பெலிகோவின் குடை

ஆன்டன் செகாவின் “Man in a Case” சிறுகதையில் பெலிகோவ் என்றொரு ஆசிரியர் வருகிறார். அவர் பள்ளியில் கிரேக்க மொழி கற்பிக்கிறவர். வீட்டிலிருந்து எப்போது வெளியே புறப்பட்டாலும் கனத்த கோட்டும், குடையும் கலோஷேஸ். எனப்படும் காலணிகளைப் பாதுகாக்கும் நீண்ட உறையும் அணிந்து செல்வது அவரது வழக்கம்.

எவ்வளவு வெயில் அடித்தாலும் இதனைக் கைவிடமாட்டார். வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் பெலிகோவ். ஏதாவது வித்தியாசமாக நடந்தால், அதனால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்ற பயப்படுவார்.

வகுப்பறையில் கூச்சலிடும் மாணவர்களை அவரால் சகித்துக் கொள்ள முடியாது. பள்ளிக்கூடம் ஏன் இவ்வளவு கெட்டுப்போய்விட்டது என்று மெதுவான குரலில் புலம்பிக் கொள்வார்.

அவர் எப்போதும் கடந்த காலத்தைப் புகழ்ந்தார். அவர் கற்பிக்கும் கிரேக்க மொழி கூட அவரது குடையும் காலணியும் போன்று தன்னைப் பாதுகாப்பதாக நினைத்தார்.

பள்ளியில் சக ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் முறை, சமூக வெளியில் மக்கள் செயல்படும்விதம் குறித்த பயமும் கவலையும் அவரிடமிருந்தன.

தனது வீட்டின் ஜன்னல்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார். தன்னுடைய வீட்டிற்குத் திருடன் வந்துவிடக்கூடும் என்று பயப்படுவார். நத்தை அல்லது நண்டு போலத் தனது வசிப்பிடத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கவே பெலிகோவ் ஆசைப்பட்டார்.

உரக்கச் சிரிக்கும் பெண்களை அவருக்குப் பிடிக்காது. எந்த விதமான விதிமீறல். விலகலையும் அவரால் அனுமதிக்க முடியாது.ஆகவே அரசாங்கம் எதை அனுமதித்துள்ளது. எதை அனுமதிக்கவில்லை என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார். இதைப் பற்றிய அரசின் சுற்றறிக்கைகளை ஆழ்ந்து வாசித்து மனதில் வைத்திருப்பார்.

அவர் வாழும் நகரம் கூட அவரது பயத்தின் நீட்சியாக இருந்தது. சலிப்பூட்டும் வாழ்க்கையை நடத்தி வரும் பெலிகோவிடம் சில விசித்திரமான பழக்கங்கள் இருந்தன. பள்ளியில் வேலை செய்யும் சக ஆசிரியரின் முன்னால் வந்து அமர்ந்து, எதையோ கவனமாகப் பார்ப்பது போல் ஒரு மணி நேரம் அவரை உற்று நோக்கியிருந்து விட்டு அமைதியாகப் புறப்படுவார். இதற்குப் பெயர் ‘சகாக்களுடன் நல்லுறவைப் பேணுதல்’ என்பார். அவரது விசித்திரமான நடவடிக்கைகளைக் கண்டு ஆசிரியர்கள் பயந்தார்கள்.

நகரில் நடக்கும் நாடகம் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் நடத்தைகள் பற்றி அவருக்குக் கோபமிருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தேவாலயத்திற்குத் தாமதமாகச் செல்பவர்களைக் கண்டால் அவர் கலக்கமடைவார். கடிதங்கள் அனுப்பவோ, மற்றவர்களுக்கு உதவி செய்யவோ கூட அவர் பயந்தார். ஊர் மக்கள் தன்னைப் பற்றித் தவறாக நினைக்கலாம் என்ற பயத்தில் அவர் ஒரு வேலைக்காரியை வைத்துக் கொள்ளவில்லை.

