மகிழ்வரசியின் காலடியில்

முழுமையறிவு (unified wisdom) என்ற பெயரில் நடத்திவரும் இந்திய தத்துவ இயல் வகுப்புகள் 2022ல் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கப்பட்ட ஆறு தனித்தனி அணிகளாக நிகழ்ந்து வரும் இவ்வகுப்புகளில் முதல் அணி ஆறாவது நிலையை அடைந்துள்ளது.  பல்வேறு நிலைகளில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக அனேகமாக எல்லா மாதங்களிலும் நிகழ்கின்றன. சில மாதங்களில் இரண்டு வகுப்புகள் வரை நிகழ்கின்றன.

ஆறாவது வகுப்பு வேதாந்தம் அல்லது உத்தர மீமாம்ஸம். அதன் மூலநூலான பிரம்மசூத்திரம். பிரம்மசூத்திரம் பற்றிய முனி நாராயணப் பிரசாத் அவர்களின் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருந்தபோது இவ்வகுப்புகளை பனிமலைகள் தெரியும் ஓர் இடத்தில் அமர்ந்து நடத்தினாலென்ன என்னும் எண்ணம் வந்தது. உடனே அகத்தே பனிமலைகளைக் கண்முன் பார்த்தும் விட்டேன்.

இமையமலைகள் தெரியும் ஓர் இடத்துக்கான தேடல் தொடங்கியது. டார்ஜிலிங்கில் இடம் பார்த்தோம். சரியாக அமையவில்லை. தொடர்ச்சியாக பல இடங்கள் பல நண்பர்கள் வழியாகப் பரிசீலிக்கப்பட்டன. எல்லாமே சுற்றுலா மையங்கள். ஆகவே பரபரப்பானவை, கட்டணமும் மிகுதி. (அண்மையில் Work from Himalayas என்றபேரில் சி.இ.ஓக்கள் இமையமலை ஓய்விடங்களில் நிரந்தரமாக தங்க ஆரம்பித்துள்ளனர்)

ஒரு கட்டத்தில் இமையமலை எண்ணத்தைக் கைவிட்டு உள்ளூரிலேயே வகுப்புகளை நடத்தலாமென முடிவுசெய்தேன். அந்த முடிவை எடுத்த அன்று மீண்டும் முனி நாராயணப் பிரசாத்தின் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் அழைப்பு. பெங்களூர் இலக்கியவிழாவில் அறிமுகமான திரிபர்ணா என்னும் வாசகி அழைத்திருந்தார். அவர் உத்தரகண்ட்டில் அல்மோராவைச் சேர்ந்தவர், அங்கே அவருடைய தாய்மாமனான வினாயக் பந்த் என் வாசகர் என்றார். வினாயக் வந்த் இலக்கியவிழாக்களையும் ஒருங்கிணைப்பவர். சட்டென்று அவரிடமே உதவிகோரத் தோன்றியது. 

திரிபர்ணா வழியாக வினாயக் பந்தை தொடர்பு கொண்டேன். அவர் உதவ முன்வந்தார். ஒரே வாரத்தில் கஸார்தேவி என்னுமிடத்தில் இருந்த மோக்ஷா என்னும் தங்குமிடம் முடிவுசெய்யப்பட்டது. இமையமலையில் ஒரு ஓய்விடத்திற்கு வழக்கமாக ஆகும் செலவில் கால்வாசித்தான் கட்டணம். ஆறாவது நிலை மாணவர்கள் மொத்தம் ஐம்பதுபேர், முப்பதுபேருக்கே இடம். விமான முன்பதிவு ஜனவரியிலேயே செய்யப்பட்டது.

நான், அருண்மொழி, சைதன்யா ஆகியோர் 20 மார்ச் 2025 அன்று விடியற்காலை இரண்டு மணிக்கு கிளம்பி திருவனந்தபுரம் சென்று விமானம் ஏறி டெல்லி சென்றோம். டெல்லியில் இருந்து பதினெட்டுபேர் ஒரு வேனில் நேராக அல்மோரா வழியாக கஸார்தேவி செல்வதாக ஏற்பாடு. ஒரு குழு ரயிலில் வந்தது. இன்னொரு குழு இன்னொரு காரில் வந்தது. மதியம் 12 மணிக்கு ஒன்றுகூடினோம். 1 மணிக்கு கிளம்பிபனோம்.

பயணநேரம் 9 மணி என கூகிள் காட்டியது. ஆனால் சென்று சேர 12 மணி நேரம் ஆகியது. வழி நெடுக ஊர்தி நெரிசல். சாலையும் கொஞ்சம் பழுதடைந்திருந்தது. ஆனால் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நடுநடுவே தூங்கிக்கொண்டும் சென்றதனால் அலுப்பு தெரியவில்லை. இரவு ஒரு மணிக்குத்தான் மோக்ஷாவை அடைந்தோம். 

