உரிமை கோரப்படாத உடல்
வேலூர் லிங்கன் மிகச்சிறந்த வாசகர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் அவரிடம் உள்ளது போல அரிய நூல்களைக் காண்பது அரிது. வீடே பெரிய நூலகம் போலிருக்கிறது.
சமீபத்தில் ஒரு நாள் அவர் “அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய Yama the pit நாவல் போலவே இந்தியில் ஒரு நாவல் வெளியாகியிருக்கிறது. JAGDAMBA PRASAD DIXIT எழுதிய Mortuary என்ற நாவலது. மும்பையிலுள்ள பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியது“ என்றார்.

நான் ஜகதம்ப பிரசாத் தீட்சித் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றேன். உடனே அந்த நாவலை எனக்குத் தபாலில் அனுப்பி வைத்துவிட்டார். 192 பக்கமுள்ள நாவல்.

படிக்கப் படிக்க ஜி.நாகராஜனின் கதைகள் நினைவிற்கு வந்தபடியே இருந்தன. ஜி.நாகராஜனை விடவும் ஒளிவுமறைவின்றி பச்சையாக, அடர்த்தியாக, வசைகளும் வேதனைகளுமாக நாவல் எழுதப்பட்டிருக்கிறது. காமாதிபுரா என்ற மும்பையின் பாலியல் தொழிலாளர்களின் குடியிருப்பைப் பற்றியதே நாவல்.
பக்கத்துக்குப் பக்கமுள்ள கெட்டவார்த்தைகளை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை என்று மொழிபெயர்ப்பாளர் ஆதங்கப்பட்டிருக்கிறார். எந்த அலங்காரமும் இன்றி கொச்சையாக எழுதப்பட்டிருப்பதே நாவலின் தனித்துவம்
உடலை விற்றுப் பிழைக்கும் பெண்களின் அவலநிலையை இப்படி எவரும் உக்கிரமாக எழுதியதில்லை. மராத்தி வசைகள் அப்படியே கையாளப்பட்டிருக்கின்றன.

