புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை)

யாருக்காவது ஒரு புதிரின் (enigma) நண்பனாக இருக்க முடியுமா? இமயம் ஒரு புதிர்,  கடல் ஒரு புதிர்.  கிறிஸ்து ஒரு புதிர் என்பதால்தான் அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.  அதேபோலத்தான் கண்ணன் ஒரு புதிர் என நடராஜகுரு சொல்கிறார், அச்சொற்களால் தூண்டப்பட்டு வெண்முரசு போன்ற பிரம்மாண்டமான ஒரு நாவலை ஜெயமோகன் எழுதுகிறார்.  அவ்வாறு தான் அணுகும் அனைத்திலும் உள்ள மிக நுட்பமான புதிரின் ஈர்ப்பை அவர் உருவாக்கிக்கொள்கிறார். அதனால் கவரப்படுகிறார், அவரால் எந்த புதிரையும் கண்டுகொள்ள முடிகிறது. இதுவே ஜெயமோகனின் முக்கியமான தனித்தன்மை என நான் நினைக்கிறேன்.

உண்மையில், எப்பேர்ப்பட்ட ஆற்றல். நான் முதன்முதலில் அவரைக் கண்ட அன்றிலிருந்து இன்றுவரை தடையற்ற மின்சாரமென அது அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதைக்கொண்டு இந்தியாவிலுள்ள அத்தனை கிராமங்களையும் மின்மயமாக்கலாம் என்று நாம் எண்ணிவிடுகிறோம். ஆற்றலைத் தாண்டி ஆழ்ந்த புரிதல்களையும் தனது புத்தகங்களின் வழி அவர் நமக்கு அளிக்கிறார்!

அனைத்தையும் மிக நுண்மையாக கவனிப்பவர் ஜெயமோகன். அவர் எப்படி செவிகொடுப்பவர் என அவருடன் இருக்கும்   நண்பர்களுக்குத் தெரியும். குற்றாலம் கவிதை அரங்கில் அரை மணிநேர உரையாடலுக்குப் பிறகு, ஒரு வார்த்தைகூட விட்டுப்போகாமல் அவர் அதை மொழிபெயர்த்து திரும்பக் கூறிய அற்புதத்தை நான் கண்டிருக்கிறேன். அவருக்கு எப்போதும் இது சாத்தியமாயிருக்கிறது. அசாதாரணமான இந்த ஞாபகத்திறனால், அவர் எதிர்கொள்ளும் எந்த நிகழ்வும் பழகியதாகிப் போவதில்லை. அதுவே கூட அவரது இந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருக்கலாம்.

அவர் எதைத்தான் எழுதவில்லை! முதலில் கவிதை, பிறகு கட்டுரை, சிறுகதைகள், நாவல்; ஒரு கட்டத்தில் எல்லாவற்றை அதே தரத்தில் தொடர்ந்து நிகழ்த்தும், காவியங்களென்று மட்டுமே கொள்ளத்தக்க நாவல்களை எழுதுகிறார், வெண்முரசு போன்ற செவ்விலக்கியங்களை படைக்கிறார். அவர் எதையும் ஒருபோதும் கையொழிவதில்லை, கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்தின் கவித்துவத்தையோ, சிறுகதை எழுதும்போதும் கூடியிருந்த ஒருமையையோ அவர் இன்னும் தவறவிடவேயில்லை. இவ்வளவு எழுதிய பிறகும் உயிர்ப்பற்ற ஒரு வாக்கியத்தை கூட அவர் இதுவரை எழுதுவதில்லை என்பதுதான் அதன் சிறப்பு. எதிலும் ஆழ்ந்த ஈடுபாடில்லாமல் அவர் எழுதுவதேயில்லை.ஒரு வரியும் வீணாகாமல் இலட்சக்கணக்கான வாக்கியங்கள் கொண்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

