காவியம் -2

சாதவாகன காலகட்டம், பொயு 2, பைதான் அருங்காட்சியகம்

கதைகள் சொல்லும் பிசாசை என் அம்மாவுக்கு அவள் பாட்டி அவளுடைய ஏழு வயதில் அறிமுகம் செய்தாள். பாட்டியை என் அம்மாவின் பழையவீட்டின் தோட்டத்தில், கோதாவரிக்குச் செல்லும் சேற்றுப்பாதையின் ஓரமாக  புற்கூரை போடப்பட்ட களிமண் சுவர் கொண்ட தனிக்குடில் ஒன்றில் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தார்கள். அவளைச் சுற்றி எப்போதும் ஏராளமான நிழல்கள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு நிழலும் இன்னொன்றுடன் பூசலிட்டது. சிலசமயம் அவை ஒன்றோடொன்று தழுவிக்கொண்டு நடனமிட்டன. அந்நிழல்களுக்கு நடுவே சடைக்கற்றைகளாக இடைவரைத்தொங்கிய கூந்தலும், நீண்டு வளைந்த நகங்களும், மண்ணும் அழுக்கும் படிந்து அகழ்ந்தெடுத்த கிழங்குபோல ஆகிவிட்ட நிர்வாண உடலுமாக பாட்டி எப்போதும் நிலைகொள்ளாமல் தன் உடலிலேயே ததும்பிக்கொண்டிருந்தாள்.

பாட்டியின் நாவிலிருந்து அறியாத மொழியொன்றின் சொற்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. அவை ஆணையிடவோ, அறைகூவவோ, எச்சரிக்கவோ இல்லை. நிழல்கள் குடியேறும்போது மனிதர்களின் உடலில் இருந்து அந்த உடலுக்குரிய ஆத்மாவின் அழுகுரல் எழுவதுண்டு. தன்னை விடுவிக்கும்படி அது இரந்து மன்றாடுவதுண்டு. பாட்டி அழவுமில்லை, எதையும் கோரவுமில்லை. அவள் பேசிக்கொண்டே இருந்தாள், ஆழ்ந்த குரலில், ஒத்திசைவும் ஒலிநயமும் கொண்ட குரலில். எவரும் அவளருகே இல்லாதபோதுகூட, அவளை செவிகொள்ளலாகாது என்று விலகிச்சென்றுவிட்டிருந்த போதிலும்கூட.

பேச்சினூடாக அவள் பாடினாள். நெஞ்சுக்குக் கீழே தொப்புளில் இருந்து எழுந்ததுபோன்ற மிக இனிய குரலில். அவள் உடலே ஒரு குடமென்றாக, அவள் தொண்டையின் தசைகள் நரம்புகளென்றாக அவள் ஒரு பெரிய வீணையாக ஆகிவிட்டதுபோல. அது அவர்கள் அறிந்த பாடல்முறை கொண்டிருக்கவில்லை. அதை பாடலென்று அவர்கள் எண்ணியதே அது நெஞ்சை உருக்கியமையால்தான். உலகின் துயரத்தின் ஆழத்தை தொட்டறிந்துவிட்ட காட்டுவிலங்கொன்று சட்டென்று பாடத்தொடங்கிவிட்டதைப் போல. அதைக் கேட்ட எவரும் ஒரு சில மீட்டல்களிலேயே கண்ணீர் மல்கி விம்மத்தொடங்கிவிட்டமையாலேயே அது பாடலென்று அறியப்பட்டது.

ஆனால் எந்த துயரப்பாடலிலும் இருக்கும் கைவிடப்பட்ட உணர்வு அதில் இருக்கவில்லை. ஏக்கமும் மன்றாட்டும் இருக்கவில்லை. அது வெறும் துயரமாகவே இருந்தது. அவர்கள் அறிந்த எந்தப் பொருளும் இல்லாத துயரம். அதன் எடையை அவர்களால் தாள முடியவில்லை. ஆகவே அந்தப்பாடலைக் கேட்டவர்கள் அக்கணமே அங்கிருந்து விலகிச்சென்றனர்.அதை உடனே உள்ளத்தில் இருந்து நழுவவிட்டனர். ஆனால் நள்ளிரவில் விழித்துக்கொண்டு கண்ணீர் வழிய நெடுநேரம் விழித்திருந்தனர்.

