காவியம்- 1
(பைசாசம். பொதுயுகம் 2 ஆம் நூற்றாண்டு. பைதான் அருங்காட்சியகம்)
கதைகளைச் சொல்லும் பிசாசு ஒன்று உண்டு என்று அம்மாதான் என்னிடம் சொன்னாள். அந்தப் பிசாசை என் அம்மாவின் பாட்டி நெடுங்காலத்திற்கு முன் நேரில் பார்த்திருந்தாள். கோதாவரியில் அதிகாலையில் குளிக்கச் சென்றபோது அது சேற்றுச்சரிவில், சரிந்த கற்படிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தது. நீண்ட தலைமுடி சடைக்கற்றைகளாக நான்குபக்கமும் விரிந்து மண்ணில் பரவியிருக்க, இருட்டின் குமிழி போல் தோன்றியது. அதை பிசாசு என எண்ணிய கணம் அது நிழலாக மாறியது. அவள் நடுக்கம் தீர்ந்து மெல்ல நடந்து அணுகி, கடந்துசென்று, நீரில் இறங்கி மூழ்குவதற்கு முன்பு மீண்டும் கரையைப் பார்த்தபோது அது அங்கில்லை. ஆனால் நீரில் மூழ்கி சற்றே நீந்தி ஆழத்திற்குள் கண் திறந்தபோது அதன் முகம் மிக அருகே தெரிந்தது. அதன் கண்கள் நீரின் இருட்டுக்குள் இரண்டு ஒளிரும் நீலநிற இணைமீன்கள் போலிருந்தன. மீன் என எண்ணியதுமே அவை மீன்களாகி அகன்றன.
அவள் மூச்சுத்திணறி மூழ்கி, பின்னர் கைகால்களை அடித்துக்கொண்டு கரையேறி, ஈர ஆடையுடன் ஓடி வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளை மீறி அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஏதேதோ சொல்லிப் புலம்பினாள். அவள் பேசிய மொழியை எவரும் கேட்டிருக்கவே இல்லை என்று அவள் வீட்டார் பின்னர் சொன்னார்கள். ஆனால் அப்படி பிசாசுமொழி பேசுபவர்கள் அவர்களின் கிராமத்தில் முன்பும் இருந்தனர். அது நாகாகட்டத்தின் சுடுகாட்டின் மரங்களுக்குமேல் பகலிலும் குழறும் ஆந்தைகள் பேசும் மொழி. கோதாவரிக்கரை நாணற்சதுப்பில் நரிகளின் ஊளையாக ஒலிக்கும் மொழி. அவள் விழித்த கண்களுடன் மல்லாந்து பாயில் படுத்திருந்தாள். அவளுடைய இரு கைகளும் விரிந்து மல்லாந்திருந்தன. தொங்கிக்கிடப்பவள் போல அவள் கால்கள் இழுபட்டு நீண்டிருந்தன. அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. அவள் மிக அருகே அந்த பிசாசின் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவை வரைந்து வைக்கப்பட்டவை போல அசையாமல் காற்றில் நின்றிருந்தன.
ஏழுநாட்கள் காய்ச்சலில் கிடந்து, கடும் வாய்க்கசப்புடன் மீண்டு வந்தபோது அவளுக்குள் மீண்டும் அந்தப் பிசாசைப் பார்க்கவேண்டும் என்ற ஆசைதான் நிறைந்திருந்தது. எழுந்து மீண்டும் ஆற்றங்கரைக்குச் செல்லவே அவள் துடித்தாள். அவள் உடல் மிக மெலிந்து, கால்கள் நிலைகொள்ளாமலிருந்தமையால் சுவரைப் பற்றிக்கொண்டு நின்று மீண்டும் நிலத்தில் தளர்ந்துவிழுந்தாள். அவள் அம்மா ஓடிவந்து அவளைப் பிடித்து படுக்கவைத்தபோது அவள் கைநீட்டி ஏதோ சொன்னாள்.
அவள் அம்மா ஆற்றின் மறுகரைக்குச் சென்று மந்திரம் போடும் சமேலி கிழவியை அழைத்துவந்தாள். கிழவி தான் கொண்டுவந்திருந்த நீண்ட சடைமயிர்க்கற்றைகளை தலையில் அணிந்துகொண்டு, பையில் இருந்த சாம்பலை அள்ளி அள்ளி அவள் மேல் வீசி, உரக்க ‘ஹோ’ என்ற ஓசை எழுப்பி அவள் மேல் மூச்சுக்காற்றை ஊதியும், கைகளால் எதிர்பாராதபடி தரையில் அறைந்தும், கரிய உதடுகள் துடிக்க மந்திரங்களை ஓசையின்றி உச்சரித்தும் கிழவி அந்தப் பிசாசை அவளிடமிருந்து துரத்த முயன்றாள். பகல் முழுக்க அந்த நிழலோட்டும் சடங்கு நடைபெற்றது. அவள் அம்மா முறத்தில் நெல்லும் காய்கறியும் ஒரு செம்பு நாணயமும் வைத்து சமேலிக்குக் கொடுத்தாள்.
