அறிவருடன் அமர்தல்

இனிய ஜெயம்

இனிய பொழுதாக அமைந்தது சுவாமி பிரம்மானந்தர் அவர்களுடன்  தங்கியிருந்த மூன்று நாட்கள்.

புதன் கிழமை மாலை கிளம்பி, அடுத்தடுத்த பேருந்துகள் பிடித்து, வியாழன் காலை ஏழு மணிக்கு நிகழ்விடம் வந்து இறங்கினேன். உண்மையில் அந்தந்த பேருந்துகளில் அலறிய பாடல்கள் (நள்ளிரவு 2:30 கு புவர்லோகம் வரை எட்டும் ஒலியில், சோல பசுங்கிளியே… சொந்தமுள்ள பூங்கொடியே )என்னை அந்தரத்தில் தூக்கியடித்து தூக்கியடித்து இங்கே கொண்டு வந்து  வீழ்த்தின என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று காலை நான் கடந்து வந்த மலைப்பாதையில் என் வாழ்வின் அழகிய உதயங்களில் ஒன்றில் வாழ்ந்தேன். உயரும் கொண்டை வளைவு ஒன்றில் பேருந்து தயங்க, கண்டேன். கையருகே தொட்டுவிடும் தொலைவில்  பெருமாண்பு ஒன்றின் தூய்மையை.  கரும்பச்சைக் குன்றுகளின் பின்னணியில், மெல்ல மெல்லக் கருநீலத்தில் செம்மை விழித்த வானொளியில்,  விரிவான் விதானத்து அலங்கார சரவிளக்கு போலும், இன்னும் எழாக் கதிரின் முதல் கிரணம் ஏந்தி, பொன்னொளிர் கொண்டு நின்றது ஓர் மேகம்.

அந்த தித்திப்புடன் இடம் வந்து, சும்மா ஒரு சுற்று சுற்றி வந்தேன். அறைகளை சுத்தம் செய்தேன். நூலகத்தில் ஒழுங்கு தவறி நின்ற நூல்களை அடுக்கி வைத்தேன். குளித்தேன்.  அந்தியூர் மணி நாளைய தேவைக்கான பொருட்களை சேகரிக்க கீழே போக, அவர் எனக்கென சுட்டு வைத்திருந்த தோசைகளை விழுங்கிவிட்டு, அறைக்குள் சென்று விழுந்து உறங்கினேன். விழித்தபோது மாலை 4.30. காட்சிகள் தெரியும் முன்பான, அந்தக்கால tv போல அதே இறைச்சலுடன் மழை பெய்துகொண்டு இருந்தது. தோகையற்ற மயில் ஒன்று பாறை முகட்டில் நின்று நனைந்து கொண்டிருந்தது.

இரவில் 1960 இல் நடராஜன் என்பவர் மொழியாக்கத்தில் வெளியான ரஸ்ஸலின் தத்துவ நூலான விஞ்ஞானமும் சமுதாயமும் என்ற சிறிய நூல் ஒன்று வாசித்தேன். காலையில் ஒவ்வொருவராக வரத்துவங்கினர். சுவாமிஜி யை பாதம் பணிந்து வரவேற்றோம்.

ஸ்வாமிஜி தலைமையில் 11.30 கு முதல் அமர்வு துவங்கியது. அந்தியூர் மணி அனைவரையும் வரவேற்றார். நான் அனைவரும் இங்கே கடைபிடிக்க வேண்டிய நெறிகளை முதலில் குறிப்பிட்டுவிட்டு, சுவாமிஜி கேட்டுக்கொண்டபடி அவர் உடனான அமர்வு நேரம் உள்ளடக்கம் உட்பட அவை எவ்விதம் அமையலாம் என ஒரு அடிப்படை வரைவை அளித்தேன். பங்கேற்பாளர்கள் வசம் விவாதம், உரையாடல், கருத்தமர்வு இவற்றுக்கு இடையேயான பேதத்தை சொல்லி, இந்த அமர்வுகள் கருத்தமர்வு என்று நிகழும் வண்ணம் மட்டுருத்தல் செய்தேன்.

