“சங்சன்!”
நான் பிறந்து வளர்ந்த திருவரம்பு கிராமம் அந்தக் காலத்தில் உலகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. அதன்பொருட்டு மற்ற கிராமத்தினருக்கு பெரிய பொறாமை இருந்தது. எங்களை ‘பவுறு’ காட்டுவதாக குற்றம்சாட்டுவார்கள் (power தான். எங்களூரில் போலிப்பெருமைக்கானச் சொற்றொடர் அது). ஏனென்றால் எங்களூருக்கு பேருந்து வரும். எழுபதுகளில் எங்கள் மாவட்டத்தில் ஏழு சதவீதம் ஊர்களே பேருந்தால் இணைக்கப்பட்டிருந்தன என்பது பின்னணி. பேச்சிப்பாறை செல்லும் பேருந்துகளில் ஒன்று எங்களூர் வழியாகச் செல்லும்.
எங்கள் ஊர் என்றேன், பிழை. எங்கள் ஊர் திருவரம்பு. அது சிவன்கோயிலைச் சுற்றியிருந்தது. அப்பால் பாடச்சேரி உட்பட இணைப்பூர்கள். திருவரம்பின் அருகே குருவிக்காடு என்னும் இடம் இருந்தது. அங்கேதான் தார்ச்சாலை. அதுவழியாகவே பேருந்துகள் செல்லும். நாங்கள் குருவிக்காடு ஜங்சன் என்போம். “சங்சனுக்குப் போறது” எங்களூரின் முக்கியமான அன்றாட நாகரீக நடவடிக்கை. பல காரணங்களுக்காக. காலையில் ஒரு ‘காலிச்சாயா’ (அதாவது வடை உள்ளிட்ட கடி இல்லாத குடி மட்டும்) அடித்துவிட்டு அங்கே கண்ணன் பார்பர்ஷாப், மாதவன் நாயர் டீக்கடை, அப்புக்குட்டன் பீடிக்கடை முதலியவற்றில் தேங்கிச் சுழன்று நின்றிருந்தால் எவராவது அன்றைய மண்வெட்டி வேலைக்கு அழைத்துச்செல்வார்கள்.
அதேபோல மாலையில் வேலைமுடிந்து ஆற்றில் குளித்து, அதன்பிறகு ‘குளூக்க’ எண்ணை தேய்த்துக்கொண்டு கண்கள் சிவக்க அதே ‘சங்சனில்’ நின்றிருந்தால் கள்சாராயத்திற்கு துணை கிடைக்கும். மறுநாள் வேலைக்கான அழைப்பும் கிடைக்கும். சமயங்களில் அடியும். (இது கிறிஸ்துமஸ் ஓணம் காலகட்டங்களில்). பனை ஏறுபவர்கள் விடியற்காலையில் மூன்றுமணிக்கு எழுந்து எட்டுமணிக்குள் வேலையை முடித்துவிட்டு, ஒன்பது மணி ‘பளஞ்சிகுடி’ (பழையதுதான்) முடிந்து சங்சனுக்கு வந்து துண்டு பீடியுடன் கண்கள் சொக்க அமர்ந்திருப்பார்கள். பன்னிரண்டு மணிக்கு மீண்டும் வீடுதிரும்பி சோறு சாப்பிட்டு தூங்கினால் நான்கு மணிக்கு விழித்து அந்திப்பனை ஏற்றம்.
