைவுகூரவே இல்லை.

எங்கள் வீட்டில் எப்போதுமே குழந்தைகள் நிறைந்திருக்கும். பக்கத்துவீட்டில் இருந்தெல்லாம் கைக்குழந்தைகளை கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்வார்கள். பெண்கள் எல்லாரும் வேலைக்குச் செல்வதனால் அப்படி ஒரு வீடு இருப்பது அவர்களுக்கு வசதியாக இருந்தது. என் அப்பா எங்கள் வீட்டை முன்னும் பின்னும் விரிவாக்கிக் கட்டியிருந்தமையால் நிறைய இடமும் இருந்தது. அம்மாவின் இடையில் எப்போதுமே ஒரு கைக்குழந்தை இருக்கும். சிலசமயம் இரண்டு இடுப்பிலும் குழந்தைகள் இருக்கும். அவள் இரண்டு தோள்களிலும் இரண்டு இடுப்பிலும் குழந்தைகள் இருப்பதைக்கூட ஒரு முறை கண்டிருக்கிறேன்.

குழந்தைகளிடம் அம்மா கொஞ்சுவதில்லை, விளையாட்டுக் காட்டுவதுமில்லை, தின்பதற்கு ஏதேனும் கொடுப்பாள். அவர்கள் இருப்பதை அறியாதவள்போல தன் வேலைகளில் ஈடுபட்டிருப்பாள். குழந்தைகள் உழுதிட்ட வயலில் மொய்க்கும் பறவைகள் போல அவள்மேல் தொற்றிக்கொண்டிருந்தன. குழந்தைகளுடன் அம்மா திளைப்பதைக் கண்டபின் நான் அம்மாவிடமிருந்தும் விலகினேன். வீட்டுக்கு வந்தால் அம்மா உணவை பரிமாறுவாள். இரவு தூங்கும்போது என் அறைக்குள் தண்ணீர் கொண்டுவந்து வைப்பாள். காலையில் நான் எழுந்த சில நிமிடங்களுக்குள்ளேயே டீ கொண்டுவந்து தருவாள். எங்களுக்குள் மிக இயல்பான அன்றாட உரையாடல்கள் மட்டுமே நிகழ்ந்தன. அவளுக்கு நானும் எனக்கு அவளும் தேவையில்லாமல் ஆகிவிட்டது போலிருந்தது.

நானும் பைத்தானில் இருந்து செல்லவும், என்னைச் சூழ்ந்திருந்த அனைத்திலும் இருந்து விலகவும் விரும்பினேன். பைத்தானில் என்னை என் அப்பாவின் அடையாளத்துடன் மட்டுமே பார்த்தனர். குடியரசுக் கட்சியின் துண்டு பிரசுரங்கள் அனைத்தையும் எனக்குக் கொண்டுவந்து தந்தனர். என் வீட்டின் முகப்பில் அப்பா மாட்டிவைத்திருந்த அம்பேத்கரின் பெரிய வண்ணப்படம் அப்படியேதான் இருந்தது. அப்பா இறுதிக்காலத்தில் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய அனைவரையும் வெறுக்கத் தொடங்கியிருந்தார். ‘இந்திய தேசியம் என்பதே ஒரு மோசடி, அது நம்மை உயிருடன் புதைத்து அதன் மேல் எழுப்பப்பட்ட சமாதி’ என்று அவர் சொல்வதுண்டு.