பின்முற்றத்துக் கல்லில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டு சமேலி கிழவி சொன்னாள். தனித்து நடமாடுபவர்களை பிசாசுகள் நன்றாக அறியும். தனித்து உறங்குபவர்களுக்கு மிக அருகே சுவர்களுக்கு அப்பால் பிசாசுகள் நின்றிருக்கும். ஆகவே எவரும் தனித்திருக்கக்கூடாது. கன்னியர், குழந்தைபெற்ற அன்னையர் எதன்பொருட்டும் தனித்திருக்கவே கூடாது. இங்குள்ள பிசாசுகளை எனக்குத் தெரியும். இங்கே நான் துரத்திவிட்ட பிசாசுகளும் பேய்களும்தான் நிறைந்திருக்கின்றன. என்னால் எல்லாக் கூழாங்கற்களிலும் அவற்றின் பார்வையை உணரமுடிகிறது. என் மந்திரங்கள் ஆற்றல் இழக்கும் காலம் வரும். அவை பசிவெறிகொண்ட காகங்கள் செத்த உடல்மேல் விழுந்து மொய்ப்பதுபோல என் மேல் பாயும்.
பிசாசுகள் நாம் அனைவரையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. நாம் பேசும்போது சொற்கள் குழறுவது எதனால்? நாம் நடக்கும்போது கால்கள் தடுக்குவது எதனால்? சிறுநீர் கழிக்கும்போது நாம் உலுக்கிக்கொள்வது எதனால்? உண்ணும் சோறு விக்குவது எதனால்? எவரும் இங்கே எப்போதும் தனியாக இல்லை. பார்க்கப்படாத ஒரு கணம்கூட எவருக்கும் இல்லை. எங்கோ நமக்குள்ளே அவற்றை காணவேண்டும் என்னும் ஆசை தோன்றுகிறது. நாமே அறியாத ஆசை. நம் உடலுக்குள் நமக்கே தெரியாமல் நோய் கருவுறுவதுபோல. அதன்பின்னர் நாம் தனித்துச்செல்ல தொடங்குகிறோம். நாமே அதை தேடிக் கண்டடைகிறோம். தேடாதவர்களை பிசாசுகள் அணுகுவதில்லை.
பிசாசுகள் கண்களோடு கண்கோத்து நம்மைப் பார்க்கின்றன. அக்கணத்தில் அவை தங்களைப் பிசாசாக வைத்திருக்கும் அறியமுடியாத காரணம் ஒன்றை நம் ஆத்மாவுக்குள் செலுத்திவிடுகின்றன. நம் ஆத்மா அதன்பின் அதற்குரியதாகிறது. தேங்கிய நீரில் தவளை முட்டையிட்டுச் செல்வதுபோல. நமக்குள் ஆயிரம் பல்லாயிரம் பிசாசுகள் பெருகத்தொடங்குகின்றன. பிசாசுகள் முருங்கை மரத்தில் முசுக்கட்டைப்பூச்சிகள் போல நமக்குள் செறிந்திருக்கின்றன. இருண்ட குகையில் வௌவால்கள் போல நமக்குள் கண்கள் மின்ன நிறைந்திருக்கின்றன.
பிசாசுகளைப் பற்றிப் பேசலாகாது. பிசாசுகளைப் பற்றி கதைகளைப் புனையலாகாது. ஏனென்றால் இங்குள்ள எல்லா பிசாசுகளும் எவரோ முன்பு சொன்ன கதைகள்தான். வானத்திலுள்ள பனி காலையில் நீர்த்துளியாக ஆவதுபோல கதைகள் உருவங்களாக ஆகிவிடுகின்றன. பின்னர் அவை எடைகொள்கின்றன. எடை மிகுந்து மிகுந்து அவை பூமியை அழுத்தித் துளைத்து ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. புதைக்கப்பட்டவற்றை முளைத்தெழச்செய்கிறது பூமி. அது பூமிக்கு தெய்வங்கள் அளித்த வரம். இங்கே புதைக்கப்பட்டு முளைத்தெழாத ஒன்றுகூட இல்லை. ஆமாம் ,ஒன்றுகூட.