இதெல்லாம் ஒரு மனிதனுக்கு சாத்தியமே இல்லை எனத் தோன்றும். அப்படி சாத்தியமாக வேண்டுமெனில் அவனுக்கு ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அவன் தன் வாழ்வில் மிகக்கடினமான தனிமையை அனுபவித்திருக்க வேண்டும். நரகத்தில் பல தினங்கள் அவன் வாழ்ந்திருக்க வேண்டும். தனது வாழ்வின் ஒரு கட்டத்தில் அப்படி மரணம் முன்னால் வந்து நிற்கும் நரகத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நரகத்தில் வாழ்வதன் வித்தியாசம் என்ன தெரியுமா?  நரகத்தின் ஒரு வருடம் சொர்கத்தின் நூறு வருடங்களுக்குச் சமம். ஒருவன் நரகத்தில் ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் கடந்து வந்தால் போதும், அந்த பிறப்பின் முழுமைக்குமான ஒளியை அது அவனுக்கு வழங்கிவிடுகிறது. அப்படி அந்த நரகத்திலிருந்து பெற்ற ஒளியைக் கொண்டு அவர், ‘தான் இனி ஒளிர மட்டுமே செய்வேன்’ என்ற முடிவோடு, ‘எவரையும் இருட்டிலிருக்க விடமாட்டேன்’ என்கிற பிடிவாதத்தோடு, இன்றுவரை தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மட்டுமல்லாது எல்லோருக்கும் ஒளியை அளிக்கும் ஒரு எழுத்து முறையை அவர் உருவாக்கியுள்ளார்.

அவர் ஒரு மிகச்சிறந்த பயணி, நான் அவருடைய சில பயணங்களில் உடன் சென்றிருக்கிறேன். பாதையே இல்லாமல் பயணம் செல்லக்கூடியவர் அவர். எப்போதும் அவரது பயணத்திற்கு பின்னர்தான் அங்கு பாதை உருவாகிறது. அவருக்கு முன்னால் வழிகள் இல்லை, அவருக்கு பின்னால் வழிகள் உருவாகின்றன. பிறர் நடந்த வழியை ஜெயமோகன் பின்பற்றுவதேயில்லை. நடந்த வழிகள் பல, நடக்காத வழிகள் மிகச்சில. அப்படி எங்கும் யாரும் நடக்காத வழிகளில் தினமும் நடந்துகொண்டிருக்கிற ஒரு மனிதன் உருவாக்குகிற அதிசயக்கத்தக்க ஒளிதான் ஜெயமோகனின் தனித்துவம்.

அறம் கதைகளை வாசிக்கும் போது, நான் அதிசயித்துப் போயிருக்கிறேன். இது எவ்வாறு சாத்தியமாகிறது, இந்த கதைகளிலுள்ள சிறப்பு என்ன?  உயிரோடு இருப்பவர்களும் மறைந்தவர்களுமான உண்மை மனிதர்களைக் குறித்த கதைகள் கொண்ட தொகுதி அது.  அதன் ஆச்சரியப்படுத்தும் தன்மை என்னவெனில் அதில் அவர் புனைவைக் கையாளவேயில்லை. உண்மைதான் அங்கு பிரதானமாக இருக்கிறது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தலைப்பே கூட ‘உண்மையின் கதை’ என்பதுதான் (Stories of the true). உண்மை இப்படி ஆச்சரியப்படுத்துமா என்ன? சரிதான், உண்மையன்றி பொய் எப்படி அப்படி ஆச்சரியப்படுத்தும்?

‘இதில் (அறம் கதைகளில்) உண்மை மட்டுமே உள்ளதா’ என நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். ‘நிச்சயமாக, ஆனால் உண்மையை மேலும் நம்பத்தகுந்ததாக சொல்ல சிலநேரம் அதில் சில பொய்களை சேர்த்திருக்கிறேன்’ என அவர் சொன்னார். ஆம், அது அப்படித்தான். உண்மைக்கு நுண்விவரணைகள் இல்லை. பொய்க்கு நுண்விவரணைகள் உண்டு. நம்பகமான உண்மை என்பது கொஞ்சம்  பொய் கலந்ததுதான். ஆங்காங்கே பொய்யின் பொடி போட்டு உண்மையை விளக்கி அதை மேலும் உண்மையாக ஆக்கியிருக்கிறார்.  ‘உள்ளதைச் சொன்னால் உறியும் சிரிக்கும்’ என்று மலையாளப் பழமொழி ஒன்றுண்டு. உண்மைதான் நமக்கு பேரானந்தத்தை தருகிறது. ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள உண்மைதான் எப்போதும் நம்மை உவகைகொள்ளச் செய்கிறது.

