சொல் தரும் வெளிச்சம்
கனடாவில் வசிக்கும் நாடகக் கலைஞர், கல்வியாளர், க. நவம் 54 ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து எனினும் நான் எழுகின்றேன் என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.

இந்தக் கவிதைகளின் பொதுத்தன்மையாக இருப்பது சுதந்திர வேட்கையும் சமாதானத்திற்கான குரலுமாகும். லாங்ஸ்ரன் ஹியூஸ் துவங்கி யாங் வான் லி வரையான சிறந்த கவிஞர்களின் முக்கியக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்வது மிகவும் சவாலானது. கவிதையில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை அளிக்கிறது. அதற்கு நிகரான தமிழ்சொல்லைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.
நவம் கவிதைகளை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். புலம் பெயர்ந்து வாழுபவர் என்பதால் வாழ்வின் துயரை, வலிகளை வெளிப்படுத்தும் கவிதைகளையே அதிகம் தேர்வு செய்திருக்கிறார். ஆயினும் அந்தக் கவிதைகளில் மாற்றத்திற்கான நம்பிக்கையும் புது வெளிச்சமும் காணக்கிடைக்கின்றன.

May Mad March days
bring a change of fortune
என்ற கவிதை வரிகளை நவம் இப்படி மொழிபெயர்க்கிறார்
மனம் பிசகிய மார்ச் மாதநாட்கள்
சிலருக்கு
அதிர்ஷ்டத்தைத் தரக்கூடும்
எவ்வளவு அழகாக மனம்பிசகிய என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார் பாருங்கள். மொழிபெயர்ப்பை வியக்கும் அதே தருணத்தில் தமிழ்மொழி எவ்வளவு நுண்மையான சொற்களைக் கொண்டிருக்கிறது என்றும் வியந்து போனேன்.
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை நெயோமி ஷிஹப் நைமி எழுதியது
அராபியர்கள் சொல்வார்கள்
அந்நியன் ஒருவன்
உங்கள் வாசலில் தோன்றுகையில்
அவனுக்கு மூன்று நாள் உணவூட்டுங்கள்
அவன் யாரெனவும்
எங்கிருந்து வருகிறானெனவும்
எங்குச் செல்கிறானெனவும் வினவும் முன்னர்.
அப்போது தான்
அவன் விடையளிக்க
போதுமான தெம்பு பெறுவான்
அல்லது
அதற்குள் நீங்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிடுவீர்கள்
அதனைப் பொருட்படுத்தாத அளவுக்கு,
நாம் அதற்கே திரும்பிப் போவோம்
சோறா ? பைன் மர விதையா ?
இதோ
செஞ்சரிகைப் பட்டுத் தலையணையை எடுத்துக் கொள்
என் பிள்ளை உனது குதிரைக்குத்
தண்ணீர் பரிமாறுவான்
••
இந்தக் கவிதை விவரிக்கும் நட்புணர்வும் அன்பும் நம் காலத்திற்குத் தேவையானது. மூலத்திற்கு மிக நெருக்கமாக, அதே கவித்துவ மொழியோடு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
Strength என்ற சொல்லுக்கு வலிமை வலு, சக்தி, பலம். என்று பல்வேறு பொருள் தருகிறது அகராதி. நவம் கவிதைக்குப் பொருத்தமாகத் தெம்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அவருக்குள் ஒரு கவிஞன் இருப்பதன் அடையாளமாகவே இந்த மொழிபெயர்ப்பைக் காணுகிறேன்.
நூலை மிகவும் அழகாகத் தயாரித்திருக்கிறார்கள் . நான்காவது பரிமாணம் இதனை வெளியிட்டிருக்கிறது. கவிதைகளின் ஆங்கில மூலத்தையும் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது.
சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்து நேர்த்தியாக மொழியாக்கம் செய்துள்ள நவத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
