உலகம் முழுக்க மதமும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. மதம் சாராத தத்துவம் என்பது ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்ல உருவாகி வந்த ஒன்று. இந்தியாவில் தத்துவத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் ஒரு தேக்கநிலையே உருவானது. முன்னோர்சொல் என்ற அளவிலேயே முந்தைய தத்துவ நூல்கள் அணுகப்பட்டன. அவற்றை முன்னெடுத்துச்செல்லும் புதிய தத்துவக்கொள்கைகள் உருவாகவில்லை. ஆகவே இந்திய தத்துவம் இன்று மததத்துவமாகவே கிடைக்கிறது. ஆனால் அது மதத்திற்குள் ஒடுங்குவது அல்ல. இன்று நவீனக்கல்வி கொண்ட ஒருவர் தத்துவத்தை மதத்தில் இருந்து பிரித்து பிரபஞ்சவியலாக அணுகமுடியும், சமகால வாழ்க்கை சார்ந்து விளக்கமுடியும். அவ்வாறு செய்தே ஆகவேண்டியது இன்றைய கட்டாயம்
Published on March 23, 2025 11:36