பாரிஜாதம் – தேவி லிங்கம்
மலர் என்பதே மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் தருவது தான் அதில் பாரிஜாதம் முதன்மையானது அருமையான மலர். எனக்கென்னவோ எழுத்தாளர்அருண்மொழி நங்கையைப்பற்றி படிக்க ஆரம்பித்தவுடன் அவரை பாரிஜாதம் என அழைக்கவேண்டுமென ஆவல் மேலெழுந்து உந்தித்தள்ளியது.அவருக்கு இந்தப்பெயர் மிகப்பொருத்தமாக இருக்கும்.ஒரு எழுத்தாளராக அவரைப்பற்றிய செய்திகளை ஆர்வமாக தெரிந்துக்கொள்ள ஆரம்பித்து அவரெழுதிய கட்டுரைகளைப்படிக்க ஆரம்பித்தவுடன் கிருஷ்ணனின் லீலைகளில் மனமயங்கும் கோபியரைப்போல மதி மயங்கி நின்றேன். ஒருவேளை அவரின் சொந்த ஊரும் எனது சொந்த ஊரும் அருகருகே அமைந்தமையாலா? என எனக்குள்ளே கேள்விகளைக்கேட்டு எனக்கு நானே பரிசோதித்துப்பார்ப்பீனும் அது அவ்வாறு இல்லை உண்மையிலேயே அவரின் கட்டுரைகள் கதைகள் அனைத்தும் மிக அருமையானவை எந்த பூச்சும் இல்லாத அப்பட்டமான இயல்பான மண்வாசனையோடுக்கூடிய ஈரம் கசியும் உயிரோட்டமான எழுத்து. குழந்தையாக , மாணவியாக பேத்தியாக அத்தைக்கு மருமகளாக தோழியாக காதலியாக மனைவியாக அம்மாவாக எந்த இடத்திலும் மிகையான சொற்களே இல்லாமல் அப்பட்டமான உணர்வுகளைச்சொல்லும் சுவாரஸ்யமான எழுத்து.
அரசமரத்தில் ஆரம்பிக்கும் அவரது கட்டுரை ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை பரிணாமங்களுடன் மிளிர்கிறது.மரத்தில் ஆரம்பிக்கும் அவரது எழுத்து பட்டாணி என்கிற ஒருவருடைய வாழ்க்கையைப்பற்றி கூறி அதில் அவரின் துயரங்களை ஒரு குழந்தையின் மனவோட்டத்தோடு விவரித்து எங்கும் யாரையும் குறை சொல்லாமல் அனைத்து மனிதர்களையும் அவர்களின் சுயத்தோட அப்படியே பிரதிபலித்து கண்தெரியாத அவரின் மனைவி அவரை நம்பி மூத்தவளையும் பராமரிக்க வரும் இளையவள்.சிறுவயதிலேயே நெல் அவிப்பதற்கு அன்னைக்கு துணைப்புரிந்ததோடு நெல்லை எப்படி ஊறவைப்பது அவிப்பது அரைப்பது என நல்ல சிறுகதைக்கான அத்தனை தகுதிகளும் இந்தக்கட்டுரைக்கு உண்டு
அதுபோல அவரைச்சுற்றியுருந்த அத்தனை சொந்தங்களும் கம்பீரமும் கருணையும் மிக்கவர்களாக இயற்கையிலேயே அவருக்கு வரமாக அமைந்திருந்தது.அப்படி அமையாததையும் இவரின் அன்பால் அமைந்ததாக நினைத்துக்கொண்டது உள்ளுக்குள் நம்மை அருவி வழியும் குகைக்குள் சென்றது போல குளிரச்செய்கிறது. இவரது கட்டுரைகளைப்படித்தால் உறவினர் யாருடனாவது நமக்கு பிணக்கு ஏற்பட்டிருந்தால் கூட நாமே முன் சென்று அவர்களிடம் பேசிவிடுவோம் அப்படியான ஒரு மென் எழுத்துக்களோடு அதீத அன்பான உணர்வுகளை மேலெழச்செய்யும் நேர்மறையான எழுத்துவகை.
