நமது குழந்தைகள், நமது பெற்றோர்
அன்புள்ள ஜெ சர்,
ராம் சிதம்பரத்தை நான் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் சந்தித்தேன், உங்களுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் விருது வழங்கப்பட்ட நாளில்.
எட்டாம் வகுப்பில் இருக்கிறான்.நம் நீண்டகால நண்பர் காரைக்குடி நாராயணன் மெய்யப்பனின் மகன்.நீண்டு விரிந்த அந்த Doomed!(J’s pun) University வளாகத்தில் நாம் நடந்து செல்கையில், சில செடிகளை, மலர்களை, மரங்களை சுட்டி அதன் பெயர்கள் என்ன என அவனிடம் கேட்டபடி அவனுடன் நடந்து கொண்டிருந்தேன்
ஒரு மரத்திடம் ஓடிச்சென்று அதன் இலையை பறித்து கசக்கி முகர்ந்து ‘கொய்யா!’ என்றான்.‘அந்த மரத்தோட எலய கசக்கி மோந்து பாத்தா அந்த காயோட smell வரும்‘ என்றான்.பிறகு மதிய வெயிலில் அவன் கழுத்தில் எப்போதும் இருந்த Binocularஉடன் பறவைகள் பார்க்க அந்த வளாகத்தில் சுற்றி கொண்டிருந்தான்.
அப்போது நாங்கள் நண்பர்கள் விருந்தினர் இல்லத்தின் வரவேற்பறை இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வெயிலில் வாடி சற்று சோர்வுடன் உள்ளே வந்த அவன் ஒரு இருக்கையில் சாய்ந்து கொண்டான்.சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் தொட்டியில் வளரும் ஒரு செடியின் இலைகளை சுட்டி, ‘இந்த செடியோட இலைங்க ஏன் ஓட்ட ஓட்டயா இருக்கு‘ எனக் கேட்டான்.
விழிகள் போன்ற
துளைகள் கொண்ட
இலைகள் கண்டு
அவன் தனக்குள் வினவிக்கொண்டான்.
அதை பற்றி அங்கு வேறு யாரும் பேசியிருக்கவில்லை.
(ராம் சிதம்பரத்தின் சில எழுத்துக்கள், இந்த இணைப்பில்)
https://daily.navinavirutcham.in/?p=28460
வேணு வேட்ராயன்
அன்புள்ள வேணு,
ராம் சிதம்பரம் கொண்டிருக்கும் பறவை ஆர்வம் நம் பறவைபார்த்தல் வகுப்பின் வெற்றிகளில் ஒன்று. திண்டுக்கல்லில் அவருடைய ஆர்வத்தையும் தீவிரத்தையும் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன். அந்த வயதுக்குரிய தீவிரம். எனக்கு போதிய அளவுக்கு பறவைகளைப் பற்றி தெரியவில்லை என்று பையன் கருதியதாகத் தோன்றியது. சைதன்யாவுடன் சென்று பறவைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
பலர் அப்போதே அவருடைய ஆர்வத்தைப் பற்றிச் சொன்னார்கள். ஒருவர் “இந்த வயசுப்பையன்கள்லாம் செல்போன் அடிக்டுகள்தான் சார். செல்போன் குடுக்கலைன்னா மூர்க்கமாயிடுவானுங்க. குடுத்தா அதிலே கேம் வெளையாடுறது, அப்டியே பப்ஜி மாதிரி குரூரமான வெளையாட்டுக்குப் போயிடறது…. எப்டி என்ன பண்ணி தடுக்கிறதுன்னே தெரியலை…. இவன் இப்டி இயற்கை, பறவைன்னு இருக்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்றார்.
“என்ன பண்றதுன்னு தெரியல்லைன்னு சொல்றது தப்பு. எல்லாருக்கும் தெரியும், என்ன பண்றதுன்னு. அதைச் செய்யமாட்டாங்க. காரணம் பதற்றம், போலிப்பெருமை…” என்றேன். “குழந்தைகளுக்குப் படிப்பு முக்கியம். அதிலே கவனம் குவிக்கணும். ஆனா புத்திசாலியான குழந்தையை படிப்பு படிப்புன்னு வளர்க்க முடியாது. அதோட மூளை கூர்மையானது, அந்த மூளைக்குத் தீவிரமான செயல்பாடுகள் தேவை. கற்பனை நிறைஞ்ச, நேரடியாக ஓடியாடிச் செய்யவேண்டிய செயல்பாடுகள் இருக்கணும்… அந்தக்குழந்தையை படி படின்னு ஒரு பக்கமா அழுத்தினா அது தனக்கான தப்பும்வழிகளை கண்டுபிடிக்கும். அதான் இந்த கேம் வெளையாட்டுகள். அதில் அப்டி ஒரு தீவிரம் இருக்கு. படிப்பு குடுக்காத பரபரப்பையும் வேகத்தையும் அது குடுக்கும்…”
“ஆனா வயலண்டா ஆயிடுதே?” என்றார்.
