என்றேனும் ஒரு நாள்…

நிமிர்பவர்களின் உலகம்

ஜெ,

அருஞ்சொல் பேட்டியை கண்டேன். அதனுடன் இணைந்த சர்ச்சைகளையும் கண்டேன். அதில் நீங்கள் சொன்ன ஒரு வரிதான் இங்கே உபிக்களின் பிரச்சினை. அதை விவாதமாக ஆக்கக்கூடாது என்றுதான் அபத்தமாக அறைக்கலன் சர்ச்சையை உருவாக்குகிறார்கள்.

என் கேள்வி இதுதான். அந்த இடத்தில் அப்படி நீங்கள் சொல்வதற்கு என்ன காரணம்? அது பொருத்தமானதுதானா? அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், ஸ்போர்ட்ஸ் நட்சத்திரங்கள் என எல்லாரும்தான் எப்படியோ விக்கிப்பீடியா என்ட்ரியாக ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிலைகளும் நினைவுச்சின்னங்களும் உள்ளன. காலத்தில் எவர் நிலைகொள்வார் என எவருக்கு தெரியும்? உங்கள் முதன்மையை நீங்கள் ஏன் அங்கே முன்வைத்தீர்கள்? 

பிகு, நானும் சீண்டலாகவே கேட்கிறேன். மு.க பற்றிச் சொன்னீர்கள். மோடி பற்றி அதைச் சொல்வீர்களா? (இதை ஒரு பின்னூட்டமாக எவரோ இட்டிருந்தார்கள்)

பிரபாகர் ராம்

***

அன்புள்ள பிரபாகர்,

நான் ‘திட்டமிட்டு’ ஒன்றைச் சொல்வதில்லை. முடிந்தவரை தன்னியல்பாக, நா மீது கட்டுப்பாடில்லாமல் இருப்போமே என்பதுதான் எழுதவந்த காலம் முதல் என் கொள்கை. எழுத்தாளனின் கடமை என்பதே அப்படி தன் அகத்தின் ஓட்டத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல்தான் என நினைக்கிறேன். தவறோ, சரியோ அவன் வெளிப்பாடு கொள்வதே முக்கியம். அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியதுதான்.

அந்த அரங்கில் அதைச் சொன்னமைக்குக் காரணம் என இப்போது இப்படி தோன்றுகிறது. இந்தியா இன்னும் ஒரு நவீன நாடு அல்ல. இது பழைய நிலவுடைமைக்கால மனநிலைகள் பொதுச்சூழலில் அப்படியே நீடிக்கும் நாடு. மன்னர் வழிபாடு, அதிகார வழிபாடு இங்கே பொதுமக்களை மட்டுமல்ல படித்தவர்களையும்கூட ஆட்டிப்படைக்கிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் முன் இங்கே நம் பொதுமக்களின் எல்லா தரப்பினரும் காட்டும் அடிதொழுதலும் துதிபாடலும் நாகரீக நாடுகள் எவற்றிலும் காணப்படாதவை. இந்த அடிதொழுதலுக்கு எதிரான எந்த சிந்தனையும் இங்கே பொதுவெளியில் முன்வைக்கப்படுவதில்லை.

அதிகாரத்தையும் அதைக் கையாளும் அரசியலாளர்களையும் கூசக்கூச புகழ்வதும், கண்ணீர்மல்கப் பணிவதும் இங்கே எழுத்தாளர்களிடம்கூட காணக்கிடைக்கிறது. 2003 ல் நான் சுட்டிக்காட்டி பெரிய விவாதமாக ஆனது இது. இன்று சமூக ஊடகச்சூழலில் எழுத்தாளர்களிடம் அந்த மனநிலை பலமடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த புகழ்பாடல்களும் அடிவிழுதலும் எப்படியோ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்லும் என்றும், விளைவாக சில தனிப்பட்ட லாபங்கள் கிடைக்கலாம் என்றும் நம்புகிறார்கள். இணையவெளியில் அடிதொழும் பாமரக்  கூட்டம் பெரிது என்பதனால் அதனுடன் சேர்ந்துகொள்ளும்போது ஒரு கும்பலைத் திரட்டிக்கொள்ளும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. எழுத்தினூடாக வாசகர்களை ஈட்டிக்கொள்ள முடியாதவர்களின் ஒரு வகை சபலம் இது.