நிழல்களை கவனியுங்கள். கோடானுகோடி நிழல்கள் இங்கே விழுந்து விழுந்து மறைகின்றன. நிழல்கள் அவற்றின் மூல உருவத்தின் அடிமைகள். அந்த உருவத்திற்குள் மீண்டுசெல்லவேண்டும் என்ற ஆணைகொண்டவை. ஆனால் அவற்றில் ஏதோ ஒன்று முதலுருவிலிருந்து விடுதலை அடைந்துவிடுகிறது. அதன்பின் அது இங்கே நிலையழிந்து அலையத்தொடங்குகிறது. அது எங்கே செல்லும்? எதைச் செய்யும்? கற்களுக்கு கீழே, மரங்களின் பின்னால், சுவர்மடிப்புகளுக்கு அப்பால் அவை காத்திருக்கின்றன. தனக்கான உரிமையாளரைத் தேடி அலையும் நிழல்களை ஒருமுறையேனும் சந்திக்காதவர் எவர்?
ஓசையே இல்லாமல் நிழல் நம்மை தொடர்கிறது. நம்முள் புகுந்துவிட முயல்கிறது. நம் உடல் எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு அதை வெளியே தள்ளி விடுகிறது. நம் உடல் புல்லரிக்கிறது. நடுங்கிக்கொண்டே இருக்கிறது. மிக அரிதாக அதை நாம் உள்ளே விட்டுவிடுகிறோம். அது நமக்குள் நுழைய ஒரே வாசல்தான். நம் கண்கள். கண்கள்தான் ஆத்மாவுக்கு வாசல்கள். நமக்குள் அவை நுழையும் கணம் நமக்குத் தெரியும். நம் நெஞ்சில் ஓர் உதைவிழுவதுபோல. நாம் மிக மதிப்புமிக்க எதையோ இழந்துவிட்டவர்கள் போல. நமக்கு மிக எதிர்பாராதது ஒன்று எக்கணமும் நிகழவிருக்கிறது என்று உணர்ந்தவர்கள் போல.
புதிய நிழல் உள்ளே நுழைந்ததும் நம் நிழல் நடுங்கி ஆர்ப்பரிக்கிறது. நிழல்கள் நம்முள் போராடுகின்றன. வந்த நிழல் வெல்லும் என்றால் நம் நிழல் அதற்கு அடிமையாகிவிடும். அவர்களைக் கவனியுங்கள், அவர்களுக்கு எப்போதும் இரண்டு நிழல்கள் இருக்கும். அவர்களின் கண்களில் இரண்டு பேரின் பார்வைகள் இருக்கும். அவர்கள் வாயில இரண்டு மொழிகள் வெளிப்படும். அவர்களைச் சூழ்ந்திருக்கும் காற்றில் அவர்களுடையது அல்லாத வாடை ஒன்று வெளிப்படும்.
சமேலி அத்தனை எச்சரித்திருந்தும், குடும்பத்தினர் கவனமாக இருந்தும்கூட என் அம்மாவின் பாட்டி சற்று உடல்தேறியதும் எவருக்கும் தெரியாமல் கிளம்பி கோதாவரிக்கரைக்குச் சென்றாள். அங்கே அவள் மீண்டும் பிசாசைப் பார்த்தாள். என் அம்மாவிடம் அவள் அதை எப்படிப் பார்த்தாள் என்று சொன்னாள். அதே இடத்தில் என் அம்மாவும் பின்னர் அதே பிசாசைப் பார்த்தாள். கதைசொல்லும் அப்பிசாசை நானும் பின்னர் எப்போதோ பார்க்கவிருக்கிறேன். அதன் கதைகளைக் கேட்கவுமிருக்கிறேன்.
நான் வெறுக்கும் இந்நகரில் எங்கள் சாதியினர் குளிப்பதற்கென்று ஒதுக்கப்பட்டது நாககட்டம். அதன் இடப்பக்கம் பெரும் சுடுகாடு. அதைச்சூழ்ந்திருக்கும் பெரிய முள்மரங்கள். அங்கே செல்லும் வழியில் எப்போதுமே மனிதநடமாட்டம் இருப்பதில்லை. சுடுகாடாக ஆவதற்கு முன்பு எப்போதோ அது மிகப்பெரிய மாளிகைகள் அமைந்த ராஜவீதியாக இருந்திருக்கிறது. அந்த மாளிகைகள் அனைத்தும் இடிந்து பாழடைந்து வரிசையாக நின்றிருக்கின்றன. இறந்து மட்கிய பெரிய விலங்குகளின் ஓடும் எலும்புகளும் மயிர்ச்சுருட்களும் பாதி மண்ணில் புதைந்து கிடப்பதுபோல.