இரவுணவுக்குச் சொல்லியிருந்தோம். நான் சாப்பிடாமல் அப்படியே கட்டிலில் விழுந்துவிட்டேன். நல்ல குளிர்.ஏழு டிகிரி. மெத்தைப்போர்வையை போர்த்திக்கொண்டு அதை உடலால் சூடுபடுத்தி கதககதப்பாக்கிக்கொண்டு மெல்ல துயிலில் ஆழ்ந்தேன். குளிர்ப்பகுதிகளில் போர்வை ஒரு கருப்பையாகிறது. அங்கே வருவதுபோன்ற ஆழ்ந்த தூக்கம் எங்கும் அமைவதில்லை.

வெளிவகுப்பு

மறுநாள் எட்டு மணிக்கு எழுந்து வெளிவந்தேன். நல்ல குளிர் இருந்தாலும் பளிச்சிடும் வெயிலும் இருந்தது. எதிரே பச்சை அலையாக மலையடுக்கு. ஆனால் பனிமலைகள் இல்லை. வானம் வெண்ணிற ஒளிர்முகிலால் நிறைந்து கண்கூசச்செய்தது. உணவறைக்குச் சென்று காபி குடித்தேன். அங்கே நண்பர்கள் கூடியிருந்தார்கள்.

மோக்ஷா ஒரு நடுத்தர நிலை தங்குமிடம். வசதியான அறைகள். வெந்நீர் வசதி, நல்ல போர்வை உண்டு. உணவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக எங்கள் நோக்கத்தை அறிந்து முழுமையாக ஒத்துழைத்தனர். அவர்களின் நோக்கில் இந்நிகழ்வு அவர்களுக்கு மிகுந்த கௌரவம் அளிக்கும் ஒன்று. அவர்களின் முகநூல்பக்கத்திலும் எழுதியிருந்தார்கள்.

உள்ளறை வகுப்பு

நந்ததேவி மலையடுக்குகள் தெரியும் என்றார்களே, எங்கே என்று கேட்கலாம் என எண்ணினேன். அதற்குள் நிறுவன நிர்வாகியான துருவ் “நந்ததேவி தெரியும், ஆனால் இன்று முகில் மூடியிருக்கிறது…முகில் விலகினால் தெரியும்” என்றார். கண்களில் நீர்வழிய பார்த்துக்கொண்டிருந்தேன். முகில் கொஞ்சம் விலகியபோது பனிமுடிகளின் மங்கலான வெண்வடிவம் துலங்கி வந்தது. அதைப் பார்த்ததுமே அவ்விடம் மனதுக்கு உகந்தந்தாக ஆகியது.

கஸார்தேவி என்பது அருகே உள்ள ஒரு பழமையான ஆலயம். உண்மையில் ஒரு சிறு மலைக்குகை அது. அங்கே இப்போது ஒரு கான்கிரீட் ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள். நாங்கள் செல்வதற்கு முன்னரே வந்த நண்பர்கள் அங்கு சென்று வணங்கி வந்திருந்தார்கள். 

காலை ஒன்பது மணி முதல் ஒரு மணிவரை பிரம்மசூத்திர வகுப்பு. முப்பதுபேர் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்ட ஒரு சிறு கொட்டகை. மாணவர்களின் நேர் முன்னால் நந்ததேவியின் மலையடுக்குகளும் அவற்றின்மேல் கவிந்த நீலவானமும், அடியில் வளைந்தெழுந்து வந்த பசுமையான காடும். மெல்லிய குளிர்காற்று வந்து அலைதழுவிச் சென்றுகொண்டிருந்தது. பறவைகளின் ஓசைகள் சூழ்ந்திருந்தன. வகுப்புநடத்தும்போது அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

அத்தகைய ஓர் இடத்தில்தான் பிரம்மசூத்திரம் கற்பிக்கப்படவேண்டும் என்று தோன்றியது. பாதராயணர் வாழ்ந்தது இந்த தவநிலம். (இமையமலையில் பதரிநாத் என்னுமிடத்தில் என தொன்மம். ஆதிசங்கரர் அவருடைய மடத்தை அங்கே நிறுவியது அதனால்தான்)

பிரம்மசூத்திரம் ஒரு தொன்மையான தத்துவநூல். ஒற்றைவரிச் சூத்திரங்களால் ஆனது. முதல்மூவர் (சங்கரர், ராமானுஜர், மத்வர்) அதற்கு எழுதிய உரைகளினூடாகவே இங்கே அந்நூல் வாசிக்கப்படுகிறது. அவை பிரம்மசூத்திரத்தில் இருந்து தொடங்கி அவரவர் தத்துவகொள்கைகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களே ஒழிய பிரம்மசூத்திரம் உரைகள் அல்ல. அந்தந்த மத – தத்துவ மரபினர் அவற்றுக்குரிய உரைகளினூடாக அதை அணுகலாம்.

