எம்.கோபாலகிருஷ்ணன் உரையாடல்
எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலம். ஏப்ரல் 5 அன்று இணையவழி க.நா.சு உரையாடல் அரங்கில் கலந்துகொண்ட எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனுடனான நிகழ்வு நல்லமுறையில் நடந்தேறியது. எழுத்தாளர் யுவன் யூட்யூபில் மறைந்திருந்து பார்த்தார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் முறையாக கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம் என பின்னூட்டம் செய்திருந்தார். கவிஞர் மோகனரங்கன் அவர்களும் கலந்துகொண்டார் என பின்னர் புரிந்துகொண்டேன். எம். கோபாலகிருஷ்ணன் கதைகள் மற்றும் தமிழில் வந்துள்ள சிறந்த கதைகளை வருடகணக்காக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் சரவணன் கார்மேகம் என்ற இலக்கிய ஆர்வலரும் கலந்துகொண்டார்.
இந்தமுறை ஷிவானி என்பவர் வாழ்த்துப்பா பாடி ஆரம்பித்துவைத்தார். ஜாஜா அவர்களும், எம். கோபாலகிருஷ்ணனும் தொடர் உரையாடலில் இருப்பவர்கள் என நிகழ்வின் துவக்கத்திலேயே தெரிந்துவிட்டது. விவேக் , வேங்கை வனம் நாவலை முன்வைத்தும், பிரசாத் வெங்கட் (கலிபோர்னியா) தனியன் என்று சிறுகதையை முன்வைத்தும் சிறு உரையாற்றினார்கள். வேங்கை வனம் மச்சிலி எனும் புலியின் கதை மட்டுமல்ல, ஊடுபாவாக வரும் சரித்திர நிகழ்வுகளை எடுத்துரைத்த விவேக்கின் உரை கேட்பதற்கு சுவராஸ்யமாக இருந்தது. வாசிக்காதவர்கள் நூலை தேடிவாங்குவார்கள் என நினைக்கிறேன். பிரசாத் , தனியனின் உணர்வுகளை தனக்குள் வாங்கிக்கொண்ட வாசகனாக உரையாற்றினார். எம். கோபாலகிருஷ்ணனின் தனியனை, தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதா நாயகனுடன் ஒப்பிட்டு நினைவுகூர்ந்து பேசினார். கேள்விகள் / எண்ணங்கள் நேரத்தின்பொழுது, மலர்விழி மணியம், வால்வெள்ளி குறு நாவலை குறித்தும், பழனி ஜோதி , இறவாப் பிணி சிறுகதை குறித்தும் தங்களது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்கள். எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு கவிஞர் என அவரை அழைப்பதில் ஒப்புதல் இல்லை எனும் ஒரு வட்டார ரகசியத்தை அறிந்துகொண்டதால், “குரல்களின் வேட்டை” நூலில் உள்ள கவிதைகளை வாசித்து வந்த நண்பர்கள் தங்கள் புரிதல்களை பரமரகசியமாக அவர்களுக்குள் வைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் , எம். கோபாலகிருஷ்ணன் அவர்களை ஆளுமையாக, படைப்பாளியாக ஒரு ஒட்டுமொத்தப் புரிதலை அடைந்திருப்பார்கள். நான் மற்றும் ராஜன் கேட்ட கேள்விக்கான பதிலில், அவரது நாற்பது வருட இலக்கிய அர்ப்பணிப்பினை புரிந்துகொண்டோம். நாவல் எழுதும்பொழுது தனது நேரத்தை எப்படி திட்டமிட்டு வகுத்துக்கொள்கிறார் என்பதையும், அதை தங்களிடமிருந்து இளமைக்காலத்திலேயே எப்படி கற்றுக்கொண்டார் என்பதையும் அறிந்துகொண்டோம். “இலக்கியத்தில் துரும்பளவு சாதிக்க தூண் பிடுங்கும் விசை வேண்டும்” என்று தாங்கள் கூறியதை இன்றளவும் போஸ்டராக வைத்துள்ளதாக கூறினார். சனிக்கிழமை காலையில் அவரை காண்பதற்கு செல்லலாம் என நினைப்பவர்கள் இந்த உரையாடலை கேட்டால் கொஞ்சம் யோசனை செய்வார்கள்.
யதார்த்தவாத அழகியல் புனைவுகளை படைப்பவர் என்ற மேலோட்டமான புரிதல் உள்ளவர்கள், வேங்கை வனம், நாவலில் புதைந்து வரும் வரலாற்றையும், அம்மன் நெசவு நாவலில் சொல்லப்பட்டிருக்கும் மரபையும் உரையாடலின் வழியாக அறிந்து அவரை ஒரு கட்டுக்குள் அடைக்கவேண்டிய படைப்பாளி அல்ல என புது அறிதலை அடைந்திருப்பார்கள். தான் மட்டுமே எழுதமுடிந்த கதைகள் என வகுத்துக்கொண்ட, கதைக்குத் தேவையான அளவே விவரணைகளை வைத்துக்கொள்ளும் கறாரான கதைசொல்லியை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொண்டோம்.
தற்காலிக இந்தி இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சி போன்ற மேடைப் பேச்சிற்கான அளவு பதில் சொல்லும் கேள்விக்கு ஹிந்தியிலிருந்து தமிழுக்கு கவிதைகளை மொழியாக்கம் செய்தவராக தன்னளவில் வாசித்த நூல்களை வைத்து பதில் சொன்னார்.
ஜாஜா ஒவ்வொரு கேள்விக்கும் உரைக்கும் அவரது பார்வையையும் எடுத்துச்சொன்னதால், விடுபட்டவைகள் ஒன்றிணைய எம். கோபாலகிருஷ்ணன் எனும் தமிழிலக்கிய ஆளுமையை முழுமையாக புரிந்துகொள்ள இந்த நிகழ்வு நல்லதொரு ஆவணமென ஆகிவந்துள்ளது.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

