ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.
கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே.
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே.
***
The post பட்டினத்தார் பாடல்கள் first appeared on அகரமுதல்வன்.
Published on April 27, 2024 09:24