இப்படிப் பாதுகாப்புச் சுவர்களுடன் நடமாடும் பெலிகோவ் எப்படி ஒரு பெண்ணை விரும்பினார் என்ற கதையைச் செகாவ் அழகாக விவரிக்கிறார்.

பெலிகோவின் பள்ளிக்குப் புதிதாக வரலாறு மற்றும் புவியியல் கற்பிக்கக் கோவலென்கோ என்ற ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். அவர் தனது சகோதரி வாரிங்காவுடன் அந்த ஊருக்கு வந்து சேருகிறார்.

முப்பது வயதான வாரிங்கா உற்சாகமானவள். சிறிய விஷயத்திற்குக் கூட சப்தம் போட்டுச் சிரிக்கக்கூடியவள். சந்தோஷம் அதிகமானால் நடனமாடுவாள். அவளுக்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது.

திருமண ஆசையே இல்லாத பெலிகோவ் அவளது உற்சாகத்தில் மயங்கினார். அவளைப் பெலிகோவ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் விரும்பினார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வதை நினைத்தால் அவருக்குக் கவலையும் மனச்சோர்வும் ஏற்பட்டது. ஆகவே வாரிங்காவிடம் திருமணத்தைப் பற்றிப் பேசவேயில்லை.

ஆரம்பம் முதலே கோவலென்கோவிற்குப் பெலிகோவைப் பிடிக்கவேயில்லை. அவரைச் சிலந்தி என்று கேலி செய்தான். தனது சகோதரிக்கு ஏற்றவர் இல்லை என்று நம்பினான்.

ஒரு நாள் அவர் வாரிங்காவுடன் வீதியில் நடந்து போவதைக் கண்ட குறும்புக்காரர்கள் அதைப் பற்றிக் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்து விடுகிறார்கள். இந்தச் சித்திரம் பெலிகோவ் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது

வாரிங்காவின் சகோதரன் கோவலென்கோவை தேடிச் சென்று உரையாடுகிறார். அவர்களுக்குள் வாக்குவாதமாகிறது. தடுமாறி கீழே விழும் அவரைக் கண்டு வாரிங்கா பலமாகச் சிரித்துவிடுகிறாள். அந்த அவமானத்தைப் பெலிகோவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரமாக வீடு திரும்புகிறார். இதனை அடுத்து அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி விடுகிறது.

இந்தக் கதையில் தனது அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் மனிதர்களின் அடையாளமாகப் பெலிகோவ்வை உருவாக்கியிருக்கிறார் செகாவ்.

நம்மைச் சுற்றி நிறையப் பெலிகோவ்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடில்லை.

வெளி உலகத்தைப் பற்றிய இந்தப் பயம் நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. பெலிகோவ் உண்மையில் ஒரு அனுதாபத்திற்குரிய கதாபாத்திரம். அவரது பயம் அனைவருக்குமானது. உணவு, உடை, உறவு, தொழில், அலுவலகம் என அனைத்திலும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். சிறிய மாறுதல்களைக் கூட ஏற்க மறுக்கிறோம்.

உண்மையில் நம்மைச் சுற்றி வாழும் பெலிகோவ்கள் நம்மைப் பாதிக்கிறார்கள். இதனால் புதிய விஷயங்களை உருவாக்கவும் ஏற்கவும் ஆராயவும் இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. பெலிகோவ்கள் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

இந்தக் கதையின் நினைவாகப் பெலிகோவிற்கு ரஷ்யாவில் சிலை வைத்திருக்கிறார்கள். சிலையாக அல்ல நேரடியாகவே தினமும் நாம் பல்வேறு பெலிகோவ்களைக் காணுகிறோம். கடந்து போகிறோம். இலக்கியம் தான் இவர்களை அடையாளப்படுத்துகிறது. புரிந்து கொள்ள வைக்கிறது. இதனால் தான் ஆன்டன் செகாவ் இன்றும் உலகின் சிறந்த சிறுகதையாசிரியராக் கொண்டாடப்படுகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2024 02:26
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.