சுபாஷ் சந்திரபோஸ், கடிதம்
வணக்கம்.
எனது கிராமம் கண்ணந்தங்குடி, தஞ்சை மாவட்டம். ‘கண்ணந்தங்குடி வரலாறு ‘ என்னும் நூல் நான் சுமார் 10, 12 வயது இருக்கும் போது வாசித்தேன். அந்த நாளில் வாசித்தது இன்றும் நினைவில் நிற்கும் விதமாக பல அரிய தகவல்களை வரலாறுகளை எனக்கு அளித்தது. அதில் ஒன்று எங்கள் ஊர் தெய்வமான மலையேறியம்மன் பற்றிய கதை. அது எப்படி எங்கள் ஊருக்கு வந்தது,மற்ற தெய்வங்கள் கிழக்கு நோக்கி இருக்க அது வடக்கு நோக்கி அமர்ந்திருக்க காரணம் என்ன , அந்த நேரத்தில் சிறுபான்மை சமூகமாக இருந்தும் ஊரை நிர்வாகம் செய்த வேளாளர்கள் , எங்கள் ஊரில் பிறந்த பெண்களுக்கு பாக்கு வைக்கும் நிகழ்வு இருக்கிறது( திருமணமான பெண்ணுக்கு அவளின் தந்தை வீட்டில் இருந்து அவளின் இறுதி நாள் வரை ஒவ்வொரு வருடமும் வைகாசி மாத திருவிழா நேரத்தில் நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து மரியாதை செய்ய வேண்டும். இன்றும் அப்படித்தான். பாக்கு வரவில்லை என்றால் பெண் அவளின் தாய் வீட்டு உறவை அதகற்குப் பிறகு தொடர மாட்டாள்) அதன் ஊற்று முகம் எது என பல. அதோடு முக்கியமாக சுற்றி இருக்கும் கிராமங்கள் அங்குள்ள தெய்வங்கள் பற்றிய செய்திகள். அனைத்தும் கதை வடிவில். ஆனால் உண்மையாக எழுதப்பட்டிருந்தது .
கால ஓட்டத்தில் அந்த நூலை தவற விட்டுவிட்டு அதன் ஆசிரியரின் மகனை சமீப காலத்தில் தொந்தரவு செய்து வந்தேன். இன்று தளத்தில் உலா வந்து கொண்டிருந்த போது( என்னை நேர்நிலைக்கு சில நேரங்களில் இழுத்து வர random ஆக எதையும் அங்கு தேடி வாசிப்பது வழக்கம்) கீழ்கண்ட பக்கங்களை கண்டடைந்தேன்.
https://www.jeyamohan.in/140515/
அதில் அவர் பெயரைக் கண்டு சிறு துணுக்குறல். பக்கத்து ஊர்க்காரர், அப்பாவின் நண்பர், நண்பனின் தந்தை , பேராசிரியர். “நம்ம ஊர் பெரிய ஊர் அதுனால நம்ம ஊருக்கு ஹிஸ்டரி புக் எழுதியவர்”( இப்படி நாங்களே எங்களை தூக்கி மேலே வைத்துக் கொள்ளும் வழக்கம் எங்களூரில் இன்றும் மலிவு) . இப்படித் தான் அவரைப் பற்றிய எனது புரிதல்.
அதைத் தொடர்ந்து நமது கலைக் களஞ்சியத்தின் பக்கத்திலும் அவர் பற்றிய பதிவு . (சுபாஷ் சந்திரபோஸ்)
உங்கள் தளத்தில் மற்றும் தமிழ் விக்கியில் பெயர் இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன என்று ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் எனது மனமார்ந்த நன்றி.
பேராசிரியர் திரு சுபாஷ் சந்திர போஸ் தற்போது சற்று உடல் நலம் இல்லாமல் இருப்பதாக கேள்வி. அவர் நலம் பெற எல்லாம் வல்ல பேரிறையை வேண்டுகிறேன்.
அறியாமை அகற்றி புழுவினும் சிறிதாய் என்னை அன்றாடம் உணர செய்யும் தங்களுக்கும் தமிழ் விக்கி நண்பர்களுக்கும் பாதம் பணிந்து நன்றி சொல்கிறேன்.
அன்புடன்
கே.எம்.ஆர்.விக்னேஸ்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 851 followers

