தப்பிச் செல்லும் பயணம்

ஹென்றி வெர்னியூல் இயக்கிய The Cow and I 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரெஞ்சு-இத்தாலியத் திரைப்படம்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் பிடிக்கப்பட்டுப் பண்ணை வேலையில் ஈடுபடுத்தப்பட்ட சார்லஸ் பெய்லி என்ற போர்க்கைதி எப்படி அங்கிருந்து தப்பிப் பிரான்ஸ் செல்கிறான் என்பதையே படம் விவரிக்கிறது.

போர் கைதிகள் தப்பிச் செல்லுவதைப் பற்றி நிறையப் படங்கள் வந்துள்ளன. ஆனால் இப் படத்தின் சிறப்பு நாஜிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சார்லஸ் தன்னோடு ஒரு பசுவையும் அழைத்துக் கொண்டு போகிறான் என்பதே.

ராணுவத்தினர் வழியில் தடுத்து நிறுத்தினால் கூடப் பசுவோடு, கையில் பால்கறக்க வாளியோடு செல்லும் தன்னை விவசாயி என நினைத்து விட்டுவிடுவார்கள் என்று திட்டமிடுகிறான் சார்லஸ். பசுவுடன் தப்பிச் செல்லும் அவனது சாகசப் பயணம் வேடிக்கையானது.

ஐரோப்பியக் கிராமப்புறங்களில் சார்லஸ் மேற்கொள்ளும் இந்தப் பயணம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலியை அழைப்பது போல மார்க்ரெட் எனப் பசுவை அன்போடு அழைக்கிறான். வழி முழுவதும் அதனுடன் பேசுகிறான். தன்னைவிட்டுத் தப்பிவிடும் பசுவைக் கண்டிக்கிறான்.

வழிதவறி மரம்வெட்டும் பணியில் ஈடுபட்டு வரும் போர் கைதிகளுடன் கலந்து விடுகிறான். அங்கே அவன் சந்திக்கும் நபர்களும் நடைபெறும் நிகழ்வுகளும் நகைச்சுவையானவை.இன்னொரு இடத்தில் கைதிகளாக உள்ள ரஷ்யர்களைச் சந்திக்கிறான். அவர்களிடம் சைகை மொழியில் தனக்கு மாற்று உடை ஒன்றைக் கேட்கிறான். அதற்கு ஈடாக அவர்கள் பசுவைக் கேட்கிறார்கள். எதற்காகப் பசு எனப் புரியாமல் கேட்கும் போது அதைக் கொன்று தின்னப்போவதாகச் சொல்கிறார்கள். சார்லஸ் பசுவைத் தர மறுத்துவிடுகிறான்.

ஒரே தோற்றம் கொண்ட பசுக்களுக்குள் தனது மார்க்ரெட்டை கண்டுபிடிக்க அவன் படும்பாடு வேடிக்கையானது.

நாஜி படைப்பிரவினர் காட்டில் தங்கும் போது அவர்களிடமிருந்து உணவைத் திருட சார்லஸ் முயல்கிறான். அந்தக் காட்சியில் இரவெல்லாம் பசியோடு அவன் காத்திருக்கிறான். மழைபெய்கிறது. சகதியான நிலத்தில் தவழ்ந்து ரகசியமாக நுழைந்து உணவைத் திருடியும் விடுகிறான். ஆனால் கையில் கிடைத்ததைக் கண்ட போது அவன் அடையும் ஏமாற்றம் மிகவும் துயரமானது,

படத்தின் மிகச்சிறப்பான காட்சி பசுவோடு அவன் பாலத்தைக் கடந்து செல்வதாகும். குண்டுவீச்சில் சிதைந்த பாலத்தை இரவோடு இரவாக நாஜி ராணுவத்தினர் சீரமைத்துவிடுகிறார்கள். அந்தப் பாலத்தினைப் படைப்பிரிவு கடக்க முயலுகிறது. வழியில் பசுவோடு நிற்கும் அவனைக் கண்டதும் துரத்துகிறார்கள். பசுத் திரும்பிப் போக மறுக்கிறது. முடிவில் அவனையும் பசுவையும் ராணுவம் கடந்து செல்ல அனுமதிக்கிறார்கள். மறக்க முடியாத காட்சியது,

அது போலப் பயண வழியில் பிரான்ஸில் ராணுவ வீரனாக உள்ள ஒருவனின் வீட்டிற்குச் செல்கிறான். அங்கே அவனது சகோதரி மற்றும் அப்பா அம்மாவிற்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்கிறான். அவர்கள் வீட்டில் உருளைக்கிழங்கு சமைக்கிறான். ஒன்றாக அவர்கள் உணவு அருந்துகிறார்கள். விடைபெறும் போது அவன் பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி வாழ்த்துகிறார்கள்.