இவரது அரசி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள இருபாட்டிகளில் ஒருவருக்கொருவர் இருதுருவங்கள் எனினும் ஆசிரியர் யாருடைய பக்கங்களுக்கும் நியாயம் சேர்க்கவும் இல்லை தவறென்று சொல்லவும் இல்லை . ஜெகதாம்பாள் பாட்டி கணவரே கண்கண்ட தெய்வம் அவருக்கு சேவை செய்வதே வாழ்க்கை எனக்கொண்டிருந்தாலும், மூத்தவளின் குழந்தையை சரிசமமாக பார்க்காததை தவறென ஆசிரியர் குறிப்பிடவே இல்லை அதுவும் சகஜமெனக்குறிப்பிடுகிறார்.அதுபோல இன்னொரு பாட்டி அப்பாவைப்பெற்றவர் ராஜம்மா பாட்டி கணவரோடு ஒத்து இல்லை சண்டை சச்சரவாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக இரசனை மிக்கவராக பாடத்தெரிந்தவராக சுதந்திரமாகச்செயல்பட்டதையும் மிகையாக அந்த நடத்தயை உயர்த்திச்சொல்லவில்லை அதையும் ஒரு இயல்பெனவேக்குறிப்பிடுகிறார்ஒருவரை தூக்கிப்பிடித்து மற்றொருவரை சரித்துச்சொல்லும் போக்கு அவரது எழுத்துக்களில் எங்குமே காணப்படவில்லை எங்கு நோக்கினும் நேர்மறையான சிந்தனைகளும் அலைகளும் தான். அப்பாவிற்கும் அம்மாவிற்குமான சண்டைகளாகட்டும்.மருமகளுக்கும் மாமியாருக்கும் நடந்த பிரச்சினைகளாகட்டும் நமக்கு அந்தக்கட்டுரைகளைப்படிக்கும் பொழுதே சில நியாய அநியாயங்கள் தோன்றுகின்றன
ஆனால் ஆசிரியர் அவ்வாறு எதையும் முடிவாகச்சொல்லவில்லை அவர் கொண்டிருப்பது மிகச்சிறப்பான ஒரு மானிடர் தத்துவம் .அவருக்கு சிறுவயதிலேயே அத்தகைய மனநிலை எவ்வாறு வாய்ந்திருந்தது என்பது மிகவும் ஆச்சிரியப்படவைக்கிறது.ஓரிடத்தில் அம்மாவிற்கு சாதகமாக எழுதுவதால் அவர் பாட்டியை குறை சொல்லிவிடவில்லை அதுபோலவே அம்மாவை ஆணாதிக்கத்தோடு நடத்திய அப்பாவையும் ஆசிரியர் குறை சொல்லவில்லை அவரவருக்கான இடத்தில் தன்னைப்பொருத்தி அவர்களை அவர்களின் தன்மையோடு ஓர் ஓடை எவ்வாறு சூரியனின் வெப்பத்தையும் நிலவின் தண்மையையும் பாந்தமாக வெளிவிடுகிறதோ அதைப்போல சொல்லும் ஆசிரியரின் மனப்பாங்கு சிறந்த பெண்மைக்கானது.
காதலின் இசை என்னும் கட்டுரையில் அக்பரின் அரசவையில் இடம்பெற்ற தான்சேன் எனும் இசைக்கலைஞர் பாடுவதாக1960 ம் ஆண்டு வெளியான மொகல்_இ_ஆஸாம் எனும் திரைப்படத்தில் நௌஷத் அலிஅவர்களால் இசையமைக்கப்பட்டு பாடலாசிரியர்ஷகீல் பதாயுனியால் எழுதப்பட்டு வெளிவந்த ஒரு பாடலைப்பற்றி ஆசிரியர் மிக அற்புதமாக குறிப்பிட்டிருந்தார்.காதல் உணர்வுள்ள யாராக இருப்பினும் அக்கட்டுரையைப்படித்துவிட்டு அப்பாடலை காணாமல் இருக்கவே முடியாது.திலீப்குமார்.மதுபாலா நடித்து வெளியான பாடல் அது. அந்தக்காலத்திலேயே அத்தனைப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாடல் ஆசிரியர் மயிலிறகால் காதலன் காதலியின் முகத்தை வருட அவள் நாணமுறும் விதமாக அந்தப்பாடலின் ஒருக்காட்சியை விவரித்திருக்கும் விதத்திலும் பாடல் பாடியவரைப்பற்றிய குறிப்புகளிலும் நள்ளிரவுக்கடந்து வீசும் இளந்தென்றலுக்கென சில சாத்வீகங்கள் உண்டு. அந்தகைய காற்றில் தலையசைத்து விரும்பிச் சோர்ந்த மலர்களைக்களைப்போல அந்தப்பாடலைக்கண்டு மயங்கி நின்றேன்.