நான் அம்பேத்கரையும் ஏறிட்டுப் பார்க்காமலானேன். எந்த அரசியல் தலைவரையும் எப்போதுமே நான் பொருட்படுத்தியதில்லை. அவர்கள் பழங்காலத்து அரசர்கள் போல. ஆட்சியாளர்கள்தான் மக்கள்திரளின் வாழ்க்கையை முடிவுசெய்கிறார்கள். ஆனால் அவர்கள் விதியின் கருவிகள் மட்டும்தான். அவர்களுக்கு அவர்கள் செல்வதெங்கே என்றும் தெரியாது. ஒருவரை ஒருவர் தொடர்கிறார்கள். ஒருவரோடொருவர் இணைகிறார்கள். ஒருவரை ஒருவர் விலக்குகிறார்கள். அந்த விசைகளின் விளைவாக அவரவர் நகர்வுகள் நிகழ்கின்றன. அந்த திசைகளை அவர்கள் தாங்கள் தீர்மானிப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். காந்தியை அம்பேத்கர் தீர்மானித்தார், அம்பேத்கரை காந்தி தீர்மானித்தார். அவர்களுக்கு தங்களை தீர்மானிக்கும் சுதந்திரம் அளிக்கப்படவே இல்லை.

சமகாலத்தை மட்டுமே பார்ப்பவர்களுக்கே அரசர்களும், ஆட்சியாளர்களும், தலைவர்களும் முக்கியமானவர்கள். நீண்டகாலத்தை பார்ப்பவர்களுக்கு அவர்கள் மாபெரும் அலைப்பரப்பில் அலைந்து கொண்டிருக்கும் சிறு புள்ளிகள் மட்டுமே. நான் எப்போதுமே தொலைவை மட்டுமே நோக்குபவனாக இருந்தேன். என் அப்பாவைப்போல அவருக்கு அளிக்கப்பட்ட புறக்காலத்திலேயே மிதந்து கிடக்கவில்லை. புறத்தை மட்டுமே அகம் என அமைத்துக் கொண்டிருக்கவுமில்லை.

பி.எஸ்.சி முடித்து நான் எம்.ஏ படிப்புக்குச் சேரவிரும்பினேன். அதற்கான முயற்சிகள் வழியாக நான் அப்பாவை முழுமையாக மறந்து வேறொரு உலகில் முற்றிலும் புதியவனாக முளைத்தெழுந்தேன். சினிமாப்பித்து காரணமாக பி.எஸ்.ஸியில் எனக்கு மிகக்குறைவான மதிப்பெண்கள்தான் கிடைத்தன. ஆனால் நான் மேற்கொண்டு எம்.எஸ்.சியில் சேர விரும்பவில்லை. இந்திப் பாடல்கள் வழியாக எனக்கு இந்தி இலக்கியத்தில் ஆர்வம் அதற்குள் உருவாகியிருந்தது. கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். பி.எஸ்.ஸி இறுதியாண்டு படிக்கும்போது  நான்கு கவிதைப் போட்டிகளில் எனக்குப் பரிசு கிடைத்தது. மூன்று முஷாராக்களில் கவிதை வாசித்திருந்தேன். என்னை கவிஞர் என்று என் கல்லூரி வட்டாரத்தில் சொல்ல ஆரம்பித்திருந்தனர்.

என் அப்பாவின் இறப்பு பற்றி நான் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினேன், அவை எல்லாமே அச்சாகி வந்தன. அச்சாகி வந்ததும் அவை என்னை விட்டு விலகி என்னை விடப்பெரியதாயின. பல்லாயிரம் பேர் அவற்றை பார்க்கிறார்கள் என்னும் உணர்வே அவற்றை உப்பிப்பெருக்கச் செய்தது. ஆகவே நான் பெருந்தாகத்துடன் அவற்றை மீண்டும் மீண்டும் படித்தேன். படிக்கப்படிக்க அவற்றை நான் வளர்ந்து கடந்து சென்றேன். திரும்பிப் பார்க்கையில் அவை அற்பமானவையாக இருந்தன. அவற்றின் ஒவ்வொரு சொல்லும் கூசச்செய்தது. ‘இவை அல்ல நான்’ என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். நான் இதற்கு அப்பால். நான் இதைவிட பெரியவன். நான் காலத்தால் கடக்கமுடியாதவனாக எஞ்சுவேன். என்னாலேயே என்னைக் கடக்கமுடியக்கூடாது.