இல்லத்தில் எவரும் பாட்டியின் அருகே செல்வதில்லை. அவளுக்கான அன்னத்துடன் வயது முதிர்ந்த மஹதி மட்டுமே அறைக்குள் சென்றாள். உணவை அவள் அருகே வைத்துவிட்டு அவள் விரைந்து திரும்பி வந்தாள். கிழவி அருகே செல்லும் எவரையும் எதுவும் செய்வதில்லை. அவள் தன்னை விடுவித்துக்கொள்ள முயல்வதுகூட இல்லை. அவள் ஒருவர் தன்னருகே வருவதைக்கூட அறியாதவளாகத்தான் இருப்பாள். ஆயினும் அத்தனைபேரும் அவளை அஞ்சினர். ஏனென்றால் அவளருகே சென்றவர்கள் நாளடைவில் அவளைப்போல ஆயினர். முன்பு அவளுக்கு உணவளித்த அவள் தங்கை ராணி பித்து எழுந்து ஒருநாள் கோதாவரியில் பாய்ந்து மறைந்தாள்.

அதன் பின் அவளை அணுகிப் பராமரித்த சுதாமயி ஒருநாள் இரவில் கூந்தலை அவிழ்த்து விரித்து கைகளை விரித்தபடி அலறி ஆர்ப்பரித்தபடி வெளியே ஓடி இருளில் பனைமரத்தில் விசையுடன் மோதிவிழுந்து அங்கேயே மறைந்தாள். அதன்பின் அவளுக்கு உணவளித்த சந்திரா திருவிழாவின்போது ஊர்நடுவே கொளுத்தப்பட்ட சொக்கப்பனையின் மூன்றாள் உயரமுள்ள நெருப்பை நோக்கிப் பாய்ந்து அதை தழுவிக்கொண்டு முடிபொசுங்கி தசை சுருண்டு விழுந்து நெளிந்தடங்கி நீலத்தழலுடன் உடல்வாயுக்கள் வெடித்து வெடித்து எரிந்து அடங்கினாள். தீப்புகுந்தபோதும், எரிந்தமைந்த போதும் அவளிடமிருந்து சிறிய ஓசைகூட வரவில்லை. தீயின் செந்நாளங்களுக்குள் அவள் முகம் சிரிப்பிலோ வியப்பிலோ விரிந்து கண்கள் வெறித்திருந்தன.

அதன்பின் அவளை பார்த்துக்கொள்ள எவரும் முன்வரவில்லை. அவளை வெளியே விடக்கூடாது என்று ஊர்த்தலைவரின் எச்சரிக்கை இருந்தது. அயலூர்களிலெல்லாம் அவளை பற்றிய அச்சம் பரவியிருந்தது. அவள் அகாலமாக இறந்தால் அவளில் இருந்து வெளியேறும் பிசாசு வேறொருவரில் நுழையும் என்ற அச்சம் வலுவாக இருந்தது. ஒவ்வொருவரும் அது அவர்களோ அவர்களுக்கு வேண்டியவர்களோதான் என அஞ்சினர். ஏழுநாட்கள் எவரும் கிழவிக்கு அருகே செல்லவில்லை. அவள் உணவும் நீருமின்றி அந்த அறைக்குள் எப்போதும்போலச் சுழன்றுவந்துகொண்டும், சடைக்கற்றைகள் அசைய சுழன்றாடியபடியும், இடைவிடாமல் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள்.

அந்த அறைக்குள் இருந்து அவள் குரல் வெளியே கேட்கலாகாது என்று அதை நன்றாகவே மூடியிருந்தார்கள். குரல்கேட்காத தொலைவில்தான் அத்தனை வீடுகளும் இருந்தன. ஆனாலும் அக்குரல் அவர்களைத் தேடிவந்தது. இரவின் இருளில், பிற ஓசைகள் எல்லாம் அடங்கியபின்னர், அவள் பாடலும் கதைகளும் காற்றிலேறி தூக்கம் கலைந்து படுத்திருப்பவர்களின் செவிகளை வந்தடைந்தன. அதைக்கேட்டவர்கள் முதலில் அது அவள்குரல் என உணர்வதில்லை. ஏனென்றால் மிகமெல்லிய அந்த ஓசை அவர்கள் மிக நன்றாக அறிந்த எவருடைய குரலோ போலிருக்கும், அவர்கள் கேட்டுப்பழகிய ஒரு பாடலாகவோ பேச்சாகவோ அது தோன்றும்.