அண்மையில் நான் அமெரிக்காவில் என் பதிப்பக ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “அமெரிக்காவில் எதை நீங்கள் இழப்பதாக நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஆள்கூட்டத்தை” என்று நான் சொன்னேன். “இங்கே ‘டவுண்-டவுன்க’ளில் மட்டுமே மக்களின் நெரிசல் உள்ளது. மிகப்பெரும்பாலான தெருக்களில் ஆள்நடமாட்டமே இல்லை. புறநகர்களும் சாலைகளும் காலியானவை. அது ஒருவகை பதைப்பை உருவாக்குகிறது”. அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர், ஆனால் உடனே புரிந்துகொண்டார். “ஆமாம், இந்த ஊர்க்காரர்களுக்கே அந்த தவிப்பு உண்டு. ஆகவேதான் நகர்ச்சதுக்கங்களில் இவ்வளவு நெரிசல். சிறிய அறைகளுக்குள் முண்டியடித்து குடித்து நடனமிடுகிறார்கள். நாங்கள் கியூபாவுக்கோ ஃப்ளோரிடாவுக்கோ ஐரோப்பிய நகரங்களுக்கோ செல்வதுகூட இதனால்தான்”
வெளிநாடுகளுக்குச் சென்றால் ‘பாறேதிவரம்’ அல்லது ‘பாறேரிரம்’ என்னும் பார்வதிபுரம் வந்து அதன் ‘சங்சனுக்கு’ சென்று சும்மா ஒரு ரவுண்டு சுற்றிவந்தால்தான் ‘at home’ ஆக உணர்கிறேன். அங்கே ஒன்றுமே இல்லை. மனம்போல கட்டப்பட்ட ஒரு பெரிய மேம்பாலம். ஆனால் அதன்மேல் அனேகமாக வண்டிகள் ஓடுவதில்லை. மேடேறி எதற்கு டீசலை வீணாக்கவேண்டும் என நினைப்போர் குமரியர். ஆகவே கீழே வழக்கமான பேருந்து நெரிசல். பரோட்டாக் கடைகள். சில்லறை விற்பனைக் கடைகள்.
பரோட்டா சுவையாக இருக்காது, மைதாவால் செய்யப்பட்ட வட்டவடிவமான அப்பொருளை இரு நாய்கள் இரு முனைகளில் கடித்து நெடுநேரம் இழுப்பதை ஒருமுறை கண்டிருக்கிறேன். சிறிய ‘ஃபேன்ஸி ஸ்டோர்’களில் விற்கப்படும் எல்லா பொருட்களுமே போலி பிராண்டுகள்தான். “அசல் எல்லாம் நமக்கு கட்டுப்படியாகாது சார்….நாரோயில் போனா கிட்டும்” என்று பணிவாகச் சொல்வார்கள். ‘பாரேரிரம்’ பொதுவாக பிள்ளைகள் படித்து வேலைக்குச் செல்ல சமூக அடித்தட்டில் படிந்துவிட்ட (படிமம்?) முதியோரின் ஊர். படிக்கும் பிள்ளைகளைக் கொண்டவர்கள் இன்னும் வீடுகட்ட ஆரம்பித்திருக்க மாட்டார்கள். இங்கே வீடு இருப்பவர்கள் எல்லாம் இருபதாண்டுகளுக்கு முன் வந்தவர்கள். ஆகவே பல மருந்துக்கடைகள்.
மற்றபடி சங்சன் என்பது இந்தப்பக்கம் கணியாகுளம், பாறையடி; அந்தப்பக்கம் பெருவிளை என பல சிற்றூர்களின் சந்திப்பு முனை. சந்திப்பு என்றால் இரண்டுவகை. மூக்குகளை முகர்ந்து பெருமூச்சுவிட்டு ஓர் ஊரின் இருப்பை இன்னொரு ஊர் அங்கீகரிப்பது. “வோ, நீயாக்குமா?” அல்லது கொம்புகளாலும் மண்டைகளாலும் முட்டிக்கொள்ளும் சண்டை. “மயிராண்டி, இண்ணைக்கு நீ இல்லெங்கி நான்!” இரண்டாவது நிகழ்வு தினமும் சிறிய அளவிலேனும் நிகழும். அதற்கு மாலை ஏழுமணி தாண்டவேண்டும், டாஸ்மாக்கர்களின் உலகம் விழித்தெழுவது அதன்பிறகுதான். அப்படிப்பார்த்தால் இந்த இடத்தை juncture என்றுதான் சொல்லவேண்டும்.