அந்தப்பாடலைப்பாடியவர் உஸ்தாத் படே குலாம் அலிகான் பாடலைவிட அதனை ரசித்து எழுதிய விதம் அத்தனை சிறப்பு. ஆசிரியருக்குள் எப்பொழுதுமே இசையின் மெல்லிய துணுக்கொன்றும் காதலின் மிகப்பெரிய தணலொன்றும் அவர்கூடவே எப்பொழுதுமே இருந்துக்கொண்டே இருப்பது போல எனக்கு தோன்றிற்று.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு …இருபத்தியோரு வயது பெண்ணின் குணங்களாக ஆசிரியர் அவரைப்பற்றி குறிப்பிட்டிருப்பது எல்லாமே ஒரு வளரிளம் குழந்தைக்கான குணநலன்கள்.நன்றாக படிப்பதாலும் நிறைய புத்தகங்கள் படித்ததாலும் பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருப்பதாலும் தான் பெரிதாக வளர்ந்துவிட்டதாக எண்ணிய குழந்தையாகவே இக்கட்டுரையில் எழுதியிருந்த அருண்மொழி நங்கையை எனும் பெண்ணை நான் உணர்ந்தேன்.அவர் எழுதிருந்த ஒவ்வொரு செயலிலும் குறும்புகள் இதழ்களில் சிதற விழிகள் ஆர்வத்தில் விரிந்து அடுத்து என்ன நிகழும் எனத்தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டைப்போலவே காதலையும் அவர் கைக்கொண்டிருக்கிறார்.இக்கட்டுரையை படடிக்கும் பொழுது தன்னிச்சையாக எழுத்தாளர் ஜெயமோகன் அந்த காலத்தில் காதலின் பொருட்டு செய்த வேலைகளைக்கண்டு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. எனினும் இருவருக்குள்ளும் காதலின் ஆரம்ப பொறி எழுந்து ஜூவாலையாக மாறி இன்னும் அது கனன்றுக்கொண்டிருப்பது இந்தக்காலத்தில் மகத்தான சாதனை. முதல் நாளில் பார்த்து அடுத்த நாளில் இணைந்து மறுநாளே பிரிந்துப்போகும் தலைமுறையினரிடையே ஒரு காதல் திருமணமும் அதன் மகத்தான வெற்றியும் குன்றத்து விளக்கு.எதுவும் தெரியாமல் காதல் ஒன்றையே நம்பி கைப்பற்றி காலத்தை ஒப்புக்கொடுப்பதென்பது விழுதை நம்பி வேரை மறக்கும் ஆலமரத்திற்கு ஒப்பான உறுதியாகும்.இத்தனை உறுதியை ஒரு பெண்ணிற்கு காதல் கொடுப்பதற்கு அந்த மனிதனும் அத்தனை தகுதியுள்ளவனாக அந்த பெண்ணிற்கு தோன்றியிருக்க வேண்டும் அவளது பெயரை அவன் மந்திரம் போல உச்சரித்திருக்க வேண்டுமல்லவா? அப்படிதான் அருண்மொழிநங்கை ஜெயமோகன் காதலும் அமைந்தது.நிலம் வேறு உறவுகள் வேறு மொழி வேறு உணர்வுகளில் மட்டுமே ஒன்றி ஒரு தேவதை தன்னை தலைவனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறது.அதுவும் அத்தனை அன்பான உறவுகள் சுற்றம் எதனையும் பொருட்படுத்தாது ஒரு நேசத்தின் முன்பு நீட்டப்பட்ட கரத்தை பற்றிக்கொள்வதென்பதை பிறந்த மான் குட்டி ஒன்றின் துள்ளலின் இசைவோடு செய்திருப்பதை அன்பின் கண்கொண்டு உற்று நோக்கும் பொழுது மனம் அக்காதலில் முன்பு கற்பூரமாக கரைந்துவிடுகிறது இருவரின் தெளிவான தீர்க்கமான அன்பு.ரசனைகள்.அப்படியே இயல்போடு ஏற்றுக்கொள்ளல்.இருவருக்கும் உள்ளிருந்த அக்கறை அடர்ந்த காதல் மெல்லிய காமம்.காதல் தான் எத்தனை மாயம். ஆயிரக்கணக்கான வர்ணங்களின் வானவில்.பேசாத போது பேசத்தவிக்கும் ஊமை.மனதில் வார்த்தைகள் சத்தமிடும் பொழுது மௌனத்திருக்கும் நிலவு.முடிவில்லாமல் பரவும் பெருவெளி.உள்ளங்கை நீரில் பிரதிபலிக்கும் நீலவானம். நெடுங்காட்டு வண்டின் ரீங்காரம்.கடும்வெயில் மரநிழல் . குடுவைத்தேன்.தேனிறத்தழல்.தழலின் நீல வண்ணம்.நீலவண்ணக்கடல் கடல் பார்த்த வானம்.வானம் முடிவுரா பிரபஞ்சம்.பிரபஞ்சமே காதல்.