இது ஒரு பாழடைந்த பழைய நகரம். இதன்பெயர் பைத்தான், ஔரங்காபாத் அருகே உள்ளது. பைதானி சேலைகள் இங்கே புகழ்பெற்றவை. இங்கு வைணவ பக்தர் ஏக்நாதரின் சமாதி ஆலயமாக இருக்கிறது. நிம்பார்க்கர் என்னும் வேதாந்தி பிறந்த ஊரும் இதுதான். முன்பு இதை பிரதிஷ்டானபுரி என்று அழைத்தனர். வேதகாலம் முதல் இருந்துவரும் நகரம் இது. நிலைகொண்ட நகரம் என்று பொருள். நிலைகொள்ளுதல் என்றால் நிழல்களைப் பெருக்கிக்கொள்ளுதல் என்று பொருள். இந்நகரத்தில் இல்லங்களை விட இடிபாடுகள் மிகுதி.
சிதைந்த கற்சுவர்கள், உடைந்தழிந்த கோட்டைகளில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு ஆங்காங்கே நிறுவப்பட்டு செந்தூரம் பூசப்பட்ட அனுமாரின் சிலைகள், தோல் உரிக்கப்பட்ட விலங்கின் சிவந்த தசைபோல செங்கல் தெரியும் இடிந்த மாளிகைகள். பன்றியின் பிடரிபோல அவற்றின்மேல் முளைத்தெழுந்த முட்புதர்கள். உடைந்த சாக்கடைகள் ஒழுகும் தெருக்களில் அலைந்து திரியும் பன்றிகளும் கொழுத்த மாடுகளும். இங்கே மக்கள் சில இடங்களில் செறிந்து வாழ்கிறார்கள். சிறுபூச்சிகள் ஒன்றோடொன்று ஒட்டியவைபோல கூடுகளில் அடர்ந்திருப்பது போல. எஞ்சிய இடங்களில் எப்போதோ பூட்டப்பட்ட இல்லங்கள் துருப்பிடித்த பூட்டுகளுடன் முற்றிலும் மௌனமாக மட்கிக்கொண்டிருக்கின்றன. வெயிலில் வெந்த புழுதியின் வாசனையும் சாணத்தின் நெடியும் கலந்த தெருக்கள் பாழ்பட்டவை என வெறித்துக் கிடக்கின்றன.
நாககட்டத்திற்குச் செல்லும் பாதை புழுதிநிறைந்தது. இருபுறமும் அடர்ந்த புதர்களில் இருந்து முட்கள் நீண்டுவந்து உடம்பை கிழிக்கும். அங்கே கோதாவரியின் கரையில் தொன்மையான மயானம். அதைச் சூழ்ந்திருக்கும் மரங்களில் இருந்து எழுந்துகொண்டிருக்கும் ஆந்தைகளின் உறுமல்கள். இம்முறை என் முப்பாட்டி அப்பிசாசை சந்திப்பதற்காகவே அதிகாலையில் எழுந்து எவரும் அறியாமல் அங்கே சென்றாள். கோதாவரியின் சரிவில், படிக்கட்டில், முன்பு போலவே அது விரிந்த சடைகளுடன், நெடுந்தொலைவுக்கு நீண்டு கிடந்த கைகளுடன் அமர்ந்திருந்தது. அவள் அதைக்கண்டு புன்னகைத்தபடி நின்றாள்.
பிசாசின் கண்கள் அத்தனை அழகாக இருந்தன. சொல்திருந்தாத கைக்குழந்தையின் கண்கள் போல அத்தனை தெளிந்திருந்தன. அதில் புன்னகை அன்றி எந்த உணர்வும் வெளிப்பட இயலாது என்று தோன்றியது. அவள் அதை நோக்கிச் சென்றபோது பிசாசு எழுந்து அவளை நோக்கி கைநீட்டியது. அவள் அதைநோக்கி கைவிரித்தபடிச் சென்றாள். அவளை தொட்ட அதன் கைகள் நீரிலூறிய வாழைத்தண்டுகள் போலக் குளிர்ந்திருந்தன. அவளை அது தன் உடலுடன் சேர்த்து தழுவிக்கொண்டது. அப்போது அவள் அதன் முகத்தை மிக அருகே எனக்கண்டாள். அதன் அழகிய விழிகளில் துயர் நிறைந்திருந்தது. மறுகணம் அழவிருக்கும் குழந்தை போன்றிருந்தது அதன் முகம்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

