வாழ்வின் அர்த்தம்.
மீ. சித்ரா ராஜம்
புத்தகம் : முறிந்த பாலம் ஆசிரியர் : தோர்ன்டன் ஒயில்டெர்
தமிழாக்கம் : ரா . நடராசன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 144

தோர்ன்டன் வைல்டரின் காலத்தை விஞ்சிய செவ்வியல் படைப்பான, “தி பிரிட்ஜ் ஆஃப் சான் லூயிஸ் ரே” யின் தமிழாக்கம் ‘ முறிந்த பாலம்’. என் ஆதர்ச எழுத்தாளர் எஸ்.ரா வின் பரிந்துரையின் பேரில் இப்புத்தகத்தை நான் படித்தேன்.
எந்த மொழியானாலும், இனமானாலும், காலகட்டமானாலும் மானுடத்தின் அடிப்படை பிரச்சனைகள், மனோவியல், அவை எழுப்பும் கேள்விகள் எல்லாம் ஒன்றுதான்.
மனித விதி மற்றும் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மானுடத்தின் ஆழமான நுணுக்கங்களை ஆராயும் ஒரு தலைசிறந்த இலக்கிய படைப்பு முறிந்த பாலம். 18 ஆம் நூற்றாண்டில் பெரு நாட்டின் பிண்ணனியில் அமைக்கப்பட்ட இந்த நாவல், சான் லூயிஸ் ரே பாலம் முறிந்த சோகத்துடன் தொடங்குகிறது.
வைல்டர் முறிந்த பாலத்தின் வழியாக 18 ஆம் நூற்றாண்டின் லிமா நகரத்தை முழுமையாக உயிர்ப்பிக்கிறார்.லிமா ஸ்பானிஷ் நாடகம் மற்றும் இலக்கியத்துடன் துடிப்பான நகரமாக இருக்கிறது.
கஸ்கோவையும் லிமாவையும் இணைக்கும் பாலம் முறிந்ததின் விளைவாக அதைக் கடக்கும் ஐந்து நபர்கள் இறந்து போகிறார்கள். துறவியான சகோதரர் ஜூனிபர், இந்த குறிப்பிட்ட மக்கள் மட்டும் ஏன் இத்தகைய விதியைச் சந்தித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள , விதியின் மர்மமான செயல்பாடுகளை அவிழ்ப்பதற்கானத் தேடலைத் தொடங்குகிறார்.
வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய ஒரு பரந்த தத்துவ விசாரணையை இப்புத்தகம் பிரதிபலிக்கிறது.
டோனா மரியா, டோனா கிளாரா, பெபிட்டா,பையோ மாமன் , எஸ்டெபன் , மான்யு வெல், கேப்டன் அல்வாரடோ, துறவியம்மா, பெரிச்சோல் போன்ற கவனமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம், வைல்டர் மனித இயல்பின் சிக்கலான அடுக்குகளை ஆராய்ந்து, அவர்களின் பாதிப்புகள், ஆசைகள், அன்பு மற்றும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறார்.
வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாதது போன்ற இவர்களின் மாய வாழ்க்கை எப்படி நுட்பமான மற்றும் ஆழமான வழிகளில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறார். வாழ்க்கையில் தனிப்பட்ட அர்த்தம் இல்லை, மற்றவர்களுடனான நமது தொடர்புகளில் மட்டுமே அர்த்தம் உள்ளது,நம் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இப்புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது. என்னில் நீடித்தத் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம்.
கதை ஒரு நேர் கோட்டில் தொடரவில்லை,முக்கியப் புள்ளியான பாலத்தைச் சுற்றி வட்டங்களில் சுழல்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் உள் உரையாடல்களின் வழியே கதை மாந்தர்கள் இணைக்கப்பட்டுள்ள உத்தி சிறப்பாக உள்ளது.
பெற்ற மகளான டோனா கிளாரா தாயின் அளவுக்கதிமான அன்பை வெறுக்கிறாள். அவளுக்கு டோனா மேரியா எழுதும் கடிதங்கள் நிராகரி கரிகப்பட்ட அன்பின் சாட்சியாக பொலிகின்றன.மகளின் அன்புக்காக ஏங்கும் டோனா மேரியா, பெண்கள் தம் தாய்மாரை விரும்புகின்ற விண்ணுலகத்தை தனக்கு அளிக்குமாறு கடவுளிடம் வேண்டி நின்றாள்.மகளுக்கு கடிதம் எழுதும் நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மது அருந்தி தன்னை மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் டோனாமேரியா.