நான் காலை ஐந்தரைக்கு ஒரு பொடிநடையாக இங்கே வருகிறேன். கருப்பட்டிக் காப்பிக்கடை என்ற ‘பாரேரிரம் பப்’பில் ஒரு சீனியில்லா டீ சாப்பிடுகிறேன். பாலம் ‘நான் என்ன தப்பு செஞ்சேன்?’ என்பதுபோல பூதாகரமான கால்களில் நின்றிருக்க மாநகராட்சி பணியாளர்கள் பொறுமையாகக் கூட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களில் பலர் அழகிகள். அவர்கள் என்னைப் பார்த்து புன்னகை செய்வதை கண்டு புரியாமல் நாலைந்துநாள் திகைத்தேன். கால்சட்டைக்கு வழக்கம்போல ஜிப் போடாமல் விட்டுவிட்டேனா? ஆனால் டிராக்சூட்டுக்கு ஜிப் இல்லையே?
பிறகு ஓர் இளம்பெண் சொன்னாள். “சாறில்லா பொன்னியின் செல்வனுக்கு கதை எளுதினது?” நான் வெட்கத்துடன் “ஆமா” என்றேன். “விக்ரம் செத்தது எனக்கு பிடிக்கேல்ல கேட்டியளா?” என் முகம் வாடக்கூடாது என உடனே அக்கறைகொண்டு “ஆனா நல்ல படமாக்கும்” என்றாள். அவள்தான் மற்றவர்களுக்குச் சொல்லியிருக்கவேண்டும். அவர்களும் என்னைப் பார்த்து பிரியமாகப் புன்னகை செய்தனர். “நான் வேறேயும் கதை எளுதினதுண்டு” என்றேன். “தெரியும், வெந்துதணிஞ்ச காடுல்லா?” ஆம் என தலையசைத்தேன்.
அதிகாலையில் ஊக்கமாக இருப்பவர்கள் கோயில் பூசாரிகள். இந்த சின்ன ஜங்ஷனில் மொத்தம் நான்கு கோயில்கள். இரு எல்லைகளில் இரு பிள்ளையார்கள். ஒரு மாரியம்மன், ஒரு சுடலைமாட சாமி. பிள்ளையார்கள் சகல ஜாதிக்கும் பொது. மாரியம்மன் சாலியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சுடலைமாட சாமி யாதவர் சமூகம். ஆண்டுமுழுக்க ஐயர்கள் பூஜை செய்கிறார்கள். ஆண்டுக்கு மூன்று கொடை. தினசரி சீர்காழி சிவசிதம்பரம், அனுராதா ஶ்ரீராம் பாட்டு.
கடைகளின் முன்னால் பாலிதீன் குப்பைகள் காற்றில் நிலையழிகின்றன. இருசக்கர வண்டிகளில் குளித்து நெற்றியில் பட்டையும் சந்தனமும் உலராமல் எங்கோ அவசரமாகச் செல்பவர்கள். பஸ்ஸுக்காக காத்திருக்கும் பெண்களின் கூந்தல்களில் இருந்து சுடிதார் மேலும் ஜாக்கெட் மேலும் நீர்சொட்டிக்கொண்டிருக்கிறது. இங்கே எல்லா நாளும் தலைகுளிப்பார்கள். எந்நாளும் சரியாகத் துவட்ட மாட்டார்கள். பேருந்துகளில் கூட்டம் இல்லை. ஆனாலும் பெருமூச்சுவிட்டபடித்தான் செல்கின்றன.