நாவலில் தமிழ், மராட்டி. இந்தி கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். நவநாகரீகமான மும்பையினுள் அந்த உலகம் திரைக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிறது. பகலில் தூங்கி மதியம் எழுந்து கிடைத்த உணவைச் சாப்பிட்டுப் பொய் அலங்காரம் செய்து கொண்டு இரவெல்லாம் அந்தப் பெண்கள் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேரைத் தவிரப் பலரும் வாடிக்கையாளர் இன்றி ஏமாற்றம் அடைகிறார்கள். வயிற்றுப்பாட்டினைத் தீர்க்க கடன் வாங்குகிறார்கள்.
அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பிள்ளைகளை வளர்க்கிறார்கள். குடிகார கணவன் மனைவி ஈட்டிய பணத்தைப் பறித்துக் கொண்டு சூதாடுகிறான். குப்பையும் கழிவுகளும் நிரம்பிய வீதியில் பிள்ளைகள் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். எப்போதாவது கூடுதல் வருமானம் கிடைக்கிறது. விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். மைனா பாய் என்ற பெண்ணே நாவலின் முக்கியக் கதாபாத்திரம். அவளது வாழ்க்கையைச் சுற்றியே நாவல் விரிவு கொள்கிறது.
பெண்களுக்குள் நடக்கும் சண்டைகள். கோபம். வெறுப்பு. ஏமாற்றம். வலி தாங்க முடியாத பெண் புலம்பும் வசைகள். நோயுற்ற போது ஒருவருக்கொருவர் உதவி செய்வது, காதல் கனவுகளைப் பகிர்ந்து கொள்வது. ஆண்களைக் கேலி செய்வது என உலகம் அறியாத அவர்களின் வாழ்க்கை சிதைவுகளை அசலாக எழுதியிருக்கிறார்.
பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறையினர் துரத்திப் பிடித்து அடித்து வேனில் ஏற்றுவது. இரவில் திடீர் ரெய்டு அடித்துக் கைது செய்வது. உடல்நலமற்ற பெண்ணைப் பாலுறவிற்குக் கட்டாயப்படுத்துவது. ஊனமுற்ற மனிதர்கள், ஏமாற்றிக் கொண்டுவரப்பட்ட இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது. வன்புணர்ச்சியால் கர்ப்பம் கொண்ட பெண்கள். கைவிடப்பட்ட தொழுநோயாளிகள். அவர்களின் இரத்தமும் சலமும் கொண்ட உடல். குழைந்த தசைகள். துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகள். குப்பையில் கிடப்பதை எடுத்து அவர்கள் சாப்பிடுவது. தெருநாய்களின் வாழ்க்கை ஆண்களும் பெண்களும் சேர்ந்து நாட்டுச்சாராயம் குடிப்பது. கஞ்சா புகைப்பது பெண்களை வைத்துத் தொழில் நடத்தும் மாமாக்கள். அவர்களின் ஏஜெண்டுகள். ரிக்சா ஒட்டுபவர்கள். பணம் படைத்த வணிகர்கள். அவர்கள் வீட்டில் கொண்டாட்டங்கள், என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையை யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார்
‘முர்தாகர்’ (சவக்கிடங்கு) என்ற தலைப்பில் இந்த நாவல் இந்தியில் வெளியாகியுள்ளது. நாவலின் சில பத்திகளைப் படிக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு அருவருப்பான சூழலில் வாழ்கிறார்கள் என்று திகைப்பாகவும் இருக்கிறது.
வறுமையான சூழலில் காலைநேரம் ஒரு தேநீர் வாங்கக் கூடக் கையில் காசில்லாமல் மலபாரி ஒருவனிடம் கடன் சொல்லி டீக்குடிக்கும் பெண்களைப் பற்றிய காட்சி மறக்கமுடியாதது.
அது போலவே போலீஸ் ரெய்டின் போது தப்பியோடும் பெண்கள் மடக்கிப் பிடிக்கப்படுவது. அடித்து இழுத்து வேனில் ஏற்றப்படுவது. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விசாரணை. அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை. அந்தப் பெண்களின் குழந்தைகள் சூழலை மறந்து இயல்பாக ஓடியாடி விளையாடுவது. நல்ல சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்குவது. மதராஸி நடத்தும் உணவகம். அங்கே கிடைக்கும் கோழிக்கறி, தோசை. ஐம்பது பைசாவைக் கொடுத்துப் பாலுறவு கொள்ள வரும் ஆண். பசியால் எதையும் செய்யத் துணியும் பெண். இந்த இருண்ட உலகில் வசிக்கும் கைவிடப்பட்ட. நோயாளிகள். புறாக்கூண்டு போன்ற அவர்களின் குடியிருப்பு. துர்நாற்றம் அடிக்கும் படுக்கைகள் எனப் பாலியல் தொழிலாளர்களின் உலகை மிகவும் துல்லியமாக எழுதியிருக்கிறார் ஜகதம்ப பிரசாத் தீட்சித்.
சவக்கிடங்கில் உரிமை கோரப்படாத உடலைப் போலத் தங்களை உணரும் பெண்களைப் பற்றியது என்பதால் தான் நாவலுக்கு சவக்கிடங்கு என்று தலைப்பிட்டிருக்கிறார்.
ஜகதம்ப பிரசாத் தீட்சித் 1913 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் பாலகாட் நகரில் பிறந்தவர். நாக்பூரில் கல்வி கற்றிருக்கிறார். பின்பு மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் எம்.ஏ. படித்திருக்கிறார். நாக்பூரில் இரண்டு நாளிதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு. 1953ல் அவரது முதல்கதை வெளியானது. தீவிர இடதுசாரியான ஜதம்ப பிரசாத் அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றிருக்கிறார். Akal ,Kata Hua Aasman,Famine ,Itivrat போன்றவை அவரது புகழ்பெற்ற நாவல்கள்.
இப்படி ஒரு சிறந்த நாவலைப் பரிசாக அளித்த வேலூர் லிங்கத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
