01
பழங்காலத் தேரின் சிதிலத்தில்
அடைகாக்கும் புறாக்கள்
அசையாது நிற்கும் புரவிகளை
அடர்ந்து மூடிய அடம்பன் கொடி
செல்லரித்த வடக்கயிற்றின் மீதம்
நிலத்தில் புதையுண்டு மக்கிற்று
இருள் மூண்ட தேர்முட்டி ஸ்தலத்தில்
பாம்புகளும் பூரான்களும்
முளைத்தெழும் சூரியனின் ஒளிபட்டு சிலிர்க்கும்
தேர்க்கால்களில்
தடம் மறந்த நினைவின் ஊழ்.
02
இன்றுதான்
பூவின் இதழ்களை
ஒவ்வொன்றாக
இழைத்துப் பார்த்தேன்
ஒவ்வொன்றிலும்
ஆதிகாலத்து
வாச நீர்மை.
இப்புவியில்
எவ்வளவு காலத்துப் பழம் பிறப்பு
இந்தப் பூ.
03
லட்சோப லட்ச ஆண்டுகளாய்
தகிக்கும் சூரியனைச் சுகப்படுத்தும்
நிழல் விழுந்த முன்றில்
என்னுடையது.
The post மீதம் first appeared on அகரமுதல்வன்.
Published on April 24, 2024 11:01