ஆசிரியர் நிறைய இடங்களில் இசைக்கு பெரிய முக்கியத்துவம் தந்திருக்கிறார்.அதற்கு அவரது குடும்ப பிண்ணனியும் காரணமாக இருந்திருக்கிறது.முதலில் கர்நாடக இசையில் மீது ஆர்வம் இருந்தாலும் அவரது மகனால் ஹிந்துஸ்தானி இசையை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்.பண்டிட் வெங்கடேஷ் குமார் அவர்களின் பாடலான”சியாம சுந்தர மதன மோகன பாடலை குறைந்தப்பட்சம் ஐம்பது தடவை கேட்டு நெகிழ்ந்ததாகக்குறிப்பிடுகிறார். திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு சென்று நிறைய ஆடியோ கேசட்டுகளை வாங்கியதால் பயணத்திற்கு கூட பணம் இல்லாமல் போனதுப்பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். ஆசிரியருக்கு சிறுவயதில் அவருக்கு சுற்றி நடந்த நிகழ்வுகள் வாழ்க்கைக்கு அனுபவிக்க ஆழமான அடித்தளமாக அமைந்திருக்கின்றது
சிறுவயதில் அதாவது எட்டுவயதாக இருக்கும்பொழுதே புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டதாகக்கூறும் ஆசிரியர் சுஜாதாவின் கதைகளில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார். அவ்வயதில் குமுதத்தில் வெளியான வாஸந்தியின் சிறுகதையைப்படித்துவிட்டு அழ ஆரம்பித்தவர் இருபது வயதில் தஸ்தாயெவெஸ்கியை படித்துவிட்டு அழும் அளவிற்கு குழந்தை மனம் கொண்டிருக்கிறார்.சுந்தரராமசாமி அசோகமித்திரன் முதலியவர்கள் இவருடைய படிப்பகத்தில் இருந்திருக்கிறார்கள்அவரது வீட்டில் விஜயா அத்தையே இவருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பவராக பாசம் காட்டுபவராகவும் இருந்திருக்கிறார். இரு பாட்டிகள் அம்மாவழிபாட்டிப்பாட்டி கணவர் இறந்ததற்கப்புறமாக அவர்மேல் கொண்ட அன்பின் பொருட்டு செருப்பைக்கூடத்துறந்து மாடுகளை வைத்து பராமரித்து கடினமாக வேலை செய்து உழைப்பை கற்றுக்கொடுப்பவராக மறுபுறம் தந்தை வழிப்பாட்டி எதைப்பற்றியும் அதிக கவனம் கொள்ளாது எதன் மீதும் பற்றில்லாத சுதந்திரத்தை சொல்லித்தருபவராக இருந்திருக்கிறார்.ஆசிரிரியால் ஒரே சமயத்தில் இருவேறு குண நலன்களையும் பற்றிக்கொள்ள இது ஏதுவாக இருந்திருக்கிறது.தம்பியின் மேல் கொண்ட பிரியம் .நட்புகள் மீது கொண்ட அன்பு.சுற்றத்தார்கள் மேலேக்கொண்ட மரியாதை என கட்டுரைகள் முழுவதும் அனைவருமே இப்படிப்பட்ட ஒரு பெண்ணாக இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என எண்ண வைக்கிறது.
