போதமும் காணாத போதம் – 11
இருண்டு கொட்டும் மழையில் வீட்டின் கதவு தட்டிக் கேட்டது. சிறிய கோடாக உடைந்திருந்த ஜன்னலில் கண் புதைத்துப் பார்த்த அம்மா, ரகசியமாய் சுதாகர் என்றாள். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் மூர்க்கமாக ஒலித்தது. என்னை அறைக்குள் போய் இருக்குமாறு கைகாட்டினாள். ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது?” “நான் தான் சுதாகர் கதவைத் திறவுங்கள்”. அம்மா கதவைத் திறந்தாள். நனைந்திருந்தவரிடம் பெரிய துவாயைக் கொடுத்தாள். சேர்ட்டைக் கழற்றி உடம்பைத் துடைத்தார். அணிந்திருந்த ஜீன்சை கழற்றுவதற்கு முன்பாக பிஸ்டலை வெளியே எடுத்து தண்ணீரை துடைத்தார். ஒரு சாறமும் சேர்ட்டும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னாள். சுடச்சுட இஞ்சி போட்டு ஒரு தேத்தண்ணி கொடுத்தாள். கொஞ்சம் இளைப்பாறிய பின் “இந்த நேரம் எதுக்கடா இஞ்ச வந்தனி” என்றாள். சின்னதொரு வேலையாய் ஊரெழு வரைக்கும் போய்ட்டு வந்தனான். கொஞ்சம் பிந்தீட்டுது. மழை வேற பேயாய் அடிக்குது. அதுதான் இஞ்ச வந்தனான்.” என்றார். “வேற எதுவும் திருகுதாளம் பண்ணிட்டு பாதுகாப்புத் தேடி இஞ்ச வரேல்ல தானே” அம்மா எச்சரிக்கையோடு கேட்டாள். அவர் கண்களைத் தாழ்த்தி தேத்தண்ணியைப் பார்த்தபடி ஆவி நுகர்ந்தார். பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி தைரியத்தை வரவழைத்திருப்பார் என்றே தோன்றுகிறது.
“அண்ணி, அப்பிடி ஒண்ட செய்திட்டு உங்களிட்ட வந்தாலும், நீங்களே என்னைச் சொல்லிக்குடுத்திடுவியள் தானே” சுதாகர் கேட்டார்.
“பின்ன, உங்களைப் பாதுகாத்து சனங்களுக்கு என்ன பயன்” அம்மா கேட்டதும் சுதாகருக்கு ஆத்திரமும் அடக்கமுடியாத அவமானமும் தோன்றியிருக்கலாம். உடனடியாக கதவைத் திறந்து வீட்டின் வெளியே போனார். மழையின் பேரிகை விடாது ஒலித்தது. திறந்திருந்த கதவின் வழியாக சாரல் புகுந்தது.
“எடேய், நீ உள்ள வாறதெண்டால் வா. இல்லாட்டி நான் கதவைச் சாத்தப் போறன்” அம்மா குரல் கொடுத்தாள். “இல்ல நான் வெளியேயே படுக்கிறேன், வெள்ளனவா எழும்பிப் போகிறேன்” என்றார்.
“அடிசக்கை, பெரிய ரோஷக்காரன்ர வீம்பு. இதில கொஞ்சம் ரோஷம் உண்மையா இருந்திருந்தால் ஆர்மிக்காரனோட சேர்ந்து பிள்ளையள சுட்டுத் தின்ன மனம் வராது” என்று சொல்லி கதவை அடித்துச் சாத்தினாள். மழையை மிஞ்சி கதவில் ஒலித்தது இடி.
அதிகாலையிலேயே எழுந்து சென்றுவிட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் சீவல் பாக்கு கொட்டுண்டு இருந்தது. அம்மா பூக்களை ஆய்ந்து வந்து அப்பாவின் படத்திற்கு வைத்தாள். நான் எழும்பி குளித்துமுடித்து படிக்க அமர்ந்தேன். முட்டைக் கோப்பியை அடித்து பொங்கச் செய்த அம்மாவின் முன்னேயே ஒரே மிடறில் அருந்தினேன்.
“இனிமேல் சுதாகர் வீட்டுக்கு வந்தால் அவனை அண்டக்கூடாது பெடியா” சொன்னாள் அம்மா.