1.30 கு முதல் அமர்வு நிறைகையில் புரிந்து கொண்டேன், சுவாமிஜி பதறியது எல்லாம்  சும்மா ஒரு விளையாட்டு. அவருக்கென சில முறைமைகள் கொண்டிருந்தார். அதன் படியே அமர்வுகள் நிகழ்ந்தன. உதாரணமாக வந்தவர்களில் ஒரு இளைஞர் ஈஷா அமைப்பில் தன்னை பொறுத்திக் கொன்டவர், மற்றவர் உபாசனை மரபு மீது ஈடுபாடு கொண்டவர், பொதுவாக அனைவருமே ஜெயமோகன் வழியிலான இலக்கியக் கல்வியில் இருப்போர். அது ஒரு பாதை. அதில் உள்ள எவரையும் தனது சொற்கள் கொண்டு கலைத்துவிடக் கூடாது என்னும் கவனத்துடன் அதே சமயம் இயல்பாக உரையாடலை நிகழ்த்தினார். (எனது வகுப்புகள் வேறு, அதன் நெறிமுறைகள் வேறு, அங்கே நான் கண்டிப்பு கொண்டவன் என்று சுவாமிஜி இறுதி அமர்வில் சொன்னார்).

ஒன்றரை மணி நேர அளவில், ஐந்து அமர்வுகளில், வெவ்வேறு அனுபவங்கள் நகைச்சுவைத் தருணங்கள் வழியே சுவாமிஜி பேசியவற்றை குறிப்பாகத்தொகுத்தால்…

அவரது பூர்வ கதை.

அவர் இந்த வேதாந்த நெறிக்கு வந்த வகைமை.

எவர் என்ன நிலையில் ஆத்மீக தேடலுக்குள் வருகிறார்.

எத்தகையது வேதாந்தக் கல்வி ( வேட்டியை விட்டவருக்கே வேதாந்தம்)

மிருகத்துக்கு இல்லாத மனிதனுக்கு மட்டும் உள்ள அவன் எதையும் செய்யலாம் எனும் செயல்பாட்டு சுதந்திரம்.

வேதம் மனிதனுக்கு இட்ட ஐந்து செயல்பாட்டு கடமைகள்.

இங்கே பிறந்து எதையோ செய்துகொண்டிருக்கும் மனிதனுக்கும் கர்மாவுக்கும் என்ன தொடர்பு.

வேதாந்த நோக்கில் கர்மா.

விதியையோ கர்மாவையோ விடுத்த தனது தேர்வு அடிப்படையிலான  செயல்.

தவறாக செய்து விட்டோமே என்றோ, சரியானதை செய்யாமல் விட்டு விட்டோமே என்ற கவலையை அளிக்காத செயல். அந்த செயலே யோகம் என்றாகும் நிலை.

செயலை யோகம் என்று கொள்வதற்கும், தன்னரத்தை கண்டு கொள்வதற்கும் உள்ள பேதம்.

இப்போது இங்கே உள்ள சஞ்சலம் கொண்ட செயல்களின் பின்னே உள்ள மனம், அறிவு, உணர்வு இவற்றின் கலவையான அகங்காரம்.

நான் எனும் நிலை.

தன்னுணர்வு எனும் நிலை.

மனம், உணர்வு, அறிவு எனும் மாறிக்கொண்டே நிகழ்ந்து கொண்டே இருக்கும் நிகழ்வு.

மாறாத பிரக்ஞ்சை.

பிரக்ஞையே பிரம்மம் எனும் நிலையில் இருந்து துவங்கி சத், சித், அனந்தம்  (ஆனந்தம் அல்ல) எனும் நிலை வரை.

அவரது குரு நிறை வரிசை

அவரது பணிகள்.

இவை மீதான உரையாடல் என்று முடியும். மொத்த அமர்வுகளையும் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவத் கீதை என்ற இந்த முக்கோணத்திருக்குள் வைத்தே சுவாமிஜி நிகழ்த்தினார்.

தியானத்தில் எழும் இடர்களை எவ்விதம் களைவது.

அமானுஷ்ய நிகழ்ச்சிகளை வேதாந்தம் எவ்விதம் பார்க்கிறது.

சக்ர உபாசனா மரபை வேதாந்தம் எவ்விதம் அணுகுகிறது.

சாவுத் துயர், உறவுகள் வழியே எழும் சிக்கல் இவற்றை வேதாந்தம் எவ்விதம் எதிர்கொள்கிறது.

வேதாந்திகளில் பலர்  ஏன் எதிர்ப்பு தோற்றத்துடன் கருணை இல்லாத கறார் தன்மையுடன் இருக்கிறார்கள். வேதாந்தம் இவ்விதம்தான் ஆக்குமா.

வேதாந்தம் எவற்றை எல்லாம் விலக்குகிறது.