உலகம் முழுக்க சிந்திப்பவர்களின் வழி என்பது அதிகாரத்திற்கு எதிரானதுதான். அதுவே ஜனநாயகத்தின் செயல்முறை. இங்கே அந்த உளநிலைகள் தொடங்கப்படவே இல்லை.  இங்கே அதிகாரத்தின் ஏதேனும் ஒரு தரப்பைச் சார்ந்து கட்சிகட்டிக்கொண்டிருப்பதே அரசியல் நடவடிக்கை என கருதப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அதிகாரத் தரப்புகளுக்கு அப்பால் நின்று செயல்படும்  அரசியலே உண்மையான ஜனநாயகப் பணி. சிற்றரசியல் (Micro Politics) என அதை நான் அழைப்பேன். அத்தகைய அரசியலைச் செய்யும் அனைவரையும், ஒருவர் கூட விடாமல், இந்த முப்பதாண்டுகளில் ஆதரித்து எழுதி வருகிறேன்.

இந்தியச் சூழலில் அறவே இல்லாமலிருப்பது அறிவுவழிபாடுதான். நேற்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, நான் சொல்வன ஏன் விவாதமாகின்றன என்று. என் பதில் இது. நான் சொல்வன சாதாரணமான கருத்துக்கள்தான். ஆனால் அவற்றை ஓர் எழுத்தாளன் சொல்வது இங்குள்ள சாமானியர்களை துணுக்குறச் செய்கிறது. சாமானியர்களுக்குச் சமானமான அறிவுத்தகுதி கொண்ட எழுத்தாளர்களை எரிச்சலடைய வைக்கிறது. ஓர் அரசியல்வாதி, ஒரு அதிகாரி அதைச் சொன்னால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

ஒவ்வொரு முறை ஒரு கருத்து விவாதமாக ஆகும்போதும் எழுந்து வரும் குரல்களைக் கவனியுங்கள். ‘இவர் யார் இதைச் சொல்ல?’ என்கிறார்க்ள். தமிழ்ச்சூழல் எனக்கல்ல, அறிவுச்செயல்பாட்டிலுள்ள எவருக்கும் அந்த தகுதி உண்டென நினைக்கவில்லை. அந்த கேள்வியை புதுமைப்பித்தனிடம் ராஜாஜி கேட்டார். ஜெயகாந்தனிடம் கேட்டார்கள். இப்போதும் கேட்கிறார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் இங்கே எழுத்தாளன் கருத்து சொல்லும்போது துணுக்குற்று அதை பற்றி கூச்சலிடுகிறார்கள். அதுவே விவாதம் எனப்படுகிறது. இங்கே எவர் எந்த எழுத்தாளரை எதன்பொருட்டு வசைபாடினாலும் உடனே சிலநூறுபேர் சென்று கூடி கொண்டாடுவதை கவனியுங்கள். அந்த மனநிலையின் நீட்சியே இவ்விவாதங்கள்.

கவனியுங்கள். இங்கே அரசியல்வாதிகளுக்கு நாளும்பொழுதும் கூசக்கூச புகழ்மொழிகளை சொல்வது எவருக்கும் பிரச்சினை இல்லை. அந்த புகழ்மொழிகளை தாங்களும் தொண்டை புடைக்கக் கூவும் அதே கும்பல், ஓர் அரசியல்வாதியின் பெயரை உச்சரிப்பதே அபச்சாரம் என நினைக்கும் அதே கூட்டம், ஓர் எழுத்தாளனை அவன் வாசகர் சிலர் பாராட்டினால் எரிச்சலடைகிறது. ஓர் எழுத்தாளன் தன் வாசகர்கள் மற்றும் நண்பர்களுடன் எதையேனும் செய்ய ஆரம்பித்தால் ‘அடிப்பொடிகள்’ என வசைபாடுகிறார்கள். ஏனென்றால் ஓர் எழுத்தாளனுக்கு அப்படி ஒரு ஏற்பு அமைவதை அவர்களால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் எழுத்தாளனின் இடம் மிகமிகச் சிறியது.

இச்சூழலில்தான் அதைச் சொல்கிறேன். இன்றல்ல, 1991ல் ஒரு பேட்டியிலேயே இதை இப்படியே சொல்லியிருக்கிறேன். அறிவுவழிபாட்டுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு சமூகத்தை நோக்கி அறிவு வழிபடற்குரியது என்று சொல்வதுதான் அது. அறிவுவழிபாடே ஐரோப்பாவின் ஆன்மபலம். அதன் ஒரு தொடக்கமேனும் எதிர்காலத்தில் நம் சமூகத்தில் உருவாகவேண்டும் என்பதற்கான முன்னெடுப்பே அது. இதுவே என் வாழ்க்கையென இதுகாறும் உள்ளது. பத்மஶ்ரீ பட்டம் வரும்போது அதை மறுக்கத் தோன்றியதும் இதனால்தான், அந்தச் சிறுபணிவு தேவையா என்னும் தயக்கம். இதைப் புரிந்துகொள்ளவும் சிலர் இருக்கக்கூடும்.

