பெயரின் அருகில்
புதிய குறுங்கதை
அவரது கையில் குரூப் போட்டோ இருந்தது. சி.எஸ். ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் எடுத்தது. அதிலிருந்தவர்களின் பெயர்களை நினைவிற்குக் கொண்டு வர முயன்றார். ஐந்தாறு பெயர்களைத் தவிர வேறு நினைவில் இல்லை.

எழுபத்தியெட்டு வயதிலிருந்து கொண்டு ஆறாம் வகுப்பில் படித்தவர்களின் பெயர்களை நினைவு கொள்வது எளிதான என்ன. பெயர் மறைந்து போன வகுப்புத்தோழர்கள் உதிர்ந்த சிறகுகளைப் போலிருந்தார்கள். சிறகை வைத்து எந்தப் பறவை உதிர்த்தது எனக் கண்டுபிடிக்க முடியாதே. புகைப்படத்தில் உள்ள யார் யாரை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்பது புதிரானது.
மாணவர்களுக்கு நடுவில் மர நாற்காலியில் அமர்ந்திருந்த ஆறாம் வகுப்பு ஆசிரியர் கே.வி.ரஞ்சனியின் பெயர் மறக்கவேயில்லை. இவ்வளவிற்கும் அவரைப் பிடிக்கவே பிடிக்காது. பிடித்தவர்களின் பெயர்கள் வேகமாக மறந்துவிடுவதும் பிடிக்காதவர்களின் பெயர்கள் நீண்டகாலம் நினைவிலிருப்பதும் விநோதமில்லையா.
நினைவின் பெட்டகத்தில் நிறைய ஒட்டை விழுந்திருக்கின்றன. அதில் நழுவிப் போனவை ஏராளம். கைக்கட்டிய படி நிற்கும் தனது உருவத்தையும் ஹேர்ஸ்டைலையும் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது.
குரூப் போட்டோவில் அவரது அருகில் நின்றிருப்பது ஜெயமாலா. எவ்வளவு அழகாக இருக்கிறாள். அவள் சூடியிருந்த கனகாம்பரம் வாடவேயில்லை. அவள் தான் வகுப்பின் முதல் மாணவி. அவளது கையெழுத்து அத்தனை அழகாக இருக்கும். அவளது பக்கத்தில் நிற்கும் போது இளவெயிலில் நிற்பது போல இதமாக இருக்கும்.
போட்டோ எடுக்கும் நாளில் அவள் பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சி. முருகேசனை பின்னால் தள்ளிப் போகச் சொன்னார். அந்தக் கோபம் அவனது முகத்தில் உறைந்திருந்தது, புகைப்படத்தில் முருகேசன் ஓங்கி அடித்த ஆணி வளைந்து கொண்டிருப்பது போலிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் இறந்து போய்விட்டான் என்பதைக் கேள்விப்பட்டார். சிலரது மரணத்திற்குப் பின்பும் அவர்கள் கொண்டிருந்த கோபம் மறைவதில்லை போலும்.
இப்போது ஜெயமாலாவும் பாட்டியாகியிருப்பாள். ஒருவேளை இறந்தும் போயிருக்கலாம். ஆனால் இந்தப் புகைப்படத்தைக் காணும் போது அவளருகே ஒரு நிமிஷம் நிற்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.
ஜெயமாலா இப்போது எங்கேயிருப்பாள். மீண்டும் ஒரு முறை தன் அருகே வந்து நிற்பாளா. உலகம் ஏன் அபூர்வமான தருணங்களை இரண்டாம் முறை நிகழ அனுமதிப்பதில்லை. உதிர்ந்த இலை மரத்தைப் பார்த்து ஏங்குவதைப் போலப் புகைப்படத்தைப் பார்த்து ஏங்கினார். ஒரு முறைதான். ஒருமுறை மட்டும் தான் என்று முணுமுணுத்துக் கொண்டார்.
பின்பு ஏதோ யோசனை வந்தவரைப் போலச் சுவரின் ஒரு இடத்தில் ஜெயமாலா என்று எழுதினார். அதனருகில் போய் நின்று கொண்டார். தனது பேரன் விதார்த்தை அழைத்துத் தன்னை ஒரு போட்டோ எடுத்துத் தரும்படியாகச் செல்போனை நீட்டினார்.
அவன் வியப்போடு ஏன் தாத்தா சுவரை ஒட்டி நிக்குறே என்று கேட்டான்.
நீ போட்டோ எடு சொல்றேன் என்றார்.
அவன் நாலைந்து புகைப்படங்களை எடுத்துத் தந்தான். அதில் அவரருகே ஒரு பெயராக ஜெயமாலா இருந்தாள். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அது போதும் என்றே அவருக்குத் தோன்றியது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