முடிவில் பிரான்ஸ் செல்லும் ரயிலில் கள்ளத்தனமாக ஏறிச் செல்லும் போது தண்டவாளத்தின் அருகில் பசு நிற்பதைக் காணுகிறான். . களங்கமின்மையின் அடையாளமாகப் பசுச் சுட்டிக்காட்டப்படுகிறது. அவனது நம்பிக்கை தான் பசுவாக மாறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

கிரேக்கப் புராணத்தில் ஐயோ என்ற பெண் கடவுள் ஜீயஸை காதலிக்கிறாள். தனது மனைவியின் கண்களிலிருந்து அவளை மறைப்பதற்காகப் பசுவாக மாற்றிவிடுகிறான் ஜீயஸ். காதலின் சின்னமாகப் பசு அந்தக் கதையில் குறிப்பிடப்படுகிறது. இலக்கியத்தில் பசு எப்போதும் தாய்மை, களங்கமின்மை மற்றும் பெருந்தன்மையின் சின்னமாகவே குறிப்பிடப்படுகிறது. இப்படத்திலும் அதே குறியீடு தொடர்கிறது.

சார்லஸ் பண்ணையிலிருந்து வெளியேறிப்போகும் போது தான் வைத்திருந்த மொழி கற்கும் புத்தகங்களை அங்கேயே விட்டுப் போகிறான். அவனிடம் ஒரேயொரு வரைபடமிருக்கிறது. அதை ஆழமாக மனதில் பதிய வைத்திருக்கிறான். பயண வழியில் அவன் சந்திக்கும் பிரச்சனைகளும் தடைகளும் அவனைக் கவலை கொள்ள வைப்பதில்லை. மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டு உற்சாகமாகத் தப்பிச் செல்கிறான்.

அடர்ந்த காட்டினையும் அழகிய நீர்நிலைகளையும் கடந்து செல்லும் போது அவற்றை ரசிக்கிறான். இளைப்பாறுகிறான். சார்லஸ் மரத்தோடு சாய்ந்து உறங்குவது அழகான காட்சி. கடைசி வரை அவன் மாட்டிக் கொள்ளக்கூடும் என்ற பதைபதைப்பைக் கொண்டு செல்கிறார்கள். பிரான்ஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் 2016ல் La Vache என ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பசுவை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு நிறைய நல்ல படங்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் Dariush Mehrjui இயக்கிய The Cow, One Man and His Cow என்ற பிரெஞ்சு படம். அமெரிக்கத் திரைப்படமான First Cow. 2009 ல் வெளியான சீனத்திரைப்படம் Cow போன்றவை சிறப்பானவை.

பிரெஞ்சு மொழி பேசுகிறவர்களை வழியில் சந்திக்கும் போது சார்லஸ் தனது சொந்த ஊரை அடைந்துவிட்டது போலவே உணருகிறான். மொழி தான் தேசத்தின் அடையாளம். அந்த மொழி நினைவுகளால் உருவானது. நினைவுகளே சார்லஸை வழிநடத்துகின்றன. அவனது பாக்கெட்டில் புகைப்படமாக உள்ள அவனது மனைவி அவனுக்காக ஊரில் காத்திருக்கிறாள். தூரத்து வெளிச்சம் போல அவளே நம்பிக்கை தருகிறாள். சார்லஸ் சில நெருக்கடிகளைச் சந்திக்கும் போது துறவியைப் போலவே நடந்து கொள்கிறான். இப்படத்தை விசித்திரமான காதல்கதை என்றே சினிமா விமர்சகர்கள் வகைப்படுத்துகிறார்கள். அது சரியானதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2024 23:01
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.