தன் மகள் கர்ப்பமுற்றிருக்கிறாள் என அறிந்து கிளக்கம்பக்குவா நகரத்துக்கு புனித யாத்திரை போகிறாள்.தனக்கு உதவிகரமாக இருக்கும் சிறுமி பெப்பிட்டாவின் தன்னை வளர்த்த டெல்பிலார் அம்மையாருக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்து அதில் உள்ள உள்ளார்ந்த போலித்தனமற்ற அன்பை தரிசித்து மனம் மாறுகிறாள்.அடுத்த இரண்டு நாட்களில் கிளக்சம்பக்குவாவில் இருந்து லிமா நகருக்கு திரும்பும் சமயத்தில் தான் பாலம் உடைந்து இருவரும் மரணித்துப் போகிறார்கள்.
மான்யுவெல்லும் எஸ்தெபனும் ரெட்டையர்கள். தாய் தந்தை இல்லாதவர்கள். இருவருக்கும் இடையே பேசாமலேயே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அலாதியான பிணைப்பு இருக்கிறது .மான்யுவெல் பெரிச்சோல் என்னும் நாடகமாது மேல் ஈர்ப்புக் கொள்கிறான் .இது தன்னையும் மான்யு வெல்லையும் பிரித்து விடும் என்று எஸ்தபென் வருத்தமுறுகிறான்.மான்யுவெல் அடிபட்டு சிகிச்சை பெறும் அரை மயக்க நிலையில் அவன் மனம் எஸ்தபனுக்கும் பெரிச்சோலுக்கும் இடையே அல்லாடுவதையும் அவன் உதிர்க்கும் வார்த்தைகள் எஸ்தபெனைக் காயப்படுத்துவதையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர். தன்னை விட்டு வெகு தூரம் சென்று விடுவானோ என அஞ்சி மான்யுவெல் எஸ்தபனைப் பிடித்து அணைத்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறான். தமையனுக்காக பெரிச்சோலை வர சொல்லலாமா அதனால் அவன் மனம் சாந்தமடையுமா என்று எண்ணுகிறான் எஸ்த பென்.குணமடையாமல் மான்யுவெல் இறந்துவிட மனப்பிறழ்ச்சியுறுகிறான் எஸ்தபன். எல்லோரிடத்திலும் தன்னை மான்யுவெல் ஆகவே வெளிக்காட்டி கொள்கிறான் . தங்கள் மீது அன்பாயிருந்த அல்வராடோ மாலுமியிடம் மட்டும் தன் பெயரைச் சொல்கிறான்.அவருடன் லிமாவிற்கு கிளம்பிப் போகும் போது பாலம் விழுந்து இறந்து போகிறான்.
என்னை மிகவும் பாதித்த கதை இது. காதலைக் கொண்டாடும் கதைகளுக்கு இடையில் இரு சகோதரர்களுக்கான அன்பை , அவர்கள் பிறர் அன்பிற்காக ஏங்குவதை, தமக்கு கிட்டாத அன்பை அவர்கள் பிறர் மீது காட்டுவதை , தம்மை வளர்த்த தலைமை துறவி அம்மையின் இழப்பை புரிந்து கொள்ளும் நல்மனதை, தற்கொலைக்கு முயலும் வலியை, தமையனை இழந்து இரவு தூங்கவே முடியாமல் ,உழைப்பின் மூலமாக தன்னை கரைத்து கொள்ள முயலும் தவிப்பை என இக்கதை நுட்பமாய் விவரிப்பது ஏராளம்.நான் தனியாக இருக்கிறேன் தனியாக இருக்கிறேன் தனியாக இருக்கிறேன் என்ற எஸ்தபனின் அலறல் என் காதுகளில் ஒலிக்கிறது. நம்மை நாமே கொல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். நமக்கு அக் காரியம் செய்ய அனுமதி கிடையாது . ஆனால் தீப்பிடித்து எரிகிற வீட்டில் குதித்தால் அது தற்கொலையாகாது என்று தன் தமையன் இறந்தபின் பிறரை காப்பாற்றும் போர்வையில் தற்கொலைக்கும் முயல்கிறான் எஸ்த பென்.கண் பூக்காமல் , மனம் கனக்காமல் இக்கதையைக் கடக்க முடியவில்லை. ஒரு அமைதியையும் அமைதியின்மையையும் ஒருங்கே தந்த சித்தரிப்பு இது.