நான் ஔரங்காபாதில் மிலிந்த் கலைக்கல்லூரியில் இந்தி எம்.ஏ. வகுப்புக்குச் சேர்ந்தேன். இரண்டாம் மொழி சம்ஸ்கிருதமும், மூன்றாம் மொழி உருதுவும். மொழிகள் என்னை ஆட்கொண்டன. அப்போது அப்பாவில் இருந்து விடுபடுவதற்காக நான் எதிலாவது தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று விரும்பியிருந்தேனா, அல்லது எனக்கான அடையாளத்தை தேடிக்கொண்டிருந்தேனா, இளமைக்குரிய மிகையான ஆணவத்தால் உந்தப்பட்டேனா, அல்லது மெய்யாகவே எனக்குள் ஓர் இலக்கியவாதி முளைப்பதற்காக காத்திருந்தேனா என்று தெரியவில்லை. நான் மொழிக்கல்வியும் இலக்கியமும் அன்றி வேறெந்த நினைப்பும் அற்றவனாக இருந்தேன்.

நான் ஒருநாளில் ஏழு மணி நேரம்கூட வாசித்தேன். இந்தி, மராத்தி, உருது நவீன இலக்கியங்கள்தான் தொடக்கத்தில் என்னை பித்துகொள்ளச் செய்தன. பிரேம்சந்த், கிரிராஜ் கிஷோர், காண்டேகர், சதத் ஹுசெய்ன் மன்றோ, ராஜேந்திரசிங் பேதி, அப்துல் ஹக், ஜெய்சங்கர் பிரசாத், குசுமராஜ், கேசவசுதா, அஸ்பக் அகமது, மகாதேவி வர்மா, துர்க்கா பகவத், சூர்யகாந்த் திரிபாதி… மூன்று மொழிகளில் கைக்குக் கிடைத்த வரிசையில் நூல்களை வாசித்துக்கொண்டே இருந்தேன். எந்த மொழியில் வாசிக்கிறேன் என்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் கவிதைகள் எழுதுவது நின்றுவிட்டிருந்தது.

ஔரங்காபாதின் மிலிந்த் கல்லூரி ஒரு அற்புதமான இடம். இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தைக் காணும்போதெல்லாம் நான் அக்கல்லூரியை நினைவுகூர்வதுண்டு. ஆனால் நான் பயிலும்போது அக்கல்லூரியின் ஓங்கிய கும்மட்டம் கொண்ட பெரிய வெண்ணிறக் கட்டிடங்களும், வரிசையாக நீளும் வகுப்பறைகளும், குளிர்ந்த மரநிழல்களின் சிமெண்ட் பெஞ்சுகளும் என் கவனத்திலேயே படவில்லை. அலக்ஸாண்டரின் வழிவந்த கிரேக்க இந்திய அரசர் மிலிந்தர் என்னும் மினாண்டரின்  பெயரால் அமைந்தது அக்கல்லூரி என்பதுகூட நீண்டநாட்களுக்குப் பின்னரே எனக்குத் தெரிந்தது.

நான் மிலிந்த் கல்லூரியில் தன்னந்தனியனாக இருந்தேன். கல்லூரி நூலகத்திலேயே பெரும்பாலான நேரம் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து பெரிய நூல்களுடன் விடுதியறைக்கு வந்தேன். எவருடனும் பேசுவதில்லை. எவரிடமும் முகமன் சொல்வதுகூட இல்லை. மாதம் ஒருமுறை மட்டும் பைத்தானுக்குச் சென்று வந்தேன். அங்கே அம்மா எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாள். அவள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. என் அப்பாவின் பென்ஷன் நிறையவே வந்துகொண்டிருந்தது. எனக்கு நல்ல தொகை உதவிப்பணமாக கிடைத்தது. ஆகவே இருவரும் எதைப்பற்றியும் உரையாடத்தேவை இருக்கவில்லை.