அது எவர், எந்த பாடல் என்று வியந்து உள்ளத்தால் துழாவிச்சென்று நினைவுகளை தொட்டுத்தொட்டு விரிக்க ஆரம்பிக்கும்போதுதான் அது முற்றிலும் அறியாத மொழி என்பது தெரியவரும். அக்கணத்தில் அது அவள் என்று தெரிந்ததும் உடல் விதிர்ப்படையும். வியர்த்துக்கொட்டி, வாய்கோணலாகி, சிறு வலிப்பு வந்தவர்களும் உண்டு. அலறிக்கொண்டும், குழறியபடியும் அவர்கள் எழுந்தமர்வார்கள். நெஞ்சையும் தோளையும் பிராண்டிக்கொள்வார்கள், தலையைப் பற்றி முடியை பிய்த்துக்கொள்வார்கள். கண்ணீர் கொட்டிக்கொண்டு, உடல் முன்னும்பின்னும் ஆடிக்கொண்டும் இருக்கும்.

உடன் தூங்கியவர்கள் அவர்களை உலுக்கி எழுப்பவேண்டும். நீரை அள்ளி அள்ளி முகத்தில் அறைந்து விழிப்புறச் செய்யவேண்டும். அவர்கள் அறியாத மொழியின் சொற்களை உளறுவதுண்டு. விழித்தெழுந்து நடுங்கியபடி வேண்டியவர்களைக் கட்டிக்கொண்டு அழுது, மயங்கி விழுந்து, நீர் குடித்து மீண்டபின்னரும்கூட அவர்களில் சில சொற்கள் தங்கிவிடும். அவர்கள் முன்பிருந்ததுபோல ஆவதே இல்லை. அவர்களிடம் புதியதாக ஒன்று வந்து அமைந்துவிட்டிருக்கும். அவர்களே அதை அஞ்சி தங்களுக்குள் ஆழ்த்திக்கொள்வார்கள். இயல்பாக, எவரையும்போல் இருப்பதாக நடிப்பார்கள். ஆனால் அவர்களைச் சுற்றியிருக்கும் பிறர் அவர்களைப் பார்க்கும் பார்வைகள் மாறியிருப்பதை அவர்களும் உணராமலிருக்க முடியாது.

ஏழாவது நாள் நள்ளிரவில் பாட்டியின் குரலைக் கேட்டு கண்ணீர்விட்டு படுத்திருந்த மஹதி மறுநாள் வந்து பாட்டிக்கு அவளே உணவும் நீரும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டாள். அதை அவள் அன்னையும் தந்தையும் அஞ்சி கூச்சலிட்டு, வெறிகொண்டு ஆணையிட்டு தடுத்தாலும் அவள் உறுதியாக இருந்தாள். அவள் முதல்நாள் கிழவிக்கு உணவும் நீரும் அளித்துவிட்டு மீண்டு வந்தபோது ஒவ்வொருவரும் அவளையே கூர்ந்து பார்த்தனர். என்ன ஆகிறது? அவளில் எது கூடுதலாக வந்து சேர்ந்திருக்கிறது? அவளுக்குள் ஒளிந்திருந்து எது அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

ஆனால் எல்லாம் இயல்பாகவே இருந்தது. ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்றுதான் மகதி சொன்னாள். மெய்யாகவே ஒன்றுமில்லை. புன்னகையுடன் ”அவள் நம் அம்மா இல்லையா? அவள் பசித்திருக்கையில் நாம் உண்ணக்கூடாதல்லவா?” என்று அவள் சொன்னாள்.

”ஒன்றுமில்லை, கிழவியின் கண்களை பார்க்காமலிருந்தால் போதும். அக்கண்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு, அவள் சொல்லும் அந்த பிசாசின் மொழியை கேட்காமல், சென்று திரும்பினால்போதும்” என்று என் முதியவரான சோட்டாராம் சொன்னார். ”காதுகளை மூடுவது மிக எளிது. நம் மனதுக்குள் நமக்கான சொற்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். நமக்குள் நாம் சந்தைபோல இரைந்து கொண்டிருக்கவேண்டும். என் வழி அதுதான். இருபத்திரண்டு ஆண்டுகளாக இவளுடன் பக்கத்து வீட்டிலேயே இருக்கிறேன். அவளை நான் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை”