“ஓம் அம்மா, ஆளைப்பார்க்கவே பயமாய் இருக்கிறது. தாடியும் தலைமுடியும். கண்ணெல்லாம் பாழிருட்டு. விடிவற்ற முகம்”
“இவங்களுக்கு எங்க விடியும். மாறி மாறி ஆக்களை காட்டிக் குடுக்கிறதும். கடத்திக் கொண்டே சுடுகிறதும் வேலையா வைச்சிருக்கிறாங்கள். உலகம் அழியிறதுக்கு முதல் இவங்களும் – இவங்களின்ர இயக்கமும் அழியவேணும்.”
“எங்கட இயக்கம் இவங்களை அழிக்காதோ”
“முந்தியொருகாலம் அதெல்லாம் செய்தவங்கள். இப்ப கொஞ்சம் யோசிக்கிறாங்கள் காட்டு யானை மாதிரி ஒருநாள் வெளிக்கிட்டால் எல்லாரையும் முறிச்சு எறிவாங்கள்” என்றாள் அம்மா.
பல வருடங்களுக்குப் பிறகு அதிசயமாக காந்தி மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அமைதிக்காலமென்றாலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் வருவதற்கு இயக்கம் எல்லாப் போராளிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. காந்தி மாமா வீட்டிற்கு வந்ததையடுத்து மீனும், கணவாயும் சமைத்தோம்.
“எப்பிடி மேலிடம் உனக்கு பெம்மிஷன் தந்தது. ஆச்சரியமாய் இருக்கு” கேட்டாள் அம்மா. “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் எண்டு சொல்றது இதைத்தான். பன்னிரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கிறன். இண்டைக்குத் தான் அனுமதி கிடைச்சது” என்றார். “நல்ல விஷயம். நாளைக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலுக்கு போவம். அங்க உனக்காக வைச்சவொரு நேர்த்தி செய்ய வேண்டியிருக்கு” என்றாள் அம்மா.
“எனக்காக என்ன நேர்த்தி வைச்சனியக்கா?”
“உன்ர அலகில ஐஞ்சடிக்கு வேல் குத்தி காவடி எடுக்கிறனென்டு ஒரு சின்ன நேத்தி” சொன்ன அம்மா கொடுப்புக்குள் சிரித்தாள். மாமா அதெல்லாம் ஒன்று பெரிய பிரச்சனை இல்லையென கண்ணைக் காட்டினார். காந்தி மாமாவின் இடது தோள்பட்டையில் விழுப்புண் தழும்பு மெழுகேறிக் கிடந்தது. எப்போதாவது அதனைத் தடவிக் கொள்கிறார். போராளி தனது விழுப்புண்ணின் தழும்பை தடவிப் பார்ப்பது எதனால்? அவர்களுக்கு ஏதோவொரு தியானத்தை அது வழங்குகிறதா? நினைவுகளை அது கொதிக்கச் செய்கிறதா? லட்சியத்தின் தீ வளர்க்க அந்த வருடல் அவசியமோ என்றெல்லாம் கேள்விகள் தோன்றின.
கோயில் செல்ல ஆயத்தமாகி காந்தி மாமாவும் நானும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தோம். அம்மா கதவைச் சாத்திவிட்டு “சரி வெளிக்கிடுவம்” என்றாள். வீதிக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தோம். கோவில் வரை செல்லும் பேருந்து வருவதற்கு தாமதம் ஆனது. ஓட்டோ பிடிச்சால் போய்ட்டு வந்திடலாமென்றார் மாமா. அதுக்கு குடுக்கிற காசில பத்து நாள் வீட்டுச் சீவியம் போக்கிடலாம் சும்மா இரு காந்தியென்றாள் அம்மா. பேருந்து முடக்கத்தை தாண்டி வருவதைக் கண்டதும் “அம்மன் எங்களைக் கைவிடாது. வாகனம் வந்திட்டு பாத்தியோ” என்று ஆனந்தித்தாள். காந்தி மாமா வேட்டி உடுத்தியிருந்தார். அகலக் கரை அவருக்கு பிடித்தமானது என்று அம்மா சுன்னாகத்தில் வாங்கிவந்தது. எடுப்பாக ஒரு தங்கச் சங்கிலி. அணிய மாட்டேனென்று எவ்வளவு சொல்லியும் அம்மா வேண்டிக் கேட்டதால் அணிந்தார். நெற்றி நிறைந்த திருநீற்று பட்டை.
