ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய ஜென் தேநீர் வாசித்தேன். ஓஷோவின் ஜென் கவிதைகள் பற்றிய பார்வைகளை முன்வைத்து புகழ்பெற்ற ஜென் கவிஞர்களையும் கவிதைகளையும் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கூடவே முக்கியமான கவிதைகளை மொழியாக்கமும் செய்திருக்கிறார்.

ஜென்னைப் புரிந்து கொள்வது குறித்தும் ஜென் கவிதைகளின் இயங்கும் தளம் மற்றும் அதன் வழியே அடையும் விழிப்புணர்வு குறித்தும் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பு மற்றும் புரிதலின் வழியே மட்டுமே இது சாத்தியம்.

ஒரு கட்டுரையில் ஜென் அனுபவத்தை இப்படி விளக்கியிருக்கிறார் ஜெகதீஷ்.
ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் “நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.“ இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்குகிறது.
முதல் கோப்பை என் வறண்ட உதடுகளையும் தொண்டையையும் நனைக்கிறது.
இரண்டாவது கோப்பை என் தனிமையின் துயரமான சுவர்களைத் தகர்க்கிறது.
மூன்றாவது கோப்பை என் ஆன்மாவின் வறண்ட நீரோடைகளைத் தேடி ஐந்தாயிரம் கதைகளைத் தேடுகிறது.
நான்காவது கோப்பையால் கடந்த காலத் துயரங்கள் மறைந்து போகின்றன.
ஐந்தாவது கோப்பை என் எலும்புகளையும் நரம்புகளையும் புதுப்பிக்கின்றது.
ஆறாவது கோப்பை அருந்தும் போது நான் இறந்த ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
ஏழாவது இறுதிக் கோப்பை எனக்குத் தாங்க முடியாத பேரின்பத்தை வழங்குகிறது.
இப்படித் தேநீரின் வழியே அகம் கொள்ளும் விழிப்பின் நிலைகளை அழகாக விளக்கியிருக்கிறார்.
•••
செந்தூரம் ஜெகதீஷை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் உழன்றபடியே இலக்கியத்தின் மீது தீவிர பற்று கொண்டவராகத் தொடர்ந்து இயங்கிவருகிறார். அவரிடம் காணப்படும் உற்சாகம் குறைவில்லாதது. வேலையின்மை, பொருளாதாரச் சிரமம் இவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிப்பது, எழுதுவது, இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பது என்று தீவிரமாக இயங்கிவருகிறார்.
அவரைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். மிகவும் பண்பானவர். இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். கிடங்குத் தெரு என்ற அவரது நாவல் தனித்துவமானது. செந்தூரம் என்ற சிறுபத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் நிறையப் புத்தகங்களை வாங்கக் கூடியவர். ஒஷோ மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஓஷோவின் சில நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
தமிழின் முக்கியப் படைப்பாளிகள் பலரையும் செந்தூரம் ஜெகதீஷ் அறிவார். அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். பிரபஞ்சன் எப்போதும் ஜெகதீஷை வியந்து பாராட்டுவதைக் கேட்டிருக்கிறேன். சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார்.
அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதினால் மிகப்பெரிய நாவலாக விரிவு கொள்ளும். தொடர்ந்து கைப்பொருளை இழந்து தனது புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறார்.
இவரைப் போன்றவர்கள் அங்கீகாரமோ, விருதுகளோ எதைப் பற்றியும் கவலையின்றித் தொடர்ந்து இலக்கியத்தின் வழியாகவே தங்கள் வாழ்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள். பங்களிப்பு செய்கிறார்கள்.
ஜென் கவிதைகளையும் ஜென் கவிஞர்களின் தேடலையும் புரிந்து கொள்வதற்கு இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும். செந்தூரம் ஜெகதீஷிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