கல்லூரி இரண்டாம் ஆண்டில் எனக்கு உரைநடை சலிக்க ஆரம்பித்தது. கவிதைகளுக்குள் புகுந்தேன், கருத்துக்கள் மேல் ஆர்வமிழந்தேன். நிகழ்வுகளை தொடர்ச்சியாக கற்பனை செய்யமுடியாதபடி என் உள்ளம் மாறியது. சொற்றொடர்கள், சொற்சேர்க்கைகள் என் அகத்தை நிறைத்தன. நாவல்கள் கூட சொற்றொடர்களாகவே எனக்குள் நுழைந்தன. அமீர் குஸ்ரு, மிர்ஸா காலிப், ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ், சுமித்ரானந்தன் பந்த், மைதிலிசரண் குப்தா, மார்தேகர், திலீப் சித்ரே, அருண் கொலாட்கர்… கவிதைகளை மனப்பாடம் செய்து அவற்றை பித்துப்பிடித்தவன் போல சொல்லிக்கொண்டே இருந்தேன். எப்போதும் ஏதேனும் கவிஞரால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன்.

எம்.ஏ வகுப்பில் நான்தான் முதல் மாணவன். ஆசிரியர்கள் என் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள். நான் மராத்தியிலோ இந்தியிலோ மாபெரும் இலக்கியவாதியாக ஆகிவிடுவேன் என அவர்கள் அனைவருமே நம்பினார்கள். வகுப்புகளில் நான் பேசுவதே இல்லை, விழித்த கண்களுடன் அமர்ந்திருப்பேன். ஆனால் அனைத்து ஆசிரியர்களும் என்னுடன்தான் உரையாடினார்கள். என் உருது ஆசிரியர் ஹஃபீஸ் ஔரங்கபாதி அப்போது புகழ்பெற்ற கவிஞர், அவர் எழுதும் கவிதைகளை முதலில் என்னிடம்தான் காட்டி என் கருத்துக்களைக் கேட்டார். என் இந்தி ஆசிரியர் சியாமப்பிரசாத் சின்கா அவருடைய ஆய்வேட்டை நான் திருத்தித் தரும்படி கேட்டார்.

எம்.ஏ. இரண்டாம் ஆண்டில் நான் நவீன இலக்கியத்தில் இருந்து முழுமையாகவே விலகிச் சென்று விட்டிருந்தேன். சூர்தாஸ், கபீர் என பழைய கவிஞர்கள் வழியாக காவியங்களுக்குச் சென்று சேர்ந்தேன். அதன்பின் சம்ஸ்கிருதக் காவியங்கள். அங்கே சென்றபின் வேறெதையும் நான் படிக்கவில்லை. சம்ஸ்கிருத காவியங்களில் ஒன்று இன்னொன்றை நோக்கி என்னை அழைத்துச்சென்றது. ஒன்று பிறவற்றை மேலும் துலங்கச் செய்தது. அவை நூலகங்களில் தோலட்டை போட்ட பெரிய தொகுப்புகளாக புழுதிபடிந்து வரிசையாக தவம் செய்துகொண்டிருந்தன. என் கைகளுக்காக அவை காத்திருப்பதுபோல் இருந்தது. அவற்றை நான் மட்டுமே படிக்கிறேன் என்பதே என்னை அகம் கிளர்ந்தெழச்செய்தது. வைரமும் ரத்தினங்களும் குவிந்த புதையல்பானைகள் அவை. கண்டடையும் பெரும்பரவசத்தை அவன் ஒவ்வொரு முறையும் அளித்தன. அவையன்றி வேறு நினைப்பே இல்லாமல் செய்தன.