“மாமா, வடிவான ஆள்தான் நீங்கள், இந்தியாவுக்கு போனால் விஜய்க்கு சகோதரனாய் நடிக்கலாம்”
“சிறுவா, உனக்கு இண்டைக்கு மாட்டு இறைச்சியில கொத்துரொட்டி வாங்கித்தரலாமெண்டு நினைச்சனான். அதை கட் பண்ணிட்டன்”
“மாமா, இப்ப நான் சொன்னதில என்ன பிழை.”
“நீ சொன்னது எல்லாமும் பிழை தான் சிறுவா” என்று எனது காதைத் திருகினார். நான் செல்லமாக பாவனையழுகையை எழுப்பினேன். அம்மா எங்களிருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
கோவிலை வந்தடைந்து மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அடுத்த மாதத்தில் ஒருநாளில் அபிஷேகத்திற்கு அம்மா திகதி கேட்டு வந்தாள். வன்னியில நீங்கள் எந்த இடமென்று ஐயர் மாமாவிடம் கேட்டார். உடனடியாக ஜெயபுரம் என்றார் மாமா. என்ன வேலை செய்கிறீர்கள் அடுத்த கேள்வி வந்ததும் தேங்காய் யாபாரம் என்று சொன்ன மாமாவைப் பார்த்தேன். எத்தனையோ ஆண்டுகாலம் தேங்காய் யாபாரம் செய்யும் சிவத்தான் மாமாவை விடவும் உடல் மொழியைக் கொண்டு வந்திருந்தார்.
“மாமா, உங்கள நான் விஜய்க்கு அண்ணாவாக நடிக்கலாமெண்டு சொன்னது பிழைதான். நீங்கள் சிவாஜிக்கு அண்ணா”
“என்ன தேங்காய் யாபாரியை வைச்சு சொல்லுறியோ”
“ம். அப்பிடியே சிவத்தான் மாமா மாதிரியெல்லெ நிண்டனியள்”
“பின்ன, இப்ப என்ர படையணி, இயக்கப்பெயர், தகட்டிலக்கம், ராங்க் எல்லாத்தையும் சொல்லவே முடியும்”
“அதுவும் சரிதான். ஆனால் ஐயர் உங்களை இயக்கமெண்டு கண்டுபிடிச்சிட்டார்”
“அதனால அற்புதமும் இல்லை. ஊழும் இல்லை. நான் அவரிட்ட அதை மறைக்கேல்ல. ஆனால் சொல்லவுமில்லை. அவ்வளவு தான்”
நாங்கள் வீட்டினை அடைந்தோம். நாளைக்கு நல்லூர் கோவிலுக்கு போகலாமென நானும் மாமாவும் முடிவு செய்திருந்தோம். அம்மா கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் இருண்டிருந்தது. மின்விளக்குகள் ஒளிர்ந்தன. புட்டும் பழைய மீன்குழம்பும் ருசி குழைத்துண்டோம். மாமாவின் கைக்குழையல். உருசையூறும் கணம். அம்மா சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தாள். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா உடைந்த ஜன்னல் வழியாக கண்களை ஒத்திப் பார்த்தாள். சுதாகரும் அவனது கூட்டாளி தாடி ஜெகனும். சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் தகவல் சொன்னாள். மாமாவை மறைந்திருக்குமாறு சொன்னேன். அவர் அடுப்படிக்குள்ளிருந்த புகைக்கூட்டிற்குள் பதுங்கினார். அங்கே அதற்கான நிரந்தர ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தோம். கதவைத் திறந்ததும் சுதாகர் உள்ளே வந்தார். அப்பாவின் புகைப்படம் முன்னே காய்ந்திருந்த பூக்களை விரல்களால் ஒவ்வொன்றாக தவர்த்திப் பார்த்துவிட்டு “அண்ணி, அண்டைக்கு நீங்கள் அப்பிடி கதைச்சிருக்க கூடாது. ஒரே கவலையாய் போயிற்றுது” என்றார்.
“பின்ன, நீங்கள் செய்யிற அநியாயத்த பார்த்துக் கொண்டு நாங்கள் ஐஸ்பழமே குடிக்கிறது. உங்களுக்கு கொலையெண்டால் கொப்புலுக்கி நாவல் பழம் தின்னுற மாதிரியெல்லே”
“இஞ்ச எல்லாருக்கும் அப்பிடித்தான். முதலில ஆர் கொப்பு உலுக்கிறது எண்டு தான் போட்டி. மிச்சப்படி எல்லாரும் அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடினம்”
“சுதாகர், உன்னை முந்தியொருக்கால் அவங்கள் சுட வெளிக்கிடேக்க மடிப்பிச்சை கேட்டு தப்ப வைச்சனான். இப்ப அப்பிடியெல்லாம் கருணை காட்ட மாட்டங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு எங்கையாவது வெளிநாட்டுக்கு வெளிக்கிடு.”