“ஆமாம், ஏன்னா அது கமர்ஷியல் தயாரிப்பு…. லாபம்தான் நோக்கம். அந்த உலகத்திலே போட்டி அதிகம். ஆகவே மேலும் மேலும் அந்தத் தயாரிப்புகளை தீவிரப்படுத்திக்கொண்டே செல்லவேண்டும். இன்றைய முதலீட்டியச் சூழலில் ஒரு பொருளை மக்கள் ஏற்பு பெறச்செய்யவேண்டும் என்றால் அதில் காமம் அல்லது வன்முறை இருந்தாகவேண்டும், ஏனென்றால் அவையே இயல்பாக கவனத்தைக் கவர்கின்றன. அதை இயல்பா எடுத்துக்க வேண்டியதுதான். கேம் விளையாடுறவங்க ஒரு கட்டத்திலே சொந்த படிப்பையும் வேலையையும் கவனிச்சுக்கிடுவாங்கன்னு எடுத்துக்கிடவேண்டியதுதான். அதான் இன்றைக்குள்ள பொதுவான வாழ்க்கைச்சூழல்…”
“ஆனா உண்மையிலே அப்டி இல்லை சார். படிப்பு சிதறிடுது. கவனம் எதிலேயும் நிக்கிறதில்லை”
“அதுவும் இந்த காலகட்டத்தோட பொதுவான போக்குன்னு எடுத்துக்கிடவேண்டியதுதான். இன்றைக்குள்ள பொதுமீடியாவிலே நேரடியா கட்டணம் இல்லை.ஆனா கட்டணம் இல்லாம ஒரு சேவை முதலீட்டியச் சூழலிலே இருக்கவே முடியாது. மறைமுகக் கட்டணம் உண்டு, விளம்பரம்தான் அது. விளம்பரத்துக்கான தரவுச்சேகரிப்பும் அடக்கம். அதுக்கு ஒருத்தர் நீண்டநேரம் இணையத்திலே இருக்கணும். மிக அதிகமான இணையதளங்களைப் பாக்கணும். அதனாலே நிகழ்ச்சிகளோட நேரத்தை குறைச்சுகிட்டே வராங்க…இப்ப முப்பது செகண்ட் ஆயிட்டுது… அதைப் பாத்து பழகிட்டா கவனம் நிக்காது. பரபரப்பா இருப்பாங்க, ஆனா எதையுமே கூர்ந்து செஞ்சு முடிக்க முடியாது”
“ஆமா சார்” என்றார் நண்பர்
“ஆனா அதுவும் இப்ப உள்ள வாழ்க்கைமுறைக்கும் வேலைக்கும் பொருந்துறதுதான். இவங்க என்ன வேலை பெரிசா செஞ்சிரப்போறாங்க? வேற அறிவியலாளர்கள் உண்டுபண்ற மென்பொருளுக்கு நிரல் எழுதுவாங்க. சிக்கல்களைச் சரி செய்வாங்க. அதுக்கு பிராப்ளம் சால்விங் திறமை மட்டும் போதும். ஒரு நடைமுறை அறிவுதான் அது. கற்பனை சிந்தனை எல்லாம் தேவை இல்லை. அந்த வேலையைச் செய்ய இந்தவகையான பிள்ளைங்களாலே முடியும். சம்பளம் கிடைக்கும். சம்பாதிப்பாங்க, செலவழிப்பாங்க… இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களை பார்த்துட்டு வாழ்வாங்க. அரசியல் பொருளாதாரம் ஒண்ணும் ஆர்வமிருக்காது… சாப்பிடுவாங்க, சுத்துவாங்க, பார்ட்டி பண்ணுவாங்க.அதான் மாடர்ன் லைஃப். அதுக்கு எதுக்கு கூர்ந்த கவனம்? இதனாலே எந்தப் பிரச்சினையும் இல்லை. இது நார்மல்தான்” என்றேன்.
“நீங்க இப்டிச் சொல்வீங்கன்னு நினைக்கவே இல்லை” என்றார்.