அறிவியக்கவாதியின் முதன்மை என்றால் என்ன? நீங்கள் சொல்வதுபோல புகழ்பெற்றவர்கள் சமூக நினைவில் நீடிப்பார்கள். அதிகாரம் கொண்டவர்கள் தங்களுக்கே தெருத்தெருவாக நினைவுச்சின்னங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உண்மையான மாமனிதர் சிலர் ஆளுமைக்குறியீடுகளாக ஆகி, தொன்மங்களாக மாறி நிலைகொள்வார்கள்- டாக்டர் கே போல. ஆனால் சிந்தனையாளன், இலக்கியவாதி நிலைகொள்ளும் இடம் அவர்களெல்லாம் நிலைகொள்ளும் அந்த வெளி அல்ல. அவர்கள் நிலைகொள்ளும் இடம் நினைவின் பரப்பு. அங்கே அவர்கள் அசைவற்ற சிலைகளாக நிற்கிறார்கள். சிந்தனையாளனும் இலக்கியவாதியும் நிலைகொள்வது சிந்தனையின், கனவுகளின் வெளியில். அது உயிருள்ளது, தொடர்ச்சியாக வளர்வது. நாம் நேற்றைய அரசியல் தலைவரை ‘அறிந்து வைத்திருக்கிறோம்’ ஆனால் புதுமைப்பித்தனிடம் ‘உரையாடிக்கொண்டிருக்கிறோம்’. இதுதான் வேறுபாடு. மூன்றாம் குலோத்துங்கனும் வரலாற்றில் இருப்பாவான், ராஜராஜசோழன் திருவுருவாக நீடிப்பான், கம்பனே இன்றைய ரசனையில் இன்றென வாழ்பவன். இதுவே நான் சொல்ல வந்தது.

அறிவியக்கவாதியின் முதன்மை என்பது எனக்காக நான் சொல்லிக்கொள்வது அல்ல. விஷ்ணுபுரம் அமைப்பின் அத்தனை செயல்பாடுகளும் இந்நோக்கம் கொண்டவையே. எழுத்தாளர்களை கொண்டாடுகிறோம். அவர்களின் அகவைநிறைவுக்கு விழா எடுக்கிறோம். அவர்களுக்காக மலர்கள் வெளியிடுகிறோம். கவனியுங்கள், இவற்றை தமிழகத்தில் எங்கள் அமைப்பு அன்றி எத்தனைபேர் செய்கிறார்கள்?  ஒவ்வொரு நாளும் இங்கே அரசியல்வாதிகளுக்கு என்னென்ன கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன என்பதை கருத்தில்கொண்டு இதை பாருங்கள்.

புதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவகமும் சிலையும் அமைப்பதென்பது எங்கள் நீண்டகாலக் கனவுகளில் ஒன்று. அதை நண்பர்களிடம் பலமுறை விவாதித்துள்ளோம். நிகழவும்கூடும். இன்னும் பணமிருந்தால் சி.வி.ராமனுக்கும், ராமானுஜனுக்கும், க.நா.சுவுக்கும், சுந்தர ராமசாமிக்கும், அசோகமித்திரனுக்கும் சிலை அமைப்பேன். இதோ ஐரோப்பா சென்று வந்துள்ளேன். அங்கே ஒவ்வொரு நகரிலும் பெருங்கலைஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் இருக்கும் நினைவகங்களும், மாபெரும் சிலைகளும் என்னை பரவசம் அடையச் செய்கின்றன. என்றோ ஒருநாள் நாமும் அவ்வாறு ஆகக்கூடும் என நான் கனவு காண்கிறேன். இன்றைப்போல அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்திற்கும் தாசர்களாக என்றும் இருந்துகொண்டிருக்க மாட்டோம் என்றும், நமக்கும் அறிவுவழிபாட்டு மனநிலை உருவாகும் என்றும், இங்கும் அறிவு செழிக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். அதையே அந்த மேடையில் சொன்னேன்.