வேதாந்த மரபுக்கு அழகியலுக்குமான தொடர்பு. ( மீராவை முன்வைத்து சைதன்யா கேட்ட இந்த கேள்விக்கு, முக்கியமான கேள்வி பின்னர் பதில் சொல்கிறேன் என்று அமர்வுகள் முடிந்ததும் இரவு தனியே சைதன்யாவுக்கு சுவாமிஜி பதில் அளித்தார்)

சூழலியல் சீர்கேடுக்கு வேதாந்த நோக்கில் பதில் உண்டா. தீர்வு உண்டா.

பொதுவாக இது போன்ற அமர்வுகளில் எது சரி. சொன்னவற்றில் இருந்து சந்தேகம் வழியே கேள்வி கேட்பதா, அல்லது கேட்காமல் இருந்து கவனிப்பதா.

இவையெல்லாம் அமர்வுகளில் சுவாமிஜி விடையளித்த வினாக்களில் சில.

தனது தியான அனுபவங்கள். வித விதமான குணம் கொண்ட வேதாந்திகள் என்று வித விதமான கதைகள் வழியே சுவாரஸ்யமாக சுவாமிஜி நடத்தி நிறைவு செய்தார்.

அமர்வுகள் இல்லா இடைவெளிகளில் நண்பர்கள்  என்னிடம் கேட்ட இலக்கிய சந்தேகங்கள், வாசிப்பில் நிகழும் இடர்கள், எனது தனி வாழ்வனுபவ கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.

நண்பரொருவர் மொத்தமாக பார்க்கையில் அமர்வுகளில் சுவாமிஜி பேசியது தொகுத்துக்கொள்ள இயலாத வகையில் எங்கெங்கோ செல்லும் பல கதைகள் வழியே சிதறலாகவே என்னுள் இருக்கிறது.அதை நீங்கள் தொகுத்து சொல்லும்போது ஆம் இதுதான் ஸ்வாமிஜி சொல்லித் தந்தது என்று புரிகிறது  எவ்விதம் நீங்கள் இப்படி தொகுத்துக் கொள்கிறீர்கள்? என்று வினவினார்.

இதில் நான் விற்பன்னன் அல்ல. கற்றுக்கொண்டு இருப்பவன். முதலில் ஈடுபடும் விஷயத்தில் காதல் வேண்டும். காதல் இருப்பின் மற்றவை தன்னால் பின்தொடரும். காதல் இல்லாவிட்டால் காதலை வளர்த்துக்கொள்ள முடியும் அதற்கு பெயர் ஷ்ரத்தை. ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் உங்களது தன்முனைப்புடன் கூடிய பகல்கனவு உங்களை வேறு எங்கோ திருப்பி விடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உள்ளே ஓடும் உரையாடலை அணைத்து வைக்க வேண்டும்.ஒரு உரையாடல் வழியே எது எவ்விதம் உங்களுக்கு கையளிக்கப்படுகிறது என்பதில் கவனம் வேண்டும்.

(கவிதை இயல் சார்ந்த உரையாடலை தேவதச்சன் கையளிப்பதுபோல தேவ தேவன் கையளிக்க மாட்டார். உரையாடலில் முதல்வர் கணிதத்தின் முறைமை கொண்டவர் இரண்டாமவர் கவிதையின் முறைமை கொண்டவர். )

மனதிலோ குறிப்பேட்டிலோ சினாப்ஸிஸ் எழுதிக் கொள்வது.அந்த சினாப்ஸிஸ் ஐ அப்படியே விரித்து மீண்டும் அதே முழு உரையாக சொல்லிப்பார்த்துக் கொள்வது.இவைதான் ஜெயமோகன் பள்ளி கற்றுத்தந்த அடிப்படைகள் என்று சொன்னேன்.

இரவுகளில் கடும் மழையும் மின்வெட்டும் இருந்ததால், வழக்கமான  இரவு உரையாடல்கள் நிகழ வில்லை. ஒரு மாலை அனைவரும் வன காவலர் ஒருவர் துணையுடன் சிறிய கானுலா சென்று வந்தனர். அன்புராணி அதில் வேழாம்பல் பறவையை கண்டு படம் பிடித்து வந்தார்.

