பிராம்பிள்டன் நிகழ்வு, கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

வணக்கம். ஒரு பெரும் கால இடைவெளிக்குப் பிறகு தமிழில் நான் எழுத எத்தனிக்கும் கடிதம். உங்கள் அறம் என்ற சிறுகதைத் தொகுப்பை என் தந்தை எனக்கு பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார். இலக்கிய வாசிப்பில் இருந்து வெகு தூரம் சென்று சராசரி மனிதனாக இருந்த என்னை அறம் உண்டி வில்லிலிருந்து புறப்பட்ட கல்லைப் போல மீண்டும் என்னை இலக்கிய வாசிப்புக்கு மீட்சி அடையச் செய்தது.

அறம் என்பது வெறும் சிறுகதைகளின் தொகுப்பு மட்டுமல்ல. காலத்தின் போக்கில் வாழ்க்கை என்னும் நீரோடையில் மிதக்கும் சருகாக இருந்த என்னை போன்ற பல ஆயிரக்கணக்கான மனிதர்களை நிறுத்தி சிந்தனை ஆக்கத்தையும், சுய பரிசோதனையும் மலரச் செய்த மாபெரும் விசை. அதை ஒரு சமகால தமிழ் இலக்கிய வாசிப்பின் மறுமலர்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. நூறு நாற்காலிகள் என்ற கதை மனித அகங்காரத்தை சுக்குநூறாக உடைத்து அவனை மீண்டும் செதுக்கிக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய கருவி. சமீபத்தில் படித்த கணக்கு சிறுகதை சமூகத்தை நோக்கி வீசிய சவுக்கடி. திருக்குறளும் ஆத்திசூடி படித்து மனனம் செய்தும் கருத்தை உட்கொள்ள முடியாத தமிழ் சமூகத்திற்கு உங்கள் சிறுகதைகள் ஓர் இரண்டாம் வாய்ப்பு.

நிற்க, என்றோ நான் செய்த பாக்கியம் எனக்கு எப்படியோ சௌந்தர் அறிமுகமாகி, என்னை இலக்கிய வாசனை உள்ளவனாக ஏற்று தமிழ் விக்கி துவக்க விழாவிற்கு பங்கெடுக்க அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் Brambelton அரங்கத்தில் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல நண்பர்கள் போல் உங்கள் அருகில் வந்து எளிமையாக அறிமுகப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனநிலை அன்று சற்றும் எனக்கு இல்லை. என் மன பிம்பத்தில் நூறு நாற்காலிகள் போன்ற கதையின் படைப்பாளி ஓர் அவதாரம். நீங்கள் பல தருணத்தில் சொல்வதுபோல் கதை எழுதும் ஜெயமோகன் வேறு நீங்கள் பார்க்கும் ஜெயமோகன் வேறு என்பதை என் ஆறாம் அறிவு அன்று புரிந்துகொள்ள போராடிக் கொண்டிருந்தது.

விழா முழுவதும் உங்களையும், தமிழ்த் தொண்டாற்றிய பேரறிஞர்களையும் என் புகைப்பட கண்ணாடி குவிப்பின் மூலம் அருகாமையில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். உங்கள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிப் பெருக்குகளையும், சில சமயங்களில் இறுக்கம் கலந்த மகிழ்ச்சி, நண்பர்களின் அருகாமை அந்த இறுக்கத்தைத் தளர்த்தியதையும், தெளிவாக என்னால் காண முடிந்தது. தமிழ் விக்கி துவக்க விழாவில் இருந்த சிக்கல்கள் எதையும் அறியாமல் ஒரு பார்வையாளனாக அதைப் புரிந்து கொள்ள முடியாமல் உங்களிடமிருந்து விலகியே நின்றேன். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. Thomas மற்றும் Brenda அவர்களின் வியப்புக்குரிய முயற்சிகளும் சாதனைகளும் என்னை பேராச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. அந்த விழாவில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு கூடுதல் பரவசம். கடந்த இரண்டு ஆண்டுகளில் புகைப்படக் கருவிகளை கையிலெடுக்கும் வாய்ப்பில்லாமல் அலைபேசி அந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த வருத்தத்தையும் உடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி.

