Stories of the True : சரியான மொழியாக்கமா?

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

அன்புள்ள ஜெ

Stories of the True : என்ற சொல்லாட்சி இலக்கணப்படி சரியானதா? ஒரு சந்தேகம். அதனால்தான் கேட்டேன்.

சிவராம்

அன்புள்ள சிவராம்

உங்கள் பெயர் சிவராம் என நினைக்கிறேன். சிவாரம் என தட்டச்சிட்டிருக்கிறீர்கள். அதுகூட நல்ல பெயர்தான்.

ஆங்கில மொழிபெயர்ப்பாளர், குறிப்பாக நல்ல மொழிபெயர்ப்பாளர், அடையும் துயரம் ஒன்று உண்டு. பார்ப்பவர்கள் எல்லாம் அவர்களிடம் அவர் மொழியாக்கத்திலுள்ள ‘பிழைகளை’ச் சொல்லி பெருந்தன்மையுடன் புன்னகைத்து ‘திருத்திக்கொள்ளலாமே’ என்பார்கள்.

அவர்கள் சுட்டிச்சொல்வன பெரும்பாலும் இலக்கணப்பிழைகள், சொற்பொருள் பிழைகளாக இருக்கும். ஆனால் அவை எவையுமே பிழைகளாகவும் இருக்காது. ஆனால் சம்பிரதாயமாக புன்னகைத்து ‘அப்டியா, சரிங்க’ என்றுதான் சொல்லவேண்டியிருக்கும்.

Stories of the True மொழியாக்கம் சரியா என ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கேட்டனர். அவர்களிடம் ஓர் எளிய கேள்வி. ஆங்கிலத்திலேயே பிறந்துவாழும் இளைய தலைமுறையினர் ஒருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது இந்நூல். அவர்களைப் போன்றோர் மொழியாக்கம் செய்தால்தான் சர்வதேசப்புகழ் கொண்ட பிரசுரங்கள் அதை ஏற்றுக்கொள்ளும். அந்த மொழியாக்கமே ஓராண்டுக்காலம் அருணவா சின்ஹா போன்ற உலகப்புகழ்பெற்ற மொழியாக்க நிபுணர்களின் உதவியுடன், அமெரிக்க புனைவுநிபுணர்களின் சேவையை பெற்றுக்கொண்டு, சில லட்சம் ரூபாய் செலவிட்டு மேம்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் சர்வதேச மொழியாக்க அரங்குகளில் இம்மொழியாக்கம் வாசிக்கப்பட்டது, வாசிக்கவும்படுகிறது. அவர்களுக்கு எல்லாம் நீங்கள் சொல்லும் எளிய அடிப்படை ஆங்கிலம் தெரியாதா என்ன?

நம்மவர் இந்த ’பிழைகண்டடைதலை’ ஏன் செய்கிறார்கள்? ஏனென்றால் இங்கே ஆங்கிலமென்பது ‘மொழி’ அல்ல. அது சமூக அந்தஸ்தின் அடையாளம். அதற்காகவே அது பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அத்தனைபேரும் ‘நானும் மேலேதான்’ என்று சொல்ல ஆங்கில அறிவை காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், ஆங்கில அறிவு மிகமிகமிகக் குறைவு. நவீனப் பிரசுரங்கள் மதிக்கும் ஆங்கில நடை கொண்டவர்கள் அரிதினும் அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். சொல்லப்போனால் தமிழக அளவில் ஒரு நாலைந்துபேர்கூட தேறமாட்டார்கள். இதுதான் நிலைமை.

இங்கே மொழியாக்கம் செய்ய ஏராளமான தேவை உள்ளது. பல லட்சரூபாய் ஊதியமும் உள்ளது. ஆனால் சர்வதேசத் தரமான ஆங்கிலம் எழுத ஆளில்லை. ’தப்பில்லாமல்’ எழுதுவேன் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். தப்பில்லாமல் பார்க்க பிழைதிருத்திகளும், தொகுப்பாளர்களும் உள்ளனர். தேவை, நல்ல நடை கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள். அவர்கள் இல்லை. காரணம் நல்ல நடை என்பது தொடர்ச்சியான இலக்கியவாசிப்பு மற்றும் மெய்யான ரசனையின் விளைவு.

ஏன் நம் ஆங்கிலம் மோசமாக உள்ளது? அதற்கு பதில்சொல்லும் முன், முதலில் தமிழுக்கு வருகிறேன். தமிழ்விக்கிக்கு எழுதும்போது பல இளைஞர்கள் ‘சாண்டில்யன் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய நூல் யவனராணி ஆகும். அவருடைய ஊர் திருச்சி ஆகும்’ என எழுதிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையாக கூப்பிட்டு திருத்தவேண்டியிருந்தது. அந்த ’ஆகும்’ ’ஆவார்’ எல்லாம் எந்தக்கால தமிழ்? பாரதிக்கு முந்தைய தமிழ் அது.