பொதுவாக அதை அணுக விரும்பும் தத்துவ மாணவர்கள் அந்நூலை வெறுமே உபநிடத தத்துவ விவாதப் பின்னணியில் புரிந்துகொள்ளவேண்டும். பிற்கால தத்துவ ஆசான்களின் விளக்கவுரைகளை அதன்பின் அறிவதே தெளிவை அளிக்கும். இந்த வகுப்பு அத்தகையது. இவ்வகுப்புக்கு முனி நாராயணப் பிரசாத்தின் விளக்கங்களும், ஐரோப்பியரின் சூத்திரப்பொருட்கோளுமே கருத்தில்கொள்ளப்பட்டன.

மதிய உணவுக்குப் பின் ஓய்வு. நள்ளிரவின் குளிர் போல நடுமதியம். அது போர்வைக்குள் ஒடுங்கிக்கொண்டு தூங்குவதற்கு தூக்கத்துக்கு மிக உகந்தது. மாலை நான்கு முதல் ஐந்து வரை ஒரு வகுப்பு. அதன்பின் ஒரு நீண்ட மாலைநடை.

அருகே இருந்த தேநீரகத்தில் மெத்தமைமேல் தலையணைகளில் சாய்ந்து அமர்ந்துகொண்டு தேநீர் அருந்துவது ஓர் இமையமலை அனுபவத்தை அளித்தது. திரும்பி வந்து ஏழு மணிமுதல் ஒன்பது மணிவரை மீண்டும் ஒரு வகுப்பு. இம்முறை உள்ளறையில் வகுப்பு. வெளியே நல்ல குளிர் தொடங்கிவிட்டிருந்தது. ஒன்பதுக்குப் பின் இரவுணவு. பத்துமணிக்கு படுக்கை.

மூன்றுநாட்களில் அங்கேயே ஒரு நாளொழுங்கு உருவாகிவிட்டிருந்தது. இரண்டாம் நாள் காலையில் எழுந்தால் நந்ததேவி துல்லியமாகத் தெளிந்து வானில் நின்றது. மலைகளுக்குமேல் அந்தரத்தில் ஒரு வெள்ளிக்கோபுரநிரை போல. பறந்துசெல்லும் பளிங்குத்தேர்களின் படை போல. மலையலையின் வெண்நுரைபோல. அன்று வகுப்பு அப்பனிமலைகளைப் பார்த்தபடி. அவ்வப்போது அந்தப் பனிமலைகளைப் பற்றிய குறிப்பும் வகுப்பில் எழுந்துகொண்டே இருந்தது.

21 மார்ச் 2015 முதல் 23 மார்ச் 2025 வரை மூன்றுநாட்களில் பிரம்மசூத்திரத்தின் பாதிப்பங்கை பயின்றோம். எஞ்சிய பங்குக்கு வழக்கமான இடத்தில் அடுத்த வகுப்பு நிகழும்.

நான், அருண்மொழி, சைதன்யா, சுசித்ரா ஆகியோர் 24 விடியற்காலை 3 மணிக்கு எழுந்து குளித்து நான்குமணிக்கு டாக்ஸியில் டெல்லிக்குக் கிளம்பினோம். பலர் பல குழுக்களாக திரும்ப திட்டமிட்டிருந்தனர். சிலர் உத்தரகாசி, ருத்ரபிரயாக் என. சிலர் ஆக்ரா, மதுரா என. நாங்கள் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோயிலுக்கு.

முழு விவாதத்திலும் நந்ததேவியின் மாபெரும் அருகமைவை உணரமுடிந்தது. நந்ததேவி. மகிழ்வின் அரசி. தேவி என இப்பகுதியில் ஆண்களுக்கும் பெயர் உண்டு. ஆனால் இச்சிகரத்தை நான் பெண் என்றே உருவகித்துக்கொண்டேன். ரஜதகிரீடதாரிணி. தேவதாத்மா.

தத்துவம், கலப்பற்ற தூய தத்துவம், உலகியல்வினாக்களுக்கெல்லாம் அப்பாலுள்ள அடிப்படை வினாக்கள் பற்றிய தத்துவம், கூரிய வாள்முனை பிற கூரிய வாள்முனைகளைச் சந்திப்பதுபோன்ற தர்க்கம் அளிக்கும் உள எழுச்சி என்பது மகத்தான கலையனுபவத்திற்கும் கவிதையனுபவத்திற்கும் நிகரான ஒன்று. அதை அகாலவெளியில் என ஒளிர்ந்து வானில் நின்றிருந்த இமையப்பனியடுக்குகளைப் பார்த்தபடி உசாவுவது என்பது ஒரு தவம். தவம் என்பது இனிமையிலிருந்து இனிமை நோக்கிச் செல்லக்கூடும் என்று உணர்ந்த நாட்கள்.

முழுமையறிவு காணொளிகள் 
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.