அவர் எந்த குறிப்பிட்ட வகைமையிலும் எழுதுவதில்லை, அவர் எழுதிமுடிக்கும்போது புதியவொரு வகைமை உருவாகிறது. அவர் எழுதும்போது புதிய வடிவம் ஒன்று உருவாகிறது. இத்தனை முழு நம்பிக்கையுடன் எழுதுவதற்கான இந்த திறன் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது என்பதைத்தான் முன்னர் நான் சுட்டிக்காட்டினேன். அந்த நரகத்தில் இருந்து கைகொண்ட ஒளியுடன் அவர் முன்னே செல்வதால் மட்டுமே இது அவருக்குச் சாத்தியமாகிறது.

அவர் யாரையும் நிராகரிப்பதில்லை. எல்லோரையும் கேட்டுக்கொண்டிருப்பவர். அவரைப் பார்த்தால் இவற்றையெல்லாம் எழுதிய ஜெயமோகன்தானா இது எனத் தோன்றும்.

ஒரு கதையில் ஞானி ஒருவர், ஒரு அரசனை காணச் சென்று அவர் முன் அரியணையில் அமர்ந்தார். சீண்டப்பட்ட அரசன்  ‘நீ யார்’ எனக் கேட்கிறான். ‘மந்திரியா, அரசனா?’ என ஒவ்வொன்றாக கேட்டுவிட்டு ‘எதுவாக இருந்தாலும் என்னை தாண்டி இங்கு எதுவுமில்லை” (Nothing is above me)என்கிறான்.  ஞானி, ‘நான்தான் அந்த எதுவுமில்லாதது’  (That nothing is me) என்கிறார். அப்படி தான் என்பது எதுவுமில்லாத ஒன்று என்ற விவேகத்தை ஜெயமோகன் எக்காலத்திலும் புரிந்துகொண்டு வந்துள்ளார். அதுதான் அவரின் இந்த ஞானத்தின் அடிநாதமாக விளங்குகிறது.

இனி வரும் காலங்களில் இந்த ஞானம் ஒருவேளை ஒரு அற்புதமாக காணப்படும். பிற்காலத்தில் ஜெயமோகன் என்ற ஒருவரை பிறருக்கு நம்பமுடியாமல் போகலாம், அப்படி ஒரு காலம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அப்படி நடக்கும். ஏனென்றால் அதி அற்புதங்களை நம்மால் வரலாற்றிற்குள் வைத்து சொல்ல முடியாது. அதற்க்கான ஐதீகங்களும் கட்டுக்கதைகளும்  உருவாகி வரும். ஒரு புதிர் கட்டுக்கதைகளால் மட்டுமே வாழும்.

ஜெயமோகனுக்கு அறுபது வயதாகிறது என்பது நமக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுப்பதில்லை. ‘அறுபது வயதா? இவருக்கு ஒரு அறுநூறு வயதாவது இருக்காதா’ என அவரது படைப்புகளை வாசிப்பவர் கேட்பார். அவர் இனி எழுதப்போகும் படைப்புகளை பற்றி யோசித்தால் அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை எனவும் தோன்றும். அப்படி ஒரே சமயத்தில் முடிவில்லாத இளமை அவருக்கு கிடைக்குமென்பதில் எனக்கு ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அத்தனை நீண்ட காலத்திற்கு அவர் அந்த நரகத்திலிருந்து தனக்கான ஆற்றலைப் பெற்றிருக்கிறார். அதன் பலனாக இன்னும் நீண்ட காலத்திற்கு அவரது படைப்புகளில் அதை இனிமையாக அவரால் வெளிப்படுத்த இயலும் என நான் நம்புகிறேன். மேலும் பிரகாசமான அனுபவங்களை, உரையாடல்களை, வாழ்வை தூரத்தில் விலகி நின்று ஒட்டுதல் இல்லாமல் உள்வாங்கும் மனதும், அதை வெளிப்படுத்தும் எழுத்தாற்றலும் அவருக்கு உண்டு.

