மழை தொடக்கம்

பெரு மதிப்பிற்குரிய ஜெ,

எழுதி முடிக்கும்தோறும் நீங்கள் இறக்கி வைக்கும் பாரத்தை படிக்கும்தோரும் எங்கள் மனங்களில் சுமந்து அலைகிறோம்.

எல்லாம் இயற்கையின் விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று சத்யவதி நினைத்து பிதமாகரை நிம்மதியாக இருக்க விட்டிருந்தால் இந்த செவ்வியல் காவியம் கிடைத்திருக்க வாய்ப்பில்லையோ என்று தோன்றினாலும் நடப்பது தானே நடக்கும் என்ற கூற்றும் வந்து அறைகிறது.

குரு வம்சத்தின் சமநிலைக்காக அனைத்து அல்லல்களையும் தோளில் வாங்கும் பீஷ்ம பிதாமகருக்கு சற்று ஓய்வளிக்க தொலைதூர பயணம் அளித்துவிட்டு விதுரரிடம் ஏற்றி விட்டீர்கள்..

சந்தனு, சித்ராங்கதன், விசித்திர வீரியன் மரணங்களை கடந்து செல்ல முடிந்த அளவுக்கு பாண்டு மரணத்தை கடக்க இயலவில்லை. அஸ்தினாபுரம் நீங்கி சதசிருங்கத்தில் ஒவ்வொரு நாளையும் அவன் பருகி அறிகிறான்.அலைந்து திரிகிறான் அவனே அவனாய் மாறி தோளில் சுமக்கிறான். அவனுக்கு அவனே குரு வம்சத்தை கதையாடுகிறான்..சாதக பறவையையும் செண்பக மலரின் மணத்தையும் அறிமுகம் செய்து பாண்டு செல்ல விண்ணகர வாசல் திறக்கிறீர்கள்.சிவை போல அனைத்து மாந்தர்களும் அந்த நாளை நோக்கி சாளர வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனகையின் இடுப்பில் அமர்ந்தவாறு கூரிய விழிகளுடன் பார்த்தன் போல நீங்கள் கலங்காதிருக்களாம் ஆனால் எங்கள் கண்கள் குளம்போல் தேங்கி நின்றன..

துயர செய்திகளைக் கூட இவ்வளவு கவித்துமாக கடந்துசெல்ல உங்களால் முடிகிறது..  பொழிகின்ற மழையைப் போல் நாங்கள் கண்ணீர் விட நேரும் என அறிந்தே இதற்கு மழைப்பாடல் என்று பெயரிட்டீர்கள்.ஆனால் அந்த கணமே உயிர்த்தெழும் யுதிஷ்டிரனின் உறுதியான மனம் தெளிவான பார்வை அதுவரை அஸ்தினாபுரியின் எதிர்காலத்தை மட்டுமே நினைத்து கொண்டிருந்த குந்திக்கு சற்று ஆசுவாசம் கொடுத்தது. ஆஜானுபாகுவான பீமசேனன் போலவே அவளும் தருமனின் ஆடை நுனியை பிடித்துக்கொண்டாள்..

ஆம் இறப்பு இறப்பல்ல…அது தொடக்கம்..அழிவு அழிவல்ல அது ஒருங்கமைத்தல்..

நன்றி

கார்த்திக் (வீர சங்கிலி)

பரமக்குடி

பி.கு: 2011 ஆம் ஆண்டு ஜோஷிர்மத் தாண்டி அவுளி என்ற இடத்தில் நின்று நந்தாதேவியின் பொன்முகட்டை பார்த்துக் கொண்டிருந்தேன் ..சரியாக 14 ஆண்டுகள் நகரவாசத்திற்கு பிறகு அதே இடத்தில் நிற்கும் உணர்வு..

வெண்முரசு தொடங்க இருந்த பயம் சரியென ஆகிவிட்டது.. தொடங்குவது மட்டுமே நான் முடிப்பது அவன் செயல் .அதுவரை வேறு எதையும் தொடுவது கடினம்…

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone 9080283887)

இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.