நாளைக்காக வாழ்தல், கடிதம்
நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,எனது கணவர் உங்களது வாசகர் அவர் அவ்வப்போது உங்களது கட்டுரை இணைப்புகளை எனக்கு அனுப்புவார் நானும் நேரம் கிடைக்கும் பொழுது படிப்பேன். அவ்வாறு இன்று அதிகாலை 5 மணிக்கு Apr 7,2025 அன்று நீங்கள் எழுதிய “நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?” என்ற கட்டுரையை அனுப்பி வைத்தார். அதை படித்ததிலிருந்து மனதிற்கு நெருடலாகவே இருந்தது. அதனால் சீக்கிரம் சமையல் முடித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு எழுத அமர்ந்தேன். மனதில் தோன்றியதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்.
தந்தைக்கு :
ஐயா உண்மையிலேயே உங்கள் மீதும் தவறுகள் இருக்கின்றது. உங்கள் மகன்களை படி படி என்று அழுத்தம் கொடுத்து, நல்லபடியாக படிக்கவும் வைத்து, பிள்ளைகள் எதிர்காலத்தையே உங்கள் வாழ்க்கையாக எண்ணி உங்களுக்கும் வயதான பிறகு ஒரு எதிர்காலம் இருக்கிறதென்று கொஞ்சம் கூட யோசிக்காமல், மகன்களை வெளிநாடுகள் சென்று வேலை பார்க்கும்படி நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்டு, கடைசி காலத்தில் தனிமையில் நீங்களும் உங்கள் மனைவியும் வாழ்ந்து கொண்டிருப்பது மிகவும் தவறுதான்.
நானும் எனது கணவரும் இரு மகன்களுக்கு தாய் தந்தையர் தான் எங்களுக்கும் சில வருடங்களுக்கு முன்பு வரை உங்களை போன்ற மனநிலை தான் இருந்தது. பிள்ளைகளை நல்ல படியாக படிக்க வைக்க வேண்டும், அவர்கள் எதிகாலத்தை நல்லபடியாக அமைத்து கொடுக்கவேண்டும் என்று. பிறகு ஜெ அவர்களின் சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தோம், அவரது முற்போக்கான சிந்தனைகளை அதிகம் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றை கேட்க ஆரம்பித்தோம். பிறகு தான் புரிந்தது வயதான பிறகும் ஒரு எதிர்காலம் இருக்கிறது அதை நாம் தான் நல்லபடியாக அமைத்துக் கொள்ளவேண்டுமென்று. பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக நாம் உழைக்கும்போதே நமது எதிர்காலத்திற்கான தேவைகளையும் எடுத்துக்காட்டாக நமக்கு பிடித்த கலைகளையோ, புத்தக வாசிப்போ அல்லது எதாவது நமக்கு பிடித்த ஒன்றை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் தான் நான் சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்ட ஆடல் கலையை கற்க ஆரம்பித்திருக்கின்றேன். கற்றுக்கொள்வதற்கு வயது தடையல்ல. இப்பொழுதும் உங்களுக்கு காலம் கடந்து விடவில்லை உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை செய்து உங்களையும், உங்கள் மனைவியையும் busy ஆகவும், நிம்மதியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை கண்டு கொள்ளாத மகன்களை எண்ணி உங்கள் உடம்பை வருத்திக்கொள்ளவேண்டாம்.
வயதான காலத்தில் என் குழந்தைகள் என்னை கண்டுகொள்ளவில்லை என்று புலம்புவதைவிட, அவர்களை கண்டுகொள்வதற்கு எங்களுக்கு நேரமில்லை என்று பெற்றோர்கள் கூறும் அளவிற்கு நாம் நம்முடைய நேரத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.
மகன்களுக்கு :
நீங்கள் ஜெ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஏதோ நீங்கள் பெரிய கொடுமைகளை அனுபவித்தவர் போல எழுதியிருந்தீர்கள். உங்களது அப்பா போல தான் என்னுடைய அப்பாவும், அதற்கு ஒரு படி மேல், நானும் என் அண்ணனும் நிறைய அடி வாங்குவோம். எனக்கும் சிறு வயதிலிருந்து இந்தியாவில் இருக்கும் வரை பெற்றோரை கண்டால் பிடிக்காது, அவர்களை வெறுப்பேன். இப்பொழுது நான் வெளிநாட்டில் வாழ்கின்றேன். இங்கு வந்து இந்த சூழலை பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கையென்று. பின்பு தான் ஒன்றை புரிந்துகொண்டேன். இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறதென்றால் இங்கு உள்ள சூழல் வேறு அங்கு உள்ள சூழல் வேறு. நமது பெற்றோர்கள் படி படி என்று சொல்கிறார்களென்றால் அதற்கு அவர்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தியாவில் உள்ள கல்வி சூழல் அவ்வாறு, போட்டி மிகுந்த அந்த சூழலில் தனது குழந்தைகள் முன்னேறவேண்டும், அவர்களது எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு வாழ்ந்திருப்பார்கள். அதை தவிர வேற எதையும் நினைப்பதற்கு அவர்களுக்கு தோன்றியிருக்காது.
நீங்கள் வெளிநாட்டு சூழ்நிலைகளையும், இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளையும் இரண்டையும் பார்த்திருக்கிறீர்கள் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். ஏதோ நீங்கள் இளமையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்க்காக உங்களது தாய் தந்தையரை “இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள் அவ்வளவுதான்.” என்று அணுகுவது முறையல்ல. நீங்கள் பல கொண்டாட்டங்களை அனுபவிக்கவில்லையென்றால் உங்களோடு சேர்ந்து அவர்களும் தான் அனுபவிக்காமல் இருந்திருப்பார்கள், உங்களை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் தனியாகவா கொண்டாடியிருப்பார்கள்? எல்லா பெற்றோர்களும் குழந்தைகளை வெவ்வேறு அணுகுமுறையில் வளர்க்கின்றார்கள் ஆனால் நோக்கம் என்னவோ ஒன்று தான். உங்கள் பெற்றோர்கள் உங்களவிற்கு இலக்கியம் பயிலாதவர்களாகவும் , பயணம் செயாதவர்களாகவும் அதை பற்றி புரிதல் இல்லாதவர்களாகவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் பயின்றவர் தானே நீங்கள் அனுபவித்த இளமை கால வேதனையை இப்பொழுது அவர்களின் முதுமை காலத்தில் நீங்கள் திருப்பி கொடுக்கலாமா?
இப்பொழுது வாழும் அமெரிக்கா பிடித்திருக்கின்றது இருபத்திரண்டு வருடம் வாழ்ந்த திருச்சியுடன் மானசீகமாக எந்த உறவும் இல்லையென்றால் அது உங்களது தவறு. நாடு நாடக பயணம் செய்யும் உங்களுக்கு உங்கள் சொந்த ஊரான திருச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் அது உங்களது தவறு. உங்கள் பெற்றோர்கள் அதற்கு என்ன செய்வார்கள்.
கொஞ்சம் யோசியுங்கள். கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை வெறுக்காதீர்கள். கோடைகால விடுமுறைக்கு வருடா வருடமோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ ஊருக்கு குடும்பத்துடன் செல்லுங்கள், பெற்றோருடன் கூடி சந்தோசமாக செலவிடுங்கள் அதில் ஒன்றும் உங்கள் நிம்மதி கெட்டுவிடாது.
உயிருடன் இருக்கும் பொழுது பெற்றோர் மீது குறை கூறிவிட்டு அவர்கள் போன பிறகு WhatsApp ல் status வைப்பதில் எந்த பயனும் இல்லை.
இப்படிக்கு
லோகாம்பாள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