அதில் என் சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மனோரஞ்சன் ஆச்சாரியா, அதுல்யகுமார் பட்டாச்சாரியா தவிர அனைவருக்கும் பெரிய ஏமாற்றம்தான். சியாமப்பிரசாத் சின்கா என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து இந்தியில் எழுத ஆரம்பிப்பது எப்படி ஓர் ஒளிமிக்க எதிர்காலத்தை உருவாக்கி அளிக்கும் என்று என்னிடம் விளக்கினார். சம்ஸ்கிருதத்தில் புதிய இலக்கியத்திற்கு இடமே இல்லை. பழைய இலக்கியங்களை ஆய்வுசெய்வது என்பது உண்மையில் இலக்கிய ஆய்வே அல்ல, அது தொல்லியல் ஆய்வு போன்ற ஒன்றுதான். அதற்கு வேலைவாய்ப்பு கூட பெரிதாக இல்லை. நான் ஏதும் எதிர்த்துப் பேசவில்லை, என் விருப்பத்தைக் கூடச் சொல்லவில்லை, அவர் சொற்களை என் செவிகள் கேட்கவேயில்லை.

சம்ஸ்கிருதக் காவியங்களை எழுதியவர்களை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தேன். பிற கவிஞர்கள் எல்லாம் வெளியே விரிந்திருக்கும் மானுட வாழ்க்கையையும், இயற்கையையும், பிரபஞ்சத்தையும் பற்றிய வியப்பு கொண்டிருந்தனர். அந்த வியப்பில் மேலும் மேலும் திளைக்கவே அவர்கள் கவிதைகள் எழுதினார்கள். சம்ஸ்கிருதக் கவிஞர்களுக்கு வெளியுலகமே இல்லை. அவர்கள் அனைத்தையும் கவிதைகளுக்குள் இருந்தே எடுத்துக்கொண்டார்கள். பல ஆயிரம் சம்ஸ்கிருதக் கவிஞர்கள் இணைந்து சொற்களாலும், அணிகளாலும் ஒரு தனி வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொண்டே இருந்தனர். அதற்குள்ளேயே வாழ்ந்தனர்.

வெளியே கற்பாறைகளாலான மலைகளை கண்டு அவர்கள் நிறைவின்மை கொண்டனர். நவரத்தினங்களாலான மலைகளை அவர்கள் உருவாக்கிக்கொண்டனர். வைரக்கற்களை அடுக்கி வீடு கட்டினர். மலர்கள் மட்டுமே கொண்ட காடுகள். மான்களும் மயில்களும் மற்றும் அழகிய விலங்குகளும் மட்டுமே கொண்ட இயற்கை. அழகென்று உருமாறத்தக்க அனுபவங்கள் மட்டுமே கொண்ட வாழ்க்கை. துயரம்கூட அவ்வாறு நடிக்கும் இனிமைதான் அங்கே.

சம்ஸ்கிருத காவியங்களுக்கும் இந்தியாவில் நிகழ்ந்த வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய வரலாற்றுக்குக்கூட அதனுடன் தொடர்பில்லை. பெரும் பஞ்சங்களும் போர்களும் தொற்றுநோய்களுமாக வாழ்க்கை ரத்தம் சிந்தி அழுகிக்கொண்டிருந்த காலகட்டங்களில்கூட அது தேன் சொட்டிக்கொண்டிருந்தது. இருண்டகாலங்களிலும் அது வைரப்பட்டைபோல ஒளிர்ந்துகொண்டிருந்தது. சம்ஸ்கிருத காவிய உலகம் இந்தியா கண்ட ஒரு பகற்கனவு மட்டும்தான். மாபெரும் பகற்கனவு. ஒருவேளை இந்த பூமியில் நிகழ்ந்தவற்றிலேயே மிகப்பெரிய பகற்கனவு சம்ஸ்கிருத இலக்கியம்தான்.

