கற்பனைத் தீவுகள்
புதிய குறுங்கதை
சட்டைப்பையில் வைத்துக் கொள்ளக்கூடிய பாக்கெட் நோட் ஒன்றை அவன் வைத்திருந்தான். அந்த நோட்டில் அவன் கேள்விப்படுகிற தீவுகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரைத் தீவு என்பது அவனது ஆறாவது விரலைப் போன்றது. வரைபடத்தில் காணும் போது எல்லாத் தீவுகளும் மேஜையில் சிந்திய மைத்துளி போலவே தோற்றமளிக்கின்றன.

அவனுக்குத் தீவின் பெயர்களைச் சேகரிப்பது பிடித்தமான வேலை. அவன் சந்திக்கும் பலரிடமும் அவர்கள் கேள்விப்பட்ட தீவுகளைப் பற்றி விசாரிப்பான். நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ, தொலைக்காட்சியிலோ தீவின் பெயரைக் காணும் போது ஆசையாகத் தனது பாக்கெட் நோட்டில் குறித்துக் கொள்வான். பெரிய தேசங்களை விடவும் சிறிய தீவுகளே வசீகரிக்கின்றன.
உண்மையில் சிறிய தீவுகளின் வரலாறு துயரமானது. ரத்தக்கறை படிந்தது. தீவின் மழையும் காற்றும் ரகசியங்களையும் தொல் நினைவுகளையும் எழுப்பக்கூடியது.
தீவு என்பது ஒரு பூனை. தோற்றத்தில் மட்டுமே அது மிருதுவானது. தேசத்திற்கு வயதாவது போலத் தீவுகளுக்கு வயதாவதில்லை. அல்லது வெளிப்படையாகத் தெரிவதில்லை. தீவின் பெயர்களைக் கொண்டே அது எப்படியிருக்கும் என அவன் கற்பனை செய்து கொள்வான்.
ஒவ்வொரு நாளும் இரவில் நோட்டிலிருந்த ஒரு தீவின் பெயரைத் தேர்வு செய்து அதைத் துண்டுப்பேப்பரில் எழுதி தனது தலையணைக்குள் வைத்துக் கொள்வான். கனவில் அந்தத் தீவிற்குப் போய்விடுவதாக நம்பினான்.
மனிதர்களே இல்லாத தீவுகளைப் பற்றி நிறையக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை எழுதியவர்கள் எந்தத் தீவிற்குப் போனவர்களில்லை. உலகில் பல்வேறு தண்டனை தீவுகள் இருந்தன. அங்கே குற்றவாளிகள் மட்டுமே வசித்தார்கள். ஒரேயொரு குரங்கு வசித்த தீவு ஒன்றைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். தீவு என்பதே விசித்திரத்தின் வெளி தான் போலும். உதட்டில் மச்சம் கொண்ட ஒரு பெண்ணைப் பேருந்தில் கண்ட போது அவள் உதட்டில் சிறிய தீவு முளைத்திருப்பதாகவே உணர்ந்தான்.
புதிய தீவுகளின் பெயர்கள் கிடைக்காமல் போகும் நாட்களில் அவனாக ஒரு பெயரை நோட்டில் எழுதிக் கொள்வான். அப்படி ஒரு தீவு அவனது கற்பனையில் உருவாவதை யார் தடுக்க முடியும். தானே உருவாக்கிய கற்பனைத் தீவுகளைப் பற்றிப் பிறரிடம் சொல்லும் போது அவர்கள் நம்பிவிடுவதையும், அங்கே விடுமுறைக்குப் போக விரும்புவதாகச் சொல்லும் போதும் அவன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனுக்கு உலகிலுள்ள எல்லாப் பெயர்களும் ஒரு தீவு தான் என்று தோன்றும்.
கடலின் நகங்கள் தான் தீவுகள் என்று சிறுவயதில் படித்திருக்கிறான். அப்படி நினைக்க இன்றும் பிடித்தேயிருந்தது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