ஆனால் மெல்ல மெல்ல மகதி மாறிக்கொண்டிருந்தாள். மிக அமைதியானவளாக, மிகமிகத் தனித்தவளாக. அவள் பிறரிடம் பேசுவது குறைந்தது. பின்னர் முகபாவனைகள் மட்டுமே கொண்டவளாக ஆனாள். அவள் மெலிந்து சுருண்டாலும் மிகமிக எடைகொண்டதாக ஆகிவிட்டதுபோல் இருந்தது. அவள் மண்ணில் அமர்ந்து சென்ற இடத்தில் கல்லுரல் வைத்ததுபோல உடற்தடம் பதிந்தது என்று சொல்லிக்கொண்டார்கள். அவள் அந்த ஊரில் வாழ்ந்தாலும் அவளை பிறர் பார்க்காமல், கேட்காமல் ஆனார்கள். அவளை அனைவரும் மறந்துவிட்டனர். அவள் மட்டுமே கிழவியை ஒவ்வொருநாளும் ஒருமுறை சென்று நோக்கி வருபவளாக இருந்தாள்.

பன்னிரண்டு ஆண்டுகள் பாட்டியை மகதிதான் பார்த்துக்கொண்டாள். பாட்டியுடன் அவள் அதிகம்போனால் ஐந்து நிமிடம் இருப்பாள். உணவை கொண்டு வந்து வைத்துவிட்டு வந்தால் பாட்டி அதை தட்டி பரப்பிவிடுவாள். ஆகவே அருகே அமர்ந்து அள்ளி அவள் கைகளில் அளிக்கவேண்டும். அவள் உணவுண்டுவிட்டு எழுந்து சென்றபின்  பழைய கலத்தை எடுத்துக்கொண்டு திரும்பிவிடவேண்டும். அப்போது அவள் கண்களைப் பார்க்கக்கூடாது. அவளிடம் ஒரு வார்த்தைகூர பேச முயலக்கூடாது. மகதி பாட்டியுடன் இருக்கையில் பாட்டியைச் சூழ்ந்திருக்கும் நிழல்களில் ஒன்று அசைவதாகவே தோன்றும்.

பிற பொழுதுகளில் மகதி தனிமையில் அமர்ந்திருந்தாள். அவள் செய்யத்தக்க வேலை ஒன்று அவளால் கண்டடையப்பட்டது. கோதாவரியின் கரையில் இருந்து வெட்டிக்கொண்டுவந்து வேகவைத்து நிழலில் உலரச்செய்து சீராக வெட்டி அளிக்கப்படும் கோரையை விரைவான மெல்லிய விரல்களால் பின்னி பாய்களை செய்தாள். அவளுடைய விரல்கள் இரண்டு கரிய சிலந்திகள் போல கோரையை பின்னிக்கொண்டே இருக்க அவள் கண்கள் வெறுமே நிலத்தை வெறித்துக்கொண்டிருக்கும். மகதியிடடமிருந்து ஒரு சொல்கூட அந்த அறியாத மொழி வெளிப்படவில்லை.

பாட்டி இறந்த அன்று மகதியும் இறந்தாள். அவள் இறந்ததை ஒரு நாள் கழித்தே அனைவரும் உணர்ந்தனர். பாட்டிக்கு மதியம் ஒருவேளை கொண்டுசென்று வைக்கவேண்டிய உணவு செல்லவில்லை என்பதை அம்மாவின் அம்மாதான் இரவில் நினைவுகூர்ந்தாள். ”இன்று மகதி உணவு கொண்டுபோக வரவில்லை” என்றாள்.

அப்பா ”அவள் வந்திருப்பாள், நீதான் மறந்துவிட்டிருப்பாய்” என்று மதுவின் போதையில் குழறிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டார்.

மறுநாள் மதியத்திலும் மகதியைக் காணாமல் அம்மா அப்பாவிடம் சொன்னாள். ”இங்கே எங்காவதுதான் இருப்பாள், தேடிப்பார்” என்று அப்பா சொல்லிவிட்டார்.

அம்மா அவளைத் தேடி கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சென்றாள். இறுதியாகத்தான் அவளை பாட்டியின் குடிலில் போய்த் தேடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அங்கே சென்று தேடும் துணிவு அவளுக்கு இருக்கவில்லை. ஆகவே மீண்டும் சென்று கூடை முடைந்துகொண்டிருந்த அப்பாவிடம் சொன்னாள்.

”போ, தொந்தரவுசெய்யாதே” என்று அவர் சீறி பிரம்பை எடுத்து அவள்மேல் வீசினார்.