புத்தனைப் போலவே ஞானத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்தான் இந்த பயணி. ஆனால் புத்தனைபோல அவர் தன்னுடைய யசோதரையை துயரத்தில் தள்ளிவிட்டு போகவில்லை. அவரை உணர்ந்து ‘அரண்மனையை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவரை வழியனுப்பிக் கொண்டிருப்பவர் இந்த யசோதரை.  இன்று இந்த மேடையில் அவர்கள் மாலை மாற்றிக்கொண்டது  என்றும் மணமகளாக  இருக்கப்போகிறவர் அவரது துணைவி என்பதனால்தான்.

அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பொதுவாக திருமணத்திற்குப் பிறகு காதல் கொஞ்சம் குறையும். ஆனால் அவர் எழுதியதை வாசித்தப்பிறகு வந்த காதல் என்பதால் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. அருண்மொழிக்கு மட்டுமல்ல, இங்கு எல்லோருக்கும் ஜெயமோகன் மீது காதல்தான். அது குறைவதேயில்லை, வளர்ந்துகொண்டேதான் செல்கிறது.

அவர் குடிலில் வாழாமலே குடிலில் வாழ்பவர். ஒரு பயணதிற்கு போவது போலவேதான் அவர் எழுதுகிறார். எங்கு செல்லப்போகிறோம் என்ற எந்த உத்தேசமுமற்று எழுதத் துவங்குவார். “ஒன்றும் தோன்றாத தினங்களில் கணினியில் ‘அருண்மொழி அருண்மொழி அருண்மொழி ..’ என மூன்று தடவை எழுதும்போது நான்காவதாக ஒரு சிறுகதைக்கோ, நாவலுக்கோ, கட்டுரைக்கோ, விமர்சனத்திற்கோவான முதல் வரி கிடைத்துவிடும்” என என்னிடம் கூறியிருக்கிறார். பின்னர் அதுவே அதன் வழியை கண்டடைந்துகொள்ளும். எழுதி முடியும்போது அதன் வடிவத்தை அது பெற்றுவிடவும் செய்யும்.

அப்படி அதிசயிக்கத்தக்க வகையில் படைக்கக் கூடியவர் அவர். நினைத்துப்பாருங்கள், கோவிட் போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில், யாரும் யாரையும் நேரில் சந்திக்கக் கூடாது, பேசக்கூடாது என தடைவிதிக்கப்பட்ட காலங்களை ஜெயமோகன் எப்படி பழிவாங்கினார் என. தினம் ஒரு கதை என எழுதி அவர் எல்லோருக்கும் மிக அருகில் இருந்தார்.

தினம் தனது இதிகாசத்தில் ஒரு பாகத்தை அவர் எழுதி வந்துள்ளார், ஒரு மனிதன் இதிகாசம் எழுதுகிறான் என்பது எவ்வளவு பெரிய அற்புதம் இல்லையா. ஹோமர் எத்தனை பேர் என்ற சர்ச்சை இன்னும் இருக்கிறது, வேதவியாசன் உண்மையில் எத்தனை பேர் என இன்று சந்தேகமிருக்கிறது. ஆனால் இதோ இருபத்தையாயிரம் பக்கங்களை கொண்ட ஒரு புத்தகம். இது ஜெயமோகன் என்ற ஒற்றை மனிதன் எழுதியதல்ல என்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக உருவாகும். தனி ஒருவரால் இப்படி ஒரு காப்பியத்தை எழுதமுடியாதென பிறர் சொல்லக்கூடும்.  வரும்காலங்களில் ஜெயமோகனை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ கட்டுக்கதைகள் உருவாக்கப்படும். அப்படிப்பட்ட அற்புதம் ஜெயமோகன். அப்படிப்பட்ட புதிர் ஜெயமோகன்.

நண்பர்களே, அப்படிப்பட்ட அந்த புதிரின் தோழன் நான் என்பதை தவிர எனக்கு வேறென்ன பெருமிதம் வேண்டும்?

(மலையாள ஒலிவடிவில் இருந்து தமிழில் ஆனந்த்குமார்)

(ஆனந்த்குமார் தமிழ் விக்கி  )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.