பையோ மாமனுக்கும் பெரிச்சோலுக்குமான உறவு விசித்திரமானது. கலைகள் இடத்து மாறாத பற்று கொண்ட பயோ மாமன் நாடகக் கணிகை பெரிச்சோலின் புறக்கணிப்பையும் மீறி அவளிடம் மிகுந்த அன்பு கொண்டிருக்கிறான்.அவளுடைய மகனான நோய்வாய்பட்ட டான் ஜெய்மியை வளர்க்கும் பொறுப்பை ஏற்று லிமா நகரத்திற்குச் செல்லும் வழியில் பாலம் உடைந்து இருவரும் இறந்து போகிறார்கள்.
ஆறு வருடங்கள் ஆராய்ந்து ஜூனிப்பர் துறவி வெளியிட்ட புத்தகம் மதவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு புத்தகத்தோடு எரிக்கப்படுகிறார். இவர்கள் எல்லோருடைய மரணமுமே அவரவர்களுக்கான விடுதலை என்பதை நம்மால் உணர முடிகிறது.
தப்பிப்பிழைத்து இழப்பின் துக்கங்களை உணரும் கதாபாத்திரங்கள் அழுத்தமானவை. அவர்களின் ஆழமான மனமாற்றத்தின் தருணங்களை புரிந்து கொள்ள முடிகிறது.டோனா கிளாரா தன் தாயின் அன்பை உணர்கிறாள். பெரிச்சோல் பையோ மாமனின் மாசற்ற அன்பை நினைத்து வருந்துகிறாள். துறவியம்மை பெபிட்டாவையும் எஸ்த பெனையும் நினைக்கிறாள். ஒருவர் மீதுள்ள வெறுப்போ, காட்டப்படாத அன்போ அவர்களின் மரணத்திற்கு பிறகு பேரன்பாக மாறி இருப்போரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. இது நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும், பிறர் நம்மை நடத்தும் விதத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டியதின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறது.
விரைவில் நாம் பூமியை விட்டு வெளியேறிவிடுவோம் சிறிது நேரம் நேசிக்கப்படுவோம், மறக்கப்படுவோம். ஆனால் அன்பு போதுமானதாக இருந்திருக்கும். வாழ்வோரின் உலகத்திற்கும் இறந்தவர்களின் உலகத்திற்கும் இணைப்பு பாலம் அன்பு மட்டுமே. வாழ்வின் பொருளே அன்பு தான் என்ற துறவியம்மையின் கூற்றோடு இக்கதை நிறைகிறது. வாழ்க்கை மற்றும் இறப்பு, விதியின் கணிக்க முடியாத தன்மை மற்றும் சுதந்திர விருப்பத்தின் (Free Will) அடிப்படை கேள்விகள் , மனிதஅனுபவத்தின் விவரிக்க முடியாத தன்மை ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்க வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது இப்புத்தகம். வைல்டரின் நேர்த்தியான உரைநடை, மற்றும் கவிதையான விவரிப்பு மானுடத்தைப் பிணைக்கும் சிக்கலான இணைப்புகளின் ஓவியத்தை வாசகர்களையே வரையத் தூண்டுகிறது.இரக்கம், பச்சாதாபம் , அன்பு மற்றும் மற்றவர்களுடன் நாம் வளர்க்கும் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் இந்த இணைப்புகள் நாம் ஆரம்பத்தில் உணர்வது போல் இல்லாமல் ஆழமாக இருக்கிறது.அன்பு, இழப்பு மற்றும் விதி ஒன்றாக இணைந்த வாழ்க்கையின் சிக்கலான திரைச்சீலையைப் மெதுவாக அகற்றி நம் அகத்தைத் திறக்கிறது.
நம் வாழ்க்கையை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தனிப்பட்டதாகவும் உணரும் நாம் உண்மையில், ஒருபோதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத வழிகளில் மற்றவர்களுடன் இணைந்திருக்கிறோம் என்ற உண்மையை மலர்த்துகிறது.
நமது பயணத்தை வழிநடத்தும் புள்ளியை நோக்கிய தேடலுக்கும், வாழ்க்கை மற்றும் உறவுகளின் உள் அர்த்தங்களை உணர்வதற்கும், உள்ளார்ந்த சுய பிரதிபலிப்புக்கும் தூண்டும் மகத்தான படைப்பு.
நன்றி : வாசிப்பை நேசிப்போம்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