பதற்றத்துடன் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த அம்மா மீண்டும் வந்து “ஒரு தடவை எட்டிப்பார்த்துவிட்டு வாருங்கள்” என்றபோது அவர் எழுந்து வந்து அம்மாவை அறைந்தார். ”என்னை நிழல் பிடித்துக்கொண்டால் நீ வேறு ஆணைத் தேடிக்கொள்வாய், அதுதானே உன் திட்டம்? கழிசடை நாயே” என்று கூச்சலிட்டார்.

ஆனால் அன்று மாலை அவருக்கே அச்சம் உருவாகிவிட்டது. கிராமத்தலைவர் சோட்டாராமிடம் சென்று சொன்னார். “அவள் வருகிறாளா என்று பார்ப்போம். இந்த இருட்டில் என்ன செய்வது?” என்று அவர் தவிர்த்துவிட்டார்.

அம்மாவும் அப்பாவும் இரவு முழுக்க தூங்காமல் இருந்தனர். அம்மா “சித்தியின் குரலும் இப்போது கேட்கவில்லை” என்றாள்.

“நீ அவள் குரலுக்குச் செவிகொடுக்கிறாயா? அறிவுகெட்ட முண்டம்… பேசாமல் தூங்கு… பிசாசை அழைத்து வீட்டில் குடிவைக்காதே” என்று அப்பா கூச்சலிட்டார்.

மறுநாள் காலையில் பாட்டி வாழ்ந்த குடிலுக்கு வெளியே கிராமத்தின் நாய்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருப்பதையும், அவை நிலையழிந்து முனகியபடியும் உறுமியபடியும் சுற்றிவருவதையும் அம்மாதான் பார்த்தாள். அப்பா ஓடிச்சென்று சோட்டாராமிடம் சொன்னார். ஊர்க்காரர்கள் கூடிவிட்டார்கள். அந்தக் குடிலுக்குள் எவர் சென்று எட்டிப்பார்ப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு நின்றிருந்தார்கள். இறுதியில் ஊரின் மந்தபுத்தியான சோட்டுவிடம் உள்ளே சென்று பார்க்கும்படிச் சொன்னார்கள்.சோட்டு “லட்டு தருவாயா?” என்று கேட்டான். “தருவோம்” என்றார் சோட்டாராம். அவன் ஆண்களை நம்பாமல் பெண்களிடம் கேட்டு உறுதிசெய்துகொண்டான்.

“உள்ளே சென்று அங்கே யார் இருக்கிறார்கள், இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கூச்சலிட்டுச் சொல்” என்று சோட்டாராம் சொன்னார்.

சோட்டு “நான் உள்ளே சென்று வந்தால் உடனே லட்டு வேண்டும்” என்றான். லல்லுபாயிடம் மீண்டும் உறுதிசெய்துகொண்டு விந்தி விந்தி உள்ளே சென்றான். அவனுடைய உருவம் குடிலுக்குள் சென்றதும் ஆழ்ந்த அமைதி உருவானது.

சோட்டு வெளியே வந்து “மகதியும் பிசாசுக்கிழவியும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“தூங்கிக்கொண்டிருக்கிறார்களா? எப்படி?” என்று சோட்டாராம் கேட்டார்.

அவன் தன்னைத்தானே கைகளால் தழுவிக்கொண்டு “இப்படி” என்றான்.

“அவர்கள் இரண்டுபேருமே இறந்துவிட்டார்கள்…” என்று சோட்டாராம் அறிவித்தார். “கிழவி இறக்கும்போது மஹதியையும் கொன்றுவிட்டாள்… அது நல்லது. கிழவியில் இருந்த பிசாசு விலகிச்செல்லும்போது எவரைக் கொண்டுபோகும் என்று பயந்துகொண்டிருந்தோம்… அவ்வளவுதான், இனி பயப்பட ஒன்றுமில்லை”

“அவர்களை எப்படி அடக்கம் செய்வது?” என்று அப்பா கேட்டார்.

“அடக்கம் செய்வதா? என்ன சொல்கிறீர்கள்? பிசாசை அடக்கம் செய்வதா? அந்த குடிலுக்குள் நிழல்கள் நிறைந்திருக்கும் இப்போது. அவை வெறிநடனமிட்டுக்கொண்டிருக்கும்…. சோட்டூ… அங்கே நிழல்கள் உண்டா?”

