புது வெள்ளம்- பிரபு மயிலாடுதுறை

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

டிசம்பர் 17,18 ஆகிய இரு தேதிகளும் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.  கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிசம்பர் கடைசி வாரம் நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டு வருகிறேன்.

தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து வருகை புரியும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுக்கும் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று சொல்கிறார்கள். வட இந்திய – வட கிழக்கு இந்திய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை தமிழ் வாசகர்கள் வாசித்து விட்டு அவர்கள் படைப்புகளின் நுட்பங்களைச் சுட்டிக் காட்டி உரையாடும் போது – வினா எழுப்பும் போது அவர்கள் அடையும் உவகை என்பது மிகப் பெரியது.

நமது மரபில் 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை எனக் கருதும் வழக்கம் உண்டு. இந்த விருது அளிக்கத் துவங்கிய போது எட்டு வயது சிறுவனாக இருந்த ஒருவன் இப்போது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து பொருளீட்டும் நிலைக்கு வந்திருப்பான். அவ்வாறான இளைஞர்கள் பலரை இந்த ஆண்டு காண முடிந்தது. இத்தனை இளைஞர்களும் ஆர்வமாக தமிழ் வாசிக்கிறார்கள் என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு அம்சம்.

நிகழ்ச்சிகளுக்கு இடையில் இருக்கும் இடைவேளைகளில் வாசகர்கள் படைப்பாளிகள் எனப் பலருடன் உரையாடக் கிடைக்கும் வாய்ப்பு என்பது தமிழ்ச்சூழலில் அரிதானது. இந்த ஆண்டு நான் சந்தித்த பலரில் மூவரைக் குறித்து பதிவு செய்யலாம் என நினைக்கிறேன். மூவருமே இளைஞர்கள்.

ஒருவர் திருக்கோஷ்டியூர் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர். பட்டப்படிப்பு படித்து விட்டு சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கு தயார் செய்து வருகிறார். பிரிலிமினரி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து விட்டு மெயின் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கிறார்.  உ.வே.சா குடந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது அதே கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த ம.வீ. ராமானுஜாச்சாரின் ‘’ஸ்ரீ மகாபாரத பர்வங்கள்’’ நூலை முழுமையாக வாசித்திருப்பதாகச் சொன்னார். சாந்தி பர்வத்தில் இன்னும் சில பக்கங்கள் மட்டுமே உள்ளன. ஓரிரு வாரத்தில் அந்த காவியத்தை வாசித்து நிறைவு செய்வேன் என சொன்னார். தமிழின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று அந்த மொழிபெயர்ப்பு. தன் வாழ்நாள் முழுதும் அந்த பணிக்காக அர்ப்பணித்து தனது சக்திக்கு அப்பாற்பட்ட பெரும் பொருள் செலவழித்து பெரும் இடர்களுக்குள்ளாகி ‘’ஸ்ரீ மகாபாரத பர்வங்கள்’’ நூலை மொழிபெயர்ப்பு செய்து கொண்டு வந்தவர் ம.வீ. ராமானுஜாச்சார். என்றும் தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்துக்குரியவர்.

இன்னொரு இளைஞர் சென்னையைச் சேர்ந்தவர். கம்ப ராமாயண வாசிப்புக்காக ஒரு வாசிப்பு குழுவை உருவாக்கியிருக்கிறார். வாரத்துக்கு மூன்று நாட்கள் அந்த குழு இணையம் மூலம் சந்திக்கிறது. அந்த குழுவில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் வாச்கர்களுடன் சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் வசிக்கும் தமிழ் வாசகர்களும் இருப்பதாகச் சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஒரு காண்டம் நிறைவு பெற்றதும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முழு காண்டத்தையும் ‘’முற்றோதல்’’ செய்கிறோம் என்று சொன்னார். அதில் இசைத்தன்மை கொண்ட கம்பன் பாடல்களைப் பாடுவதும் உண்டு என்று கூறினார். பத்தாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்துக்காக ஒரு இளைஞர் இத்தனை ஆர்வத்துடனும் தீவிரத்துடனும் செயலாற்றுவது என்பது மகத்தானது. குழுவில் உற்சாகமாகப் பங்கு பெறும் உலகின் பல பகுதிகளில் வசிக்கும் கம்பனின் வாசகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மூன்றாவது இளைஞர் ஒரு கடலோர கிராமத்தில் வசிப்பவர். ஐந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துடன் பரிச்சயம் கொண்டிருக்கிறார். கணிசமான அளவு நவீன தமிழ் இலக்கிய நாவல்களையும் அ-புனைவுகளையும் வாசித்திருக்கிறார். தனது பாட்டனாருக்கு கடலில் ஏற்பட்ட – கடலுடன் ஏற்பட்ட  அனுபவம் ஒன்றைக் குறித்து என்னிடம் மிகத் தீவிரமாகக் கூறிக் கொண்டிருந்தார். என்னிடம் அவர் தெரிவித்த அந்த விஷயத்தை ஒரு குறுநாவலாக எழுதும் படி சொன்னேன். அவர் என்னிடம் சொன்ன விஷயம் ஒரு குறுநாவலுக்குரிய உள்ளட்க்கம் கொண்டது. அதனை நிச்சயம் ஒரு குறுநாவலாக எழுத முடியும். நான் கூறியதைக் கேட்டதும் மிகவும் உணர்ச்சிகரமாகி விட்டார். விரைவில் எழுதத் தொடங்குகிறேன் என்று என்னிடம் உறுதி அளித்தார்.

ஆடி மாதத்தில் காவிரியில் பொங்கி வரும் புதுவெள்ளம் போன்றவர்கள் இந்த மூன்று இளைஞர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாதித்திருப்பது என்ன என்ற வினாவுக்கு விடையாக விளங்கக் கூடியவர்கள்.

பிரபு மயிலாடுதுறை

புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்- பார்க்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.