மதியம் ஆகுந்தோறும் பரபரப்பு ஏறும். ஆரன் ஒலிகள். முட்டிமோதும் வண்டிகள். ஆனால் மேம்பாலம் புண்ணியத்தில் பார்வதிபுரத்தில் வெயிலே இல்லை. நடுமதியத்தில்கூட சாவகாசமாக நடை செல்லலாம். திரளில் ஒருவராக ஆகலாம். எவரோ என்னிடம் “சார் வணக்கம், இப்ப இங்கதானா? மத்தவன் வாறதுண்டா?” என்றார். என்ன கேட்கிறார் என தெரியவில்லை. எவர் என்பதும் புரியவில்லை. ஆனாலும் “ஆமா, கொஞ்ச நாளாட்டு… இப்ப காணுகதில்லை” என்றேன். “இருக்கட்டும்” என்று சென்றார். இங்கே எவரிடமும் எவரும் மேலே சொன்ன நலம் விசாரிப்பைச் செய்யலாம்.
பார்வதிபுரத்தை ஒட்டியே இரு நடைபாதைச் சந்தைகள். பேருந்து நிறுத்தம் அருகே நீளும் துணைச்சாலையில் வழியிலேயே காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் விற்பனை. ஒரு தரமான மீன்சந்தை. இரவு பிடித்த மீன் விடியற்காலையில் வந்து விரிந்திருக்கும். “ஆ! ஆ! துள்ளுத மீனு! துடிக்குத மீனு! துள்ளாத மனமும் துள்ளும்! லே துள்ளும்லே… வாலே”. அருகிலேயே பெரிய காய்கறி சூப்பர் மார்க்கெட். இரண்டு மடங்கு விலையில். கௌரவமானவர்கள் வாங்குவதற்காக. உறைமீன் கடையும் உண்டு, பழைய மீன்கள் உயர்ந்த விலையில் ‘நல்ல குடும்பத்தில் பிறந்த’ பெண்கள் வாங்குவதற்காக.
திரள், நெரிசல், முகங்கள். மஞ்சள்பைகள். தயங்கும் சிறு இருசக்கரிகள். பொறுமையிழக்கும் நாற்சக்கரர்கள். ஆனால் மேம்பாலம் ஏறினால் ஒரு மாநகரின் நான்குவழிச்சாலை. அங்கே வண்டிகளே இல்லாத ஆழ்ந்த அமைதி. தொலைதூரத்து மலைகள் நீலமுகிலில் பாதி புதைந்திருக்கும். அவ்வப்போது ஒரு லார் செல்வதை தவிர்த்தால் அசைவே இல்லை.
இப்பால் சூரியன் அணைவதும் அப்பால் எழுவதும் பார்வதிபுரத்தை கூடுதல் பரபரப்பாகவே ஆக்குகின்றன. எல்லாருக்கும் ஏதோ செய்வதற்கு இருப்பதுபோல. அமைதி அமைதி என்று கை தூக்கி காட்டியபடி சிமிண்ட் எம்ஜிஆர் அரசுப்பள்ளியின் முகப்பில். நாய்கள் நிதானமாக இருக்கின்றன, அயலூர் நாய் வரும் வரைக்கும். எல்லாரும் ஏதோ செய்கிறார்கள். நாம் மட்டும் இப்படி வாயைப்பிளந்து நடக்கிறோமா?
ஆனால் இல்லை. பெரும்பாலானவர்கள் சும்மாதான் நின்றிருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருக்கிறார்கள். கடைக்காரர்கள் சாலையை வெறிக்கிறார்கள். கடைகளுக்கு முன் குடைகளை இடுக்கியபடி, பைகளை பற்றியபடி வெறுமேதான் நின்றிருக்கிறார்கள். அல்லது பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சை செவிகொடுத்தால் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. “சிமிண்டுன்னா அதிலே மண்ணு கலக்கணுமா இல்லியா? ஏலே மண்ணு இல்லாம சிமிண்டு நிக்குமாலே? மண்ணுகலந்தான்னுட்டு இந்த நெல நிக்குதான்?” இது கட்டுமான நடைமுறை விவாதமா, அல்லது ஏதேனும் உயர்தள தத்துவ உருவகமா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