“நிறைய நிழல்!” என்று அவன் பெரிய மஞ்சள் பற்களைக் காட்டி, கண்கள் இடுங்க சிரித்தான். அவனுடைய முகம் மஞ்சள்பாய்ந்து, முன்நெற்றி புடைத்து விந்தையான வடிவில் இருக்கும். அவன் எப்போதுமே திகைப்புடன் சிரிப்பதுபோல அது காட்டும். “அங்கே நிழல்கள் சண்டை போடுகின்றன. ஒரு நிழல் மேல் இன்னொரு நிழல் ஏறி…”

“பார்த்தீர்களா?” என்றார் சோட்டா ராம். “நாம் அப்படியே இரு உடல்களையும் குடிசையுடன் கொளுத்திவிடவேண்டியதுதான்.”

“ஆனால்…” என்று அப்பா தயங்கினார்.

“இது என் கருத்து. உங்கள் விருப்பப்படிச் செய்யலாம்….” என்றார் சோட்டா ராம்.

“இல்லையில்லை…நீங்கள் சொன்னதற்கு அப்பால் என்ன?”

சோட்டுவிடமே ஒரு பந்தம் கொளுத்தி அளிக்கப்பட்டது. அந்த கூரையை கொளுத்தவேண்டும் என்பது அவனுக்கு பெரும் கிளர்ச்சியை அளித்தது. அவன் “தீ! தீ!” என்று கையை தூக்கி திக்கித் திக்கி சொன்னான். பந்தம் கொளுத்தி அளிக்கப்பட்டபோது துள்ளித்துள்ளி குதித்தான். அவனே கூச்சலிட்டபடி ஓடிச்சென்று குடிலின் கூரையைப் பற்றவைத்தான்.

பல ஆண்டுகள் காய்ந்தபுல் உடனே பற்றிக்கொண்டு விரைவிலேயே தழல் எழுந்து வெடித்துச் சீறி புகைவிட்டு எரியத் தொடங்கியது. கிச்சுகிச்சு மூட்டப்பட்டது போல சிரித்துக்கொண்டிருந்த சோட்டு தீ எழுந்தோறும் வெறிகொண்டு சிரித்தபடி கூவினான். கைகளை விரித்து, தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டான். அவன் வெறி கூடிக்கூடி வந்து அவனே நெருப்பில் பாய்ந்துவிடுவான் என்று தோன்றியபோது கிராமத்தின் இளைஞர்கள் அவனை பிடித்து மடக்கி அமரச்செய்தனர். அவன் அவர்களை தூக்கி வீசும் ஆற்றலுடன் திமிறினான். அவர்கள் அவன் கைகால்களை கொடிகளால் கட்டி தூக்கிச் சென்றனர். அவன் தொண்டை உடையும்படி கூவிக்கொண்டே சென்றான்.

தழல் ஓங்கி அந்தக் குடில் எரிந்துகொண்டிருப்பதை வெறித்துப் பார்த்தபடி ஊரார் நின்றிருந்தனர். “செல்லுங்கள், எல்லாரும் விலகிச் செல்லுங்கள்!” என்று சோட்டாராம் கூவினார். எதுவும் பேசாமல், தீயைப் பார்த்தபடியே அனைவரும் கலைந்து சென்றார்கள். தனித்துச்செல்ல அஞ்சி ஒருவர் இன்னொருவரை பற்றிக்கொண்டு அவர்கள் சென்றாலும் ஒவ்வொருவரும் தனித்தே சென்றனர்.

என் அம்மா அப்போது பத்துவயதுச் சிறுமி. அவளை அவள் அம்மா வீட்டைவிட்டு வெளியே வராதே என்று சொல்லியிருந்தாள். அனைவரும் விலகி அவரவர் வீடுகளுக்குச் சென்றபோது என் அம்மா மட்டும் இன்னொரு வாசல் வழியாக வெளியேறி மாமரத்தின் மறைவில் நின்றுகொண்டு எரிந்துகொண்டிருந்த குடிலைப் பார்த்தாள். தீ வெடித்துச் சீறி நீலநிறமாகி மேலெழுந்தபோது ஒரு குரல் உள்ளே ஒலிப்பதை அவள் கேட்டாள். அச்சொற்களை அவள் முன்னரே கேட்டிருந்தாள். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவளிடம் பாட்டி பேசிய சொற்கள் அவை. ஆனால் அவற்றின் பொருளை அவள் மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர்ந்தாள். அதை அவள் எனக்கு சொன்னாள்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.