“அண்ணி, நீங்கள் வெருட்டுறத பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுது. நாங்களும் போராளிகள் தான். இந்த நாட்டோட விடுதலைக்காக போராடத்தான் ஆயுதமேந்தினாங்கள். சுட்டால் சுடட்டும். அதுக்காக இவையளுக்கு பயந்து ஒடேலுமோ”
“நீங்களும் போராளியள் எண்டு சொல்ல வெக்கமாய் இல்லையோடா, இல்ல கேக்கிறன். அரசாங்கம் தருகிற மாஜரின சனங்களின்ர பிணங்களில பூசி தின்னுறதெல்லாம் விடுதலைப் போராட்டம் இல்ல. விளங்குதா”
“நாங்கள் எந்த இயக்கத்துக்கும் பயப்பிடேல்ல. உண்மையா போராட விரும்பினாங்கள். ஆனால் இண்டைக்கு நானும் தாடி ஜெகனும் எங்கட அமைப்பில இருந்து விலகலாமெண்டு முடிவெடுத்திட்டம். ஆனால் எங்கள ரைகேர்ஸ் மன்னிக்க மாட்டாங்கள். அவங்களிட்ட நாங்கள் சரணடையவும் மாட்டம். எங்கட வாழ்க்கையும் நாங்களுமெண்டு இருப்பம்” என்றார்.
“இயக்கம் மன்னிக்காது எண்டு என்னால உறுதியாய் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் உடன விலகிடுங்கோ. அதை எப்பிடியாச்சும் இஞ்ச உள்ள அரசியல்துறை செயலகங்களுக்கு தெரியப்படுத்துங்கோ” என்றாள்
“இல்ல, அதுக்கான நேரமில்லை. நாங்கள் விலகப் போற தகவல் எங்கட அமைப்புக்குள்ள தெரிஞ்சு போச்சு. எங்கட லீடர் தோழருக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்” என்றார் சுதாகர்.
“தெரிஞ்சால் என்ன செய்வாங்கள். நீ அந்த பேப்பர்காரனை சுட்டுக்கொண்டது, எம்.பியை சுட்டுக்கொண்டது, மானவர் பேரவை பெடியனைச் சுட்டுக்கொண்டது மாதிரி உன்னையும் சுடுவாங்கள் அதுதானே. “விதை விதைத்தவன் வினை அறுப்பான்” எண்ட பழமொழி எல்லாத்துக்கும் பொருந்தும். சுதாகர் நான் சொல்றத கேள். இப்பவே ஏதேனும் ஒரு அரசியல்துறை பேஸ்ல போய் சரணடையுங்கோ. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு”
வீட்டின் முகப்பு வாசலில் வெள்ளை வேன் வந்து நின்றது. சுதாகர் அதைப் பார்த்து “அண்ணி, எங்கடை ஆக்கள் தேடி வந்திட்டாங்கள். என்னை காப்பாத்துங்கோ” என்று பயந்தடித்து அழுதார். தாடி ஜெகனுக்கு கால்கள் நடுங்கி கண்ணீரோடு மூத்திரமும் கழன்றது. அம்மா கதவை இறுகச் சாத்திவிட்டு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் கண்களைப் பதித்து வெளியே எத்தனை பேரெனப் பார்த்தாள். இருவர் மட்டுமே வந்திருந்தனர். ஒருவனுடைய வலது தோள்பட்டையில் ஏகே -47 ரக துவக்கு தொங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்டத் தொடங்கினார்கள். அம்மா கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். வெளியே நின்றவன் பெரிதாக “ ரைகேர்சுக்கு வாலாட்டுற வேஷை கதவைத் திறவடி. உன்ர சாமானில வெடி வைக்கிறன்” என்று கூச்சல் போட்டான்.
