01
சுவரில்
அவ்வளவு பொருத்தமற்றிருக்கும்
ஓவியத்தை
வரைந்தது
காலமா?
விதியா?
02
உழுந்து வடையும்
மசால் வடையும்
குவிக்கப்பட்டிருக்கும்
தேனீர் கடையில்
காலம் காலமாய்
கிழிபடும்
தினசரியின்
செய்தி.
03
காக்கா முட்டா
காக்கா முட்டாயென்று
பாடும் மழலையே
உன்
அடைகாக்கும்
ராகத்தை
பிசிறில்லாமல்
ஏந்தி வா.
உனக்குமிருக்கிறது
வனம் முழுதும் கிளைகள்.
04
மழையில்
நனைந்து
மடிப்பிச்சை கேட்கிறாள்
தாயொருத்தி
நடுங்குமொரு பொழுதாகிய உடலை
சுமந்தலையும் அவளது பாதங்கள்
நெருப்பில் புதைகின்றன.
இறுகச் சாத்தப்பட்ட கதவுகளைத்
திறக்காமலேயே
ஜன்னல் திரைச்சீலை விலக்கி
அவள் முகத்தைப் பார்க்கின்றனர்
நாகரீக கனவான்கள்.
ஏந்திநிற்கும் சேலையின் குழியில்
மழைத்துளிகள் விழுந்து
நிறைகின்றன.
“தரித்திர மழையே
தரித்திர மழையே
உன் தாராளம் நிறுத்து
பசித்தவர்க்கு இரங்காத
பாவிகள் இவர்க்கு
உன் தாராளம் நிறத்து”
ஏசினாள் இரந்து நின்றவள்
வானம் இட்டது
அவள் கேட்ட பிச்சை.
The post தினசரி first appeared on அகரமுதல்வன்.
Published on June 19, 2024 10:27