ஒரு அதி காலை நடை யில் அன்பு தனது ஆற்றல் மிக்க காமிரா வழியே ஸூம் போட்டு பல்வேறு பறவைகளை அதன் நடத்தைகளை ( ஒரு பறவை சும்மா போய் பிற பறவைகளை வம்பு செய்து கொண்டு இருந்தது)  அதன் தமிழ்ப் பெயருடன் அறிமுகம் செய்தார். பல பறவைகளை, குறிப்பாக சிகப்பு தலை கிளி வகையில் பெண் வகையை முதன் முதலாக பார்த்தேன். குறைந்தது 10 வகை பறவை இனங்களை அறிமுகம் செய்து வைத்தார். வனத் தொகுதிக்குள் பறவைகளை குறிப்பாக எவ்விதம் அடையாளம் காண்பது என்று அன்பு சொல்லித்தருகையில் ஒன்றை அறிந்தேன். அஜிதன் அவரது மைத்ரி நாவலில் இத்தனை துல்லியமாக புத்தம் புதிய மொழியில் புற உலகை விரித்துக்காட்ட முடிந்த அவரது திறன், அவரது பறவை நோக்கு ஈடுபாட்டில் இருந்தே எழுந்த ஒன்று.

மதியங்களில் சட்டத்துக்கு ஒரு சவக்குழி, சிகப்பாய் ஒரு சிலுவை, ஆவியின் ஆடுகளம் என டெக்ஸ் வில்லர் சாகசங்களில் திளைத்தேன்.

இறுதிநாள் நாள் காலை சுவாமிஜி உள்ளிட்ட அனைவரும் மொத்தமாக கிளம்பி , அருகில் உள்ள வீர சைவ மடம் சென்று அதன் தலைவர் சுவாமிஜியை சந்தித்தோம். சுவாமி காபி அளித்து உபசரித்து மடத்தை சுற்றிக் காட்டினார். தோட்டத்தில் மடத்தின்  ஐந்து தலைமுறை குருமார்கள் அடக்கம் கண்டிருந்தனர். தேநீர் வண்ண பால் புதுமை குதிரை ஒன்று ( அதன் வலது கண்ணில் பார்வை இல்லை) புல் மேய்ந்கொண்டு இருந்தது. தோட்டத்தில் கிடந்த இளவட்டக்கல்லை நண்பர்கள் ஒவ்வொருவராக உருட்டிப் பார்த்தனர். ஒருவர் தரையை விட்டு இரண்டு அடிவரை தூக்கினார். தூக்கிய அளவு வரைக்குமான பெண் ஏதும் கிடைக்கும் என்று கிடைக்குமா என்று சுற்று முற்றும் பார்த்தார். குருதே மட்டும் மேய்ந்து கொண்டு இருந்தது.

அமர்வு நிறைகயில் இந்த வீர சைவ மடத்தின் சுவாமி வந்து அமர்வில் கலந்து கொண்டார். பிரம்மானந்தா சுவாமி அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். சுவாமி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஊர் ஆனைகுந்தி. வேடர் குலம். கண்ணப்ப நாயனார் வழி வந்தவர்கள். சில நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்ட காட்டு வேடர்களுக்கான மடம் அது. அவர்கள் மதம் மாறாமல், சைவ நெறிக்கு திருப்பி விட,  வன அழிவுக்கு எதிரான காவலாக, நாடி வந்தோர் அனைவருக்கும் உணவளிக்கும் அணையா அடுப்பை கொண்ட நிலமாக நின்று பணி சேர்த்து கொண்டிருக்கும் மடத்தின் இன்றைய தலைவர் அவர்.

அவர் வந்திருந்தது மிக மிக நிறைவளிக்கும் இறுதி நிகழ்வாக அமைந்தது. ஈரோடு க்ரிஷ்ணன் அனைவருக்கும் நன்றி சொல்லி இந்த மூன்று நாள் உடன் தங்கல் நிகழ்வை நிறைவு செய்தார். மதிய உணவு முடித்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து விடை பெற்றோம். சுவாமி பிரம்மானந்தா பாதம் பணிந்து விடை பெற்றேன்.

விடை பெறுகையில் சுவாமி மலேசியாவின் நிகழ்வுக்கு உங்களுடன் சேர்த்து என்னையும் வர சொல்லி வரவேற்றார். எனக்கான ஆசி அது. ஆனால் நான் மறுத்து விட்டேன். இப்பிறப்பில் எனக்கு இந்த பாரதம் போதும். இந்த நிலத்தை கடக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் கண்டம் கடக்கும் புள்ளல்ல, இந்த நிலத்தின் எளிய புல். சுவாமி புரியிது என்று சொல்லி என் தோளை தட்டினார். லிங்கராஜ் மற்றும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே பவானி பைபாஸ் வந்து சேர்ந்தேன்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.