அங்கே கூடி அமர்ந்திருந்தவர்கள் இந்திய ஆட்சிப்பணிக்கு பயில்பவர்கள். அவர்களில் சிலர் அப்பதவிக்குச் செல்லக்கூடும். அவர்களில் சிலர் உள்ளத்திலேனும் அதிகார வழிபாட்டுக்கு எதிராக அறிவுவழிபாட்டு மனநிலையை உருவாக்க முடிந்தால், குறைந்தபட்சம் அப்படி ஒரு மனநிலை உண்டு என்னும் எண்ணத்தை உருவாக்க முடிந்தால், அதுவே என் வெற்றி எனக் கொள்வேன். ஆட்சிப்பணி என்பது அதிகாரத்தை கையாள்வது, உச்ச அதிகாரத்திற்கு மிக அணுக்கமானது. அவர்களில் சிலர் அதிகாரப் போதையில் மூழ்காமலிருந்தால் அது அவர்களுக்கும் நல்லது. அவர்கள் சந்திக்கப்போகும் அதிகார மையங்களிடமிருந்து சற்று விலகி அறிவுச்செருக்குடன் நின்றிருக்கவும் அந்த புரிதல் உதவும். அவர்கள் எடுக்கவேண்டிய நிலைபாடு ஒன்றுண்டு, அவர்கள் அதிகாரத்தின் தாசர்களாக வாழவிருக்கிறார்களா அறிவின் உபாசகர்களாக ஆகவிருக்கிறார்களா என்று. அவர்களில் இரண்டு பேர் அறிவின்மீதான பற்று கொண்டால்கூட வெற்றிதான்.

அறிவின்மீதான பற்றும், நான் அறிவியக்கத்தின் பிரதிநிதி என்னும் பெருமிதமும்தான் ஓர் ஆட்சிப்பணி அதிகாரியை காக்கும் கவசம்.அது இல்லையேல் அவர்கள் மிக விரைவாக விழுமியங்களில் நம்பிக்கை இழப்பார்கள். அதிகார அரசியல் வட்டங்களில் இருந்து அவமானங்களையும் சந்திப்பார்கள். அந்த மேடையில் அரசியலதிகாரம் அனைத்துக்கும் அப்பால் நின்றிருக்கும் அறிவின் ஆணவம் என்ற ஒன்றை முன்வைத்தேன். அதை பெற்றுக்கொண்டவர் சிலர் இருப்பார்கள் என்னும் நம்பிக்கையில். உண்மையில், சென்ற முப்பதாண்டுகளில் அவ்வண்ணம் என்னிடமிருந்தே அதை அடைந்த சிலர் இன்றைய இந்திய ஆட்சிப்பணியில் உண்டு. எங்கிருந்தாலும் தங்களை சிந்தனையாளர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். அவர்களே அத்துறையில்  சாதனையாளர்களாகவும் திகழ்கின்றனர். ஏன், இன்றைய ஆட்சியதிகாரத்தின் தரப்பிலேயே அறிவியக்கத்தின் இடத்தை, அறிவியக்கவாதியின் நிமிர்வை உணர்ந்தவர்கள் சிலரேனும் உண்டு.

அறிவுக்கு முதன்மை அளிக்கும் பார்வை பொதுவெளியில் வருகையில் பாமரர் அதிர்ச்சிதான் அடைவார்கள். அவர்கள் என்னவென்றே அறியாத ஒன்று அறிவியக்கவாதியின் தன்னம்பிக்கையும் நிமிர்வும். ஆனால் அக்காணொளியைப் பார்க்கும் ஆயிரம் பேரில் ஐம்பதுபேருக்கு அறிவியக்கத்திலுள்ள நிமிர்வு ஓர் ஈர்ப்பை அளிக்கும். அவர்களே நம்மவர். அவர்களை மட்டும் உத்தேசித்தே அது சொல்லப்படுகிறது.

ஜெ

பிகு: நீங்கள் சொன்ன அந்த ‘கமெண்ட்’டை போட்டவர் சமூகவலைத்தளங்களில் நிறைந்திருக்கும் பலநூறு தற்குறிகளில் ஒருவர் என நினைக்கிறேன். பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள், சமூகவலைத்தள வம்புகளிலிருந்து ஒருவரி அபிப்பிராயத்தையும் உருவாக்கியிருப்பார்கள். அதை எங்கும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள்தான் பெரும்பாலும் எங்கும் சென்று கமெண்ட் போடுகிறார்கள்.

நான் தடம் இதழுக்கு அளித்த முதல்பேட்டியில் மோடியைப்பற்றியும் இதையே சொல்லியிருந்தேன் என அங்கங்கே புரட்டிப் பார்ப்பவர்கூட கண்டிருக்க  முடியும். மு.க. இலக்கியவாதியும்கூட. அவருக்கு நாவலாசிரியராக தமிழிலக்கியத்தில் ஓர் இடம் உண்டு. மோடி வெறும் அரசியல்வாதி. வரலாறெங்கும் அவரைப் போன்றவர்கள் வந்துசென்றுகொண்டே இருக்கிறார்கள்.

நமக்குரிய சிலைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.