அது ஒரு கூட்டுக்கனவு. அந்தக் கனவை பூப்பந்தை தட்டித்தட்டி வானில் நிறுத்தி வைப்பது போல இரண்டாயிரம் ஆண்டுகாலம் தரைதொடாமல் நிறுத்தி வைத்திருக்க அவர்களால் இயன்றது. இன்று அவர்களின் விசை இன்னும் எங்கோ எஞ்சியிருப்பதனால் அது விண்ணிலேயே நின்றிருக்கிறது. விண்ணிலுள்ள பலநூறு முகில்களில் ஒன்றாக. அங்கே இன்று சென்று சேர்வதற்கு மண்ணை உதறிப் பறக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதை கீழிருந்து தொலைநோக்கியால் பார்த்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மேலே சென்று அதில் இறங்கி அங்கிருக்கும் அழகுகளும் ஒளியும் மட்டுமேயான உலகைக் காண்பவர் மிகமிகச் சிலர்தான்.

என்னால் அங்கே செல்ல முடிந்தது. அங்கிருந்து திரும்ப மண்ணுக்கு வரவே முடியவில்லை. நான் அங்கேயே வாழ்ந்தேன். அதிலேயே திளைத்தேன். தேனைக்குழைத்து கூடுகட்டி அதிலேயே வாழும் தேனீபோன்ற ஒரு வாழ்க்கை. காளிதாசன், பாரவி, ஜனார்த்தன பண்டிதர், பாணபட்டர், ஹேமசந்திரன், ஶ்ரீஹர்ஷன், மாகன்… கவிஞர்களின் முகங்களை நான் உருவாக்கிக் கொண்டேன். என்னுடன் அவர்கள் இருந்துகொண்டே இருந்தனர். என் உள்ளத்தில் அவர்களின் ஒரு வரி சட்டென்று தோன்றும்போது அவர்களும் வந்து அருகே நின்றிருப்பார்கள். அவர்களுடன் என்னால் உரையாடமுடியும், தொடக்கூட முடியும் என்பது போல.

சம்ஸ்கிருத காவிய உலகம் பற்றி அதை அறியாதவர்களிடம் இருக்கும் பிரமைகளில் முக்கியமானது அது இந்து மதம் சார்ந்தது, பக்தியை பேசுபொருளாகக் கொண்டது என்பது. பக்தி என்பது உலகைத் துறந்து அடைவது. சம்ஸ்கிருத அழகியல் இனிமையையும் அழகியலையும் நாடிச்செல்வது. ஆகவே உலகை அள்ளித் தழுவிக் கொள்வது. அவற்றில் பக்தி இல்லை, பக்திக்குரிய பாவனைகளை பெரும்பாலான சம்ஸ்கிருத காவியங்கள் நடிக்கின்றன. புராணங்களில் இருந்து கருப்பொருட்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. தெய்வங்களும் தேவர்களும் முனிவர்களும் வந்துகொண்டே இருக்கின்றனர். பக்தியாக அவற்றை அப்பாவிகள் படிக்கலாம். ஆனால் அவை முற்றிலும் உலகியல் சார்ந்தவை. சுவை மட்டுமே இலக்கு எனக் கொண்டவை. சுவையில் மட்டுமே முழுமையடைபவை.

எத்தனை குடித்தாலும் தாகம் தீராது என்னும் சாபம் கொண்டது உலகியல். ஆகவே திளைப்பது ஒன்றே செய்யக்கூடுவது. சம்ஸ்கிருதக் காவிய இயல்பற்றிச் சொல்லவேண்டும் என்றால் ஒரே வார்த்தையை தான் சொல்லவேண்டும். திளைத்தல். உணவுச்சுவையில் நாக்கு போல. காமத்தில் உடல் போல. சுவைக்கப்படுவதில் நீந்தி, மூழ்கி, துழாவி, அளைந்து, கரைய முயன்று, மீண்டும் மீண்டும் மீண்டும் முயன்று… அதன்பெயர்தான் திளைத்தல். சம்ஸ்கிருத காவியங்கள் உலகச்சுவையில் திளைத்தன, நான் அவற்றில் திளைத்தேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.