போதம் தருவது இலக்கியம்
தமிழ் இலக்கியமெனும் வெளியில் ஈழ இலக்கியத்தின் பேராற்றல் போதம் மிக்கது. பேரழிவும் மானுடப்படுகொலையும் நிகழ்ந்த மண்ணின் கதைகளை எதிர்கொள்ள இயலாது மனம் துடிக்கிறது. எத்தனையாண்டுகள் ஆனாலும் ஆறாத மனுஷரணம் முள்ளிவாய்க்கால். எழுத்தாளர் அகரமுதல்வனின் “போதமும் காணாத போதம்” எனும் இந்தப் படைப்பு ஈழ மக்களின் பண்பாட்டு பின்னணியிலிருந்து போருக்குப் பின்பான திகைப்பான சம்பவங்களை முன்னிறுத்துகின்றன. விடுதலையின் பெயரால் விதைக்கப்பட்ட தியாகங்களை வீரநிலை மரபின் வழிபாடாக உணர்த்துகின்றன. போரின் மிலேச்சத்தனங்களையும், சனங்களின் பாடுகளையும், சந்தோசங்களையும் தெய்வங்களையும் இந்த நிலம் தன்னுடைய போதமாக்கி இருக்கின்றது. இந்தப் படைப்பின் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி உணர்வாலும், மனிதர்களாலும் சிக்கலாலும் அமைந்துள்ளது. போர் என்று நாமறியும் சித்திரம் ஊடகங்கள் அளித்தவை மட்டுமே. ஆனால் இந்தக் கதைகளின் வழியாக எழும் போர், வாசகரை நிலைகுலைய வைக்கிறது. அசலானதொரு குலப்பாடகனின் குரலில் இருந்து எழுந்தவை இந்தக் கதைகள்.
நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடான எனது “போதமும் காணாத போதம்” நூலின் அட்டைப்படம் இன்று வெளியானது. புதிய தலைமுறையின் திரைநாயகர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனது X தளத்தில் அதனை வெளியிட்டு வைத்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்திருந்தேன். பங்கேற்க முடியாத திரைப்பணி சார்ந்த நெருக்கடி. இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் போற்றக்கூடிய அரிதான திரையுலகத்தினரில் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் ஒருவர். மானுட விடுதலையை நேசிப்பவர். ஈழத்தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்துடனான “நள்ளிரா” எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் வெளியிட்டு வைத்தமையால் ஒரு பெருந்திரளிடம் சென்று சேர்ந்திருக்க கூடிய நூலின் அட்டைப்படமாக இது அமைந்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு என் நன்றி.
நூல்வனம் மணிகண்டன் அட்டைகளை வடிவமைப்பதில் ஒரு பொற்கொல்லனின் நுணுக்கத்தையும், பொறுமையையும் பேணக்கூடியவர். அவரிடமிருந்து உருவாக்கி வரக்கூடிய வடிவமைப்பு என்றைக்கும் சோரம் போனதில்லை. இந்த அட்டையும் அதில் சேர்மதி.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயமும் வெளியானதும் வாசித்துவிட்டு கும்பமுனியாய் கொந்தளித்து அனுப்பியவற்றின் சிறிய பகுதியை அட்டையில் சேர்த்திருக்கிறேன். அவருடைய தம்பீ என்ற விளிப்பு என் வாழ்நாளுக்கெல்லாம் மகத்துவம். இன்னொரு பக்கத்தில் கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் கவிதை வரிகளை சேர்த்திருக்கிறேன். நான் மூன்றாம் வகுப்பில் பாடித்திரியும் கவிதை. மகாகவி உருத்திரமூர்த்தி, கவிஞர் சேரனின் தந்தை.
அட்டை ஓவியம் கருப்பனுடையது. அவருடைய நிறத்தேர்வுதான் தனிரகம்.
மார்ச் மாதம் பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நூல் வெளியீட்டு விழா. ஏனைய விபரங்கள் நாளை வெளியாகும்.
எல்லோர்க்கும் நன்றி.
The post போதம் தருவது இலக்கியம் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