விழாவின் முன்பும் பின்பும் அருண்மொழி அவர்களிடம் சில நிமிடங்கள் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் புன்னகை, தோழமை கலந்த பார்வை, எளிமையாக கலந்துரையாடலை ஆரம்பிக்கும் நட்பு என அனைத்தும் எனக்கு பள்ளிப்பருவத்தில் என் அம்மாவிடம் நான் உரையாடியதை நினைவூட்டியது. அன்று என் சிக்கலான விளக்க முடியாத மனநிலையை சமநிலை ஆக்கியது அவர்களுடன் கூடிய உரையாடல். விழாவுக்கு பின்பு உணவுக் கூடத்தில் உங்களிடம் வந்து அறிமுகம் செய்து கொண்ட பல நூறு பேர்களில் நானும் ஒருவன். பின்பு என் தயக்கத்தின் அடித்தளங்களை சுய பரிசோதனை செய்தபோது அதில் இரண்டு காரணங்களை என்னால் காண முடிந்தது. ஒன்று நான் என்கின்ற அகம் உறுதியாக அதில் ஒரு பகுதி கொண்டு இருந்தது. இன்னொன்று உங்களைப்பற்றி நான் வைத்திருந்த அவதார பிம்பம் உடைந்து விடுமோ என்ற பயம். உங்கள் நட்பு கலந்த சிரிப்பு, நண்பர்களின் எல்லா கேள்விகளுக்கும் சட்டென்று தெளிவான பதிலும் என்னைச் சுற்றி நான் கட்டியிருந்த பெரும் பனிப்பாறைகளை உடைக்க ஏதுவாக இருந்தது.

உங்களையும் தமிழ் விக்கியையும் காண வந்திருந்தாலும் இந்த சந்திப்பின் போது நான் பெற்ற புதிய நண்பர்கள் ஏராளம். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வாழ்வின் மையப்பகுதிக்கு பின்பு கிடைப்பது அரிது. எனக்கு அந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ் விக்கிக்கும் நண்பர் சௌந்தர் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.

நண்பர் வேல்முருகன் அன்பின் அழைப்பின் பேரில் உங்களை மறுபடியும் அன்று இரவு உணவு வேளையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வழக்கம்போல் தாமதமாக வந்து கலந்துரையாடலின் பெரும்பகுதியை தவறவிட்ட எனக்கு உங்களிடம் கேட்க நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் இருந்தன. நீங்கள் உரைகளில் சொல்வதுபோல் புதிதாக கருத்தியலுக்கு அறிமுகமான பதின் பருவ இளைஞன் மன நிலையில் நான் அங்கு உட்கார்ந்து இருந்தேன். அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் இருந்து விடை பெற்று விடிந்தவுடன் உலகை திருத்தும் முயற்சியை செய்ய தயாராக இருந்த மனநிலை.

உரையாடலுக்கு சம்பந்தமில்லாத எனது கேள்விகளை பொறுமையாக கேட்டு பதில் அளித்தீர்கள். தர்க்கத்திற்கும் கலந்துரையாடலுக்கும் உள்ள வேறுபாட்டையும் அன்று என்னால் தெளிவாக உணர முடிந்தது. ஒரு முறையேனும் என் தலையின் மேலும் அவியல் கொட்டப்படவேண்டும் என்ற தாகத்துடன் அன்று இரவு தூங்க சென்றேன்.

இன்னும் பல நூற்றாண்டு உங்கள் தமிழ் பணியும் சமூகப்பணியும் சிறக்க எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன். தங்களின் அமெரிக்கப் பயணம் சிறப்பாக சென்று கொண்டிருப்பதை நண்பர்கள் மூலம் அறிகிறேன். இங்கேயே வாழ்ந்தாலும், ஒரு புதிய அமெரிக்காவை உங்கள் பார்வை வழியே நாங்கள் பார்க்கிறோம். அமெரிக்க இந்தியர்களின் இலக்கிய மற்றும் கலாசார கட்டமைப்பை மேம்படுத்த உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளோம்.

உங்கள் எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் மூலம் மேம்பட விரும்பும் ஆயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானும் ஒருவன்.

 

அன்புடன் ரஜினிகாந்த்

 

அன்புள்ள ரஜினிகாந்த்,

புகைப்படங்கள் அருமையாக இருந்தன. நன்றி. நான் கோட்டு போட்டுக்கொண்டு எடுத்த படங்கள் என்பதனால் இவை எதிர்காலத்தில் பரவலாக பயன்படும் என நினைக்கிறேன்.

உங்கள் உரைநடை நன்றாக உள்ளது. தொடர்ச்சியாக வாசிக்கிறீர்கள் என நினைக்கிறேன். வாசிப்பு ஒரு ஆதாரத் தொடர்ச்சியாக உடனிருக்கட்டும்.

நான் எப்போதுமே ஓர் உரையாடலில் இருந்துகொண்டிருப்பவன். அமெரிக்காவிலும் அதே உரையாடல் ஒருமாத காலம் எல்லா இடத்திலும் நீண்டது. உரையாடல் நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது. அது அறிவுரைத்தலோ வழிகாட்டலோ அல்ல. நாம் மேலும் உரையாடும் களங்கள் அமைக

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.