வாசகனும் முகநூலும்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

கடந்த விஷ்ணுபுரம் விழாவில் இளம் வாசகர்கள் வசம் பேசி அறிந்தவற்றில் முக்கியமான விஷயங்களில் ஒன்று அவர்களில் எவரும் முகநூலில் இல்லை என்பது. வெட்டி வேலை என்பதில் துவங்கி, பூமர் அங்கிள்ஸ் ஜிப்ரிஷ் பார்ட்டி என்பது வரை அவர்கள் அதில் இல்லாமைக்கு சொன்ன பல காரணங்களை அறிய முடிந்தது. எனில் இப்போது உண்மையில் முகநூலில் வாழ்ந்து களமாடும் இலக்கிய வாசகர்கள் பணிதான் என்ன என்று பார்த்தால்,

மிக முன்னர் ’தின்னவேலி’ பக்கம் ஒரு விஷயம் பார்க்கலாம். ஒரே குடும்பத்தில் ஒரே தட்டில் உண்டு வாழும் சகோதரர்களாக இருப்பார்கள். தேர்தல் வரும் போது நிலவரம் தலைகீழாக மாறும். சகோதரர் இருவரும் வெவ்வேறு கட்சி தொண்டராக இருப்பார்கள். நாளை தேர்தல் என்றால் இன்று கோவணம் கிழிய இருவரும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இன்று இலக்கியவாசகர்கள் எனும் ஒரே குடும்பத்து சகோதரர்கள் இப்போது முகநூலில் இதைதான் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

தங்களது ‘சமூக அரசியல்’ தீர்க்கதரிசனத்துக்கு ஒப்ப திமுக தலைவருக்கோ, பிஜேபி தலைவருக்கோ பரஸ்பரம் அபவாதம் நிகழ்த்தி, பரஸ்பரம் சங்காரம் நிஜமென்று சாணியடி சமர் நிகழ்த்திக் கொண்டு இருக்கிரார்கள். இந்த சமூக கடமையின் ஒரு பகுதியாக தங்கள் தலைவனுக்கு முட்டுக் கொடுக்க அவ்வப்போது தங்கள் அரசியல் சார்பாக தொனிக்கும் ஜெ மற்றும் இன்ன பிறர் கட்டுரைகளை இரு தரப்பும் மாறி மாறி சுட்டி அளிக்கும். அப்படி இப்போது அந்த 20,000 நூல்கள் பதிவு இலக்கிய வாசகர்களால் தங்கள் அரசியல் போதை குடுமிபிடி அடிதடிக்கு ஊறுகாய் என்று மாறி இருக்கிறது.

தங்கள் அரசியல் தலைமைக்கு ஒன்று எனில் உடுக்கை இழந்தவன் கை போல பாயும் இந்த சமூக அரசியல் ஆர்வ கம் இலக்கிய வாசகர்கள், அதே முகநூல் களத்தில் எழுத்தாளர்கள் அவமதிக்கப்பட்டால் செய்யும் எதிர்வினை என்பது மௌனம் என்பதாக மட்டுமே இருக்கும். முகநூல் களத்தில் எழுத்தாளர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படக் காரணம், அப்படி அவமதித்தால் அந்த இலக்கியவாதி சார்பாக வாயை மூடு என்று சொல்ல ஒரே ஒரு இலக்கிய வாசகன் கூட அங்கே வரமாட்டான் என்று சம்பந்தப்பட்டவர்கள் நன்கு அறிந்திருப்பதே காரணம்.

சழக்குகளை விட்டு விடுவோம், இலக்கியம் பேசப்படும் இடத்திலாவது முகநூல் இலக்கிய வாசகர்கள் தங்கள் இருப்பை காட்டுகிறார்களா என்று பார்த்தால், பதில் அங்கும் மௌனம்தான்.உதாரணமாக இது.

தமிழில் க.மோகனரங்கன்.

நான் கவலைப்பட்டேன்

மேரி ஆலிவர்

நான் வெகுவாகக் கவலைப்பட்டேன். தோட்டத்தில் செடிகள் வளருமா, ஆறுகள் சரியான திசையில் பாயுமா, பூமி அதற்கு விதிக்கப்பட்ட பாதையில்
சுழலுமா, 

அல்லாது போயின்
அதை எவ்விதம் சரிசெய்வது?

நான் செய்வது சரியா, தவறா, நான் மன்னிக்கப்படுவேனா,
என்னால் நல்லவிதமாக செயல்பட முடியுமா?

நான் பாடவியலுமா?

சிட்டுக்குருவிகள் கூட பாடுகின்றன. என்னாலும் அது முடியும்,

ஆனால் நான் நம்பிக்கையற்று இருக்கிறேன்.

என் கண்பார்வை மங்குகிறதா அல்லது நான் அவ்வாறு கற்பனை செய்து
கொள்கிறேனா,

எனக்கு வாதநோய் வருமா, முகவாய் பிடிப்பு, ஞாபக இழப்பு உண்டாகுமா?

கடைசியில்
கவலைப் படுவதால்
ஒன்றும் ஆவதில்லை என்பதைக்
கண்டேன்.
ஆகவே அதை கைவிட்டேன்.

காலையில் என் மூப்படைந்த உடலுடன் வெளியே
சென்றேன், 

கவலையற்றுப் பாடினேன்.

இந்தக் கவிதையை கவி மோகனரங்கன் மொழியாக்கம் செய்து தனது சுவற்றில் இடுகிறார். (இப்படி மோகனரங்கன் மொழியாக்கத்தில் முகநூலில் பதிவிட்டவை இரண்டு கவிதை நூல்கள் என தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது). வாவ், நைஸ், சூப்பர், போன்ற பொத்தாம் பொதுவான பின்னூட்டங்கள் பரவாயில்லை, தாள இயலா பின்னூட்டம் என்பது அசட்டுத்தனமான பின்னூட்டம். ஒருவர் ‘ உண்மைதான். வயது என்பது வெறும் எண்கள்தான்’. என்று பின்னூட்டம் இடுகிறார். உண்மையில் இதை மோகனரங்கன் எப்படி உணர்ந்திருப்பார்?

எளிமையான நேரடியான கவிதை ஒன்றுக்குத்தான் இத்தகு எதிர்வினை. இக்கவிதையில் உள்ள ‘பஷீரிய’ அழகியல், அகம் தொட்டு முகம் வரை  அது கிளர்த்தும் புன்னகை அதை முதலில் ஏற்று கொண்டாடி அங்கே ரசனைப் பின்னூட்டம் இட வேண்டிய இலக்கிய வாசகன் மௌனம் காப்பதால்தான் அங்கே அசட்டுப் பின்னூட்டங்கள் வந்து விழுகின்றன.

ஆக அங்கே இலக்கியவாதிக்கோ இலக்கியத்துக்கோ துணை நிற்க முன் நிற்க வேண்டியவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பது இலக்கிய வாசகன் எனும் தன்னுணர்வு கொண்டவர்கள் செய்ய நாணுவது.

தான் ஒரு இலக்கிய வாசகர் எனும் தன்னுணர்வு கொண்ட எவரும் தன் சிரம் ஆளும் சரஸ்வதியை அரசியலுக்கு அடப்பைக்காரப் பணியை செய்ய அனுப்ப மாட்டார்கள்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.