“காந்தி இஞ்ச ஒருக்கால் வா” அம்மா மெதுவாக குரல் கொடுத்தாள். புகைக்கூண்டுக்குள் பதுங்கியிருந்த புலி கதவருகே வந்தது. “படத்தட்டுக்குப் பின்னால ஒரு உப்பு பையிருக்கு அதுக்கு கீழே உள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வா” என்றாள். மாமாவிடம் கொண்டு வந்து கொடுத்தேன். பளபளக்கும் உலோகம். மாமா பிஸ்டலை ஏந்தி நின்றதும் இன்னும் வடிவு கூடியிருந்தார். சுதாகரும் தாடி ஜெகனும் விழிபிதுங்கி கீழே அமர்ந்திருந்தார்கள்.
ஒரு நாடகத்தின் தொடக்கம் போல திரைவிலக வசனம் தொடங்கிற்று. “ஆர் வந்திருக்கிறது” என்று கேட்டபடியே பதிலுக்கு நேரமளிக்காமல் கதவைத் திறந்தாள். மாமாவின் கையிலிருந்த உலோகத்திலிருந்து சத்தமற்று வெளிச்சம் மட்டுமே பாய்ந்தது. வாசலிலேயே ரத்தம் கொப்பளிக்க கிடந்த இரண்டு பிணங்களையும் அள்ளி ஏற்றிக் கொண்டு அதே வெள்ளை வேன் புறப்பட்டது. சுதாகரும் தாடி ஜெகனும் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தனர். காந்தி மாமா வாகனத்தை இயக்கினார்.
அம்மா ஓடிச்சென்று “காந்தி இவர்களை நீ எதுவும் செய்யக்கூடாது. அரசியல் துறையினரிடம் ஒப்படைத்து விடு” என்றாள்.
சரியென்று தலையசைத்தபடி மாமா புறப்பட்டார். அடுத்தநாள் காலையில் நான்கு பிணங்களைச் சுமந்த வெள்ளை வேன் ஒன்று வீதியின் நடுவே நின்றது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. சுற்றி நின்று பார்த்த சனங்கள் சுதாகரைப் பார்த்ததும் “ஓ…இவையளே பெடியள் கொஞ்சம் பிந்தினாலும், சரியாய் செய்து போடுவாங்கள்” என்றனர்.
வீட்டிற்கு வந்திருந்த மாமாவிடம் நீ அவர்களைச் சுட்டிருக்க கூடாது என்று கோபமாக கத்தினாள். இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொன்றார்கள் என்றார் மாமா. இரவு சாப்பிடும் போது கேட்டேன்.
“மாமா, அவர்களை நீங்கள் சுடேல்லையோ?”
“சிறுவா, மாமாவோட பேர் என்ன”
“காந்தி”
“மாமா, பொய் சொல்லுவேனா”
“இல்லை. ஆனால் சுடுவியள் தானே”
மாமா உறுதியாக ஓமென்று தலையசைத்தார்.
“காந்தி நீயே சுட்டனி” கேட்ட அம்மாவைப் பார்த்து, உறுதியாக இல்லையென்று தலையசைத்தார்.
சூரியனாய் தகிக்கும் ஒருபெரும் கனவின் நெடும்பயணத்தில் அஞ்சாமல் துஞ்சாமல் நிமிர்வின் குரலாக எதிரொலிக்கும் ஒவ்வொரு கணத்திலும் வரலாற்றின் கடைவாயில் துரோகக் குருதி வழிந்தது. கொப்பளித்தடங்கிய எரிமலையின் நாளங்களில் தீயின் உறைதல் திவலையாய்த் தேங்கின. பலிபீடத்தின் விளிம்பில் பதுங்கியமர்ந்த புலியின் கண்களில் “எவ்வளவு வலிமையானது தியாகம்” என்ற திருப்தி. கண்களைத் திறந்தபடி பாயில் படுத்திருந்த மாமாவுக்கு திருநீற்றை பூசிய அம்மா, “வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந் தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு” என்ற பதிகவரிகளை பாடிக்கொண்டே அருகில் அமர்ந்தாள். உறக்கத்தின் கிளைகள் மாமாவை அடர்ந்து மூடின. இதுவரை வஞ்சித்த இரவின் ஜன்னல் வழியாக காற்றுப் புகுந்தது. கருணையின் வளைவற்ற பாதையைப் போல நீட்டி நிமிர்ந்து ஆழ்ந்துறங்கிய மாமாவின் கைவிரல்களை முத்தமிட்டேன். எண்ணிறைந்த ஒளித்துளியுள் நினைவின் குளிராக எப்போதும் உள்ளது அன்றிரவு.
The post போதமும் காணாத போதம் – 11 first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

