அஜிதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
அஜிதனின் இரண்டுபாக பேட்டியும், முழுமையறிவு பக்கத்தின் உரையாடலும் பார்த்தேன். அவற்றில் பேசப்பட்டுள்ள பல விஷயங்கள் தொடர்ச்சியாகச் சிந்திப்பதற்குரியவை. இயல்பான உரையாடலில், அழுத்தாமல் அவற்றைச் சொல்லிச்செல்கிறார் என்பதனால் சாதாரணமான பேச்சாகவும் தெரிகிறது. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் அவை வளர்கின்றன.
இரண்டாம் பகுதியில் அஜிதன் வாக்னரை முன்வைத்துச் சொல்லும் விஷயங்கள் இன்றைய வாசகன் வெண்முரசை வாசிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் மிக அவசியமான தத்துவ அடிப்படையை அளிப்பவை. அஜிதன் அவற்றை விரிவாகவே எழுதலாம். இங்கே நான் பார்த்தவரை நல்ல வாசகர்கள் என்று தோன்றுபவர்கள்கூட யதார்த்தவாத எழுத்துக்களையும், நவீனகால எழுத்துக்களையும் மதிப்பிடுவதற்கு பயன்படுத்தும் அதே பார்வையில் வெண்முரசை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் சப்ளைம்களை எல்லாம் மிகை என்று பேசி எழுதுபவர்களை காணமுடிகிறது. அதிலுள்ள ஃபேண்டஸி அம்சங்களை எல்லாம் தகவல்களாக எடுப்பவர்களும் உண்டு. ஒரு நல்ல விமர்சனப்பார்வை என்பது படைப்பை புரிந்துகொள்வதற்கான ஒரு நல்ல அடிப்படையை அமைக்கவேண்டும். அஜிதனின் பார்வை மிக உதவியானதாக இருந்தது.
ரா. சிவக்குமார்
அன்புள்ள ஜெ
அஜிதனின் பேட்டி சிறப்பாக இருந்தது. அதில் குறிப்பிடப்படும் பல ிஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் வரிகள்கூட முக்கியமானவையாக இருந்தன. ’கவிதை என்றால் என்ன என்று வரையறை செய்வது கவிதைக்கும், தத்துவம் என்றால் என்ன என்று வரையறை செய்வது தத்துவத்துக்கும் எல்லா காலத்திலும் முக்கியமான பேசுபொருளாக இருந்துள்ளது’ என்பது போன்ற வரிகள் உரையாடல் முழுக்க நிறைந்துள்ளன. நல்ல பேட்டி.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