“நான் எதையும் மிகையாக்கிச் சொல்ல விரும்பலை….ரொம்ப குறைவான குழந்தைகளுக்குத்தான் சராசரிக்கு மேலான அறிவும் நுண்ணுணர்வும் இருக்கு. நாம எல்லா குழந்தைகளையும் சராசரியா ஆக்கத்தான் முயற்சி பண்ணிட்டே இருக்கோம். பெரும்பாலும் எல்லா குழந்தையும் சராசரியா ஆயிடுது. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற குழந்தைதான் சிதறிப்போயிடுது… அந்த அபாயம் இருந்துட்டேதான் இருக்கு”
“அதுக்கு என்ன பண்றது? அதைத்தான் கேட்க வர்ரேன்” என்றார்.
“அதுக்கான வழி அந்தக் குழந்தையோட கற்பனைக்கும் சிந்தனைக்குமான ஒரு உலகத்தை சின்னவயசிலேயே அறிமுகம் செய்றதுதான். வாசிப்பு, இயற்கையோட இணைந்திருக்கிறது ரெண்டும்தான் அதுக்கான வழி. ஒரு கட்டத்துக்குப்பிறகு சொந்தமா எதையாவது உருவாக்கிறதுக்குள்ள நுழையவைக்கணும். எழுதலாம், ஆராய்ச்சி செய்யலாம், பயணம் செய்யலாம்…கூடவே படிப்பையும் கொண்டுபோனா அந்தக்குழந்தைக்கு கவனக்குவிப்பு இருக்கும். இன்னைக்குள்ள சிதறல்கள் இருக்காது” என்றேன். “ஆனா பிரச்சினை இருக்கிறது நம்ம பெற்றோர்கள்கிட்டதான். அவங்க குழந்தை வளக்கிறது குழந்தைக்காக இல்லை, தங்களுக்காக”
நான் அதற்கு முந்தையநாள் வந்த ஓர் உரையாடலைச் சொன்னேன். ஒருவருக்கு தன் மகனை பறவைபார்த்தல் வகுப்புக்கு அனுப்ப ஆசை. அவனுக்கும் ஆசை. ஆனால் அவன் அம்மா சம்மதிக்கவே இல்லை. கோடைகாலம் முழுக்க வெவ்வேறு வகுப்புகளை ஏற்பாடு செய்துவிட்டார். எல்லாமே அடுத்த ஆண்டு பள்ளிக்கல்விக்கான முன்பயிற்சிகள்.பையன் நன்றாகப் படிப்பவன், அதெல்லாம் தேவையே இல்லை. ஆனால் அது அந்த அம்மாவின் மானப்பிரச்சினை. அவருடைய வட்டத்தைச் சேர்ந்த எல்லா பெண்களும் தங்கள் குழந்தைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். இவர் பையன் போகாவிட்டால் கௌரவம் அல்ல, கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது.
ஆண்டுக்கு ஐந்துக்கு மேல் பெற்றோர்கள் அதீதமான படிப்பு அழுத்தம் காரணமாக உளச்சோர்வுக்கு ஆளான குழந்தைகளுடன் எங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் அவர்களை உளவியலாளர்களிடமே செல்லச்செய்கிறேன். ஏனென்றால் அச்சிக்கல் உருவானபின் அவர்களே உதவமுடியும். அதற்கு முன்பு என்றால் தில்லை செந்தில்பிரபு அல்லது குருஜி சௌந்தர் உதவலாம். அவர்களும் பலருக்கு உதவியுள்ளனர். அந்நிலைக்குச் செல்வதற்கு முந்தைய நடவடிக்கை என்பது இளமையிலேயே இயற்கையுடன் வாழச்செய்தலே. அதை நம்மவர் செய்வதில்லை, அவர்களின் கணக்குகள் வேறு, பதற்றங்கள் வேறு.
ராம் சிதம்பரம் தனித்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அவரது ஆரம்பக்கல்வி அமெரிக்காவில். அவர் அப்பா மெய்யப்பன் அமெரிக்கப் பணியை உதறி இந்தியா வந்தவர். இயற்கைவேளாண்மை செய்கிறார், கணிப்பொறித்துறை பணியையும் தொடர்கிறார். அவருக்கும் இன்றைய சூழல் தெரியும். நாம் குழந்தைகளை அவர்களுக்குரிய உலகங்களை நோக்கி கொண்டுசெல்லவே முடியும். அவர்கள் வெல்வது அவர்களின் தனித்திறமையால். அந்தவகையான ஒரு வழியை மகனுக்குக் காட்டியுள்ளார்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