மதுரை மீனாட்சி எப்படியோ எல்லோருக்கும் குலதெய்வமாகிவிடுகிறாள். அப்படிதான் ஒருக்காலத்தில் அவள் ஆசிரியருக்கும் மூச்சாக இருந்தாள் என நிறைய இடங்களில் காணமுடிகிறதுஆசிரியருக்கு மீனாட்சி மேல் இருந்த பற்றே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட குமரித்துறைவிக்காரணமாக இருந்திருக்கலாம் அற்புதத்திலும் அற்புதம் அந்த நூல்.என்னை ஆட்கொண்ட நூல்.நூலின் தலைவி உலகாளும் சுந்தரி மீனாட்சி
ஆசிரியருக்கு நிலங்களைப்பற்றியும் நிறையத்தெரிந்திருக்கிறது என்பது அவர் ஆங்காங்கே பயன்படுத்தி எழுதியிருக்கும் நிலக்குறிப்புகளை வைத்து நாம் எளிதாகப்புரிந்துகொள்ளலாம்.அவரது பாட்டியை அருவியை காணக்கூட்டிச்செல்லும் கட்டுரையில் வறண்டநிலங்களையும் அதைப் பற்றி வளரும் கருவேலஞ்செடிகளையும் குறிப்பிட்டுக்கொண்டே வருபவர் ஓரிடத்தில் அந்த வறண்ட நிலத்தில் பருத்த தண்டுகளை உடைய மரங்கள் இருந்ததாக அதனால் பூமிக்கு அடியில் நீர் இருக்கலாம் எனக்குறிப்பிடுகிறார்.ஒரு பயணத்தில் நாம் எது எதையோ பார்ப்போம் யோசிப்போம் அவர் மரங்களின் வளர்ச்சி நீர்நிலைகள் இடங்களின் குளிர்ச்சி காற்றின் ஈரப்பதம் என சிறு உயிர்களை கணக்கில் கொண்டு வந்து எருமைகளை ரசிப்பது அதனை குளிப்பாட்டுவது.சுற்றியுள்ள மனிதர்களுக்கு உதவுவது உணர்வினை பகுத்தறிவது என்பது இயல்பாகவே அவரது மனம் அனபிற்கும் கருணைக்குமானது என்பதை உணர்த்துகிறது
அதிகாலையில் கண்விழித்து முகநூலைப்பார்க்கிறேன் .ஒரு புகைப்படத்தை அத்தனைப்பேர் பகிர்ந்திருக்கின்றனர்.நான் அந்தப்புகைப்படத்தைப்பார்க்கிறேன்.அது ஒரு மணிவிழா புகைப்படம் அந்தப்புகைப்படத்தில் நாயகியின் மகிழ்ச்சியையும் சிறு குழந்தைப்போன்ற குதூகலிப்பையும் பார்த்ததும் மெல்ல எழும் அதிகாலை கதிரின் வெளிச்சம் போல மனதிற்குள்ளே மகிழ்ச்சி பனிப்புகையாக பரவுகிறது. அந்த மகிழ்ச்சி பூவரசமரத்தின் மஞ்சள்நிறப்பூக்களை போல அன்று முழுவதும் என்னை தொற்றிப்பொலியச்செய்தது..அந்த பெரிய விழிகள் மூன்று வயதில் உலகை ஆர்வத்தோடு பார்க்கும் குழந்தையின் பாவனை .முகப்பரவசம் சொர்ண ஜொலிப்பு . வெகு நேரம் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த நான்அந்தப்புகைப்படத்தை எனது பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டேன். ஆற்றூர் கவிஞர் ரவிவர்மா ஜெய மோகன் அவர்களுக்கு தந்தை போன்றவர் எனவும் அவர் அருண்மொழி நங்கையை முதன் முதலில் பார்த்தபொழுது “பிரகாசம் பரந்துந்ந பெண்குட்டி “என்றாராம் அதில் துளி அளவுக்கூட சந்தேகமில்லாமல் உண்மை.
ஆசிரியரின் பயணங்கள்.நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் அதில் எடுத்த புகைப்படங்களைப்பார்த்தோமேயானால் ஒன்றுக்கூட ஒரேமாதிரியாக இயந்திரத்தனமாக இருக்காது.ஒவ்வொன்றும் இரசனையானதாக துள்ளலாக உண்மையோடு ஒளிர்வதாகவே தோன்றும்.அந்தக்கட்டுரைகள் எனக்கு ஒரு அமைதியான நதியில் பயணித்ததைப்போல உள்ளுல் அமைதியை உணரச்செய்தன அதே நேரத்தில் அன்பின் ஆழத்தையும் உணரச்செய்தன ஆசிரியர் ஒளிரட்டும்.ஒளி பரவட்டும்
தேவி லிங்கம்
வேதாரண்யம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