என்ன காரணமென்றால் அவர்களெல்லாம் மத்தியத் தேர்வாணையக்குழு போட்டித்தேர்வுகளுக்காக பயில்பவர்கள். அப்படி ‘மரபாக’ எழுதவில்லை என்றால் தேர்வில் இலக்கணப்பிழை என சுழி போட்டுவிடுவார்கள். ஆகவே இதையே பழகியிருக்கிறார்கள். நம் தேர்வுகளில் வேறு வழியில்லை, இப்படித்தான் எழுதியாகவேண்டும். முனைவர் பட்டமே இந்த மொழியில்தான் எழுதவேண்டும். நம் கல்விநிலையங்களில் தமிழ் படித்தால் அந்த தமிழில் சிக்கிக்கொள்ளவேண்டும், வெளியேற்ற வழி ஊசித்துளை போன்றது.

இதேதான் இங்கே ஆங்கிலத்துக்கும் நிகழ்கிறது. நமக்கு வெள்ளையர் கற்றுத்தந்தது குமாஸ்தா ஆங்கிலம். ’பிழையில்லாமல்’ அதை எழுதவேண்டும் என்ற பதற்றத்தை நம் கல்விநிலையங்கள் அளித்துள்ளன. ஆகவே சம்பிரதாயமாக சுற்றிச்சுற்றி எழுதிக்கொண்டிருக்கிறோம். இந்த தேங்கிப்போன ஆங்கிலமே நம் சுமை. பிரியம்வதா கணக்கியலில் உயர்படிப்பு கொண்டவர். ஆங்கிலம் முதுகலை பயின்றிருந்தால் நல்ல ஆங்கில நடை அமைய வாய்ப்பு மிக அரிது.

மறுபக்கம் அந்த குமாஸ்தா ஆங்கிலத்துக்கு மேல் நாம் ஓர் அன்றாட ஆங்கிலத்தை புழங்கிக்கொண்டிருக்கிறோம். இருபதாண்டுகளுக்குள் அதன் தேய்வழக்குகள் மாறுபடும். முன்பு ‘பை தி பை’ என்றால் இப்போது  ’அட் த என்ட் ஆஃப் த டே’ ‘நோ சான்ஸ்..’ போன்று ஒரு ஐம்பது சொற்றொடர்கள்.  இதை ’பர்கர் ஆங்கிலம்’ என்பேன். நாமறிந்த ஆங்கிலம் என்பது பர்கருக்கு ஆர்டர் செய்யும் குமாஸ்தாவின் ஆங்கிலம். நான் வாழும் நட்சத்திர ஓட்டல்சூழலில் இதுதான் அன்றாடமொழி.

அதில் நவீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்ய முடியாது. இன்று நம் மொழியாக்கங்கள் எப்படி உள்ளன.  ஹெமிங்வேயை அ.கி.பரந்தாமனார் தமிழாக்கம் செய்தால் எப்படி இருக்கும் அப்படி. அதை நவீன ஆங்கில வாசகன் வாசிக்க மாட்டான். இலக்கிய மொழி இலக்கணத்தில் அமைந்தது அல்ல. எங்கும். அது தொடர்ச்சியாக புதிய சாத்தியக்கூறுகளை கண்டுகொண்டே இருப்பது. முன்பு யு.ஆர்.அனந்தமூர்த்தி சொன்னதுபோல We should use and abuse English.

அப்படி ஆங்கிலத்தை கையாளும் தலைமுறை வந்தாலொழிய நாம் ‘வாசிக்கப்படும்’ மொழியாக்கங்களை உருவாக்க முடியாது. அதில் வங்காளமும், இந்தியும் நம்மை வெகுவாக முன்கடந்து சென்றுவிட்டன. கன்னடமும் மலையாளமும்கூட நம்மைவிட பலமடங்கு மேலேதான். நாம் நம் படைப்புகளை நவீன மொழியில் மொழியாக்கம் செய்து, அவற்றை பெரும்பதிப்பகங்களால் வெளியிடச்செய்து, அவற்றைப் பற்றி பேசி நம்மை இந்தியச் சூழலில் நிலைநிறுத்தவேண்டியிருக்கிறது. அதற்கு முன் நாம் நல்ல ஆங்கிலத்தை அடையவேண்டியிருக்கிறது. அதை அடைய நாம் நவீன ஆங்கில இலக்கியங்களை வாசிக்கவேண்டியிருக்கிறது…நெடுந்தூரம்…

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.