ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை




 அன்பின் மருத்துவர் கீர்த்தனா,

பிறந்தநாள் வாழ்த்துகள்

கடந்த பிறந்தநாட்கள் எதையும்விட இந்த பிறந்தநாள் உனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்

ஆமாம்,

நான்கு நாட்களுக்கு முன்னர் BHMS தேர்வு முடிவு வந்தபோது உன் அருகில்தான் இருந்தேன்.

தேர்வு முடிவினைக் கண்ணுற்றதும் நீ கொண்டாடி மகிழ்ந்த விதம் எனக்குப் புதிதாக இருந்தது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது நீ அப்பாயி வீட்டில் இருந்தாய். அப்போது 491/500 எடுத்திருந்தாய்,

மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் அதை உனக்கு அலைபேசிவழி தெரிவித்தபோது

எந்தவிதமான சலனமும் இன்றி,

இன்று வியாழன், எனவே நாளைக்கு வெள்ளி என்று யாரேனும் சொன்னால்

அந்த செய்தியை எப்படி எடுத்திருப்பாயோ அப்படி எடுத்த விதம் இன்னும் பசுமையாய் இருக்கிறது

ஒரு வகையில் unbecoming of keerthna வாக இருந்தாலும்

இந்தக் கொண்டாட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

ஹோமியோ மருத்துவர் என்பது உன் கனவு என்பது எனக்குத் தெரியும்

உன் கனவுகளில் ஒன்று நிறைவேறுவதற்கு ஏதோ ஒரு இடத்தில் உன் அம்மாவோடு நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி எனக்கு

என் மகள் ஒரு மருத்துவர்

காட்டம்மா என்று அழைக்கப்படும் காளியம்மாளின் கொள்ளுப் பேத்தி

முனியம்மாள் ராஜரத்தினத்தின் பேத்தி

ஒரு மருத்துவர்

நம்முடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய செய்திதான்

பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பமெல்லாம் இல்லை நமது குடும்பம்

உன் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர்

ஆனாலும் அப்பாவைவிட தாத்தாவிற்கு ஏகத்திற்கும் கடன்

என் அம்மாயி காட்டம்மா மாடு மேய்க்கும்

இன்று உன் அப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இதற்கும் உன் கொள்ளுப் பாட்டி மாடு மேய்த்ததற்கும் நேர்விகித உறவு இருக்கிறது கீர்த்தி

அது மாடுமேய்த்து சேர்த்த பால் காசில்லாது போயிருந்தால் உன் அப்பா இன்று இந்த அளவிற்கேனுமான நிலையில் இல்லை

இதை இதுவரைக்கும் உன் சித்தப்பாவிடமோ அத்தையிடமோகூட பகிர்ந்ததில்லை

இப்போது இவற்றை சொல்வதற்கு காரணம் இருக்கிறது

உன் வேர் உனக்குத் தெரிய வேண்டும்

என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில்

என் பணியிடத்தில், எனக்கான சமூக வெளியில்

என்னை ஒரு ஆசிரியரின் மகன் என்று மட்டும் வெளிப்படுத்திக் கொண்டதில்லைஒரு மாடு மேய்த்த கிழவியின் பேரனாக என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறேன்

அன்பிற்குரிய கீர்த்தனா,

நீ,

ஒரு மாடு மேய்த்தக் கிழவியின் கொள்ளுப் பேத்தி

இவற்றை இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கு காரணமிருக்கிறது

அதை சொல்வதற்குமுன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்

அப்பாவிற்கு காது கேட்காது என்பது நீ அறிந்ததுதான்

காது கொஞ்சம் மந்தமாக இருக்கிறது என்பதை நானும் உன் தாத்தாவும் உணரத் தொடங்கியபோது நான் அநேகமாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்

விடுதியில் தங்கிப் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததால் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்

காது மருத்துவரைப் பார்ப்பதற்கே எங்களுக்கு காலம் ஆயிற்று

ஒரு அறுவை, அல்லது காது கேட்கும் கருவியை அவர் பரிந்துரைத்தபோது அதற்கான வசதி நம் குடும்பத்தில் இல்லை

பிறகு அப்படியேப் பழகிப் போனது

இப்போது காதுகேட்கும் கருவியைப் பொறுத்தியதும் அப்பாவிற்கு காது பெருமளவு தெளிவாகக் கேட்பதும் நீ அறிந்ததே

அதுவரையில் நான் பட்ட அவமானங்களும் நீ அறிந்ததுதான்

காது கேட்கும் கருவியை முன்னரே பொறுத்தி இருப்பின் பொதுத் தளத்தில் நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கக் கூடும்

இப்போது உன்னிடம் வைப்பதற்கு ஒன்றிரண்டு கோரிக்கைகள் என்னிடம் உண்டு மகளே

நாம் என்பது இன்றைய நாம் மட்டும் அல்ல

உன்னை ஹோமியோ படிக்கவைத்ததற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன

1) ஹோமியோ என்பது மாற்று மருத்துவம்

2) அது ஏழைகளுக்கான மருத்துவம்

ஹோமியோவை மாற்று மருத்துவம் என்று கூறுவதற்கு அது அலோபதிக்கான மாற்று என்றோ, சித்தாவிற்கு மாற்று என்றோ பொருள் அல்ல

ஒன்றால் ஒன்றை இட்டு நிரப்பிவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்

அதனதற்கென்று தனிப்பட்ட லட்சணங்கள் உண்டு

எந்த மருத்துவமாயினும் அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும் என்றும்

அனைத்துவகை மருத்துவமும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆய்வுகளை செய்வதும்

ஏழைகளுக்கானதாக என்பதே தவறு

ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டும்

ஹோமியோவை ஏதுமற்றவர்களுக்கான மருத்துவமாக நான் பார்க்கிறேன்

அல்லது அப்படியாக அது மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

40 வருடங்களுக்கு முந்தைய உன் அப்பா, அப்பாயி, பாட்டி ஆகியோர் இன்று ஓரளவு வசதியோடிருக்கலாம்

எந்தவிதமான மருத்துவத்திற்கும் கடன் பெற்றாவது சடுதியில் தயாராகிவிடக்கூடிய நிலையில் இருக்கலாம்

ஆனால்,

40 வருடங்களுக்கு முன்னர் உன் அப்பா இருந்த நிலையில் எத்தனையோ பேருடைய அப்பாக்கள், அப்பாயிகள், பாட்டிகள் ஏராளம் இன்றும் உண்டு

ஏதுமற்றவர்களும் உண்டு

அவர்களுக்கும் மருத்துவம் போக வேண்டும்

அதற்கு உன் பங்களிப்பும் இருக்க வேண்டும்

அது நடந்தால் அப்பாவின் கட்டை வேகும்

வாழ்த்துகள் கீர்த்தி

அன்புடன்,

இரா.எட்வின்

07.10.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2022 21:34
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.